Final.png

தமிழரின் எண்ணறிவும் எழுத்தறிவும்

மனிதனின் அடிப்படை உரிமைகளுள் ஒன்று கல்வி பயில்வதாகும். அதனை அவன் பெறுவதன் மூலம் தனிமனிதனும் சமூகமும் நாடும் வளர்ச்சியை நோக்கி இயங்க முடியும் என்பதை மானுட வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. கல்விக்கு அடிப்படை எண்ணறிவும் எழுத்தறிவும் ஆகும். அதனை அறிந்துவைத்திருந்த புலவர் பெருமக்கள் எண்ணும் எழுத்தும் பெறும் முக்கியத்துவத்தைத் தங்கள் பாக்களில் பாடிவைத்துள்ளனர்.  

திருவள்ளுவர் ‘கல்வி’ என்னும் அதிகாரத்தில்,

 

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு (குறள் 392)

 

என்று குறிப்பிட்டுள்ளார். உலகில் வாழும் உயிர்களுக்குக் கண்ணுக்கு ஒப்பான முக்கியத்துவம் பெற்றவை எண்ணும் எழுத்தும். எனவே, இவை இருகண்களாகப் போற்றப்பட வேண்டும். தமிழர் பண்பாட்டிலும் மரபுக்கல்வியிலும் எண்ணும் எழுத்தும் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன என்பதை இக்குறள்வழி அறியலாம். மேலும், ஔவையாரும் தாம் இயற்றிய ஆத்திசூடியில்,  ‘எண்ணெழுத்து இகழேல்’ என்று குறிப்பிட்டுள்ளார். எண்ணையும் எழுத்தையும் இகழாமல், அவை போற்றப்பட வேண்டியன என்பது இதன் பொருள். அடுத்து, ‘எழுத்தறிவித்தவன் இறைவனாகும்’ என்று வெற்றிவேற்கையில் அதிவீரராம பாண்டியனும் இதனையே குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அறிஞர்கள் ‘எண்’ என்றால் கணக்கு என்றும் ‘எழுத்து’ என்றால் இலக்கியம் என்றும் பொதுவான விளக்கமளித்துள்ளனர். எண்ணும் எழுத்தும்பற்றிய கூடுதல் விளக்கங்களைப் பார்ப்போம்.

எண் என்றால் என்ன?

எண் என்று சொல்லும்போது அது எண்ணுவதையும் அளவிடுதலையும் குறிக்கிறது. அண்டமே ஒரு கணக்குக்குள்தான் இயங்குகிறது. மனிதனின் வாழ்க்கையில் எண்ணை நீக்கிவிட்டால் அவனால் இயங்கவியலாது. அன்றைய தமிழன் எவ்விதக் கருவிகளின் துணையும் இல்லாமல் அண்டத்தைப் பற்றிய அறிவைக்கொண்டிருந்தான்.

நமது அண்டத் தோற்றமும் இயக்கமும் சூரிய மண்டலத்தை அடிப்படையாகக் கொண்டவை. கோள்களின் அசைவைப் பற்றிய அறிவைத் தமிழர்கள் பெற்றிருந்தமைக்குச் சான்று அவர்கள் பெற்றிருந்த எண்ணறிவாகும். அவர்கள் ஓர் ஆண்டுக்குள் எத்தனை அமாவாசை, பெளர்ணமி வரும், அவை எப்போது நிகழும் என்பதைத் துல்லியமாகக் கணித்திருந்தனர். மேலும், எத்தனை நாட்களுக்குள் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது; தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது; சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்பன எப்போது நிகழும் எனக் கால அளவை மதிப்பிடும் எண்ணறிவைப் பெற்றிருந்தனர்.  

