முத்தமிழ்
பண்டைய காலந்தொட்டுத் தமிழ்மொழியையும் கலைகளையும் இணைத்து முத்தமிழ் என்று கருதும் வழக்குத் தமிழரிடையே இருந்துள்ளது. மொழிக்கும் கலைக்கூறுகளுக்கும் உள்ள தொடர்பு எப்போது, எப்படித் தொடங்கியது என்பதை ஆய்ந்து அறிவது முக்கியம். தொல்காப்பியர்க்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த அகத்திய முனிவரின் காலத்திலேயே முத்தமிழ் வழக்கில் இருந்தது. மனக்கருத்தின் வெளிப்பாடே இயற்றமிழ்; வாய் ஒலியின் வெளிப்பாடே இசைத்தமிழ்; மெய்யின் (உடல்) வெளிப்பாடே நாடகத்தமிழ் என்று தமிழர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு மூன்று உயிர் கூறுகளினாலும் அதன் இயல்பை வெளிப்படுத்தும் பாங்கினை முத்தமிழ் என்போம். இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில், மூவகைத் தமிழும் பரவி இருத்தலால் அது ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப் போற்றப்படுகிறது. இப்பெருங்காப்பியம் முத்தமிழ் இலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்தது என்பதை அடியார்க்கு நல்லார் உரைவழி அறியலாம்.
இயல்பான பேச்சும் எழுத்தும் இயற்றமிழ் எனப்பட்டன. உலகப் பொருள்களின் இயல்பினை உள்ளவாறு விளக்குவதற்குரிய சொல்லமைப்பினை உடையது இயற்றமிழ் எனப்படும். மக்கள் உள்ளத்தில் தோன்றும் பல்வேறு எண்ணங்களைச் செயற்படுத்துவதற்குரிய இயல்பினை ஏற்படுத்தித்தரும் ஆற்றல் இயற்றமிழுக்குண்டு. தாம் சொல்லக் கருதியதைக் கேட்போர் உள்ளம் மகிழ இனிய ஓசையுடன்கூடிய இசையோடு புலப்படுத்தும் மொழிநடைக்கு இசைத்தமிழ் என்று பெயர். எண்ணங்களுக்கு இசைத்தமிழ் மூலம் உயிர்கொடுத்து அங்க அசைவுகளையும் முக பாவனைகளையும் குரலில் ஏற்ற இறக்கத்தையும் கொண்டு அனைவரையும் கவரும் வண்ணம் மேடையில் நாடகமாக நடிப்பதே நாடகத்தமிழ். இதனால் இயல், இசை, நாடகம் என்னும் பாகுபாடு தமிழுக்கு இருந்தாலும், அவை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ள காரணத்தால் தமிழை முத்தமிழ் என்கிறோம்.
சங்ககாலப் பாடல்கள் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய மெய்ப்பாடுகளை (உடலால் வெளிப்படுத்தப்படும் உணர்வுகளை) கொண்டு அமைந்துள்ளன.
இயற்றமிழ்
இயற்றமிழ் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐவகை இலக்கணங்களைக் கொண்டமைந்தது. இயற்றமிழில் இலக்கணம், இலக்கியம், செய்யுள், உரை, உரைநடை, புராணம் ஆகிய அனைத்தும் அடங்கும்.[1]
இயற்றமிழ்சார் இலக்கியம் இருவகைப்படும். அவை அகமும் புறமும் ஆகும். அகம் என்பது இன்பப் பொருள் இலக்கியம். இதைக் காதல் இலக்கியம் எனவும் கூறலாம். ஒருவனும் ஒருத்தியும் கண்டு விழைந்துகூடி இல்வாழ்க்கை ஏற்று வாழ்வது அகப்பொருளாகக் கருதப்படுகிறது. மக்கட்செல்வம், விருந்தோம்பல், மக்களைப் பேணி வளர்த்தல் போன்ற கூறுகள் அகப்பொருள் இலக்கியத்தில் காணப்படுகின்றன. இத்தகைய கூறுகள் அகப்பொருள்சார் பாடல்களில் அதிகம் இடம்பெற்றுள்ளன.
