top of page
red.png

உரைகள்

திரு அருண் மகிழ்நன், தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

துணைப் பிரதமர் அவர்களே, அமைச்சர் அவர்களே, Elaine, Rosa, Rama, Paul, எழுத்தாளப் பெருமக்களே, பெரியோர்களே, நண்பர்களே: வணக்கம்!

இது ஒரு பொன்னான நாள்.  பொன்விழாக் கொண்டாடும் தருணத்தில் நிகழும் பொன்னான நாள். இவ்வளவு திரளாக வந்திருந்து இந்த விழாவைப் பெருமைப்படுத்திய உங்கள் அத்தனை பேருக்கும் எங்கள் முதல் நன்றி!

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் --  ஒரு நாள் கொண்டாட்டத்தோடு ஓய்ந்துவிடாது, ஒரு நூறு ஆண்டுகளாவது நிலைத்திருக்குமாறு என்ன செய்யலாம் என்று “எண்ணித் துணிந்த கருமம்” இது. ஒரு சமூகத்திற்கு உண்மையிலேயே எது தேவை என்று தேடிப் பார்த்துத் தேர்ந்தெடுத்த திட்டம் இது.  எல்லாவற்றுக்கும் மேலாக நமது வரலாற்றை, நமது பண்பாட்டை,  நமது  படைப்புத்திறனை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் பொக்கிஷம் இது.

இத்திட்டத்தைப் பற்றியும் இதன் பயன்களைப் பற்றியும் பலரும் பேசிவிட்டார்கள். நான் மேடைக்கு வந்ததே நன்றி சொல்வதற்காகத்தான்.

நான் தலைவர் என்று அறிமுகப் படுத்தப்பட்டு உங்கள் முன்னால் நின்று கொண்டிருந்தாலும், எனக்குப் பின்னால் ஏறத்தாழ 300 பேர் வடம் பிடித்துக்கொண்டு வந்துள்ளார்கள் என்பதைத் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். அதிலும், நாங்கள் அனைவரும் சாமானியக் குடிமக்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஊர் கூடினால்தான் தேர் நகரும் என்று சொல்வார்கள்.  ஊர் கூடியது.  தேரும் நகர்ந்தது. எனவே ஊருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அத்தனை பேரையும் பெயர் சொல்லி நன்றிகூறத் தலைப்பட்டால், இரவு முடிந்து, பொழுது விடிந்துவிடும். எனவே, மொத்தமாகச் சில வகையினரைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை எப்படியும் 90 நிமிடங்களில் முடித்துவிடுகிறோம் என்று வாக்குக் கொடுத்ததால், தமிழிலும் ஆங்கிலத்திலும் அதிகம் பேச நேரமில்லை. உங்களில் பெரும்பாலோருக்கு இத்திட்டத்தைப் பற்றி நிறையவே சொல்லி வந்திருக்கிறோம் என்பதாலும் நமது நன்றிக்குரியவர்களில் முக்கியமான சிலர் தமிழ் அறியாதவர்கள் என்னும் காரணத்தாலும் எங்கள் நன்றிகளைப் பெரிதும் ஆங்கிலத்திலேயே கூற உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.

bottom of page