top of page
red.png

திட்டம் பற்றி

"ஒரு நாட்டின் பண்பாடு மக்களின் அகத்திலும் ஆன்மாவிலும் உறைகின்றது" - மகாத்மா காந்தி

 

சிங்கப்பூர் ஒரு பல்லின சமுதாயம் என்று நாமே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளோம். பலரும் அது உண்மையென்றே ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 1965ல் சுதந்திர நாடாக மலர்ந்ததிலிருந்து, நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு பண்பாடும் இங்கே நீடித்து செழித்திருக்க உரிமை உண்டு என்றே நாம் செயல்பட்டு வந்துள்ளோம். எனினும், மேலைநாகரிக மோகத்திற்கும் உலகமயமாதலின் உக்கிரமான தாக்கத்திற்கும் ஈடுகொடுக்க இயலாமல் நமது ஆசியப் பண்பாடுகளான சீன, மலாய், இந்தியப் பண்பாடுகள் நலிந்து வருகின்றன என்றும் நம் அதிகாரபூர்வத் தாய்மொழிகளான மாண்டரின், மலாய், தமிழ் ஆகியன புழக்கத்தில் அருகி வருகின்றன என்றும் அடிக்கடி கேள்விப்படுவதை மறைப்பதற்கில்லை. இச்சரிவு சிங்கப்பூர் வாழ்க்கைக்கு ஒரு பெரும் சவால். இச்சூழலில் ‘சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்பதன் உருவாக்கம் ஒரு சிறிய ஆனால் காத்திரமான எதிர்நீச்சல் முயற்சி. தற்போது நமக்குள்ள ஆதார வளங்கள் குறைவாகவே இருப்பதால், இம்மையம் சிங்கப்பூர்த் தமிழர்கள், அவர்தம் பண்பாடு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும். மையம் நன்கு வளர்ந்தபிறகு, மற்ற இனங்களின் தனிப்பட்ட அடையாளங்களையும் உள்ளடக்கியதாக எங்கள் முயற்சிகளின் எல்லைகள் விரிவாக்கப்படும்.


பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இந்த வட்டாரத்தில் தடம் பதித்திருந்தாலும் அவர்தம் தொடர்வரலாறு ஆவணப்படுத்தபட்டிருப்பது ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ் இத்தீவைக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு வணிகத் தளமாக நிறுவிய 1819ம் ஆண்டிலிருந்துதான். கடந்த இருநூற்றாண்டுக்காலமாக, தமிழர்கள் இங்குத் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பூர்வீக நிலங்களாகிய இந்தியா, இலங்கை ஆகியவற்றின் தமிழ்ப் பண்பாடுகளிலிருந்து காலப்போக்கில் சற்று வேறுபட்டிருந்தாலும், தமிழர் என்னும் அடையாளத்தோடு இருக்கிறார்கள். ஆனால் தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது: சிங்கப்பூர்த் தமிழர்கள் என்று பெயரளவில் மட்டும் தனித்த அடையாளத்தைக்  கொண்டிருக்- கிறார்களா அல்லது நடைமுறை வாழ்க்கையில் அவ்வடையாளம் இருக்கிறதா? நம்மில் பலர் நம் சொந்தப் பண்பாட்டிலிருந்து விலகியும் விடுபட்டும் கிட்டத்தட்ட வேரறுந்தும் போயுள்ளோம். நம்மை நன்றாகத் தெரிந்துகொண்டால்தான் நாம் நாமாக இருக்கவியலும். நாம் நாமாக இருந்தால்தான் பிறர் யார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தன்னையும் தெரிந்து கொள்ளாது பிறரையும் புரிந்துகொள்ளாது உறவாடும் மனிதர்கள் ஒன்றுபட்ட சமூகமாகப் பரிணமிக்க முடியாது.


எனவேதான், சமூகப் பற்றுமிக்க சில சிங்கப்பூரர்கள் இந்தச் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளோம். இம்மையத்தின் மூலம் பண்பாட்டு அறிவை வளர்த்துக்கொள்வதும் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதும் பண்பாட்டைப் பரப்புவதுமே எங்கள் அடிப்படை நோக்கம். இம்மையம் அடித்தளத்திலிருந்து எழும்பிய, இலாப நோக்கற்ற, மெய்நிகர் அமைப்பு. ‘சிங்கப்பூர்த் தமிழ் மின்மரபுடைமைக் குழு’ என்னும் பெயரில் இயங்கிவரும் மெய்நிகர் அமைப்பே இந்த மையத்திற்கு முன்னோடி. அந்த அமைப்பை உருவாக்கியவர்களே இந்த அமைப்பிற்கும் உயிர் கொடுத்துள்ளார்கள். சிங்கப்பூர்த் தமிழ் மின்மரபுடைமைக்குழு 2015ம் ஆண்டு கொண்டாடப்பட்ட சிங்கப்பூர்ச் சுதந்திரப் பொன்விழா ஆண்டிற்கான பங்களிப்பாக அமைக்கப்பெற்றது. தற்போது சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக அது இணைந்துவிட்டது.


சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதியில் தொடங்கப்பெற்றது. சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்னர் அதே நாளில்தான் ராஃபிள்ஸ் ‘சிங்கப்பூர் ஒப்பந்தம்’ என்னும் ஆவணத்தில் கையெழுத்திட்டு இந்தத் தீவைக் கைப்பற்றினார். தமிழர்களின் தொடர்வரலாறு அன்றுதான் தொடங்கியது. அவ்வகையில் இருநூற்றாண்டு நிறைவுக்கு இம்மையம் நம் பங்களிப்பு. அதைத் தொடர்ந்து  கடந்த 2 ஜூன் 2021 அன்று இம்மையம் சட்டபூர்வமாக ஒரு Company Limited by Guarantee-ஆகப் பதிவு செய்யப்பட்டது.

 இந்த இணையத்தளத்தில் மேல்விவரங்களை அறியத் தங்களை வரவேற்கிறோம்!

bottom of page