top of page
Final.png

கம்பர்

தமிழகத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த புலவர்களுள் ஒருவர் கம்பர். தமிழ்மொழியில் தோன்றிய காப்பியங்களுள், தனிச்சிறப்புடைய உலகக் காப்பியங்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்க கம்பராமாயணத்தை இயற்றிய பெருமைக்குரியவர் கம்பர். இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவழுந்தூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதைத் தனிப்பாடல் ஒன்று புலப்படுத்துகிறது.  கம்பன் என்னும் பெயர், உவர்ச்சர் குலத்தில் பிறந்ததால் வந்தது என்று ஒருசாரார் கூறுகின்றனர். காளிகோவிலில் பூசை செய்யும் மரபினர் என்று உவர்ச்சர்கள் சொல்லப்படுகின்றனர். கம்பர் குழந்தையாகக் காளிகோவில் கம்பத்தின் அருகே கிடந்ததால் அப்பெயர் பெற்றார் என்றும் கூறுகின்றனர். கம்பங்கொல்லையைக் காத்து வந்ததால் கம்பன் என்று பெயர் வழங்கப் பெற்றார் என்றும் சிலர் கூறுகின்றனர். காஞ்சிப்பதியின் இறைவனாகிய "ஏகம்பன்" என்றும் பெயர் இவர்க்கு இடப்பட்டதால் இவர் கம்பன் என அழைக்கப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது[1].

 

கம்பரின் காலம்

ராமாயணத்தின் தொடக்கத்தில் ‘கம்பர் தனியன்கள்’ என்னும் தலைப்பில் 17 பாடல்கள் உள்ளன. இவற்றில் ஒரு பாடலில் ‘எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின் மேல்’ என்னும் தொடர் அமைந்துள்ளது. இத்தொடர் ராமாயணம் எழுதப்பட்ட காலத்தை உணர்த்துவதாக உள்ளது. இப்பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய காலம் பொ.ஆ. (பொது ஆண்டு)  885 என்று அறிஞர்கள் கூறுவார்கள். ஆனால், இத்தனியன்கள் கம்பர் காலத்திற்கும் பின்னால் பொ.ஆ. 16ஆம் நூற்றாண்டில் யாரோ சிலர் எழுதி இடைச்செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும் என்று வையாபுரிப் பிள்ளை கருதுகிறார். இதேபோல் ஆவின் கொடைச் சகரர் என்னும் பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பர் காலம் பொ.ஆ. 978 என்று சிலர் விளக்கியுள்ளனர். இது முதலாம் இராசராச சோழனுக்கு முன்பு இருந்த உத்தம சோழன் காலம் ஆகும். இந்தக் காலத்தையும் சில சான்றுகள் கொண்டு அறிஞர்கள் மறுத்துள்ளனர்.

 

கம்பருடைய காலம் மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் என்று அறிஞர் பலரும் கூறியுள்ளனர். மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டு ஆகும். பொ.ஆ. 1376இல் பொறிக்கப்பட்ட ஒரு கன்னடக் கல்வெட்டை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். அந்தக் கல்வெட்டு தோன்றிய காலத்திற்கு முன்பு இரண்டு தலைமுறைக் காலமாகக் கம்பராமாயணம் கன்னட நாட்டில் வழங்கி வந்ததைத் தெரிவிக்கிறது. எனவே, பொ.ஆ. 1325க்கு முன்பே கம்பர் காவியம் தோன்றியிருக்க வேண்டும் என்று மா. இராசமாணிக்கனார் கருதுகிறார்.

