உரைகள்
திரு நா ஆண்டியப்பன், தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
மின் மரபுடைமைத் திட்டத்தைத் தொடங்கிவைக்க வந்துள்ள துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்களே, இந்தத் திட்டத்திற்குத் தொடக்கத்தில் இருந்து ஆதரவு நல்கிவரும் பிரதமர் அலுவலக அமைச்சரும் திட்டத்தின் புரவலருமான திரு. எஸ். ஈஸ்வரன் அவர்களே, பெரியோர்களோ, தாய்மார்களே, எழுத்தாளர்களே, கவிஞர்களே உங்கள் அனைவருக்கும் முதலில் எனது வணக்கத்தைக் கூறிக்கொள்கிறேன்.
இந்த மாபெரும் திட்டம் சிங்கப்பூருக்கு அதன் பொன்விழா ஆண்டில் தமிழ்ச் சிங்கப்பூர்ச் சமூகம் வழங்கும் மிகப் பெரிய அன்பளிப்பு. உலகம் முழுதும் வாழும் தமிழர்களும் குறிப்பாகச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களும் இதனால் பயனடைவர். அவர்களின் படைப்புகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படும் அரிய முயற்சி இது.
எழுத்தாளர்களில் பலர், குறிப்பாக மூத்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளையே வைத்திருக்காத நிலையை நாம் இன்று காண்கிறோம். எப்போதோ படைத்து, எப்போதோ அச்சிட்டு, எப்போதோ வெளியிட்டு அதன் பிறகு ஒன்று, நூல்கள் அனைத்தும் தீர்ந்துவிடுகின்றன, அல்லது செல்லரித்துப் போய் வீணாகி விடுகின்றன. அவர்கள் இரண்டாம் பதிப்பும் போடுவதில்லை. அதனால் ஆய்வாளர்கள் தேடும்போது அவர்களின் நூல்கள் கிடைப்பதில்லை. இனி அந்தக் கவலை இல்லை. இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து நூல்களையும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும், படிக்க முடியும்.
எங்களுடைய வேண்டுகோளை ஏற்று இந்தத் திட்டத்திற்கு நூல்களை வழங்கிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றிகூறிக் கொள்கிறேன். அதே வேளையில் ஒரு சிலர், குறிப்பாக மூன்று நான்கு பேர் இந்தத் திட்டத்திற்குத் தங்கள் நூல்களை வழங்க ஒப்பவில்லை. திட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே அதற்குக் காரணமாக இருக்கலாம். அவர்களும் விரைவில் மனம் மாறி தங்கள் படைப்புகளை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
இந்த நேரத்தில் தேசிய நூலக வாரியம், தேசிய மரபுடைமை வாரியம் தேசியக் கலைகள் மன்றம், தேசிய புத்தக வளர்ச்சி மன்றம், ஆகிய நான்கு முக்கிய அரசாங்க அமைப்புகளுக்கும் தமிழ் எழுத்தாளர்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால் இத்திட்டம் வெற்றிபெற்றிருக்க முடியாது.
இறுதியாக நான் முன்பு குறிப்பிட்டதைப் போல், திட்டத்தின் தொடக்கத்திலிருந்து இன்று வரை முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கிய நமது அமைச்சர் திரு. ஈஸ்வரன் அவர்களை நாம் மறந்துவிட முடியாது. அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அரும்பாடுபட்டு இதனைச் சாத்தியமாக்கிய திரு. அருண் மகிழ்நன் அவர்களுக்கும் அவருடைய 15 தளபதிகளுக்கும் 250 தொண்டுப் படையினருக்கும் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி.