top of page
red.png

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (சி.த.ப.மை)

1. சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்பது என்ன?

இது, தமிழ் ஆர்வலர்களினால் நிறுவப்பட்ட ஒரு கூட்டு முயற்சி. சிங்கப்பூரில் பின்பற்றப்படும் தமிழ்ப் பண்பாட்டை ஆய்ந்து, பகிர்ந்து, தக்க வைத்துக் கொள்வதே இதன் அடிப்படை நோக்கம்.

 

2. சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் அதன் நோக்கங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்த உள்ளது?

மையம், மூன்று வகையான திட்டங்களை மேற்கொள்ளும்:

  • இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தும் வகையில் தமிழ்ப் பண்பாட்டைத் தமிழரல்லாதார்க்கும் அவர்தம் பண்பாடுகளைத் தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்கும் நிகழ்வுகள் நடத்துவது;

  • தமிழ்ப் பண்பாடு பற்றிய நூல்கள், கையேடுகள் போன்றவற்றைத் தமிழோடு ஆங்கிலத்திலும் வெளியிடுவது;

  • கலந்துரையாடல்கள் மூலம் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அலசுவது.

​​

3. ஏற்கனவே பல தமிழ் அமைப்புகள் இருக்கும்போது, சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை தொடங்குவதற்கான அவசியம் என்ன?

தமிழ்ச் சமூகத்தினரின் தேவைகளில் சில இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம், பண்பாடு பற்றி ஆய்வார்ந்த நம்பகத்தன்மை மிக்க நூல்கள் அவ்வளவாக ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவருவதில்லை; சுதந்தரமான காத்திரமான ஆனால் அதே நேரத்தில் ஒருங்கிணைக்ககூடிய கலந்துரையாடல்கள் குறைவாகவே நிகழ்கின்றன; தமிழ்ச் சமூகத்திற்கும் பிற இனங்களுக்கும் இடையேயான ஆழமான, பரவலான தொடர்புகளும் மிக அரிதே. இத்தகைய தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்யும் முயற்சியே சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்.

 

4. இந்த மையம் யாருக்காகத் தொடங்கப்பட்டுள்ளது?

இது மூன்று பிரிவினரைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது:

  1. தங்கள் அடையாளத்தையும் சமூகத்தையும் பற்றி அறிந்துகொள்ள விழையும் தமிழர்கள்

  2. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் பிற இனத்தவர்

  3. தமிழ்ச் சமூகத்தோடு தொடர்பு கொண்ட  கொள்கைகள உருவாக்குவோர்

 

5. இந்த மையத்தில் யார் ஈடுபட்டுள்ளனர்?

சிங்கப்பூரில் தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் அதைப் போற்றிப் பாதுகாப்பதற்கும் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தனிப்பட்ட சிலரின் முயற்சியில் உருவானது இந்த மையம். இதில் மாணவர்கள் முதல் தொழில்நுட்ப வல்லுனர்கள் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.

 

6. சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் எப்போது தொடங்கப்பட்டது?

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 6ம் நாள் தொடங்கப்பட்டது. இந்த நாளைத் தேர்ந்தெடுக்கக் காரணம், சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் ஸ்டாம்போர்டு ராபிள்ஸ் சிங்கப்பூர்த் தீவை கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் குத்தகைக்கு வாங்க சிங்கப்பூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். அன்றிலிருந்துதான், தமிழர் வரலாறு சிங்கப்பூரில் 200 ஆண்டு காலமாகத் தொய்வின்றித் தொடர்கிறது.

bottom of page