 

தமிழர்கள் தாங்கள்கொண்டிருந்த அண்டவியல் அறிவினை அடிப்படையாகக் கொண்டு பிண்டவியல் (உடல்) அறிவைப் பெற்றிருந்தனர்.  மனித உடலின் எடை, உயரம், வளர்ச்சி, இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு, மூச்சின் இயக்கம் போன்றவை எல்லாமே கணக்கிடப்பட்டிருக்கின்றன. இதனை ஓர் எடுத்துக்காட்டுடன் புரிந்துகொள்வோம். தமிழர்களுக்கு ஒருநாழிகை என்பது 24 நிமிடங்களாகும். ஒரு நிமிடத்திற்குள் மனிதர்கள் சராசரியாக 15 முறை மூச்சுவிடுவது இயல்பு. அப்படியெனில், ஒரு நாழிகைக்குள் மனிதன் சராசரியாக 360 முறை (15 X 24) மூச்சுவிடுகிறான். இதனை அடிப்படையாகக் கொண்டு முழுவட்டத்திற்கு 360 டிகிரி என்னும் எண்ணியல் அறிவை வெளிப்படுத்தினர். பூமியும் சூரியனைச் சுற்றி வலம்வரச் சுமார் 360 நாள்கள் எடுக்கும் என்பது அவர்கள் கணிப்பாக இருந்துள்ளது. மனிதன் ஒருமணி நேரத்திற்குள் 900 மூச்சுவிடுவதால் ஒருநாளைக்குள் அவன் மொத்தம் 21,600 முறை மூச்சுவிடுவதாகத் தமிழ்ச் சித்தர் பெருமக்கள் கணித்தனர். உயிர், உடல் இயக்கத்தின் பயனால் மனிதன் 21,600 முறை மூச்சுவிடுவதால் அவன் 120 ஆண்டுகள்வரை உயிர் வாழ முடியும் என்று நம்பினர். மேலும், இந்த மொத்த மூச்சின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழில் 216 உயிர்மெய் எழுத்துகளை வகுத்தமை தமிழர்களின் தனிச் சிறப்பு.

தமிழர்கள் பெற்றிருந்த அண்ட பிண்ட இயக்க அறிவு அவர்களுடைய அறிவியல் அறிவை நமக்குப் புலப்படுத்துகிறது. மூச்சாற்றலைப் பொறுத்தே மனிதனின் ஆயுட்கணக்கு என்று அறிந்துவைத்திருந்தனர். தமிழர்தம் எண்ணறிவைப் பற்றிய மற்றொரு தகவலைப் பார்ப்போம். மனித வாழ்க்கையில் இவ்வளவு முக்கிய இடத்தைப் பெற்றுள்ள எண்களுக்குத் தொடக்கத்தில் வரிவடிவங்கள் இருந்தன. அவையாவன:

௧, ௨, ௩, ௪, ௫, ௬, ௭, ௮, ௯, ௰.

Tamilar Ennarivum Ezluttu Arivum.png

இன்று புழக்கத்தில் உள்ள எண்கள் தோன்றுவதற்கு முன்பாக, உலகத்தின் பல மொழிகளுக்கு எண்களுக்கென்று தனிக் குறியீடுகள் இருந்ததில்லை. எண்களுக்கு எழுத்துகளைக் குறியீடுகளாகப் பயன்படுத்திய பாங்கு, தமிழின் தனித்துவங்களுள் ஒன்று. இந்நிலை 19ஆம் நூற்றாண்டிற்குப் பின், ஐரோப்பியரின் எண் வரிவடிவங்களாக மாற்றப்பட்டன [1]. ஒன்றுக்கு மேற்பட்ட முழு எண்களை மேல்வாய் எண்கள் என்றும் ஒன்றில் குறைந்த எண்ணியல் அளவுகளைக் கீழ்வாய் எண்கள் என்றும் தமிழர்கள் அழைத்தனர். ஒன்றின் அல்லது ஒரு முழுமையின் சிதைவுச் சின்னம் என்றும் கூறுவார்கள். இவை தமிழரின் ஆழ்ந்த எண்ணறிவு ஆற்றலைப் புலப்படுத்துகின்றன.

