top of page
Final.png

பாரதிதாசன்

 

 

பாரதிதாசன் என்று எல்லாராலும் அறியப்பட்டவர்க்கு இயற்பெயர் கனக சுப்புரத்தினம். இவர் 1891ஆம் ஆண்டில் ஏப்ரல் திங்கள் 29ஆம் தேதியன்று புதுவையில் தோன்றினார். இவரது குடும்பம் வீர சைவக் குடும்பமாகும். தொடக்கக்காலத்தில், இவர்க்கு வள்ளலார் மீதும் அவர் நிறுவிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் மீதும் ஈடுபாடு இருந்தது. சுப்புரத்தினம் தம் இளமைக்காலத்தில் திருப்புளி சாமி திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்றார். இவர் இலக்கண இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்ததோடு நாடகத்தில் திறமையும் இசையில் பயிற்சியும் பெற்றிருந்தார். பின்னர்த் தமிழாசிரியர்க்குரிய பட்டப்படிப்பில் முதன்மைநிலையில் தேர்ச்சிபெற்றார். தம் இளம்பருவத்திலேயே ஆசிரியர் பணியில் சேர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இவர்க்குக் கிட்டியது. அதோடு, பிற்காலத்தில் இவர்க்கு அரசியலிலும் தமிழ்த் திரையுலகிலும் ஈடுபாடு ஏற்பட்டது. மேலும், மல்யுத்ததிலும் இவர்க்கு ஆர்வமேற்பட்டது. அதில் முறையான பயிற்சி இருந்தபடியால் இவர் உருவத் தோற்றத்தில் பார்ப்பதற்குச் சற்று முரட்டுத்தனமாக இருந்தார். 

 

பாரதி – பாரதிதாசனின் முதல் சந்திப்பு

 

சுப்புரத்தினத்திற்கு மகாகவி பாரதியைச் சந்திப்பதற்கு முன்பே கவிதை எழுதும் ஆற்றல் இருந்துள்ளது. சுப்புரத்தினம் தம் 20ஆவது வயதில் பாரதியைச் சந்தித்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருநாள், தம் நண்பரின் திருமணத்திற்குச் சென்றிருந்தார், பாரதிதாசன். இவர் கலந்துகொண்ட விருந்திற்குப் பாரதியும் சென்றிருந்தார். பாரதிதாசன் விருந்துக்குப் பிறகு, திருமணத்தில் பாரதியாரின்  இரண்டு பாடல்களான “வீரசுதந்திரம் வேண்டி நின்றார், பின்னர் வேறொன்று கொள்வாரோ” என்னும் பாடலையும் “தொன்று நிகந்ததனைத்தும்” என்னும் பாடலையும் இசையோடு பாடியுள்ளார். அப்போது அங்கு அமர்ந்திருந்த வேணு நாயக்கர், பாரதியைச் சுப்புரத்தினத்திற்கு அறிமுகம் செய்துவைத்தார். அதற்குப் பாரதியார் “பொருளுணர்ந்து நன்றாகப் பாடினீர்கள். தமிழ் வாசிச்சிருக்கீங்களா?” என்று வினவ, சுப்புரத்தினம் “கொஞ்சம்” என்று அடக்கமாகப் பதிலுரைத்தார். அந்தச் சந்திப்புக்குப் பின் பாரதி – பாரதிதாசன் தொடர்பும் நட்பும் மலர்ந்தது [1].

 

அதனைத் தொடர்ந்து, பாரதிக்கு அரசாங்கத்தால் ஏற்பட்ட நெருக்கடிகளின்போது பாரதிதாசன் துணைநின்றார். ஒற்றர்களின் வருகையைக் கண்காணிப்பதில் பாரதிதாசனும் ஈடுபட்டிருந்தார். பாரதியைப் பாதுகாப்பதிலும் எச்சரிப்பதிலும் முக்கியப் பணியாற்றினார்.

