Final.png

காதணி விழா

புவிவாழ் உயிரினங்கள் அனைத்தும் புலன்கள் வழியாகவே வெளியுலக அறிவை வளர்த்துக்கொள்கின்றன. ஐம்பொறிகளின் தன்மைகளும் இயக்கங்களும், உயிர்களுக்கு இயற்கை அளித்த தனியாற்றலாகும். ‘எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்’ என்பது ஔவையின் வாக்கு. கண்ணில் ஒளியும் காதில் ஒலியும் மூக்கில் மணமும் வாயில் சுவையும் மெய்யில் தொடுவுணர்வும் கொண்டிருப்பதால்தான் உயிர்கள் இயங்குகின்றன. தொல்காப்பியத்திற்கு முன்பே, தமிழர்களுக்குப் புலன்களின் அடிப்படையிலான உயிரினங்களின் பாகுபாடுபற்றிய தெளிவு இருந்துள்ளது. தொல்காப்பியர், அறிவின் உணர்வுநிலை வளர்ச்சியை விளக்கும்போது தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், சிந்தித்தல் (மனம்) என மரபியலில் பகுத்துள்ளார். அவற்றுள் ஒன்றான, செவிப் புலனுணர்வை மனிதர்களைத் தவிர  ஐந்தறிவுகொண்டவைகளான பறவைகளும் விலங்குகளும் பெற்றுள்ளன.

 

செவிச் செல்வமானது மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு முதன்மையாய் உள்ளது. கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று ஔவை இயம்பியுள்ளார். ஒருவர் ஏனைய திறன்களைப் பெற்றிருக்கவில்லை என்றாலும், கேட்டல் திறனைப் பெற்றிருப்பாரேயானால் ஒருவருக்கொருவர் அறிவு நுகர்ச்சியைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது[1]. இதனை,

 

கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை (குறள் 414)

 

என்னும் குறட்பாவின் வாயிலாக உணர்ந்துகொள்ளலாம்.

 

இதிலிருந்து கேட்டலின் முக்கியத்துவத்தை அறியலாம். அதனை நன்குணர்ந்த தமிழர்கள், தங்கள் பாரம்பரியச் சடங்குகளுள் ஒன்றான காதணி விழாவை இன்றும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இது காது குத்தும் விழா என்றும் அழைக்கப்படும். காதணி விழாவைக் கொண்டாடுவதன் அறிவியல்சார் விளக்கம் சிந்தனைக்குரியது.

 

காது குத்துதல்: அறிவியல் விளக்கம்

மனித உடலைக் காந்த அலை மண்டலம் இயக்குகிறது. அந்தக் காந்த மண்டலத்தைச் சீராகப் பாதுகாத்துக்கொள்ளத் தமிழ் முன்னோர்கள் காது குத்தும் சடங்கை வழக்காகக் கொண்டிருந்தனர். இளம்வயதிலே காது குத்துவதன் நோக்கம் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதற்காகும். காது நரம்பிற்கும் மூளையிலுள்ள நினைவாற்றல் நரம்பிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இடது, வலது மூளையை ஒன்றுசேர்க்கும் நடுப்பகுதியாகக் காது திகழ்வதால் பிள்ளைகளுக்குக் காது குத்துவதன்வழி, அவர்களது மூளை வளர்ச்சியும் நினைவாற்றலும் அதிகரிக்கின்றன. காது குத்துவதால் நரம்புகள் எப்பொழுதும் துடிப்புடன் செயல்படுகின்றன. காது மடல்களில் கண்பார்வையைச் சரிசெய்யும் ஒரு முக்கிய நரம்பு உள்ளது. அந்த நரம்பிற்கு அருகில் அழுத்தம் ஏற்படுமானால் கண்பார்வை கூர்மையடையும். அதனால், இளம்வயதில் காது குத்துவதால் குழந்தையின் திறமை பன்மடங்கு பெருகும் என்று தமிழர்கள் கருதினர். அதுமட்டுமல்லாது காது குத்துவதன் மூலம் செரிமான மண்டலம் சரிவர இயங்குகிறது என்றும் நம்பப்படுகிறது. இத்தகைய நன்மைகளைக் கருதியே காது குத்துவதைப் பாரம்பரியச் சடங்குகளுள் ஒன்றாக மக்கள் கடைப்பிடித்தனர்[2].

தாய்மாமன் உறவுநிலையின் முக்கியத்துவம்

a7 p1.jpg

அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்கள் நல்ல நாளையும் நேரத்தையும் பார்த்துத்தான் வீட்டிலோ கோவிலிலோ மண்டபத்திலோ அவரவர் வசதிக்கேற்பக் காதணி விழாவை நடத்துகின்றனர். இந்தச் சடங்கின்போது தாய்மாமனுக்கு முதன்மை கொடுப்பார்கள். தமிழர் உறவுமுறையில் தாய்மாமன் சிறப்பிடம் பெறுகிறார். தாய்மாமனை முறையாக வரவழைத்து, அவர் சீராகத் தந்த புத்தாடையைப் பிள்ளைக்கு அணிவிப்பார்கள். பிறகு பிள்ளையைத் தாய்மாமன் மடியில் அமரவைத்து ஆசாரி / பத்தர் அந்தப் பிள்ளையிடம் பேச்சுக் கொடுத்தபடியே நாசுக்காகக் காதில் துளை போட்டுவிடுவார். பின்பு தாய்மாமன் கொடுத்த தங்கக் காதணியை அணிவிப்பார். தாய்வழி மாமன் இல்லையென்றால் அவர்க்கு நிகரான மற்றோர் உறவினர் மடியிலும் அமரவைத்துக் காது குத்தும் வைபவம் நடைபெறும். சிலர் குழந்தைக்கு மொட்டை அடித்தபின் காது குத்தும் சடங்கை நிகழ்த்துவார்கள்.

