top of page
red.png

நானும் தமிழும்

“நானும் தமிழும்” என்னும் காணொளித் தொகுப்பில் தமிழ் அல்லாத பிற துறைகளில் சிறந்து விளங்குகின்ற 10 வல்லுநர்கள், தமிழ்மொழி எவ்வாறு தங்கள் வாழ்விலும் பணியிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதைப் பகிர்ந்துள்ளனர். 

இத்தொகுப்பு, இளையர்களுக்குத் தமிழின்பால் ஆர்வத்தை அதிகரிக்கும் என்றும் அவர்களின் தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் என்றும்  நம்புகிறோம்.

உயிரியல் தொழில்நுட்பம்கொண்டு சுற்றுச்சூழல் ஊறுகளைக் களையும் அறிவியல் ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார், முனைவர் இளவழகன் முருகன். அறிவியல்சார்ந்த பங்களிப்போடு நின்றுவிடாமல், அவர் தமிழ்மீது கொண்ட காதலால் மேடை நாடகங்களை இயக்குவதிலும் கவிதைகள் புனைவதிலும் தனியார்வம் காட்டிவருகிறார். அறிவியலாளரான அவர்க்குத் தமிழ் ஏன் தேவைப்பட்டது என்பதையும் ஏன் இந்தக் காணொளித்தொடர் தயாரிக்கப்பட்டது என்பதையும் இந்த முதல் பதிவில் அவர் விளக்குகிறார்.

மருத்துவர் மா. பிரேமிக்காவிற்குத் தமிழ் அவரது பண்பாட்டு மொழியாக மட்டுமில்லாமல் பணித்துறை மொழியாகவும் இருந்து வருகிறது. Covid பெருந்தொற்றுக் காலத்தில், கிட்டத்தட்ட 800 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் பணியில் தமிழ் மொழி அவருக்கு உதவியுள்ளது. தமிழ் மொழி மூலம் தனக்கும் அவரது நோயாளிகளுக்கும் இடையே உள்ள உறவு எவ்வாறு மேம்படுகிறதென்று இக்காணொளியில் அவர் விளக்குகிறார். 

ஒரு தூதரக அதிகாரியாகப் பணிபுரியும் பார்கவ் ஶ்ரீகணேஷ், ராஜதந்திரங்களைப்பற்றி தனது மனதில் கேள்விகள் எழும்போது ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற தமிழ் காப்பியங்களைப்பற்றி சிந்திக்காமல் இருப்பதில்லை. முதலில் தமிழைப்படித்து, பிறகு இலக்கியங்களை ரசித்து இன்றுவரை தமிழை நேசித்து வரும் இந்த இளைஞர், தனது தமிழார்வம் எப்படி ஆரம்பித்ததென்றும் எப்படித் தம் தொழிலோடு தொடர்கிறது என்றும் இக்காணொளியில் விளக்குகிறார். 

சிங்கப்பூர் தேசியக் கண் நிலையத்தில் மூத்த விழிப்பார்வைத் தேர்வாய்வாளராகப் பணிபுரியும் முகம்மது ஃபாரூக் தமிழ்மொழியை அன்றாட வாழ்விலும் பணித்துறையிலும் ஆர்வத்துடன் பயன்படுத்திவருகிறார். குறிப்பாக, கண் சுகாதாரத்திற்குரிய அடிப்படைக்  கல்வியைத் தமிழ்ச் சமூகத்தினரிடம் சேர்க்கும் சேவையை மேற்கொண்டு வருகிறார். இச்சேவை குறித்தும் 
தமிழ் மீதான ஆர்வத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது குறித்தும் இக்காணொளியில் இவர் விளக்குகிறார்.

2014 முதல் நாடக எழுத்தாளரான அஷ்வாணி அஷ்வத், இன்று சிங்கப்பூர் கலைப்பள்ளியில் இலக்கியக் கலை ஆசிரியராகப் பணிபுரிகிறார். பட்ஸ் நாடக நிறுவனத்தில் தொடங்கிய இவரது பயணம், பள்ளிகளுக்கும் பல்வேறு நாடகக்குழுக்களுக்கும்  நாடகங்களை எழுத வாய்ப்பு வழங்கியது. இவரது நாடகங்கள் ரவீந்திரன் நாடகக் குழு, T:>works மற்றும் சிங்கப்பூர்க் கலை விழா முதலியவற்றால் படைக்கப்பட்டுள்ளன. 

