top of page
Final.png

பாரதியார்

 

தமிழ்மொழியின் தனித்துவத்தைச் சுவைபடவும் ஈடுபாட்டுடனும் விளக்கிய மாபெரும் கவிஞர்களுள் சுப்ரமணிய பாரதியாரும் ஒருவர். சமூகப் புரட்சியாளர், பத்திரிகையாளர், கவிஞர், கட்டுரையாளர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகங்களைக் கொண்டவர், பாரதி. இவர் தமிழ்மொழி மீது தணியாத காதலும் பற்றும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர். சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, கவிதைக் குயில், புரட்சிக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்படும் பாரதியார், 1882ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். இவர் இளம்வயதிலேயே கவிதை இயற்றுவதில் சிறந்து விளங்கியதால் இவரது கவிப்புலமையைக் கண்டு எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் இவர்க்குப் பாரதி என்னும் பட்டத்தை அளித்தனர். இவர் எட்டயபுரம் ஜமீன்தாரின் அவைக்களப் புலவராக விளங்கினார். மேலும், மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

                                               

                                                பாரதியிடம் காணப்பட்ட நிலைமாற்றம்

பாரதியார் பிறவியிலேயே சுதந்திரமான மனப்பான்மையுடைய கவிஞர். சுதந்திரத்தைத் தெய்வமாக வழிபட்டுப் பாடியவர். பாரதி, சுதந்திரம் தமது உயிர் என்றும் விடுதலையைத் தமது மூச்சு என்றும் கருதினார். செல்வம் நிரம்பிய ஜமீன்தார்களிடையே வாழ்ந்து இவர்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் சூழலில் வளர்ந்த இவருடைய மனம், அதைவிட்டு உயரப் பறந்தது.                   

தம் தந்தையார், சின்னஸ்வாமி இறப்புக்குப் பின், பாரதி எட்டயபுரத்திலிருந்து வெளியேறிக் காசியில் உள்ள தம் அத்தையின் வீட்டில் சிறிது காலத்திற்குத் தங்கியிருந்தார். அங்குள்ள சூழல் பாரதியை வெகுவாக மாற்றியது. இவர் சீக்கியர்கள்போல் தலைப்பாகைக் கட்டிக்கொண்டு சிப்பாயைப்போல் மிடுக்காக நடைபழகினார். ஷெல்லி, கீட்ஸ் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் படைப்புகளைப் படித்தார். இவர் பண்டித நடையில் எழுதுவதை விடுத்துப் பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தமிழில் எழுதினார். அப்போதைய வறுமை பாரதியைக் கடுமையாகப் பாதித்திருந்ததால் இவர் 1901இல் மீண்டும் ஜமீனுக்குத் திரும்பினார்[1].     

பாரதி ஜமீன்தார்க்குத் தோழராக இருந்த காலக்கட்டத்தில், தமக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களின்போது கம்பன், இளங்கோ போன்ற புலவர்களின் படைப்புகளை ஆழ்ந்து கற்றார். காலப்போக்கில் அங்குள்ள நிலைகண்டு பொறுக்கமாட்டாத இவர், மகாராஜாவையே நையாண்டியாகப் பாடல் ஒன்று பாடி, அதை அவர்க்கே அனுப்பிவைத்துவிட்டு வெளியேறினார். இத்தகு துணிவு பாரதியிடம் இயல்பாக அமைந்திருந்தது.

 