புறப்பாடல்கள் போர், வீரம், கொடை, சமுதாய நெறி, பக்திசார் பாடல்கள், சான்றோர்களின் அறிவுரை போன்ற கூறுகளைக் கொண்டிருக்கும். தொல்காப்பியம் தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலாகும். இது இயற்றமிழில் எழுத்து, சொல், பொருள் ஆகிய இலக்கண மரபுகளை எப்படிக் கையாள்வது என்பதைப்பற்றிக் கூறும் மூலநூலாகும். இது தமிழுக்குக் கிடைத்த அரும்பெரும் பெட்டகம். அடுத்து, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய திருக்குறளைக் குறிப்பிடலாம்.
சான்றோர்களின் அறிவுரைசார் பாடல்களைக் குறிக்கும்போது ஒளவையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை(வாக்குண்டாம்), நல்வழி ஆகியவற்றைக் கூறலாம். போர், வீரம், கொடை, சமுதாய நெறி, பக்தி போன்றவற்றைப் பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணியில் காணலாம்.
பக்தி இலக்கியம் என்பதும் இயற்றமிழின் ஒரு கூறாகும். சங்ககாலத்தில் தெய்வங்களை வழிபடுவதற்குச் சில பாடல்களைத் தமிழ் அருளாளர்கள் பாடினர். பின்னர் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இசையோடு பண்ணமைத்து இறைவனுக்காகத் தோத்திரப் பாடல்களைப் பாடி மக்களிடையே பக்திநெறியைப் பரப்பினர். சைவம் வளர்த்த நாயன்மார்களுள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஆகியோர் பாடிய பாடல்கள் மூவர் தேவாரம் எனப்படும். மாணிக்கவாசகர் பாடியது திருவாசகம் எனப்படும். ஆழ்வார்கள் பாடியவை திவ்விய பிரபந்தம் எனப்படும். சுருங்கக்கூறின், இயற்றமிழே இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் முன்னோடியாக அமைந்தது.
இசைத்தமிழ்
வாய்ப்பாட்டு, கருவியிசை முதலியவற்றைக் கொண்டது இசை என்பதாகும். தொல்காப்பியக் காலம்முதல் பொ.ஆ. (பொது ஆண்டு) 6ஆம் நூற்றாண்டுவரையிலான காலக்கட்டத்தில் நிகழ்ந்த இசைத்தமிழ் வரலாற்றினைப் பல நூல்கள் விவரித்துக் கூறுகின்றன.[2]
இசைத்தமிழ், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வளர்ச்சியடைந்த நுட்பமான கலையாக விளங்கியது. பழந்தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையோடு இசையையும் தாளத்தையும் கருப்பொருளாக அமைத்துக்கொண்டிருந்தனர். சிலப்பதிகாரம் இசை இலக்கணம்பற்றிப் பல அரிய செய்திகளையும் பழங்கால இசைக்கருவிகள்பற்றியும் பண்கள், வரிப்பாடல்கள், குரவைக் கூத்துப் பாடல்கள் பற்றியும் தன்னகத்தே கொண்டு விளங்குவதால் இக்காப்பியம் ஓர் இசைத்தமிழ்க் களஞ்சியமாகக் கருதப்படுகிறது. சங்ககாலத்தில் கூத்துக் கலையுடன் இசையும் பின்னிப்பிணைந்துள்ளது. இசை இல்லாமல் கூத்து இல்லை. அன்றைய தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் பாடி இன்புற்ற இசைப்பாடல்களுள் சிலவற்றைப் பரிபாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் காணலாம். உள்ளத்தை ஈர்க்கும் பல பண்கள் சங்ககாலத்திற்கு முன்பே மக்கள் வழக்கில் இருந்தன.
பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டுமுதல் பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டுவரையில் தமிழகத்தில் களப்பிரரின் ஆட்சி நடைபெற்றது. களப்பிரர் சமண சமயத்தை ஆதரித்தனர். சமண சமயத் துறவிகள் இசையும் கூத்தும் காம உணர்வை விளைவிக்கின்றன என நம்பி அவற்றை வெறுத்தனர். அதனால், இசைத்தமிழ் ஆக்கமிழந்து நலிவுற்றது. எனினும், பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் தோன்றித் தமிழிசைக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளார்.
திருமூலர் வாழ்ந்த காலத்தில் (பொ.ஆ. 5ஆம் நூற்றாண்டு) இசைக்கலை ஒரு தெய்வீகக் கலையாகப் போற்றப்பட்டது. இசை அறிந்தால் இறைவனை அறியலாம் என்பது ஆன்றோர் வாக்கு. இறைவனின் அடியார்கள் உள்ளமுருகிக் கண்ணீர் மல்கிப் பாடும் இசைப்பாடல்கள் இறைவனின் உள்ளத்தைத் தொடும் என்றும் இறைவன் அருள்புரிவான் என்றும் நம்பினர்.
இயற்கை தரும் இன்னொலிகளைக் கேட்டு மனிதன் சிந்திக்கிறான். இது போன்ற இன்னொலிகளைக் கருவிகளில் இசைப்பதற்கு அவன் முயன்றான் என்று எண்ணுவதற்குப் பழங்காலத்தைச் சேர்ந்த சங்கப் பாடல்கள் ஆதாரங்களாக விளங்குகின்றன. ஆதியிலே மனிதன் தன் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் பல்வேறு ஒலிகளைப் பிறப்பித்தான். இவ்வொலிகளை முறைப்படுத்தியபோது, இன்னொலி என்னும் இசை பிறந்ததைக் கண்டான். இதைத்தான் சாத்தனார் "ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே" என்று குறிப்பிட்டார். முதலில், ஓரிரு சுரங்களில் பிறந்த இசை, நாளடைவில் வேறு சுரங்களில் பயன்படுத்தப்பட்டு ஏழு சுரங்கள் ஆனது.
பிறகு இசையோடு அனுபவங்களையும் உணர்ச்சியினையும் வெளியிடும் எளிய சொற்களை இணைத்து மனிதன் நாட்டுப் புறப்பாடல்களைப் பாட ஆரம்பித்தான். அவை பொருள் ஆழமும் இசை நயமும் உவமை அழகும் கொண்டு இனிமையாகவும் எளிமையாகவும் விளங்கியமையால் கேட்போர் மனத்தைக் காந்தத்தைப்போல் ஈர்த்தன. வயலில் வேலை செய்யும் உழவன்முதல் மாடு மேய்க்கும் சிறுவன்வரை தொழில் செய்வோர், நாட்டுப் புறப்பாடல்களைப் பாடித் தங்களின் களைப்பைப் போக்கினர்
இவ்வாறு மனிதனுடைய வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் இசை பயன்படும் வகையில் அமைந்துள்ளது.