 

ஒருமுறை பாரதியாரின் வீட்டில் நிகழ்ந்த நண்பர்கள் கூட்டத்தில் பாரதிதாசனும் கலந்துகொண்டார். அப்போது அங்கிருந்த குயில் சிவா என்பார், “சுப்புரத்தினமும் அய்யர் மாதிரியே உட்கார்ந்து என்னமோ எழுதறாரப்பா,” என்று கிண்டல்செய்ய, பாரதியார் சுப்புரத்தினம் எழுதக்கூடியவன் என்று கூறினார். அங்கிருந்தோரின் வேண்டுகோளுக்கிணங்கப் பாரதிதாசன் 16 வரிகளைக் கொண்ட பாடலை எழுதியும் பாடியும் காட்டினார். அது பின்வருமாறு:

 

எங்கெங்குக் காணினும் சக்தியடா – தம்பி

ஏழுகடல் அவள் வண்ணமடா! – அங்குத்

தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்தத்

தாயின் கைப்பந்தென ஓடுமடா! – ஒரு

கங்குலில் ஏழு முகிலினமும் – வந்து

கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ! – எனில்

மங்கை நகைத்த ஒலியெனலாம் – அவன்

மந்த நகையங்கு மின்னுதடா!...

இதைக் கேட்டு இன்புற்ற பாரதியார், அப்பாடலைத் தம் கையால் பெயர்த்தெழுதினார். ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது’ என்று குறிப்பெழுதிச் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு தாமே அனுப்பிவைத்தார். பாரதியின் தொடர்புக்குப் பின்னரே சுப்புரத்தினம் குறிப்பிடத்தக்க கவிஞராக உருவாக்கப்பட்டார்[1].  

 

பாரதிதாசன் இளமைக்காலத்தில் முருகக் கடவுளின் பக்தனாக இருந்தார். ஆரம்பக்காலத்தில் பக்திப் பாடல்களை இயற்றியதோடு சிறு தனிப்பாடல்களையும் புனைந்தார். பாரதியின் கொள்கைகள் இவரை ஆட்கொண்டதால் பாரதி விட்டுச்சென்ற பாடுபொருள்களை அடியொற்றிக் கவிதைகள் இயற்றினார். தொடக்கக்காலத்தில் யாப்பிலக்கணத்திற்கு உட்பட்டு, கட்டுமான சிறப்புக்கேற்பக் கவிதைகளை இயற்றினார். ஒருமுறை பாரதி எழுதிவைத்திருந்த பாஞ்சாலி சபதத்தின் கையெழுத்துப் படியைப் படிக்கும் வாய்ப்புப் பாரதிதாசனுக்குக் கிடைத்தது. பாரதி கையாண்ட எளிய நடை, எளிய சந்தங்கள், எளிதில் படிப்போரைக் கவருந்தன்மை, கற்பனைநயம் போன்றவை பாரதிதாசனை வெகுவாகக் கவர்ந்தன. அதனைத் தொடர்ந்து,

 

பாடலில் பழமுறை பழநடை யென்னும்

நாடு முழுவதும் கண்டபின் கடைசியாய்ச்

சுப்பிரமணிய பாரதி தோன்றியென்

பாடற்குப் புதுமுறை புறநடை காட்டினார்

 

என்று பாரதிதாசனே பாரதியின் தனித்துவங்கள்பற்றிக் குறிப்பிட்டார். பாரதிதாசன் 1946ஆம் ஆண்டில், திருச்சியில் நடைபெற்ற பாரதி விழாக் கவியரங்கம் ஒன்றுக்குத் தலைமையேற்றார். அங்கு இவர் பாரதி புகழ் குறித்துப் பாடினார் [1].

 

சுப்புரத்தினம் அன்றைய ஆங்கில அரசின் கண்காணிப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் தம் ஆசானான சுப்பிரமணிய பாரதியாரிடமிருந்த ஈடுபாட்டின் காரணமாகவும் தம் பெயரைக் கனக சுப்புரத்தினம் என்பதிலிருந்து பாரதிதாசன் என்று பெயர் மாற்றிக்கொண்டார். இது குறித்துப் பாரதிதாசன் குயில் இதழில் குறிப்பிட்ட செய்தி:

“நான் பாரதிதாசன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டுள்ளேன். அதற்குக் காரணம் அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம். சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது” என்று பெயர் மாற்றத்திற்கான காரணத்தை இவரே குறிப்பிட்டுள்ளார்.

