top of page
Final.png

ஔவையார்

தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களுள், தனிச்சிறப்பு மிக்கவர் ஔவையார். இவரை நாம் ஔவை என்றும் அழைப்பதுண்டு. தமிழ்ப் பெண்பாற் புலவர்களுள், ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் பெண் புலவர்கள் வாழ்ந்து பல்வேறு பாக்கள் பாடியுள்ளனர். ஔவை என்னும் பெயரில் அமைந்த புலவர்களை எண்ணும்போது அவர்களைப் பற்றிய பின்வரும் சிந்தனைகள் உள்ளத்தில் தோன்றுவதுண்டு:

  • தமிழில் ஆழ்ந்த புலமைமிக்கவர்

  • மன்னர்களையும் இடித்துரைத்துத் திருத்தும் துணிவுமிக்கவர்

  • சான்றோர் வழிநின்று அறத்தைப் போதித்தவர்

  • உயர்சிந்தனைகளை எளிய முறையில் கருத்துச் செறிவுடனும் கற்பனை நயத்துடனும் எடுத்துரைக்கக்கூடியவர்

 

ஔவையார் என்னும் பெயரில் மொத்தம் எத்தனை புலவர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதில் தமிழ் அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. ஔவையார் என்பார் ஒருவரே என்றும் மூவர் என்றும் நால்வர் என்றும் அறுவர் என்றும் அவர்கள் மொழிந்துள்ளனர். தமிழண்ணல் என்பார் தம் நூலில் சங்ககால ஔவையார்பற்றியும் நீதிநூல் ஔவையார்பற்றியும் விரித்து விளக்கியுள்ளார். “இவ்விரண்டு ஔவையார்களே உண்மையாக வாழ்ந்தனர் என்று கூறலாம். ஏனைய பெயருடையார் யாவரும் இவர்களது புகழ் ஒளியில் பூத்த நறுமலர்களாகவே எண்ணத்தக்கவராவர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.    

 

தமிழ்மொழி இலக்கிய வரலாற்றை அடியொற்றி மொத்தம் 6 ஔவையார் வாழ்ந்துள்ளனர் என்று பேராசிரியர் மு அருணாசலம் குறிப்பிட்டுள்ளார். அவர்கள்பற்றிய குறிப்புகள் பின்வருவன:

தழுவல் (மேற்கோளாகக் காட்டப்பட்ட நூல்): மணி, பெ. சு. (2000). சங்ககால ஔவையாரும் உலகப் பெண்பாற் புலவர்களும். சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம் (ப. 220). மூலப் பட்டியலை வழங்கியவர்: அறிஞர் மு. அருணாசலம்.

சங்ககால ஔவையார்  

பொதுவாக, இலக்கியங்கள் படைத்த பெண்பாற்புலவர்கள் எண்ணிக்கையில் குறைவு.   இதற்குச் சான்று, சங்ககாலத்தில் 30 பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர் என்று தமிழ் இலக்கிய வரலாறு குறிப்பிடுகிறது. அவர்களுள் ஔவையாரும் ஒருவர். அக்காலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களுள் ‘தமிழ் மூதாட்டி’ என்னும் சிறப்புப் பெயர் ஔவையார்க்கு மட்டுமே கிடைக்கப் பெற்றது. இவரைச் சங்ககால ஔவையார் என்று அழைப்பார்கள். இவர் பாடியவையாக அகநானூற்றில் 4 பாக்களும் குறுந்தொகையில் 15 பாக்களும் நற்றிணையில் 7 பாக்களும் புறநானூற்றில் 33 பாக்களும், ஆக மொத்தம் 59 பாக்கள் உள்ளன. அவற்றுள் 23 பாக்கள் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றியவை[1].

பொதுவாக, ஔவையின் பிறப்பு, வளர்ப்புப்பற்றிப் பல கதைகள் உள்ளன. இவர் பாணர்குலத்தில் பிறந்த பெண் என்று தெரிகிறது. இவர் மணம் முடிக்க விரும்பாமல் இறைப் பக்தியால் துறவுபூண்டு வாழ்ந்தார். சங்ககாலத்தில் (பொ.ஊ. 2இல்) வாழ்ந்த ஔவையார், நாடு போற்றி வாழ்ந்த நற்றமிழ்ச் செல்வியார் என்னும் சிறப்புப் பெற்றவர். இவர் பரணர், கபிலர் காலத்தில் வாழ்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. பறம்பு மலையைப்பற்றி இவர் பாடியதால், இவர் பாரியுடனும் கபிலருடனும் பழகியிருக்கக்கூடும் என்று எண்ணப்படுகிறது.