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையால் அல்லற்படும்போது அதனை மறக்கச் செய்ய இசை மிகவும் பயன்படுகிறது. மன நோயுள்ளவர்கள், உணர்ச்சி வசப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்க்கு இசை மனவமைதியைத் தருகிறது. ஒரு வீரன் போர்முனையில் மார்பில் புண்பட்டுக் கிடந்தான். அப்புண்ணை உண்ணவரும் பேய்களைத் தடுப்பதற்காக யாழிலும் ஆம்பற் குழலிலும் காஞ்சிப் பண்ணை இசைப்போம் எனத் தலைவி கூறியதாக அரிசில் கிழார் என்னும் புலவர் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
நாடகத்தமிழ்
எல்லாரும் விரும்பிப் பார்க்கும் கலை நாடகமாகும். குழந்தைமுதல் பெரியவர்வரை படித்தும் பார்த்தும் மகிழும் தமிழாக நாடகத்தமிழ் உள்ளது. கடந்த 20ஆம் நூற்றாண்டை நாடகத்தமிழின் பொற்காலம் எனலாம். நாட்டியத்தால் பெறும் இன்பத்தினை நீட்டிக்க விளைந்த மக்களின் வேட்கையே நாடகமாக மலர்ந்தது. பாட்டும் அபிநயமும் கலந்த நாட்டியத்தால் விளைந்த இன்பத்தைச் சிறிய அளவாக உணர்ந்த மக்கள், மேலும் நுட்பமான கலை நயங்களைக் காண ஆவல்கொண்டு நாட்டியக் கலையோடு நெருங்கிய தொடர்புடைய ஒன்றினைக் கண்டுபிடித்த வரலாறே நாடகத்தின் தோற்றமாகும். கருத்துகளை வெளிப்படுத்திய நாட்டியம், கதை தழுவிய நாடகமாக மக்களிடம் தோன்றி வளரத் தொடங்கியது[3].
நாடகக்கலை தெய்வீகமும் வீரமும் கொண்டமைந்த கலை வடிவமாகக் கருதப்பட்டது. தொல்காப்பியர் காலம்முதல், இந்திய விடுதலைக்குப் பின் உள்ள காலம்வரை நாடகக் காலங்களை - அகத்தியர் காலம், தொல்காப்பியர் காலம், சங்ககாலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஆங்கிலேயர் காலம், விடுதலைக்குப் பின் வரையிலான நாடகக் காலம் என்று வகுக்கலாம். நாடக வகைகள், தெருக்கூத்து, குழந்தை நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம், மேடை நாடகம், அமெச்சூர் நாடகம், தேசிய நாடகம், ஓரங்க நாடகம், செய்யுள் நாடகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன[4].
நாடகக்கலை என்பது உலகத்தின் பொதுக்கலை. சமயத்தைப் பரப்புவதற்கு வலிமைமிக்க ஒரு கருவியாக நாடகக்கலை கருதப்பட்டது. நாடகக் கலை எகிப்தில்தான் முதன்முதலில் தோன்றியது என்று வரலாற்றுச் செய்திகள் குறிப்பிடுகின்றன. நாடகம் என்பது நாடு + அகம் எனப் பிரித்து, அகம் நாடும் கலை என்று பொருள் கொள்ளும் வகையில் இதனைத் தூய தமிழ்ச் சொல் என்பார்கள், அறிஞர்கள். நடை, நடம், நட்டம், நாட்டம், நாடகம் எனச் சொன்முறை வளர்ந்ததாகவும் கூறுவார்கள். ஒவ்வொரு புலன் வழியாகவும் மனத்துள் புகுந்து இன்பமூட்டிச் சிந்தனையைத் தன்வயப்படுத்தும் தன்மை இக்கலைக்கு உள்ளது. நடிப்பில் இருவகை உண்டு. ஒன்று கருத்துகளை நடித்துக்காட்டுதல்; மற்றொன்று கதைகளை நடித்துக்காட்டுதல் ஆகும். கருத்துகளை நடித்துக் காட்டுதல், நாட்டியம் என்றும் கதைகளை நடித்துக் காட்டுதல் நாடகம் என்றும் பெயர் பெற்றன.
