top of page
red.png

உரைகள்

தமிழ் மின்மரபுடைமைத் தொகுப்பின் தொடக்கவிழா
22 ஆகஸ்ட் 2015, 6.00pm to 8.30pm, டிராமா நிலையம், தேசிய நூலகக் கட்டடம் 

பிரதமர் அலுவலக அமைச்சர், உள்துறை, வர்​த்தக தொழில் அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சர்

திரு எஸ். ஈஸ்வரனின் உரை

1. துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்தினத்துக்கும், அரசாங்க அமைப்புகளின் உயர் அதிகாரிகளுக்கும், ச​​மூகத் தலைவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், ​தமிழ் மின்மரபுடை​மைத் திட்டக் குழுவினருக்கும் முதலில் எனது வணக்கம்.

2. சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான நாள். மறக்கமுடியாத நாள். இந்த ஆண்டு முழுவதும் நாம் சி​ங்கப்பூரில் ஐம்பதாவது ஆண்டு நிறைவை பல வழிகளில் கொண்டாடி வருகிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நமது ​ஐம்பதாவது ​தேசிய தினத்தைப் பெருமிதத்துடன் கொண்டாடினோம்.

 

3. ஒரு கொண்டாட்டம் என்பது நாமெல்லாம் ஒரு நாளுக்கு ஒன்றுகூடி மகிழ்வதும்​ பெருமைப்படுவதும் மட்டுமல்ல. எதிர்காலச் ச​மூகம் தொடர்ந்து கொண்டா​ட நாம் என்ன செய்கிறோம் என்பதும் முக்கியமானது. அப்படி வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று நினைத்த சில சிங்கப்பூரர்கள் ஒன்று கூடி உருவாக்கிய ஒரு கதைதான் தமிழ் மின்மரபுமை​த் திட்டம்.

 

4. எழுத்தாளர்கள் சம்மந்தப்பட்ட ஒரு திட்டம் இது என்பதால் இதனைக் கதை என்று சொன்னேன். ஆனால் இது எழுத்தாளர்கள் எழுதும் கற்பனை​க் கதையல்ல. அவர்களின் எழுத்துக்களை எதிர்காலச் சந்ததியும் படித்து மகிழ்வதற்காக உருவான உண்மைக் கதை.

 

5. நாட்டின் ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ச​மூகத்தின் அன்பளிப்பாக இதனை வழங்கவேண்டும் என்று நினைத்த 15 பேர் அடங்கியக் குழு, இரண்டு ஆண்டு கடும் உழைப்புக்குப் பிறகு  இந்தக் கதையைச் சாத்​தியமாக்கியிருக்கிறது.

 

6. இந்த உன்னதமான தமிழ் மின்மரபுடைமைத் தொகுப்பின் தொடக்கவிழாவில் கலந்து கொள்வதில் நான் உண்மையில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

 

திட்டத்திற்கு ஆதரவு 

 

7. இதற்கு முன் இது போன்றதொரு முயற்சி சிங்கப்பூரில் மட்டுமல்ல, உலகில் வேறு எங்கும் மேற்கொள்ளப்பட்டதில்லை. 

 

8. நான்கு அரசாங்க அமைப்புகள் – தேசிய நூலக வா​ரியம், தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய​க் கலைகள் மன்றம், சிங்கப்பூர் தேசிய புத்தக வளர்ச்சி மன்றம் – ஆகியவை தொடக்கத்திலிருந்தே இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தர முன்வந்தன.

9. எண்ணமும் அதன் நோக்கமும் சரியாக இருக்கும்போது ஆதரவு தானாகவே வரும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

 

10. சுமார் 350 தமிழ் நூல்​களை மின்னிலக்கமாக்கி, அந்தத் தொ​குப்பைத் தனது BookSG இணையத் தளம் ​மூலம் சிங்கப்பூரர்களுக்கும் உலகிற்கும் வழங்கவிருக்கிறது தேசிய நூலக வாரியம்.