 

பாரதிதாசனின் பன்முகங்கள்

பாரதிதாசன் பாரதியாரைப் போலவே சுதந்திர மனப்பான்மை உடையவர். வெள்ளையர் ஆட்சியின்போது அவர்களை எதிர்த்துப் பாரதியாரோடு கைகோத்து நின்றவர். காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1920இல் சத்தியாக்கிரக இயக்கத்திலும் பங்களித்துள்ளார். பாரதிதாசனின் பாடல்கள், இந்திய தேசியம், திராவிடத் தேசியம், தமிழ்த் தேசியம் என்னும் மூன்று நிலைகளில் எழுதப்பட்டுள்ளன. இவரின் பாடல்களில் பழந்தமிழ் இலக்கியச் செல்வாக்கு அதிகம் காணப்பட்டது. தேச சேவகன், புதுவை கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசமித்திரன், புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

 

பாரதிதாசன், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், சுதந்திரம், சகோதரத்துவம் முதலிய பொதுவுடைமைப் புரட்சிக் கவிதைகளையும் எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி முதலிய சிறுகாவியங்களையும் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய `புரட்சிக் கவி’ என்னும் சிறந்த பாடல் இவர்க்குப் `புரட்சிக் கவி’ என்னும் புத்தம்புதுப் பெயரைத் தேடிக்கொடுத்தது. பாண்டியன் பரிசு சுவையான கதையைக்கொண்ட நீண்ட காவியமாகும். இந்நூலில், கதைச் சுவையோடு காவியச் சுவையையும் போட்டியிடுதலைக் காணலாம். இது அரசியல் சூழ்ச்சி, அரியாசன வேட்கை, அச்சம், காதல், போர் அனைத்தையும் சித்திரிக்கும் ஒரு நயமான சிற்றிலக்கியமாகும்.

கற்பனை மெருகும் காவியச் சுவையும் கலந்த அற்புதப் பாடல்களைப் புனைவதில், இவர் ஆற்றல்மிக்கவர். வானத்து நிலவை இவர் வர்ணிக்குந்திறன் படிப்போரை எளிதில் பரவசப்படுத்திவிடுகிறது[1].

 

நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்து

நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமுகத்தைக்

கோலமுழு தும் காட்டி விட்டால் காதற்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்

சோலையிலே பூத்த னிப் பூவோ! நீதான்

சொக்க வெள்ளிப் பாற்குடமோ! அமுத ஊற்றோ!

 

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் படைப்பான அழகின் சிரிப்பு என்னும் நூலிலிலிருந்து ஒரு பாட்டு. பகலவன் ஒளி இப்பாரிலே பட்டுப் பரவும்பொழுது, நிகழக்கூடியவற்றை...

 

அருவிகள் வயிரத் தொங்கல்!

அடர்கொடி, பச்சைப்பட்டே!

குருவிகள், தங்கக்கட்டி!

குளிமலர், மணியின்குப்பை!

எருதின்மேற் பாயும் வேங்கை

நிலவுமேல் எழுந்த மின்னல்!

சருகெலாம் ஒளிசேர் தங்கத்

தகடுகள் பார டாநீ!

என்று கவிஞன் வியக்கிறான். காலையிளம் பரிதியிலும் கடல்பரப்பின் ஒளிப்புனலிலும் சோலையிலும் தளிர்களிலும் மாலையில் இலகும் மாணிக்கச் சுடரிலும் இக்கவிஞன் அழகுத் தெய்வத்தைக் கண்டு ஆராதிக்கிறான். விழியின் ஒளியிலும் விளக்கின் சிரிப்பிலும் மலரைத் தொடுப்பாளின் விரல் வளைவிலும் கலப்பையில் உழவன் சொல்லும் புதுநடையின் பூரிப்பிலும் கவிஞன் தன் நெஞ்சத்தைக் களிப்பாகப் பறிகொடுக்கிறான்.

 

கிளையினிற் பாம்பு தொங்க

           விழுதென்று குரங்கு தொட்டு

விளக்கினைத் தொட்ட பிள்ளை

           வெடுக்கெனக் குதித்ததைப்போல்

கிளைதோறும் குதித்துத் தாவிக்

           கீழுள்ள விழுதை யெல்லாம்

ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி

           உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்

என்று அச்சத்தின் உள்ளத்தைத் தொட்டுக் காட்டுகிறான், கவிஞன். “கனியின் சுளையும் கரும்பின் சாறும் பசுவின் பாலும் பனிமலர்த் தேனும் இனியன என்பேன் எனினும், தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!” எனத் தம் தமிழ் அன்பைப் பறையறிவிக்கிறான்.

 

நமதடா இந்நாடு! என்றும் நாமிந் நாட்டின் வேந்தர்!