தமிழர்கள் தமிழ் இலக்கணத்தையும் எண்ணியல் அறிவின் அடிப்படையில் அணுகினர். எழுத்தின் ஒலிப்புமுறைகளை (உச்சரிப்பு) மாத்திரை (கை நொடித்தல் – நடுவிரலையும் கட்டைவிரலையும் சேர்த்து முறுக்க வேண்டும். முறுக்கிய இரு விரல்களையும் விடுவித்தால் ஓசை பிறக்கும்) என்னும் கால நீட்டத்தைப் பயன்படுத்தினர். இது கண்ணிமைக்கும் நேரம் அல்லது கைநொடிக்கும் (சொடுக்குப் போடுதல்) கால அளவைக் குறிக்கும்.

எழுத்து என்றால் என்ன?

மொழி தோன்றுவதற்குக் காரணமான ஒலிக்கூட்டமே எழுத்து. எழுத்து என்னும் சொல்லில் எழு என்பது எழுப்பப்படும் ஒலியைக் குறிக்கிறது. அவ்வாறு எழுப்பப்படும் ஒலியே எழுத்தாகும். அது ஒலிவடிவம், வரிவடிவம் என இருவகைப்படும். ஒலிவடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்தாகும் [2]. முதலில், மனிதன் பேசத் தொடங்கினான். அதன் பிறகே அவன் ஒலிக்கு வரிவடிவம் கொடுத்தான். மனிதன் எழுத்தைப் படிக்கும்போது ஒலிகளைக் கொண்டுதான் படிக்க முடியும். எனவே, வரிவடிவம் என்பது குறியீடாகும். ஒலிக்கு உரம் சேர்ப்பது எழுத்து. ஆகவே, எழுத்துக்கு ஒலிப்புமுறையே அடித்தளமாகும்.

ஒரு சமூகம் நாகரிகத்தை நோக்கி நகர்வதற்கு எழுத்தறிவு அடிப்படையாகத் தேவைப்படுகிறது. எழுத்தறிவு இல்லாமல் மனிதன் எதையும் புரிந்துகொள்ள முடியாது. எனவே, இங்கு எழுத்தறிவு என்பது கல்வியைக் குறிக்கிறது. அக்காலத்தில் எழுத்து என்பதை இலக்கியமாகக் கருதினர். எழுத்து எனும்போது ஒருவர் இலக்கியத்தையோ இலக்கணத்தையோ கற்றிருப்பார்.

அக்காலத்தில் தமிழர்கள் உயிரியல் கோட்பாட்டை எழுத்தில் அமைத்துள்ளனர். எழுத்துக்கு உயிர் உண்டு என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது.

எழுத்து வகைகள்

தமிழுக்கு உயிர் போன்றவை உயிரெழுத்துக்கள். அவை இல்லாமல் தமிழ் மொழியில் பேசவும் எழுதவும் முடியாது. தமிழ்மொழிக்கு அடிப்படையாக இருக்கும் மற்றோர் எழுத்து மெய்யெழுத்து. மெய் என்றால் உடல். உடல் தனித்து இயங்காது. எனவே, மெய்யெழுத்துகள் உயிரெழுத்துகளுடன் இணைந்தே இயங்கும். அவை புள்ளிகளுடன் இருக்கும். உயிரெழுத்துப் பன்னிரண்டும் மெய்யெழுத்து பதினெட்டும் முதல் எழுத்துகளாகும். அதனை

         

உயிரும் உடம்புமாம் முப்பது முதலே (59)

என்று நன்னூல் நூற்பா விளக்குகிறது. பன்னிரண்டு உயிரெழுத்துகளுள் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குற்றெழுத்து உயிர்கள். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெட்டெழுத்து உயிர்கள். பதினெட்டு மெய்யெழுத்துகளும் வல்லினம், இடையினம், மெல்லினம் என மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எழுத்துகளை உச்சரிக்கும்போது அவற்றின் பிறப்பிடம், ஒலிக்கப்படும் கால அளவு ஆகியவற்றில் ஒத்திருப்பது இனவெழுத்தாகும். ஆறு வல்லின மெய்களுக்கும் இனமாக ஆறு மெல்லினமெய்கள் அமைந்துள்ளன.
 