சென்னையில் சுதேசமித்திரன் என்னும் நாளிதழுக்கு ஆசிரியராக அமர்ந்த பிறகு, நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் இவர் நெஞ்சம் ஈடுபட்டது. இவர் எழுதிய உரைநடையிலும் கவிதையிலும் புதிய வேகமும் ஆர்வமும் தென்பட்டன. இவர் 1905ஆம் ஆண்டில் காசியில் நிகழ்ந்த அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன் பிறகு இவர், சதோதரி நிவேதிதாவைப் பேட்டி எடுக்கச் சென்றார். அந்தச் சந்திப்பின் விளைவாகச் சகோதரி நிவேதிதா, பாரதியின் உள்ளத்தில் மூன்று தொண்டுகளுக்கான விதைகளைப் பதித்தார். அவை சுதந்திர பாரதத்திற்காகப் பாடுபடுதல், சாதி பேதத்தை ஒழித்தல், பெண் முன்னேற்றத்திற்குப் பாடுபடுதல் ஆகியனவாகும்[1]. கற்போரின் நெஞ்சை உடனே மாற்றிச் செயல்படுத்தும் தீவிர உணர்ச்சி இவருடைய எழுத்துகளில் காணப்பட்டது. பின் இவர் இந்தியா என்னும் இதழைத் தொடங்கித் தாமே நடத்தி வந்தார்[2].

 

தமிழிலக்கியச் சூழலில் பாரதி வெளிப்பட்ட பாங்கு

பாரதிக்கு முன்பு இருந்த தமிழ் இலக்கியத்தின் நிலைகுறித்த புரிதல் மிக முக்கியமானது. தமிழ் இலக்கிய வரலாற்றில், 19ஆம் நூற்றாண்டின் இடையில், வடலூர் வள்ளலார் கருணைமிகு பாடல்களையும் கோபாலகிரு‌ஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரத்தையும் உருவாக்கினர். அவர்களைத் தொடர்ந்து, பல்வேறு தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் தமிழகத்தில் தோன்றினர். அந்த வரிசையில், தமிழில் புதுமைகளைப் புகுத்த வேண்டும் என்று வேதநாயகம் பிள்ளை (நாவலாசிரியர்), உ. வே சாமிநாத ஐயர் (ஆராய்ச்சியாளர், பதிப்பாளர்) போன்றோர் எளிய தமிழில் யாவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று எழுதினர். ஆனால், அவர்களால் பழமையிலிருந்து முற்றிலும் விடுபட முடியாதநிலை இருந்துள்ளது. இந்நிலையில் 20ஆம் நூற்றாண்டில், மகாகவி பாரதியார் தோன்றினார். பாரதி 20 ஆண்டுகளுக்கும் குறைவாக எழுத்தாளராகச் செயல்பட்டுள்ளார். இவரது காலக்கட்டத்தில் தமிழ் இலக்கிய உலகம் பல புதிய திருப்புமுனைகளைக் கண்டது. மேற்கத்திய இலக்கிய வடிவங்கள் தமிழகத்தில் நுழையத் தொடங்கின. பாரதியார் வடிவம், பொருண்மை ஆகியவற்றில் தமிழில் பல புதுமைகளைத் திருப்புமுனையாக நிகழ்த்துவதற்கு அவை காரணமாக அமைந்தன.          

 

படைத்த சாதனைகள்

ஆங்கில அரசாங்கம் இவரைச் சிறைப்படுத்தி ஒடுக்க முயன்றது. அப்போது பிரெஞ்சு ஆட்சியில் இருந்த புதுச்சேரிக்குப் பாரதி சென்றுவிட்டார். அங்கு இவர் மற்றொரு சுதந்தரப் போராட்ட வீரரான வ வே சு ஐயருடன் நட்புக்கொண்டார். அப்போது இவர் இயற்றிய அழகான உணர்ச்சிமிக்க கவிதைகள் பல. விடுதலைப் போராட்டத்திற்காகவும் நாட்டு மக்களைத் தட்டி எழுப்புவதற்காகவும் பாடப்பட்ட தேசியப் பாடல்கள் பல, இன்றும் உணர்ச்சி ஊட்டும் கவிதைகளாக உள்ளன.