கருத்துகளை வெளிப்படுத்திய நாட்டியம், கதை தழுவிய நாடகமாக மக்களிடம் தோன்றி வளரத் தொடங்கியது. அவ்வாறு அமைந்த நாடகக்கலை, கற்றார் கல்லார் அனைவர்க்கும் நாட்டியத்தை விடக் களிப்பூட்டுவதாகவும் இருந்தது. சிலப்பதிகாரத்தில் வரும் இருவகைக் கூத்துகளுக்கும் அடியார்க்கு நல்லார் விளக்கம் சொல்லும்போது, சாந்திக் கூத்தும் விநோதக் கூத்தும் என்று விளக்கம் சொல்லிச் சாந்திக் கூத்தைச் சொக்கக் கூத்து, மெய்க்கூத்து, அபிநயக் கூத்து, நாடகக் கூத்து என்று நால்வகைகளாகப் பாகுபாடு செய்வார். இவற்றுள் நாடகம் என்பதற்குக் கதை தழுவிவரும் கூத்து என்று பொருளுரைப்பார்.[5] குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை ஆகியவை விநோதக்கூத்து என்று வகுக்கப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரம் நாடகத் தமிழ்நூல் என அடியார்க்கு நல்லார் தம் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ என்று கூறப்பட்டிருந்தாலும் அதனை நாடகக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம் என்றே கூறுகிறோம். இக்காப்பியம் திரைப்படமாகவும் நாடகமாகவும் நாட்டியமாகவும் படைக்கப்பட்டுள்ளது. இக்கதையின் சிதைந்த ஓர் அமைப்பு இன்றும் ‘கோவலன் கதை’யாகச் சிற்றூர்களில் கூத்து வடிவில் நடிக்கப்பட்டு வருகிறது. எனவே, இக்காப்பியம் ஒரு நாடகக் களஞ்சியமாகத் திகழ்கிறது எனலாம். பதினோர் ஆடல்கள், நாடக அரங்கு, உரையாசிரியர் தரும் உரைகளில் நாடகக் கலை அமைப்புகள் முதலியன இக்காப்பியத்தில் நாடகம் எவ்வண்ணம் அமையப்பெற்றது என்பதைக் காட்டுகின்றன.
நாடகம் என்பது ஒரு தளவெளிப்பாடாகும். சமூக வாழ்விலுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மனிதன் காணும் கற்பனையே நாடகமாகும். தொல்காப்பியத்தில் காணப்படும் ‘மெய்ப்பாட்டியல்’ நாடகக்கூறுகளை உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. மக்களின் அகவாழ்க்கையிலும் புறவாழ்க்கையிலும் நிகழும் நுண்ணிய செய்திகளைக்கூட நாடகப் பாங்கோடு சங்க இலக்கியங்கள் விவரித்துள்ளன.
சிங்கப்பூரில் முத்தமிழ்: ஒரு பார்வை
சிங்கப்பூரில் மூவகைத் தமிழுக்கும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே சொல்ல வேண்டும். அரசு, கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தனியார் முயற்சி எனப் பல்வேறு தளங்களிலும் வழிகளிலும் இயல், இசை, நாடகம் மூன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன; வளர்ந்துகொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டுக்குச் சில தகவல்களைக் கீழே காணலாம்.
தமிழவேள் கோ. சாரங்கபாணி 1939இல் மலாயா தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து தமிழர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகத் தமிழர் திருநாளைத் தோற்றுவித்தார். அக்காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என்று வேறுபட்டுக் கிடந்த தமிழர்களை இணைக்கும் பாலமாகத் தமிழர் திருநாள் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது [6]. இத்திருநாள் கொண்டாட்டங்களில் முத்தமிழுக்குச் சிறப்பிடம் இருந்தது.
சிங்கப்பூரில் அன்றுமுதல் இன்றுவரை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இடம்பெற்றுவரும் தமிழ் நிகழ்ச்சிகள் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிவருகின்றன. அக்காலத்தில் ‘மாலை மதுரம்’ என்னும் கதம்ப நிகழ்ச்சியும் எம் கே நாராயணன் எழுதிய ‘மர்ம மேடை’ நாடகமும் பி கிருஷ்ணன் எழுதிய ‘அடுக்குவீட்டு அண்ணாசாமி’ போன்ற பிரபலமான நாடகங்களும் சிங்கை மக்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்துள்ளன. வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் பலதரப்பட்ட தகவல்களைத் தமிழில் தொகுத்து மக்களுக்கு வழங்குகின்றன. இவற்றின் வாயிலாகத் தமிழ்மொழியும் இலக்கியமும் சிங்கப்பூரில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. புத்தக மன்றம் என்னும் அரசுசார்ந்த அமைப்பு ஆண்டுதோறும் பல்லாயிரம் வெள்ளி பெறுமான இலக்கியப் பரிசுகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. கலைகளில் பெருஞ்சாதனை படைத்தவர்களுக்குக் கலாசார விருது ஒன்றும் சிங்கை அரசு கொடுத்து வருகிறது.