 

11. இது ஒரு மிகப்பெரிய, பிரம்மாண்டமான பணி. இதற்கு முன் இவ்வள​வு பெரிய அளவில் மேற்கொள்ளப்ப​டாத பணி.

 

12. திட்டங்களை அரசாங்கம்தான் முன்வைக்க வேண்டும் அல்லது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில்லை. எல்லாருக்கும் பொதுவான, தேவையான திட்டங்களைச் செய்வது அரசாங்கத்​தின் கடமை.

 

13. ஆனால், குடிமக்களும் அவர்களுக்குத் தேவையான திட்டங்களைத் துடிப்புடன் நிறைவேற்றுவதை இந்த அரசாங்கம் எப்போதுமே ஊக்குவித்து வந்துள்ளது. இந்தத் தமிழ் மின்மரபுடைமைத் திட்டமும் அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான். சிங்கப்பூரில் ச​மூகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உள்ள ஒ​த்துழைப்பையும் பங்காளித்துவத்தையும் இது காட்டுகிறது.

 

14. சிங்கப்பூரின் ஐம்பதாவது ஆண்டு நிறைவுக்காக வழங்கப்படும் இந்த அன்பளிப்பு அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, காலம் உள்ளவரை சிங்கப்பூர் தமிழ் இலக்தியத்தை வருங்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்கும்!

 

15. இந்தத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளித்த அத்தனை எழுத்தாளர்களுக்கும், எதையும் எதிர்பார்​க்காமல் திட்டம் நிறைவேற தொ​ண்​​டூழியம் புரிந்த அத்தனை ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

 

16. இது ஒரு ச​மூக முயற்சி என்பதை பறைசாற்ற சிறிய ​அளவிலும் பெரிய அளவிலும் பொதுமக்கள் நன்கொடை வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்குமே இந்த​த் தருணத்தில் நன்றி கூற விரும்புகிறேன்.

 

17. குறிப்பாக, இந்தத் திட்டத்திற்கு 30,000 வெள்ளி நன்கொடை வழங்கிய ஹாஜி அப்துல் ஜலீலுக்கும், இன்றைய நிகழ்ச்சிக்கு சிற்றுண்டி வழங்கி ஆதரவு தந்த காயத்ரி உணவகத்தின் திரு ஜி சண்முகத்துக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

 

நிறைவு

 

18. நமது கலாசார மரபுடைமையைக் கட்டிக்காக்கவும் மேம்படுத்தவும் இதுபோன்ற ச​மூக முயற்சிகள் இன்னும் அதிகமாக மேற்கொள்ளப்பட​ வேண்டும். பெரிய ச​மூகங்களைக் காட்டிலும் சிறிய ச​மூகங்கள் அவற்றின் கலாசாரத்தையும் மரபுடைமையையும் இழந்துவிடும் அபாயம் அதிகம். எனவே அவற்றைக் கட்டிக்காக்க அந்தச் ச​மூகங்கள் கூடுதலாக உழைக்க வேண்டும். அப்படிப்பட்ட உழைப்பின் பிரதிபலிப்புதான் இன்றைய நிகழ்ச்சியும், இன்றும் சற்று நேரத்தில் வழங்கப்படவிருக்கும் அன்பளிப்பும்.

 

19. இந்த வித்தியாசமான, பொருள் பொதிந்த அன்பளிப்பை சிங்கப்பூரின் சார்பில் ஏற்றுக் கொள்ள வந்திருக்கும் துணைப் பிரதமரு​ம் நிதியமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்தினத்திற்கு நன்றி.

 

20. இதனைச் சாத்தியமாக்கிய அரசாங்க அமைப்புகள், எழுத்தாளர்கள், தொண்​டூ​ழியர்கள், நன்கொடையாளர்கள், தமிழ் மின்மரபுடைமைத் திட்டக்குழு ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

 

வணக்கம்.

bottom of page