 

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் – மிடிப்         

பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்

 

“பாரத தேசம்” என்னும் தலைப்பிட்ட இப்பாடல் இன்றும் பாடக் கேட்டால் நாட்டு உணர்ச்சியைத் தூண்டுவதாக உள்ளது. இன்று பெரிதும் பேசப்படுகின்ற நாட்டு ஒருமைப்பாட்டுக்குரிய பல கருத்துகளை அதில் விதைத்துள்ளார். தமிழ்நாட்டில் முருகன் கோவில்களில் மிகுதியாகப் பாடப்படும் காவடிச்சிந்து என்னும் உணர்ச்சிமிகுந்த இசைப்பாட்டு ஒன்று உண்டு. அந்த இசையில் அமையுமாறு `எங்கள் தாய்’ என்னும் தேசியப் பாடலைப் பாடினார். அதிலும் நாட்டுப்பற்றையும் நாட்டு ஒருமைப்பாட்டு உணர்ச்சியையும் உணர்த்தியுள்ளார்.

         

வங்காளத்தில் பங்கிம்சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய `வந்தே மாதரம்’ என்னும் பாடலை இருவகையாக அழகான தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ளார், பாரதியார். பாரத நாட்டை ஒரு முழுவடிவில் கண்டு புகழ்ந்து பாடியதுபோலவே, அதன் உறுப்பாகத் தமிழ்நாட்டையும் போற்றிப் பாடியுள்ளார்.

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

 

என்னும் பாடல் வரிகள் தமிழ்ச் சிறுவர், சிறுமியர் உள்ளத்தையும் கவர்ந்துள்ளன. தமிழ்மொழியிடத்தில் இவர்க்கு இருந்த ஈடுபாடும் ஆற்றலும் மிகுந்தது. தமிழைப் புகழ்ந்து இவர் பாடியுள்ள பாடல்கள் இன்றும் மேடைகளில் ஒலிக்கக் கேட்கிறோம். ஆங்கில மோகத்தில் மயங்கிக் கிடந்த தமிழர் உள்ளங்களில் தாய்மொழிப் பற்றை ஊட்டித் தட்டி எழுப்பியதில் பாரதியாரின் தொண்டு தலையாயது. தமிழ்மொழியின் பெருமையையும் இனிமையையும் குறித்து உணராமல் வீணே காலம் கழிக்கும் மக்களை நோக்கிப் பாடினார்[3].

 

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்

 

சமயக் கட்டுக்கதைகளும் மூட நம்பிக்கைகளும் மூடப் பழக்கவழக்கங்களும் மக்களிடம் வேரூன்றியிருப்பதைக் கண்டார். மக்களிடம் ஏன், எப்படி என்னும் கேள்விகள் எழாமல் எதையும் துணிவின்றி அணுகும் அவலநிலை கண்டு கோபமும் வருத்தமும் உற்றார். பாரத நாட்டின் பழம்பெருமையையும் காலம் கடந்து வாழும் பண்புச் சிறப்புகளையும் வாயாரப் புகழ்ந்து பாடிய பாரதியார், தம் காலத்தில் வாழ்ந்த மக்களின் சிறுமைகளையும் மூடநம்பிக்கைகளையும் தவறுகளையும் கடிந்து கூறத் தயங்கவில்லை[3].

 

நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த

நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்

அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே

 

என்னும் பாடலின் மூலம் குற்றங்களைக் காணும் இடத்தில் அதைத் தட்டிக் கேட்கவும் செய்தார் என்பதை அறியலாம். வறுமையும் ஆடம்பரமும் மாறிமாறிக் காணும் காட்சி மாறிப் பொருளாதாரச் சமத்துவம் நிலைத்த நல்லநிலை வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர், பாரதியார். அந்த ஆசைக்கு அழகான கவிதை வடிவம் கொடுத்து உணர்ச்சியோடு பின்வருமாறு பாடியுள்ளார்:

 

மனித ருணவை மனிதர் பறிக்கும்

வழக்கம் இனியுண்டோ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும்

வாழ்க்கை இனியுண்டோ?

 

`விடுதலை’ என்னும் பாட்டிலும் இந்தக் கருத்தைப் பாரதியார் வற்புறுத்தியுள்ளார். நாட்டின் விடுதலைவேண்டி, நாட்டு மக்களின் பொருளாதாரத்தில் சமத்துவத்தைக் காண இவர் விரும்பினார் என்பது அந்தப் பாட்டின்வழித் தெளிவாகிறது.