தமிழ்மொழி வளர்ச்சி, கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கெனப் பல தமிழ் அமைப்புகள் உள்ளன. சிங்கப்பூரில் கவிதை, சிறுகதை ஆகியவை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், கவிமாலை போன்ற அமைப்புகள் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றன. தற்போது சிங்கப்பூரில் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், ‘திருக்குறள்’ விழாவை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.
பள்ளிகளிலும் ஒவ்வோர் ஆண்டும் தாய்மொழிகளுக்கான இருவார நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன. மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை வளர்க்கவும் மொழி வளத்தைப் பெருக்கவும் இவை மிகவும் துணைபுரிகின்றன. அவற்றோடு, சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தார் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு இசை, நடனக் கலை வகைகளைக் கற்பித்து வருவதோடு பற்பல மேடை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி வருகின்றனர்.
சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக் கழகத்தின் ஏற்பாட்டில், கடந்த பல ஆண்டுகளாகத் ‘தமிழ்மொழி மாதம்’ ஆண்டுதோறும் ஏப்ரல் திங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனைப் பல்வேறு அமைப்புகள் இணைந்து பற்பல நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. அவற்றுள் ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவும் ஒன்று. இது சிறியவர்முதல் பெரியவர்வரை கண்டுகளிக்கவல்ல பல்வேறு அங்கங்களுடன் நடைபெறும். முத்தமிழ் விழாவில் சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டி, மாணவர்களுக்கான இலக்கியப் போட்டி, சிறப்புச் சொற்பொழிவு எனப் பல்வேறு அங்கங்கள் இடம்பெறுகின்றன. மேலும், இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் உள்ளூர் எழுத்தாளர் ஒருவர்க்குத் 'தமிழவேள்' விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பட்டிமன்றங்கள், மாறுவேடப் போட்டிகள், பாட்டுப் போட்டிகள், நூல் வெளியீடுகள், கவிஞர்களின் கலந்துரையாடல்கள், நடனப் போட்டிகள், பேராசிரியர்களின் உரைகள் போன்ற நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவைப் பெற்றுவருகின்றன. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஆண்டுதோறும் பல மொழி, கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகளைத் தமிழ்மொழி மாதத்தில் நடத்திவருகிறது.
துணைநூல்கள்
[1] அடைக்கலசாமி, எம். ஆர். (1989). தமிழ் இலக்கிய வரலாறு (2-ஆம் பதிப்பு).
[2] தனபாண்டியன், து. ஆ. (1994). இசைத்தமிழ் வரலாறு பகுதி 1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
[3] வையாபுரிப்பிள்ளை. (1998). ஆராய்ச்சித் தொகுப்பு, நூற்களஞ்சியம் (7ஆம் தொகுதி).
[4] பழனி அரங்கசாமி, (1989). தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும். தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
[5] காஞ்சனா, செ. (2013). தமிழ் மாருதம். சங்க இலக்கியத்தில் நாடகக் கூறுகள்.
[6] Elias, M. (1997) தமிழவேள் சாரங்கபாணி.
தலைப்புக்குத் தொடர்புடைய பிற வளங்கள்
1. முத்தமிழ் இசைத்திலகம் கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணர்
http://www.valaitamil.com/muthamizh-isaithilagam_15599.html
2. முத்தமிழ் – இயல், இசை, நாடகம்