 

அன்றைய மன்னர்களுக்கு வேண்டிய அறிவுரைகளைக் காலத்துக்கு ஏற்றவாறு கூறி அவர்களால் போற்றப்பட்ட பெண்மணி இவர். ஔவையார் வார்த்தைக்கு மறுப்பில்லை என்று கருதும் அளவிற்கு உயர்ந்து நின்றார். ஔவையாரின் புகழ் என்றும் அழியாமல் நிலைத்து நிற்கக்கூடிய ஒன்றாக இருப்பதற்குக் காரணம், இவர் தமிழின்பால்கொண்ட புலமையும் ஆழமும் ஆகும். இவர் எதையும் எளிமையாகவும் இனிமையாகவும் எடுத்துரைக்கும் சொல்வன்மைமிக்கவர்[2].

 

இவர் அவைக்களப் புலவராக மட்டும் இல்லாமல் அவைக்களத் தூதுவராகவும் விளங்கினார். அதியமான் ஔவையாரைத் தொண்டைமானிடம் தூது அனுப்பியபோது தொண்டைமான் தம் படைக்கலங்களைக் காட்டிப் பெருமிதம்கொண்டபோது, ஔவையார் அவரின் படைக்கலங்களைப் புகழ்வதுபோல் பாடி, அதியமானின் போர்ப்பலத்தை நுட்பமாக வெளிப்படுத்திய திறன் கவனத்திற்குரியது. ஔவையார் அதியமானிடம் அவைக்களப் புலவராக இருந்தபோது, ஒரு சமயம் அதியமான் பரிசு தருவதற்குக் காலம் தாழ்த்தியதை உணர்ந்த ஔவையார், இவரின் மதிப்புப் பாதிக்கப்பட்டதை எண்ணி அங்கிருந்து வெளியேறத் துணிந்தார். பிறகு அதியமான் இவரது புலமையைப் பாராட்டிப் பரிசு கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் இவர்பால் கொண்டிருந்த அளவுகடந்த அன்பால் அவனுக்குக் கிடைத்த சாதல் நீக்கும் நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் ஔவையார்க்குக் கொடுத்து, இவரை நிலமிசை நீடுவாழ வைத்தான், அதியமான்.  

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

களம்படக் கடந்த கழல்தொடிக் தடக்கை

ஆர்கலி நறவின், அதியர் கோமான்

போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும, நீயே! தொன்னிலைப்

பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,

ஆதல் நின்னகத்து அடக்கிச்,

சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே. (புறம் – 91)

இந்தப் பாடலில் அதியமானின் தியாகச் சிறப்பைப் பற்றிப் பெரிதும் போற்றி மகிழ்ந்துள்ளார், ஔவையார்.

 

இடைக்கால ஔவையார்

பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் என்பார் இடைக்கால ஔவையார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்தவர். இவர் பாடிய பாக்கள் தனிப்பாடல் திரட்டாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில:

 

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்...”, “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...” “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு...” போன்ற பாக்களாகும். இவ்வாறு மொழி, வாழ்வியற் தத்துவங்கள், கல்வி எனப் பல்வேறு பாடுபொருள்களில் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் முருகக் கடவுளின்பால் பேரன்புகொண்டவர். சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று முருகக்கடவுள் இடையனாகத் தோன்றி நாவல் மரத்தின்மீது அமர்ந்திருந்து கேட்க, பழத்தில் சுட்ட பழம் சுடாத பழம் ஏது என்று ஔவை எண்ணினார். இடையன் மரக்கிளைகளை உலுக்கும்போது, பழுத்த நாவல் பழங்கள் கீழே விழுந்தன. அவற்றை எடுத்த ஔவை, மண்ணைப் போக்குவதற்காக ஊதினார். அப்போது பழம் சுடுகிறதா என்று சிறுவன் கேட்க, ஔவைக்குத் தம் அறியாமை புலப்பட்டது.

 

நீதிநூல் ஔவையார்

        

பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டில், சோழர் காலத்தின்போது மற்றொரு புலவர் ஔவையார் என்னும் பெயரில் வாழ்ந்தார். இவரிடம் குடியிருந்த மழலைத் தனத்தையும் நெஞ்சத் தூய்மையையும் குழந்தைகளுக்காக இவர் எழுதிய பாடல்களின்வழி உணர முடிகிறது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டாம்), நல்வழி முதலிய நீதிநூல்களைப் படைத்தவர்[3].

 

இவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களைத் தமிழ் நெடுங்கணக்கு முறையில் அமைத்துப் பாடியுள்ளார். அகராதி தோன்றுவதற்கு முன்பாக, அகர வரிசையில் பாக்களை இயற்றினார். நுட்பமான வாழ்வியல் தத்துவங்களை எளிய தமிழில் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் வகையில் பாக்களை வடித்த பெருமைக்குரியவர். அறம்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என்று 108 சூடிகளைக் கொண்ட நூலாக ஆத்திசூடியை இயற்றினார். திருக்குறளில் திருவள்ளுவர் வெண்பாவில் எழுதிய குறட்பாக்கள் சுருக்கமாக அமைந்திருந்தாலும் அவற்றைவிடச் சுருக்கமாக நீதிநூல் ஔவையின் இயற்றிய ஆத்திசூடி தொடர்கள் அமைந்துள்ளன. அந்நூல் பிற்காலத்தில் தோன்றிய கவிஞர்களையும் புதிய கண்ணோட்டத்தில் ஆத்திசூடி பாடவைத்தது. மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடியையும் புரட்சிக்கவி பொது ஆத்திசூடி, இளையர் ஆத்திசூடி ஆகிய நூல்களையும் இயற்றத் தூண்டின[4].