 

ஏழை என்றும் அடிமை என்றும்

எவனும் இல்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனிதர் என்பது

இந்தியாவில் இல்லையே!

வாழி கல்வி செல்வம் எய்தி

மனம் மகிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநிகர்

சமானமாக வாழ்வமே

 

பழமையில் நல்லனவற்றைக் கண்டால் அவற்றையும் விடாமல் போற்றும் மனம்படைத்தவர் பாரதியார். இவர் உபநிடதக் கருத்துகளையும் புராண இதிகாசங்கள் புகட்டும் உண்மைகளையும் தம் கட்டுரையில் போற்றி விளக்கியுள்ளார். பாரதத்தில் உள்ள பாஞ்சாலியின் துன்பத்திற்காக உருகி அவளுடைய வீர உணர்ச்சியை வணங்கி, அந்தக் கதையில் பாரதத் தாயின் துன்பத்தையும் வீரப் போராட்டத்தையும் உருவகமாகக் கொண்டார். அதன் காரணமாகப் `பாஞ்சாலி சபதம்’ என்னும் சிறுகாப்பியத்தைப் படைத்தார் [4].

 

மேலும், இவர் பக்திப் பாடல்களுள் அடங்கும் கண்ணனைப் பற்றிக் கணக்கற்ற பாடல்களைப் பாடினார். பாரதி இயற்றிய முப்பெரும் நூல்களுள், கற்பனைக் காவியமான கண்ணன் பாட்டில் தேங்கிக் கிடக்கும் அருள் வெள்ளமும் கவிதைப் பெருக்கும் படிப்போர் உள்ளத்தைப் பரவசமாக்கும். கண்ணனைப் பல உறவுநிலைகளில் வைத்துப் பாரதி பாடியுள்ளார். எடுத்துக்காட்டிற்கு, கண்ணன் என் தாய், கண்ணன் என் தந்தை, கண்ணன் என் அரசன் என்று பாடிய பாரதி, ஒரு பெரும் புரட்சி செய்கிறார். கண்ணனைப் பொய் பேசுவதில் இலட்சிய சேவகனாகப் பாவித்தும் பாடியுள்ளார் [5].

 

கண்ணனைப்பற்றி இவர் பாடிய பாடல் ஒன்று பின்வருமாறு:

 

சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா

     சூரிய சந்திரரோ?

வட்டக் கரியவிழி – கண்ணம்மா

     வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் – புடவை

     பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் – தெரியும்

     நட்சத் திரங்களடீ!

 

என்னும் வரிகள் பெரியாழ்வார் பாடல்களின் கற்பனையும் மற்ற ஆழ்வார்கள் பாடல்களின் பக்தியுணர்வும் கலக்கப்பட்டு புதுவகை அழகோடு திகழ்கின்றன. பாரதியாரின் பக்திப்பாடல்கள் செறிவான நடையில் அமைந்து உயர்ந்த உணர்ச்சியை ஊட்டுகின்றன.

 

சக்தியை வழிபட்டுப் பாடிய பாரதியின் பாடல்கள் புதிய ஒளியை நாட்டில் பரப்பின. ஊழிக்கூத்துப்பற்றிய பாட்டை உணர்ச்சியோடு பாடக் கேட்டால் காளியின் பயங்கரமான நடனத்தையே காண்பதுபோன்ற பரவசம் ஏற்படும். அதன் ஓசையமைப்பு அத்தகைய ஆற்றலுடையதாக உள்ளது. எங்கிருந்து வந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக, இவருடைய ஏசு கிறிஸ்து வணக்கப் பாடலும் அல்லா வழிபாட்டுப் பாடலும் உள்ளன. [6]

 

ஞானப்பாடல்கள் என்னும் பகுதி இன்றும் பலரால் விரும்பிப் படிக்கப்படுகிறது. தெருவில் பண்டாரங்கள் பாடித் திரியும் மெட்டில் அமைத்து,