 

கம்பர், சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்க்குப் பிற்பட்டவர் என்பது அறிஞர் பலரும் ஒப்புக்கொண்ட உண்மை. கம்பர் சோழ மன்னனோடு மாறுபட்டு ஆந்திர நாட்டில் சில காலம் தங்கினார். இவர் தங்கியிருந்த நாடு ஓரங்கல் என்பதாகும். அந்த நாட்டின் அரசன் பிரதாபருத்திரன். அவன் காலம் பொ. ஆ. 1162முதல் 1197வரை ஆகும். இதே காலக்கட்டத்தில் சோழப் பேரரசனாக இருந்தவன் மூன்றாம் குலோத்துங்கன். இவன் காலம் பொ.ஆ. 1178முதல் 1208வரை ஆகும்.  எனவே, கம்பர் காலம் பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று முடிவு கூறலாம். கம்பர், சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்க்குப் பிற்பட்டவர் என்பது அறிஞர் பலரும் ஒப்புக்கொண்ட உண்மை.

 

கம்பராமாயணம்

கம்பர் இயற்றிய கம்பராமாயணம் முதலில் ராமவதாரம் என்று பெயரிடப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. எனினும், கம்பராமாயணம் என்னும் பெயரே நிலைத்துவிட்டது. இந்நூல் ஆறு காண்டங்களைக் கொண்டது. அக்காண்டங்கள் பின்வருவன: பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகியன. மொத்தம் 10, 569 பாடல்கள் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ளன.

 

கம்பராமாயணத்தின் மூலம் வால்மீகியின் ராமாயணம்.  எனினும், கம்பர் வெறும் மொழிபெயர்ப்பாகப் படைக்காமல் தம் ராமாயணத்தை ஒரு மூல காவியமாகவே இயற்றியுள்ளது வியப்பிற்கும் தமிழ் மக்களின் நன்றிக்கும் உரியது. கம்பர் காலத்திற்கு முன்பே தமிழ்மொழி தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், வைணவ நூல்கள், சைவ நூல்கள் எனப் பல்வேறு நூல்களைத் தந்து சிறப்புற்று விளங்கிற்று. ஆயினும், கம்பர் புதியதொரு படைப்பு நெறியை உருவாக்கியிருப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.  

 

கம்பராமாயணம் தோன்றுவதற்கு முன்பாகவே தமிழ் மக்கள் ராமாயணக் கதைபற்றிப் பொதுவாகத் தெரிந்துவைத்திருந்தனர். குறிப்பாக, ஆழ்வார்கள் பாசுரங்களின்வழி ராமன் கதையில் உள்ள முக்கியக் கட்டங்கள் மக்களுக்கு முன்னறிவாக இருந்தன. அத்தகைய சூழலில் மக்களின் கவனத்தை ஈர்க்கும்படியாகக் கம்பராமாயணத்தை இயற்றவேண்டும் என்னும் தேவையும் அவசியமும் கம்பர்க்கு எழுந்தது. அக்காரணத்தால், படைப்புத் திறமை, கற்பனையாற்றல், பாத்திரப் படைப்பு, கதை நிகழ்ச்சி, நாடக உத்தி, சந்தப் புலமை முதலியவற்றில் தனித்திறமையைக் காட்டவேண்டிய நெருக்கடி கம்பர்க்கு இருந்துள்ளது. கம்பரின் கவித்திறம் தமிழ்க் கவிதைக்குத் திருப்புமுனையாகவும் புதிய எதிர்காலமுமாகவும் அமைந்தது. கம்பர்க்குப் பின் தோன்றிய கற்றறிந்த புலவர்கள் கம்பராமாயணப் பாடல்களை எடுத்து மொழிவதோடு விரித்துரைத்தும் மக்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.

 

கம்பரும் சடையப்ப வள்ளலும்

சடையப்ப வள்ளல் என்னும் புரவலர், கம்பரின் புலமையாற்றல் அறிந்து அவர்க்குப் பொருளுதவிசெய்து, கம்பரைக் கம்பராமாயணம் இயற்றவைத்தார். கம்பர் சடையப்ப வள்ளலிடம் காட்ட விரும்பிய நன்றியுணர்வைத் தம் பாடல்களின்வழி வெளிப்படுத்தினார். ஆயிரம் பாடல்களுக்கு ஓரிடம் என்னும் முறையில் பத்து இடங்களில் சடையப்பர் குறித்துப் புகழ்ந்து பாடியுள்ளார். எடுத்துக்காட்டிற்கு, கம்பர் தம் பாயிரப் பாடலில் இவ்வாறு பாடியுள்ளார்:

தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை

 சடையன் வெண்ணெய்நல் லூர்வயின் தந்ததே

 (கம்பராமாயணம், தற்சிறப்பாயிரம், 11)

இப்பாடலில் கம்பர், தம்மை ஆதரித்த சடையப்பர், தம் ஊர்பற்றிய தகவலை வழங்கியுள்ளமை கவனத்திற்குரியது. மேலும், காப்பியத்தில் வரும் பாலகண்டத்தில், விசுவாமித்திரர் ராமனுக்கு அளித்த படைக்கலம்பற்றிய நிகழ்வைச் சடையப்பரின் கொடைச் சிறப்போடு ஒப்பிட்டுப் பாடியுள்ளார். அன்பும் இன்சொல்லும் பெற்றவர் சடையப்பர் என்பதைக் கம்பர் சுட்டியுள்ளார்[2].

 

வால்மீகி ராமாயணமும் கம்பராமாயணமும்            

கம்பனும் வால்மீகியும் காலத்தால் வேறுபட்டவர்கள். அதனால், அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகள், அவர்களுடைய காவியத்திலும் காவிய நடையிலும் கதைப் போக்கில் பல இடங்களில் படிந்திருக்கின்றன. வால்மீகி ராமாயணத்தை எழுதி ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், கம்பர் தமது ராமாவதார காவியத்தை எழுதியிருப்பதாகக் கணக்கிட்டுக் கூறியுள்ளார்கள். இந்த நீண்டகால இடைவெளியின்போது வால்மீகியின் மகாகாவியத்தின் கதைப் போக்கில் பலரும் மாற்றங்களைக்கொண்டு வந்திருக்கக்கூடும்.

 

வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24000 ஈரடிகள் இடம்பெற்று இருந்தன.  ஆனால், கம்பர் தமது புலமை மூலம் அதனை எளிமையாக்கி 11000 சந்தங்களில் தேவைக்கு ஏற்ப இடங்களை மாற்றி அமைத்து அதனை முறைப்படுத்தி வெளியிட்டார். கம்பரது ராமாயணத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் ஒருங்கே கற்ற கால்டுவெல் என்னும் மேனாட்டு அறிஞர், இதனை மேனாட்டுக் காப்பியமான ‘இலியட்’ என்பதோடு ஒப்பிடுகிறார். வ வே சு ஐயர் இவ்விரு ராமாயணங்களையும் கற்று, கம்பராமாயணம் பலவகையில் சிறப்புடையது என்று குறிப்பிடுகிறார். இதன் கவிதையுணர்வு ஆற்றொழுக்காகச் செல்வதால் இது முதற்காப்பிய நிலையில் உள்ளது என்கிறார். வால்மீகி ராமாயணத்தோடு ஒப்பிடும்போது, கம்பராமாயணம் சுமார் 800க்கும் அதிகமான இடங்களில் மாறுபட்டுள்ளது. கம்பராமாயணம் முற்றிலும் ஒரு மொழிபெயர்ப்புக் காப்பியம் என்று கருதுவதற்கில்லை. அதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:

 

1. கம்பர் தமது மாபெறும் காவியத்தில் ராமபிரானைத் திருமாலின் முழுமையான அவதாரமாகவே விவரித்துக் காட்டுகிறார். ஆனால், வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் ராமன் ஒரு சிறந்த ராஜகுமாரன். அவன் வீரமும் தெய்வீக நற்குணங்கள் பெற்றவனாகக் காட்டுகிறார்[3]. கம்பர் தமிழ் மண்ணிற்கு ஏற்ப ராமாயணத்தை வடித்துள்ளார்.