சிங்கப்பூரில் காது குத்தும் வைபவம்

சிங்கப்பூர்த் தமிழர்கள், குழந்தைகள் தொடர்பான பல சடங்குகளைச் செய்துவருகின்றனர். அவற்றுள் காது குத்துதலும் ஒன்று. காது குத்துவது ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் பொதுவான  சடங்காக நடத்தப்படுகிறது. இச்சடங்கின்போது தாய்மாமன் வீட்டாரும் அத்தைமார் வீட்டாரும் குழந்தைக்குச் சீர்வரிசை கொண்டு வருவார்கள். தாய்மாமன் கொண்டுவந்த புத்தாடையைக் குழந்தைக்கு அணிவித்து அவரின் மடியில் குழந்தையை அமரவைத்து, அனுபவமிக்க பத்தரால் காது குத்துதல் சடங்கு நடைபெறும். சிலர் தம் குழந்தைகளை மருத்துவரிடமோ நகைக்கடையிலுள்ள அனுபவமிக்க நபரிடமோ காது குத்த அழைத்துச் செல்வார்கள்.

 

காதுபற்றிய மரபுத்தொடர்கள்

காது குத்துவதற்கு முன் ஓர் ஆசாரி / பத்தர் குழந்தையிடம் சாதுரியமாகப் பேசி நம்பிக்கையைச் சம்பாதித்த பின், அக்குழந்தையை ‘ஏமாற்றி’க் காது குத்திவிடுவார். அதனால்தான் இன்றுவரை நம்பிக்கையாகப் பேசி ஏமாற்றுபவரைக் ‘காது குத்திவிட்டார்’ என்று கூறுவது மரபாகும். இதை ஒரு மரபுத்தொடராக மாணவர்கள் இன்று பள்ளிகளில் பயில்கின்றனர். அதோடு, செவி சாய்த்தல் என்னும் மரபுத்தொடரையும் மாணவர்கள் பயில்கின்றனர். இத்தொடர் கூறப்படுகின்ற விஷயங்களை ஒருவர் கூர்ந்து செவிமடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தோப்புக்கரணத்தின் நன்மை

இன்று மேலைநாட்டவர்கள் தோப்புக்கரணத்தின் நன்மைகள்பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கின்றனர். இந்தத் தோப்புக்கரணத்தின் அறிவியல்சார் பயன்களைப்  பழந்தமிழர்கள் அறிந்துவைத்திருந்தனர். அன்றைய திண்ணைப் பள்ளிகளில் பிள்ளைகளைத் தண்டிக்க, ஆசிரியர்கள் தோப்புக்கரணம்போடச் சொல்வார்கள்.

இதன்வழி மாணவர்கள் தவற்றை உணர்ந்து தங்களைத் திருத்திக்கொள்வர் என நம்பினார்கள். பாதங்களை நேராகக் குவித்தபடி, நிமிர்ந்து நின்றபடி, இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்கார்ந்து எழுவது தோப்புக்கரணமாகும். ஒருவர் தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செல்களும் நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன. இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழும்போது,

a7 p2.jpg

மூளையின் இருபகுதிகளும் ஆற்றல் பெறுகின்றன; நாடிகள் வலுப்பெறுகின்றன. நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும்போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன என்பதைத் தமிழ் முன்னோர் கூறியுள்ளனர்[2].

காதணியின் நன்மை

தீய சக்திகளிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குக் காது மடல்களின் நடுப்பகுதியில் துளையிட்டுத் தங்கத்தால் தோடு அணிவது தமிழர்களின் மரபாகும். அதுமட்டுமல்லாது, தங்கத்தாலான ஆபரணங்கள் காது மடல்களில் அணிவதால் அவை மனிதனின் உடலைச்  செம்மைப்படுத்துவதாக முன்னோர்கள் கருதினர். தமிழர்கள் இன்றும் தங்க அணிகலன்களுக்கு  முதன்மை கொடுத்து வருவதற்கு இதுவொரு முக்கியக் காரணமாகும்.

காது குத்துதல், மூக்குக் குத்துதல், மொட்டையடித்தல் போன்ற பல சடங்குகள் இன்றுவரை நடத்தப்படுகின்றன. இச்சடங்குகளின் விளக்கங்களையும் பயன்களையும் புரிந்துகொண்டால் அவை வெறும் சடங்குகளாக மட்டும் கருதப்படாமல், நல்வாழ்வுக்கு வழிவகுப்பவையாகப் போற்றப்படும்.        

துணைநூல்கள்

[1]   கலைவேந்தன், க. (2008). தரணி போற்றும் தமிழர் பண்பாடு. தமிழய்யா வெளியீட்டகம்.

 

[2]   Mohapatra, J. (2013) Wellness In Indian Festivals & Rituals.

        https://tamil.boldsky.com/health/wellness/2017/what-is-super-brain-yoga-016181.html