          க்   –   ங்

          ச்   –   ஞ்

          ட்   –   ண்

          த்   –   ந்

          ப்    –   ம்

          ற்   –  ன்

உயிரெழுத்துகளில் குறிலுக்கு நெடில் இனவெழுத்தாகும்.

          அ   –  ஆ

          இ   –  ஈ

          உ   –  ஊ

          எ    –  ஏ

          ஒ    –  ஓ

 

மொழிக்கு அடிப்படை ஒலியாகும். அதனால், ஒவ்வோர் எழுத்தும் எப்படிப் பிறக்கிறது என்பதைப் பற்றித் தொல்காப்பியர் விரித்து விளக்கியுள்ளார். க, ங இரண்டும் நாக்கின் அடி, மேல்வாய் அடிப்பகுதியையும் ச, ஞ இரண்டும் நாக்கின் நடு, மேல்வாய் நடுப்பகுதியையும் ட, ண இரண்டும் நாக்கின் கடை மேல்வாய்க் கடைப்பகுதியையும் பொருந்தப் பிறக்கும். த, ந இரண்டும் மேல்வாய்ப் பல்லினது அடியை நாக்கின் நுனி பொருந்தப் பிறக்கும். ப, ம இரண்டும் மேலுதடும் கீழுதடும் பொருந்தப் பிறக்கும். ற, ன இரண்டும் நாக்கினது நுனி மேல்வாயைப் பொருந்தப் பிறக்கும் [3]. இவற்றைத் தவிர முதல் எழுத்துகளைச் சார்ந்த 3 ஒலிகள் இருக்கின்றன. அவை சார்பு எழுத்துகளாகும். குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என மூன்றும் சார்பு எழுத்துகளாகும்.

 

தமிழர்கள் தமிழ் இலக்கணத்தையும் எண்ணியல் அறிவின் அடிப்படையில் அணுகினர். எழுத்தின் ஒலிப்புமுறைகளை (உச்சரிப்பு) மாத்திரை என்னும் கால நீட்டத்தைப் பயன்படுத்தினர்.

குறில் எழுத்து – 1 மாத்திரை

நெடில் எழுத்து – 2 மாத்திரை

மெய்யெழுத்து, சார்பெழுத்து – ½ மாத்திரை

மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் - ¼ மாத்திரை

 

யாப்பருங்கல விருத்தியுரை ஒரு மாத்திரையின் கால அளவை ‘உன்னல் காலே உறுத்தல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே’ என்று நான்கு கூறுகளாக்கிக் கூறுகிறது.  இதன் பொருள் கை நொடிக்க நினைக்கும் நேரம் கால் மாத்திரை, அதற்காக இரண்டு விரல்களை ஒன்று சேர்க்கும் நேரம் அரை மாத்திரை, விரல்களை முறுக்கும் நேரம் முக்கால் மாத்திரை, இவ்வாறு முறுக்கும்போது ஓசை எழும் நேரம் ஒரு மாத்திரை என்பதாகும். 

மனிதன் அறிவுவளர்ச்சி அடைய முக்கியக் காரணம் எண்ணும் எழுத்தும் ஆகும். இல்லாவிடில், உலகம் இவ்வளவு மாற்றங்களையும் கண்டிருக்காது. எண்ணும் எழுத்தும் இவ்வளவு சிறப்பு வாய்ந்தமையால் திருவள்ளுவர் தம் முதல் குறளில்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு (குறள் 1)

 