 

அச்சம் இல்லை அச்சம் இல்லை

அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம்

எதிர்த்து நின்ற போதினும்

அச்சம் இல்லை அச்சம் இல்லை

அச்சமென்ப தில்லையே

 

என்னும் பாட்டை வீரம் ததும்பும் நடையில் பாடியுள்ளார். அடுத்து, இவர் புதுமைப் பெண்ணைப்பற்றிப் பாடிய பாடல்கள் அற்புதமானவை. அரசியல், சமூகக் கட்டுகளிலிருந்து பெண் விடுதலை பெறுவதற்காகப் பாரதி போராடினார்.

 

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி

பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக் குள்ளே சிலமூடர் – நல்ல

மாதர் அறிவைக் கெடுத்தார்

 

பாரதியார் ஔவை பாடிய ஆத்திசூடியால் ஈர்க்கப்பட்டு, ஔவையின் பாணியிலேயே புதுமைகளைப் புகுத்திப் புதிய ஆத்திசூடியைக் காலவுணர்வோடு பாடினார் [7]. அதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:

 

ஆறுவது சினம் X ரௌத்திரம் பழகு

ஙப்போல் வளை X கிளை பல தாங்கேல்

தையல் சொல் கேள் X தையலை உயர்வு செய்

தொன்மை மறவேல் X தொன்மைக்கு அஞ்சேல்

 

பாரதியார் ஆங்கிலமொழியிலும் புலமைபெற்று விளங்கினார். ஷெல்லி பைரனின் கவிதைகளில் பாரதியார் மிகுதியான ஈடுபாடுகொண்டிருந்தார். அதன் காரணமாக, ஷெல்லிதாசன் என்னும் புனைபெயரில் ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவற்றைத் தவிர பெங்காலி, பிரெஞ்சு, டச்சு போன்ற மொழிகளிலும் பாரதிக்குப் பரிச்சயம் இருந்துள்ளது. இத்தனை மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழின்  பெருமையை உலகுக்கு உரைப்பதற்குக் காரணம் ஒன்று உண்டு. அன்றைய தமிழரிடம் காணப்பட்ட அடிமைத்தனத்தைக் கண்டித்ததோடு விடுதலையுணர்வையும் தமிழுணர்வையும் அவர்கள் உள்ளத்தில் விதைக்கவேண்டும் என்னும் வேட்கையில் இவர் கவியுள்ளம் இவ்வாறு மிகைப்படுத்திப் பாடியது. 

 

கம்பனைவிடப் பாரதியின் தமிழுணர்வுப் பாடல்கள் தமிழ் மக்களை ஈர்த்துள்ள பாங்கினைப் பாரதிதாசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

 

பன்னீ ராயிரம் பாடிய கம்பனும்

இப்பொது மக்கள்பால் இன்தமி ழுணர்வை

எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை

 

மகாகவி பாரதி, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், தேசிய கீதங்கள், பாரதி அறுபத்தாறு, ஞானப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், விடுதலைப் பாடல்கள், விநாயகர் நான்மணிமாலை, பாரதியார் பகவத் கீதை, பதஞ்சலியோக சூத்திரம், நவதந்திரக் கதைகள், புதிய ஆத்திசூடி, பொன்வால் நரி, ஆறில் ஒரு பங்கு, சந்திரிகையின் கதை, ஞானரதம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இத்தகு சிறப்புப் பெற்றுள்ள மகாகவி பாரதிக்கு ஏற்பட்ட அவலநிலை குறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் மற்றோர் இடத்தில் இவ்வாறு வருந்திக் குறிப்பிடுகிறார் [7]:

 

“பாரதியாரிடம் மூன்று லட்ச ரூபாய் கொடுத்து ஓர் அழகான வீட்டில் உட்கார வைத்து, ஐந்து ஆட்களை அமர்த்தி “நீ நினைத்ததை எல்லாம் நூலாக எழுதித் தள்ளு! என்றல்லவா (தமிழகம்) சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு எவரும் சொல்லவில்லை. அவர் தெருத்தெருவாக அலைந்தார். விரிந்த உள்ளம் இல்லாமையால் அவர் குலத்தவர்களே அவரை வெறுத்தார்கள். இன்று செத்து மறைந்த பின்னர்ப் ‘பாரதி நாமம் வாழ்க’ என்கிறார்கள்.”  