2. வால்மீகி ராமாயணத்தில் திருமணத்திற்கு முன்பாக ராமனும் சீதையும் சந்தித்திருப்பதாகக் கதை அமையவில்லை. கம்பராமாயணத்தில் அவர்கள் இருவரும் ராமன் வில்லை ஒடிக்கும் முன்பே சந்தித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் கம்பர், கதைமாந்தரிடையே ஏற்பட்டுள்ள காதல் காட்சியை அழகுற அமைத்துள்ளார். சீதையும் ராமனும் ஒருவர் மற்றொருவரைக் கண்டு, இரு உள்ளங்களும் பிணைந்த காட்சியைக் கம்பர் இவ்வாறு வர்ணிக்கிறார்[4]:

 எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி

 கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்று

 உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

 அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

1.1 kambar.jpg

3. சீதையைக் கவரும் ராவணன் அவளைத் தொட்டுக் கவர்ந்து தன் துடைமீது இருத்திச் செல்வதாக வால்மீகி கூறுகிறார். கம்பரோ, சீதையைத் தொடாமல் ராவணன் நிலத்தோடு பெயர்த்துச் சென்றான் எனக் கூறுவதோடு, தொட்டால் அவன் தலை சிதறும் என்னும் சாபத்தையும் குறிப்பிடுகிறார். அயல் ஆடவன் ஒரு பெண்ணைத் தொடுவதும் தொடைமீது இருத்துவதும் தமிழ்ப் பெண்களுக்குக் கற்பு நிலையாகாது. அந்த மரபைக் காக்கிறார், கம்பர்.

  

கம்பரின் சிறப்புக்கூறுகள்        

‘கல்வியிற் பெரியவர் கம்பர்’, கவிச்சக்கரவர்த்தி கம்பர், கம்பர் வீட்டுக் கட்டித் தறியும் கவி சொல்லும் என்னும் தொடர்கள் கம்பரது பெருமையினை உணர்த்தும். இவர் விருத்தமென்னும் வெண்பாவில் உயர் கம்பன் என்று பாராட்டப்படுகிறார். "கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பாரதியார் குறிப்பிடுவதன் மூலம் கம்பர் தமிழ்நாட்டிற்கு ஏற்றம் தந்துள்ளதாகக் கூறியுள்ளார். கம்பரை மகாகவி என்றும் கவிச்சக்கரவர்த்தி என்றும் உயர்வாகப் பேசக் காரணமாக அமைந்தது. இவர் தமது அறிவினின்று வடித்து இறக்கிய தூய அமிழ்தமான ராம காவியமாகும். “அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே” எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை போற்றியுள்ளார். தமிழ்மொழிக்குத் தவச்சிறப்புத் தந்தது என்னும் பொருளில் நாமக்கல் கவிஞர், “தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே” என்று புகழ்ந்துள்ளார். மக்களுடைய எண்ணங்களையும் எழுச்சிகளையும் நெகிழ்ச்சிகளையும் படம்பிடித்துக் காட்டும் ஒரு காலக்கண்ணாடியாக அப்படைப்பு விளங்குகிறது[5].

தனிமனித ஒழுக்கத்தினையும் கற்புநெறிகளையும் கம்பர் தமது காப்பியங்களின்வழி எடுத்துரைக்கும் முறை பாராட்டுதற்குரியது. "ஒருவனுக்கு ஒருத்தி" என்னும் ஓர் அடிப்படைக் கொள்கையை ஆதாரமாகக்கொண்டு காப்பியத்தை இயற்றியுள்ளார், கம்பர். "பிறர் மனை நயந்தால் அழிவான்" என்னும் பேருண்மையைத் தம் காப்பியத்தின்வழிப் படைத்துள்ளார். கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் உரியதன்று. ஆண்களுக்கும் கற்பு என்பது உண்டு என்பதைத் தம் காப்பியத்தின்வழி உரைத்தவரும் கம்பரே! கற்புநெறியில் தவறும் மக்கள் அழிந்துபோவார்கள் என நம்மை இவர் எச்சரிக்கிறார்.

