top of page
Final.png

தமிழ் வாழ்த்து

தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவங்களுள் ஒன்று தமிழ்மொழியை வாழ்த்திப் பாடுவதாகும். இன்றும் பள்ளிகளிலும் தமிழ்ப் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ் வாழ்த்துப் பாடும் வழக்கத்தைக்  காண்கிறோம். இத்தகு வழக்கைத் தமிழர்கள் ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் கேள்வி எழக்கூடும். தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார் என்பார். இவர் எழுதிய புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் (1891) உள்ள துதிப்பாடலின் ஒரு பகுதி இப்பாடலாகும். ஆரியம் போலத் தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டுத் தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழியின் நெடுங்கணக்கின் கட்டமைப்பு உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் ஆகிய எழுத்துகளைக் கொண்டுள்ளது. மனிதனின் உடல், உயிர் ஆகியவற்றின் இயக்கத்தை அடியொற்றித் தமிழ்மொழி நெடுங்கணக்கு அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும். உயிர் எழுத்துகளின் மகத்துவம் யாதெனில், அவை அனைத்து மெய்யெழுத்துகளையும் இயக்க வல்லன. இது உயிர் எழுத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டுவதாகும். மனிதன் உண்பதன்வழி உடல் (மெய்) எடையைப் பெருக்கிக்கொள்ள முடியும். அதுபோல் உயிரையும் வளர்க்க முடியுமா? திருமூலநாயனார் தம் திருமந்திரத்தில் “உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று பாடியுள்ளார். உயிரை வளர்ப்பதன் நுட்பங்களை எடுத்தியம்பிய ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு என்பதால் அது வாழ்த்தினைப் பெறுவதற்குரிய தகுதியைக் கொண்டுள்ளது. அதனால், தமிழை முன்னோர்கள் தெய்வத்தமிழ் எனப் போற்றினர்.     


அக்காலத்தில் ஒரு காப்பியத்தை இயற்றுவதற்கு முன்னர்த் தமிழ்மொழியை வாழ்த்திப் பாடும் மரபு புலவர்களிடையே இருந்துள்ளது. பெ. சுந்தரம்பிள்ளை, மனோன்மணீயம் என்னும் நாடக நூலை 1891ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். அதில் இடம்பெற்ற தமிழ் வணக்கப் பாடலான “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” என்னும் பாடலைத் தமிழ்நாட்டு அரசு, தமிழ் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970இல் அறிவித்தது.

அப்பாடல் பின்வருமாறு:

தமிழ் வணக்கப் பாடல்

 

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே                             தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் துதிக்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே![1]

(மனோன்மணியம் சுந்தரனார்)

Manonmaniam.jpg

இப்பாடல், அக்காலத்தில் (70களிலும் 80களிலும்) சிங்கப்பூரில் இருந்த தமிழ்ப் பள்ளிகளில் (கலைமகள் தமிழ்ப்பள்ளி, உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளி, சாரதாதேவி தமிழ்ப்பள்ளி, விவேகானந்தர் தமிழ்ப்பள்ளி) பயின்ற மாணவர்களால் பாடப்பட்டது. தற்காலத்தில் மகாகவி பாரதியாரால் இயற்றப்பட்ட ‘வாழ்க நிரந்தரம்’ என்னும் பாடல் சிங்கப்பூர்ப் பள்ளிசார் தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழ் வாழ்த்துப் பாடலாகப் பாடப்பெறுகிறது.

 

தமிழ்மொழி வாழ்த்து

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும்  அளந்திடும்

வண்மொழி வாழியவே!

 

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழிய வே!

 

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையக மே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

எங்கள் தமிழ்மொழி! ...

எங்கள் தமிழ்மொழி! ...

என்றென்றும் வாழிய வே![2]

(மகாகவி சுப்ரமணிய பாரதி)

 

பாரதிதாசனும் தமிழ் வாழ்த்துப் பாடலும்

பாரதிதாசன் இயற்றிய ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்னும் பாடல் தமிழ்மொழியை வாழ்த்திப் பாடும் பாடலாக அமைந்தது. இப்பாடல் ‘நற்றமிழ்த் துணைவன்’ என்னும் தலைப்பிலான அக்காலச் சிங்கப்பூர்ப் பாடநூலில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது[3].