சமம் இந்நாட்டு மக்கள் என்றே தாக்கடா வெற்றி முரசை

 

சாதிக் கொடுமைகளையும் சமயப் புரட்டுகளையும் மூடக் கோட்பாடுகளையும் சாடி எறிகிறான். பிரெஞ்சு இலக்கிய முறையைத் தழுவிப் பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு அழியாத ஓர் அற்புத இல்லற வாழ்க்கைச் சித்திரமாகும். மனைவி இதயநிறைவுடன் இன்னிசை பாடி, தன் கணவனையும் குடும்பத்தையும் மகிழ்விக்கும் நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டு இப்படைப்பு.[2]

 

வீடெல்லாம் இசையே; வீட்டில்

நெஞ்செலாம் மெருகே; நெஞ்ச

ஏடெல்லாம் அறிவே; ஏட்டின்

எழுத்தெலாம் களிப்பே;அந்தக்

காடெலாம் ஆடும் கூத்தே

காகங்கள் குருவி எல்லாம்

மாடெல்லாம் இவ்வா றானால்

மனிதர்க்கா கேட்க வேண்டும்?

 

புரட்சிக்கவி பாரதிதாசன் புதிய கவிதைகளைப் படைத்துத் தமிழ்மொழியில் புதிய வளைவும் நெளிவும் மெருகும் ஏற்றினார். இசை வெறியில் கவிதைக் கனலுடன் இவர் பாடும்போது அதைக் கேட்போரின் நெஞ்சம் பரவசமடையும்.

 

பாரதிதாசன் பெண்ணின் நலத்தைப் பேணவும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும் பாடல்கள் இயற்றினார். குறிப்பாக, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பள்ளிக்குச் செல்ல மறுக்கும் சிறுமிக்குத் தந்தை அறிவுரை உரைக்கும்படியான பாடலை எழுதியுள்ளார்.

 

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட

சாலைக்கு போஎன்று சொன்னாள் உன் அன்னை

சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ

சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?

திரைப்படத்துறை

பாரதிதாசன் 1937ஆம் ஆண்டு  திரைப்படத் துறையில் நுழைந்தார். திரைப்படக்கதை, பாடல், உரையாடல், தயாரிப்பு என அனைத்திலும் தம் திறமையைக் காட்டினார்.  திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர், பாரதிதாசனே. பின்வரும் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதியுள்ளார்.

  • 1937 பாலாமணி அல்லது பக்காத் திருடன்

  • 1938 இராமானுஜர்

  • 1940 கவிகாளமேகம் 

  • 1944 சுலோசனா 

  • 1947 ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி 

  • 1949 பொன்முடி 

  • 1952 வளையாபதி 

 

பாரதிதாசன் இயற்றிய பாடல்கள் இன்றளவும் நம் இதயத்தைவிட்டு நீங்காதவை. பாரதிதாசன் பாலாமணி அல்லது பக்காத் திருடன், ஸ்ரீராமானுஜர், கவி காளமேகம் முதலிய படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும், பாரதிதாசன் இதழாசிரியராகவும் நாடக ஆசிரியராகவும் சிறுகதை ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் இருந்ததோடு தொடக்கத்தில் ஆன்மீகத்திலும் ஈடுபாடு காட்டினார். இவர் திரைப்படத்துறையில் மிளிர்ந்ததோடு பகுத்தறிவு இயக்கவாதியாகவும் இருந்துள்ளார்[3].


பாரதிதாசனின் நினைவாகப் தமிழ்நாடு மாநில அரசாங்கம் சிறந்த தமிழ்க் கவிஞர்க்குப் பாரதிதாசன் விருது வழங்கி வருகிறது. 'பாரதிதாசன் பல்கலைக்கழகம்' என்னும் பெயரில் ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், சிங்கப்பூரில் பல தமிழ்ப் பள்ளிகள் இயங்கின. அவற்றுள் பாரதிதாசன் தமிழ்ப் பள்ளியும் அடங்கும். சிங்கப்பூர்த் தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டம், 20ஆம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் ஒருவரான பாரதிதாசனை நம் மாணவர்களுக்குப் பாடங்களின்வழி அறிமுகம் செய்துள்ளது.  

 

துணைநூல்கள்  

 

[1]         முருகு சுந்தரம். (2018). பாரதிதாசன். (மூன்றாம் பதிப்பு). சென்னை: சாகித்திய அகாதெமி.

[2]        அடைக்கலசாமி, எம். ஆர். (1989). தமிழ் இலக்கிய வரலாறு (இரண்டாம் பதிப்பு). சென்னை: சைவ சித்தாந்த வெளியீடு.  

IMG-9351.jpg

தலைப்புக்குத் தொடர்புடை பிற வளங்கள்

​1.   பாரதிதாசன்

       https://www.itstamil.com/bharathidasan.html

2.   பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகமும் ஆய்வுமையமும்

bottom of page