top of page
red.png

உரைகள்

திரு எஸ் ஈஸ்வரன்
அமைச்சர், பிரதமர் அலுவலகம்; இரண்டாவது அமைச்சர், உள்துறை அமைச்சு & இரண்டாவது அமைச்சர், வர்த்தகம், தொழில்துறை அமைச்சு

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள்
சமூகத் தலைவர்கள்
தேசிய நூலக வாரியத்தின் மூத்த அரசாங்க அதிகாரிகள்
தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய கலைகள் மன்றம் மற்றும்
சிங்கப்பூர்த் தேசியப் புத்தக மேம்பாட்டுக் கழகம்,
பெரியோர்களே நண்பர்களே
காலை வணக்கம்.

முன்னுரை

 

உங்கள் அனைவரோடு சேர்ந்து தமிழ் மின் மரபுடைமைத் திட்டத் துவக்க விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சிங்கப்பூரின் 50 ஆண்டுத் தமிழ் இலக்கியத்தை மின்னிலக்கமாக்குவது

உலகெங்கிலும் தமிழ் நாட்டைத் தவிர்த்து சிங்க​ப்பூ​ரில் மட்டுமே தமிழ் அதிகாரத்துவ மொழியாக நீடித்து வருகிறது. இந்த அங்கீகாரமும் அரசாங்க ஆதரவும், மக்கள் தொகையில் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ள தமிழ் ச​மூகத்திலிருந்து அபரிமிதமான தமிழ் இலக்கியம் உருவாக ஆணிவேராக இருந்திரு​க்கின்றன. 

 

சிங்கப்பூர் தனது ஐம்பதாவது சுதந்திர தினத்தை வரும் 2015, ஆக​ஸ்ட் மாதம் கொண்டாடவிருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தருணத்தைக் கொண்டாட, சி​ங்கப்பூர் இந்திய ச​மூகம் திரு அருண்மகிழ்நன் தலைமையின் கீழ் சிங்கப்பூரின் 50 ஆண்டுத் தமிழ் இலக்கியத்தை மின்னிலக்கமாக்குவதற்கு முன்மொழியப்பட்டது. இது நம் நாட்டிற்குத் தமிழ் சமூகத்தின் உகந்த அன்பளிப்பு. இத்தகைய முனோடியான முயற்சியை அரசாங்கமும் ஊக்குவித்து தன் ஆதரவையும் நல்குகிறது. இத்திட்டத்திற்கு என் உளமார்ந்த ஆதரவும் உண்டு.

மின்னிலக்க மரபுடைமைத் திட்டத்தின் முக்கியத்துவம்

 

இந்தத் திட்டம் பற்பல பயன்களைத் தரும். முதலாவதாக, இது சி​ங்கப்பூர் தமிழ் இலக்கியப் படைப்புகளின் வரலாற்றுப் பதிவாகவும், என்றும் நிலைத்திருக்கும் வளமாகவும் இருக்கும். வெவ்வேறு சுற்றுச்சூழலில், வெவ்வேறு கண்ணோட்டங்களுடன் வாழ்ந்த எழுத்தாளர்கள் சிங்கப்பூரை எவ்வாறு பார்த்தனர் என்பதற்கான பதிவாக இது இருக்கும். மொத்தத்தில், எதிர்காலத் தலைமுறையினருக்கும், புலம் பெயர்ந்தோருக்கும் நமது ​மூதாதையர்கள் வழங்கும் செறிவுமிக்க கலாசார மரபுடைமையாக இந்தத் தொகுப்பு அமையும்.

இரண்டாவதாக நமது தமிழாசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் சி​ங்கப்பூர்த் தமி​ழ் இலக்கியம் குறித்த விரிவான இலக்கிய வளமாக இது திகழும். மேலும், தமிழ் இலக்கியம் குறித்த கற்பித்தலிலும் ஆய்விலும் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்தத் தொகுப்பு ஓர் அமுதசுரபியாக இருக்கும். மேலும் கவிஞர்கள், நாவலாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், நடனமணிகள் என இலக்கியத்தைக் கற்பனை ஊற்றுக்கண்ணாகக் கருதும் அத்தனை பேருக்கும் இந்தத் தொகுப்பு ஊக்கமும் உத்வேகமும் அளிக்கும்.

தகவல் தொழில்நுட்பத்திலும் தமிழ்க் கல்வித் திட்டத்திலும் ​சிங்கப்பூர் தன்னிகரில்லா வளர்ச்சி அடைந்துள்ளது. சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடநூல்கள் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சி​ங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் கல்வியமைச்சின் ஆதரவுடன் முதல் உலகத் தமிழாசிரியர் மாநாட்டை நடத்திக் காட்டினர். ‘இன்ஃபிட்’ எனப்படும் தமிழ் தகவல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக ஆய்வரங்கு என்ற முதல் தமிழ் இணைய அமைப்பு தகவல் மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன்​ சிங்கப்பூரில்தான் அரங்கேறியது.

தேசிய கலை மன்றத்தின் ஆ​தரவோடு முதல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டையும் சிங்கப்பூர் நடத்தியது. இவை அனைத்துமே வாழ்ந்து கொண்டிருக்கின்ற செம்மொழியாம் தமிழ் மொழிக்கு சிங்கப்பூரை ஒரு தலைசிறந்த இல்லமாக மாற்றியிருக்கின்றன. இதைப்போன்றே தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் உலகத் தமிழர்களிடையே சிங்கப்பூருக்கு ஒரு தனி மதிப்பைப் பெற்றுத் தரும்.

தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்திற்கு ஆதரவு

 

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் இன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளில் முடிவடையும். 1965க்குப் பிந்திய அந்த இலக்கிய வளத்தை இயன்ற அளவு ஒன்றுதிரட்டி, மின்னிலக்கத் தொகுப்பாக உருமாற்றி பொதுமக்களுக்குத் தருவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இது ஒரு மாபெரும் முயற்சி. இதில் ஈடுபட்டிருக்கும் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஐம்பதாண்டு மின்னிலக்கத் தொகுப்பு முமுமையடைந்தவுடன் அது தேசிய நூலக வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். வாரியத்தின் மற்ற மின்னிலக்கத் தொகுப்புகளுடன் இதுவும் சேர்ந்து ​கொள்ளும். ​ இந்தத் தொகுப்பு ஒரு நல்ல இல்லத்தில், நிபுணர்களின் மேற்பார்வையில், காலாகாலத்துக்கும் பாதுகாப்புடன் இருப்பதை அது உறுதி செய்யும். இத்திட்டத்தை தலைமை ஏற்று நடத்திச் செல்லும் தேசிய நூலக வாரியத்திற்கு என் நன்றி.


இந்தத் திட்டத்தின் இலக்கியச் சிறப்பையும், எதிர்காலத்தில் புதிய தொகை நூல்கள், மின் பதிப்புகள் ஆகியவை உருவாகக் கூடிய சா​த்தியத்தையும் கருத்தில் கொண்டு தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய கலை மன்றம், சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டுக் கழகம் ஆகியவையும் இத்​திட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன,


இத்திட்டம் சிறப்பாக வெற்றியடையச் செய்வதில் சமூகத்திற்கு பெரும் பங்கு உள்ளது. அனைத்து சமூக அமைப்புகளையும் தனிமனிதர்களையும் இத்திட்டத்தில் சேர அழைக்கிறோம். குறிப்பாகச் சில வேண்டுகோள்களை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

முதலாவதாக அனைத்து தமிழ் எழுத்தாளர்களிடம் உங்கள் நூல்களை மின்னிலக்கமாக்கவும் அதனை அனைவரும் வாசிக்கும் உரிமையை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன். நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கப்படும் உங்கள் படைப்புகள் சிங்கப்பூருக்கு அப்பாலும் வாசிக்கப்படும். ஏற்கனவே தங்கள் சம்மதத்தை அளித்துள்ள 50க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களுக்கு நன்றி. மேலும் அனைத்து எழுத்தாளர்களும் இத்திட்டத்தில் சேருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டாவது சவால், இந்த மின்தொகுப்பு பிழையின்றி இருத்தல் அவசியம். இதற்கு ஆயிரக்கணக்கான மின்பக்கங்களை நுட்பமாக சரிபார்க்கவேண்டும். அத்துடன் ஒவ்வொரு நூலின் கருத்துச் சுருக்கத்தையும் எழுத தமிழ் மின்மரபுடைமைக் குழு தீர்மானித்துள்ளது. இவ்விரண்டு பணிகளுக்கும் பலரின் உதவி தேவைப்படுகிறது. ஆதலால் தமிழ் மொழி வல்லுநர்களை, குறிப்பாக எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரை இப்பணிகளுக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மூன்றாவதாக இத்திட்டத்திற்கு தேவையான நிதி திரட்டும் முயற்சியில் இந்திய சமூக அமைப்புகளும் தலைவர்களும் உதவ முன்வரவேண்டும். ஏற்கனவே தேசிய நூலக வாரியமும் தேசிய மரபுடைமைக் கழகமும் இத்திட்டத்திற்குத் தங்கள் ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கின்றன. ஆயினும் இந்திய சமூகம் தங்களின் எல்லையில்லா ஆதரவை வழங்கும் என நம்புகிறேன்.

முடிவுரை

 

இறுதியாக சிறப்பான இத்திட்டத்திற்கு அடிகோலிய திரு அருண்மகிழ்நன் அவர்களுக்கும் அவர் தலைமையில் இயங்கும் தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழுவினருக்கும், இணைந்து உதவும் தொழில்நுட்பப் குழுவினருக்கும், சமூகவள குழுவினருக்கும் என் நன்றி.

இத்திட்டம் பெரும் வெற்றிபெற என் வாழ்த்துக்கள். ஆகஸ்டு 2015 இல் சிங்கப்பூரின் 50 வது பிறந்த நாளன்று சமூகத்தின் அன்பளிப்பாக தமிழ் மின்மரபுடைமைத் தொகுப்பை நாம் வழங்கும் நிகழ்வை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இப்பொழுது நான்கு நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள், எழுத்தாளர் பிரதிநிதிகள், மாணவர்கள், தமிழ் மின்மரபுடைமைக் குழுவினர் ஆகியோரை இத்திட்டத்தை ஒன்றாகச் சேர்ந்து தொடங்கிவைக்க மேடைக்கு அழைக்கிறேன்.

இப்பொழுது தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தை அனைவரும் சேர்ந்து அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கிறோம்.

bottom of page