 

கம்பர் வைணவத்தைச் சிறப்பித்துக் கூறியதோடு பிற சமயக் கோட்பாடுகளையும் தெய்வங்களையும் ஒப்புநோக்கி உயர்த்திக் கூறியுள்ளார் என்பதை ராமாயணத்தின்வழி உணரலாம். அதனால், கம்பர் தமிழ் இலக்கிய உலகில் தலைசிறந்த புலவராக மட்டுமின்றி ஒரு யுகத்தைப் படைத்தவராகவும் விளங்குகிறார் எனலாம். இவர் இராமநாதபுரத்திலுள்ள நாட்டரசன்கோட்டை என்னும் இடத்தில் இயற்கை எய்தினார்.

     

கம்பர், கம்பராமாயணத்தைத் தவிர ஸ்ரீ சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, ஏரெழுபது, திருக்கை வழக்கம், மும்மணிக்கோவை போன்ற சிறு சிறு பிரபந்தங்களையும் பாடியுள்ளார். இதில் குறிப்பாக, ஸ்ரீ சடகோபர் அந்தாதியைக் கம்பர் ராமாயண அரங்கேற்றத்தின்போது பாடினார் என்பார்கள்[6].

 

சிங்கப்பூரில் கம்பன் விழா

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2014ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கம்பன் விழாவை நடத்திவருகிறது. இந்நிகழ்ச்சிகள் அவ்வப்போது கம்பச்சுவை பருக வாய்ப்பளிக்கின்றன.  பட்டிமன்றம், வழக்காடு மன்றம், உரையரங்கம், கம்பன் கவிதைகளை ஒப்புவிக்கும் போட்டிகள் போன்ற அங்கங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்திலும் கம்பர் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்ந்துள்ளன. மேலும், சிங்கப்பூர் இலக்கியப் படைப்பாளர்களும் கம்பர், கம்பராமாயணம்பற்றி நூல்கள் இயற்றியுள்ளனர். எடுத்துக்காட்டிற்கு, திரு நா ஆண்டியப்பன் "வெற்றித் திருமகன் – இராமாயண நாடகம்" என்னும் தலைப்பிலும் சிங்கப்பூர்க் கவிஞர் திரு அ கி வரதராஜன் "கம்பன் காட்டும் கணைகள்"  என்னும் தலைப்பிலும் நூல்கள் வெளியிட்டுள்ளனர்.   

துணைநூல்கள்

[1]  வாழ்வியற் களஞ்சியம். (தொகுதி 4). (1991). ஏகாம்பரநாதர் உலா. தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு

       53 - 4.

 

[2]  நாகஜோதி, செ. (2017). கம்பராமாயணத்தில் சடையப்ப வள்ளலின் பெருமைகள். International Multidisciplinary Innovative Research Journal.         பக்கம் (111 – 115).

 

[3]   சீதாபதி, பி.சி. (1984). வால்மீகி-கம்பன் மாற்றங்கள். கோவை கம்பன் கழகம்.

[4]   மகராஜன், எஸ். (ஆங்கில மூலம்). மீனாட்சி சுந்தரம், கா. (தமிழாக்கம்). (1996). கம்பன். இந்திய இலக்கியச் சிற்பிகள். (மூன்றாம் பதிப்பு). 

[5]   நடராசன், இ. (2009). கம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள். ஏகம் பதிப்பகம்.  

[6]   அரங்கநாதன், நா. (1989). சடகோபர் அந்தாதி. இளங்கோ அடிகள் இலக்கிய மன்றம். சென்னை: கவின்கலை அச்சகம்.

தலைப்புக்குத் தொடர்புடைய பிற வளங்கள்:

1. கம்பர் வாழ்க்கை வரலாறு: https://www.itstamil.com/kambar.html

2. கவிச்சக்கரவர்த்தி கம்பர் http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01123p3.htm

bottom of page