 

பல்வேறு சவால்களுக்கிடையிலும், பாரதியார் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒப்பற்ற கவிஞர்களுள் ஒருவராகவே விளங்கினார். மரபுகளைத் தாங்கிப் படைப்பதிலும் புதுமைகளை ஏற்றுப் படைப்பதிலும் பாரதி சிறப்புற்று விளங்கியமையால் தமிழகத்தில் மாபெரும் மறுமலர்ச்சி தோன்றியது. அதனால், பாரதி தற்காலத் தமிழ் இலக்கியத்தின் தந்தையாக விளங்குவதாகத் தமிழ் அறிஞர் உலகம் குறிப்பிடுகிறது.

 

சிங்கப்பூர்த் தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டம், 20ஆம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் ஒருவரான மகாகவி பாரதியாரைத் தமிழ் மாணவர்களுக்குப் பாடங்களின்வழி அறிமுகம் செய்துள்ளது. தொடக்கப்பள்ளிகளிலும் உயர்நிலைப்பள்ளிகளிலும் தமிழ் மாணவர்கள், மகாகவி பாரதியார்பற்றியும் இவரது எளிய கவிதைகள்பற்றியும் பாடங்கள்வழிக் கற்கிறார்கள். குறிப்பாக, தொடக்கக்கல்லூரிகளில் பாரதியார் கவிதை, கற்பிக்கப்படுவதோடு தேர்வில் சோதிக்கவும்படுகிறது. பள்ளிகளில் நிகழும் தமிழ்மொழி வளமூட்டும் நிகழ்ச்சிகளிலும் முகாம்களிலும் மகாகவி பாரதிபற்றிய தகவல்களை மாணவர்கள் தெரிந்துகொள்கின்றனர்.

          

துணைநூல்கள்

[1]     நந்தகுமார், பி. (2017). பாரதியார். சென்னை: சாகித்திய அகாதெமி.  

[2]     அடைக்கலசாமி, எம். ஆர். (1989). தமிழ் இலக்கிய வரலாறு (2-ஆம் பதிப்பு). சென்னை: சைவ சித்தாந்த வெளியீடு.

 

[3]     இராசமாணிக்கனார், மா. (2012). தமிழர் வாழ்வு. மதுரை – ஸ்ரீசெண்பகா பதிப்பகம். 

 

[4]     வரதராசன், மு. (1092). தமிழ் இலக்கிய வரலாறு (முதற் பதிப்பு). சாகித்திய அகாதமி, ஸ்ரீ வெங்கடேசா பிரிண்டிங் ஹவுஸ்.

 

[5]     மீனாட்சிசுந்தரம், கா. (1972). பாரதி பாநிலை. கோயமுத்தூர்: மெர்க்குரி புத்தகக் கம்பெனி.

 

[6]     இலக்குவன், சோ. (2001). கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு (முதற் பதிப்பு). அப்பர் அச்சகம்.

 

[7]     இளங்கோ, ச. சு. (1982). பாரதிதாசன் பார்வையில் பாரதி. சிவகங்கை: அன்னம்.

தலைப்புக்குத் தொடர்புடைய பிற வளங்கள்

 

[1]     சுப்ரமணிய பாரதியார் - https://www.itstamil.com/subramanya-bharathi.html

[2]     யார் பாரதி? – நெல்லைக் கண்ணன்

IMG-9354.jpg

[3]   பாரதியார்பற்றிச் சுகி சிவத்தின் பேச்சு

[4]   பாரதி விருது பாராட்டு விழா - பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை.

bottom of page