என்று அகரத்தில் தொடங்கியுள்ளார். ஆதியில் தமிழன் அண்ட இயக்கத்திற்கு எது காரணம் என்று சிந்திக்கத் தொடங்கினான். எனவேதான், அவன் எழுத்தையும் இறைவனையும் ஒப்பிட்டுப் பார்த்தான். அதனால்தான் திருவள்ளுவர் தம் முதல் குறளை அகரத்தில் தொடங்கியுள்ளார். எழுத்துக்கு உயிர் உண்டு. எழுத்துத் தானாக இயங்க வல்லது; மற்றதையும் இயக்க வல்லது. அப்படிப்பட்ட ஆற்றல் எழுத்துக்கு உண்டு. உலகம் தோன்றுவதற்குச் சூரியனின் பெருவெடிப்புக் காரணம் என்பது அறிவியல் பார்வை. அந்த வெடிப்பின் காரணமாக எழும் ஒலிக்கு நாதம் என்றும் ஒளிக்கு விந்து என்றும் பெயர். இதுவே நாத விந்து தத்துவமாகும். இந்தத் தத்துவத்தை உலகிற்கு மிகவும் விரிவாக விளக்கியவர்கள் தமிழர்கள். இதற்குச் சான்றாக அமைவது இக்குறட்பா. இதில் அகரம் என்பது ஒலியையும் பகவன் (பகலவன்) என்பது ஒளியான சூரியனையும் குறிக்கிறது. எனவே, இதன்மூலம் திருவள்ளுவர்க்கு அறிவியல் அறிவு நுட்பமாக இருந்துள்ளது என்று சான்று பகரலாம். உலகம் தோன்றுவதற்கு எது மூலமாக இருந்ததோ அதைத் தம் முதற்குறளில் சுட்டிக்காட்டியுள்ளார். அதுபோல் ஔவையும் தம் நூலான ஔவைக்குறளில்,

 

ஆதியாய் நின்ற அறிவு முதல்எழுத்து

ஓதிய நூலின் பயன் (குறள் 1)

 

என்று தமிழின் முதல் எழுத்தின் மூலத்தை அறியச்செய்த நூலின் பயனே அறிவின் நிறைவாகும் என்று விளக்கியுள்ளார் [4].

மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தச் சத்தங்களை எழுப்பினான். எல்லா ஒலிகளுக்கும் அடிப்படையாக இருப்பது அகரம். எழுத்துகளுக்கு எல்லாம் அகரம்தான் மிக முக்கியமான ஒன்று. மனிதன் தான் நினைப்பதைச் சொல்ல, ஒலிகளை உருவாக்கினான். அந்தச் சத்தங்களை ஒழுங்குபடுத்தும்போதுதான் ஒலி பிறக்கிறது.

முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம். இயல் என்றால் இயக்குவது, இயக்கியதைப் படைப்பதாகும். படைப்பதற்கு அடித்தளமாக இருப்பது எழுத்து. இசைப்பதற்கும் எழுத்தறிவும் எண்ணறிவும் தேவைப்படுகிறது.  எனவே, ஒருமொழியில் உள்ள எண்ணையும் எழுத்தையும் பிரிக்க முடியாது. ஒன்று மற்றொன்றுக்கு வலுச்சேர்க்கும். அவை இரண்டும் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகளாகும்.

துணைநூல்கள்

[1]     வேங்கடசாமி, சீனி. (2014). தமிழ் இலக்கிய வரலாறு (பத்பொன்பதாம் நூற்றாண்டு). இளங்கணி பதிப்பகம்.

[2]     திலகவதி, க. (1995). எழுத்தியலும் சொல்லியலும் (மாறிவரும் இலக்கணம்), உமா பதிப்பகம்.

[3]     பரமசிவம், சொ. (2000). நற்றமிழ் இலக்கணம், பட்டுப் பதிப்பகம்.

 [4]    துரைராஜ், மு. (2012). ஔவை அருளிய ஞானபோதம்: முக்திக்கு ஓர் திறவுகோல். சென்னை, கற்பகம் புத்தகாலயம்.