உரைகள்

திரு அருண் மகிழ்நன், தலைர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

வணக்கம்!

இன்றைய தினம் -- 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 6ம் தேதி -- சிங்கப்பூருக்கு,  குறிப்பாகத் தமிழர்களுக்கு, வரலாற்றுச் சிறப்பு​மிக்க ஒரு நாள். தென்கிழக்காசியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வருகை தந்து, வாகை சூடி, வாழ்க்கை நடத்தியிருந்தாலும், அவர்களின் வரலாற்றில் ஒரு தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. எனினும், இன்றைக்குச் சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, 1819ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 6ஆம் தேதி, அந்த நிலை முற்றிலும் மாறியது. அன்றுதான் சிங்கப்பூர் சாசனத்தில் சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ்  கையெழுத்திட்டு, கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒரு வர்த்தக மையத்தை இங்கு நிறுவினார். அந்தத் தினத்திலிருந்து இந்த நிலத்தில் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு தொய்​வில்லாமல் தொட​ர்கிறது. அதற்குக் காரணம் அவர் தம்முடன் தமிழர்களையும் கொண்டு வந்திருந்தார். காலவோட்டத்தில்a மற்றப் பல இனத்தவருடனும் மொழிப் பிரிவினருடனும் தமிழ்ச் ச​மூகமும் இங்குக் குடிபெயர்ந்து சிங்கப்பூரைத் தனது இல்லமாக்கிக் கொண்டது. ம​லாயாத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என்ற நிலையிலிருந்து நாம் சிங்கப்பூர்த் தமிழர்களாகப் பரிணமித்திருக்கிறோம்.

தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று சொல்லிக்கொள்கிறோம். பெயரளவில் உள்ள அடையாளம் வாழ்வளவில் அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றதா என்பது கேள்விக்குறியே. நம்மில் பலர் நமது பண்பாட்டிலிருந்து வெகுதொலைவு வந்துவிட்டோம் அல்லது வேரறுந்து நிற்கிறோம். வருத்ததிற்குரியது என்னவெஎன்றால் உண்மையில் நாம் யார் என்று பிறரிடம் கூறும் நிலையில் நாம் இல்லை. ஏனெனில், நாம் யார் என்பது நமக்கே சரியாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில், மற்றவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு இன்னும் சிரமமாகும். அதற்கான அளவுகோல் நம்மிடம் இல்லை.

இந்தக் காரணங்களுக்காகத்தான் நாம் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்னும் ஒரு புதிய அமைப்பை உருவாக்கத் ​தீர்மானித்தோம். நாம் யார் என்பதை அறிந்துகொள்வதற்கும் நம்மைப்பற்றிப் பிறரிடம் பகிர்ந்துகொள்வதற்கும் மற்றவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் உதவும்.   

இந்த முயற்சி மேல்மட்டத்திலிருந்து வாராது கீழ்மட்டத்திலிருந்து   கிளம்பிய முயற்சி. அக்கறை​கொண்ட சில குடிமக்கள் ஆர்வத்தோடும் ஆற்றலோடும் கூடிச் செய்கின்ற முயற்சி. நம்மைப் பற்றிய ஆழ்ந்த அறிவை வளர்த்துக்கொள்வதற்கும் நம் இனத்திற்குச் செய்யவேண்டியவற்றைச் செய்வதற்கும் நம்மைப் பற்றிப் பிறரிடம் எடுத்துக்கூறுவதற்கும் மேற்கொள்கின்ற முயற்சி.  

நமது தமிழ் அடையாளத்தைத் தேடி, பராமரித்து, கொண்டாடும் அதே வேளையில் நாம் அனைவரும் முதலில் சிங்கப்பூரர்கள் என்பதை ஒருபொழுதும் மறக்கவே கூடாது. அதனால்தான் நாம் நமது இந்தப் புதிய பயணத்தைப் பாரதியின் தமிழ்த் தாய் வாழ்த்தோடும் அதைத் தொடர்ந்து ஸூபிர் சய்யதின் தேசிய கீதத்தோடும் தொடங்கியிருக்கிறோம்.

200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணம், தூர நோக்காலும் கடின உழைப்பாலும் சந்தர்ப்ப வசத்தாலும் இன்றும் தொட​ர்கிறது. சரியாக 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாம் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்னும் அமைப்பின் பெயரில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். இந்தப் பயணம் நலமே நடைபெற,  நல்வழி காட்ட நாம் அனைவரும் ஒன்றுகூடித் தீபங்களை ஏந்தியிருக்கிறோம். முடிவில்லாப் பயணமாகத் தொடரட்டும்!

நன்றி!

  • w-facebook

CONNECT​ WITH US:​​

  • w-youtube

SUBSCRIBE:​​

1 Springleaf Rise,

Singapore 787981

CONTACT US:

For any queries, please contact

us here.

ADDRESS

Subscribe for Updates

© 2019 CSTC. All Rights Reserved.