 

தமிழுக்கும் அமுதென்று பேர்

  தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்

  தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

  தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
  தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
  தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

  தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
  தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
  தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

  தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்

  தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

  தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
  தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

  தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
  தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

  தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
  தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ[3]

  (பாவேந்தர் பாரதிதாசன்)

 

கடந்த 2010ஆம் ஆண்டு, இந்தியாவில் நிகழ்ந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காகக் கலைஞர் மு கருணாநிதி எழுதிய தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு ஏ ஆர் ரஹ்மான்  இசையமைத்துள்ளார்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,

யாதும் ஊரே யாவரும் கேளிர்

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

உறைவிடம் என்பது ஒன்றே என

உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர் தர வாராயெனும்

நன் மொழியே நம் பொன் மொழியாம்

போரைப் புறந்தள்ளிப் பொருளைப் பொதுவாக்கவே

அமைதிவழி காட்டும் அன்பு மொழி

அய்யன் வள்ளுவரின் வாய் மொழியாம்

 

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

 

ஓர் அறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே         

உணர்ந்திடும் உடல் அமைப்பைப் பகுத்துக் கூறும்

ஒல்காப் புகழ்த் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடும்

ஒலிக்கின்ற சிலம்பும் மேகலையும் சிந்தாமணியுடனே

வளையாபதி குண்டலகேசியும்

 

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

 

கம்ப நாட்டாழ்வாரும் கவி  அரசியவ்வை நல்லாளும்

எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற

எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற

எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்

புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி

 

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

 

அகம் என்றும் புறம் என்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து

ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனிய மொழி

ஓதி  வளரும்  உயிரான உலக மொழி

ஓதி  வளரும்  உயிரான உலக மொழி

நம் மொழி செம்மொழி.. அதுவே

 

செம்மொழியான தமிழ் மொழியாம்

தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்

வாழிய வாழியவே தமிழ் வாழிய வாழியவே [4]

(கலைஞர் மு கருணாநிதி)

 

தாய்மொழியை வாழ்த்திப் பாடும் இப்பாடல் பாரெங்கும் புகழ்பெற்று விளங்குகிறது. ஒரு மனிதனின் அகவாழ்வும் புறவாழ்வும் மேம்படத் தேவையானவற்றைத் தமிழ்மொழி வழங்குவதால் நாம் நம் தமிழ்மொழியைப் போற்றி வாழ்த்திப் பாடுகிறோம்.

 

மொழியை வாழ்த்திப் பாடும் தன்மை தமிழுக்குரிய தனிச்சிறப்பாகும். தமிழ் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ் வாழ்த்துப் பாடும்போது, அதில் கலந்துகொள்ளும் அனைவரும் (தமிழரும் தமிழர் அல்லாதவரும்) எழுந்துநின்று மரியாதை செய்வது சிங்கப்பூரில் வழக்கம். எப்படி நாட்டுக் கொடியேற்றும்போது அசையாது நிற்கிறோமோ, அத்தகைய மதிப்பைத் தமிழர்கள் மொழிக்கும் வழங்குகின்றனர். தமிழ் வாழ்த்துப் பாடலைப் பாடி முடித்தபிறகு, கரவொலி எழுப்பாமல் அமைதியாக அமர்வது மரபு.

 

பெரியவர்களும் சிறுவர்களும் தமிழ் வாழ்த்துப் பாடலை ஏன் பாடுகிறோம் என்பதையும் தாங்கள் பாடும் பாடல் உணர்த்தும் பொருளையும் அறிந்திருப்பது அவசியம். தமிழ் வாழ்த்துப் பாடுவதால் தாய்மொழி உணர்வைப் பெறுவதோடு தங்கள் மொழி, இன அடையாள வேர்களையும் கட்டிக்காக்க முடியும்.

​பார்வையிட்ட இணையத்தளங்கள் 

[1]  https://en.wikipedia.org/wiki/Tamil_Thai_Valthu_(Tamil_Nadu)

[2]  http://www.ourclipart.com/clipart/vazhga_nirantharam

[3]  http://www.tamilcollections.com/lyrics/thamizhukkum-amudhendru

[4]  https://semmozhisong.blogspot.com/2010/06/high-quality-semmozhi-mp3-song-download.html

தலைப்புக்குத் தொடர்புடைய பிற வளங்கள்

1. தமிழ்த்தாய் வாழ்த்து (Published on Aug 5, 2013)

2. மொழி வாழ்த்து (Published on Jun 8, 2019)

bottom of page