ஏன் நாடகங்களை தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் எழுதுகிறார், கலைகளின்மூலம் எவ்வாறு தமிழர் பண்பாட்டை பிற சிங்கப்பூரர்களுக்கு உணர்த்தலாம், சமூகப் பிரச்சினைகளைப் பற்றி எப்படி சிந்தனையைத் தூண்டலாம், போன்ற சுவாரசியமான வினாக்களுக்கு விடையளிக்கிறார்  அஷ்வாணி அஷ்வத்! மறவாமல் பாருங்கள்!
 

தமிழ்ப் பாசம் நம் அன்றாட வாழ்க்கையில், நாம் செய்யும் தொழிலில்கூட நம்மை வழிநடத்தக்கூடும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் முனைவர் மு அப்துல் காதர்.

 

மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் ஒரு பட்டயக் கணக்காய்வாளர். காதர் & கோ எனும் தன் சொந்த தணிக்கை நிறுவனத்தை சிங்கையில் நடத்திவருகிறார். அமெரிக்க, ஆஸ்திரேலிய, பிரித்தானியக்கல்லூரிகளில் பட்டப்படிப்புகளுக்கு விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். 

கணக்காய்வாளராகத் தினமும் வாடிக்கையாளர்களை சந்திக்கையில் எவ்வாறு தமிழ்மொழி வாயிலாக ஒரு நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துகிறார், இவரது தமிழ்ப்பற்றுக்கு ஆணிவேர் எது, நீங்களும் தமிழ்ப்பணியை பணியிடத்திலும் எவ்வாறு தொடரலாம் எனத் தெரிந்துகொள்ள விரும்பினால் இக்காணொளியைக் காணுங்கள்! 

சட்டதுறையில் இவர் தமிழைப் பயன்படுத்திய தருணங்கள் பலருக்குச் சரியான நீதி வழங்கியிருக்கிறது! 'பணியிடத்தையும் தாண்டும் என் தமிழ்ப்பணி'  என இவர் இலவச சட்ட அறிவுரைகளையும் தமிழில் வழங்குகிறார்.

 

 'தாறுமாறு ரன்னர்ஸ்' என்று பெயர்  வைத்துக்கொண்டு ஒழுங்காகவே ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் தமிழ்தான் எங்களை ஒன்று கூட்டியது என்கிறார்.

 

இவர் யார்?....ரமேஷ் செல்வராஜ்!

பாரதியார் அன்று கண்ட புதுமைப்பெண் இன்று அறிவியல் ஆய்வுகளத்தில் பெரும் சிகரங்களைத் தொட்டு வருகிறார். அவருக்குப் பக்கபலமாக இருந்துவருவது தமிழ்மொழியே. ஆராய்ச்சிக் கடலில் தத்தளிக்கும் தருணத்தில் தமிழ்க்கடலில் மூழ்கி சுவாசிக்கும் அரிய ஆற்றலைப் பெற்றவர் இவர். பெண்களின் எண்ணிக்கைக் குறைவாகவே உள்ள துறையில் சாதித்துப் பிறருக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர்.

 

மறதி நோயை முறியடிக்கும் நோக்கிலும் தமிழை மறவாதிருக்கும் செல்வி சர்மிலி செல்வராஜியின் அனுபவங்கள்.

தமிழர்களுக்கும், சிங்கப்பூரர் அனைவருக்கும் பெருமை சேர்த்துவரும் இவர், வாழ்வில் எத்தனையோ சிகரங்களை எட்டியுள்ளார். இப்பயணத்தில் தனக்கு அரணாகத் தோள்கொடுத்துள்ளது தமிழன்னையே என்கிறார்!

 

தமிழின் ஈர்ப்புசக்தியைப் பற்றிப் பேச வருகிறார் மலையேறும் மருத்துவர் குமரன் இராசப்பன்!

'நானும் தமிழும்' தொடரின் நிறைவுப் பதிவாக, ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம் மிக்கப் பேராசிரியர் சித்ரா சங்கரனின் அனுபவத்தைக் கேட்கவிருக்கிறோம்.

 

அவரது இலக்கிய ஆர்வத்திற்கு வித்தென்ன? அவர் பணியில் ஆங்கில இலக்கியத்தோடு தமிழ் இலக்கியம் எவ்வாறு  சங்கமிக்கிறது?தமிழ் இலக்கியத்தின் கூறுகள் அவரது உலக கண்ணோட்டத்தை எவ்வாறு செதுக்கியுள்ளன? இவற்றை அறிய இவ்வாரத்தின் காணொளியைத் தவறாமல் பாருங்கள்!

bottom of page