ஔவை இயற்றிய ஔவைக்குறள்          

ஔவையாருள் நான்காமானவராக வாழ்ந்தவரின் காலம் பொ.ஊ. 14ஆம் நூற்றாண்டாகும். அகவலையும் ஔவைக்குறளையும் பாக்களாக உலகுக்கு அளித்தவர். யோகக்கலையில் சிறந்து விளங்கிய இவர் பாடிய ஔவைக்குறள், திருக்குறள் போன்றது. இது வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தனிப்பால் என முப்பாலாக ஔவையார் இயற்றிய நூலாகும். இதில் முக்திக்கு வழிகாட்டும் 310 குறட்பாக்கள் 31 அதிகாரங்களில் அமைந்துள்ளன. திருமூலர் அளித்த யோக நூலுக்கு அடுத்துத் தமிழ் மெய்யன்பர்களால் பெரிதும் போற்றப்படுவது ஔவைக்குறளாகும்[5].

 

ஔவை என்னும் பெயரில் புலவர்கள் பலர் வாழ்ந்திருப்பினும் அவர்கள் யாவரும்  அறத்தை வலியுறுத்தியுள்ளனர். இதுவரை ஔவையின் வரலாறு இன்னது என்று தெளிவுற விளக்கப்படவில்லை. இவர் பாடிய பாக்களைக் கொண்டே இவரது வரலாறு பின்னப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் தம் கட்டுரைத் தொகுப்பில் ஔவைபற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் எல்லாச் செல்வங்களையும்கூடத் தாம் இழப்பதற்குத் தயாராக இருப்பதற்குக் காரணம், அவையாவையும் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக்கொள்ளும். ஆனால், ஔவையின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதிக்க முடியாது என்று அவர் திடமாக உரைக்கிறார்[6].         

 

ஔவையின் பெருமையைப்பற்றி நாம் எண்ணும்போது, அது தமிழுக்குக் கிடைத்த பெருமையாகவே எண்ணத் தோன்றுகிறது. அதனால்தான் ஔவையார் என்னும் பெண் கவிஞரைப் போற்றிக் கொண்டாடவும் பெண்களின் ஆளுமைத் திறன்களை உலகறியவும் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் ‘ஔவையார் விழா’ என்னும் நிகழ்ச்சிக்கு 2014ஆம் ஆண்டிலிருந்து ஏற்பாடுசெய்து ஆண்டுதோறும் சிங்கப்பூரில் நடத்திவருகிறது. இந்த நிகழ்ச்சியின்போது தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆத்திசூடி ஒப்புவித்தல், ஒப்பனை செய்தல், கதை கூறுதல், கலந்துரையாடல், பேச்சுப் போட்டி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். தற்போது இவ்விழாவில் மழலையர் மற்றும் பாலர் பிரிவு மாணவர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிங்கப்பூர்த் தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டத்தில், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்கள் கற்பிக்கப்படுகின்றன

துணைநூல்கள்

[1]       பட்டத்தி மைந்தன். (2013). சங்கத்தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள். சாரதா பதிப்பகம்.

[2]       பாலுசாமி, நா. (1991). வாழ்வியற் களஞ்சியம் (தொகுதி 6) தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.

[3]       துரைராஜ், மு. (2012). ஔவை அருளிய ஞானபோதம்: முக்திக்குத் திறவுகோல். சென்னை: கற்பகம் புத்தகலாயம்.

[4]       பாரதியார். (1997). பாரதியார் கட்டுரைகள். மாதர் – தமிழ்நாட்டு நாகரீகம். சென்னை: பூம்புகார் பதிப்பகம்.

[5]       மோகன், ஆர். சி. (2012). ஔவை அகவல் - ஔவை குறள் (மூலமும் உரையும்). சென்னை.

[6]      தமிழண்ணல். (2016). இந்திய இலக்கியச் சிற்பிகள்: ஔவையார். சென்னை: சாகித்திய அகாதெமி.

தலைப்புக்குத் தொடர்புடைய பிற வளங்கள்

 

1. கட்டுரை: ஔவையாரும் அதியமானும் - முனைவர் இர. பிரபாகரன் http://www.tamilauthors.com/01/858.html

2. ஒளவையார்பற்றிய செய்தி - சங்ககாலச் சான்றோர்கள், ஆசிரியர்: ந. சஞ்சீவி © Project Madurai, 1998-2017

     https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0575.html

bottom of page