Final.png

தமிழர் நாட்டுப்புறக் கலைகள்

இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் மனிதரிடையே இயல்பாகத் தோன்றுகின்ற ஒன்றுதான் கலை உணர்வு. மனிதனின் ஆழ்ந்த உணர்ச்சிப்பெருக்கின் வெளிப்பாட்டை இக்கலை உணர்வு வெளிப்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவே மனிதன் முதன்முதலில் கலை உணர்வுகளைப் வெளிப்படுத்தியுள்ளான். இவ்வகையில் வெளிப்படுத்தப்பட்ட கலைகள்தாம் நாட்டுப்புறக் கலைகள் என்கிறோம்[1]. நாட்டுப்புற இலக்கியங்கள் தவிர்த்து, ஏனைய வழக்காறுகளையும் நாட்டுப்புறக் கலைகளுக்குள் அடக்கலாம். மனிதனின் உணர்வுகளுக்கும் அறிவார்ந்த சிந்தனைகளுக்கும் கலைகள் வடிகால்களாக இருக்கின்றன. அவற்றுள் பல, கால வெள்ளத்தைக் கடந்துநின்று வளர்ந்துள்ளன. நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தவை. மனிதனுக்கு இருந்த இயற்கையறிவும் ஆழ்ந்த உணர்ச்சியும் எளிமையும் நேரடித்தன்மையும் இக்கலைகளுள் மறைந்திருக்கின்றன. நாட்டுப்புற மக்களின் அழகியல் உணர்வுகளின் மையமாக இக்கலைகள் விளங்குகின்றன [1].

முனைவர் ஆறு. இராமநாதன்  நாட்டுப்புறக் கலைகளை இரண்டு பெரும்பிரிவாகப் பிரிக்கிறார். அவை பின்வருமாறு:

Naatuppura Kalaikal.png

(மூலம்: சக்திவேல், சு. (2010). நாட்டுப்புற இயல் ஆய்வு (ஒன்பதாம் பதிப்பு). மணிவாசகர் பதிப்பகம்.)

பொதுவாக, கலைகள் 64 என்று கூறுவார்கள். இதனைக் கம்பர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை (சரஸ்வதி அந்தாதி)

கலைகளுள் அருள், அமைதி, இன்பம் கருதிச் செய்யப்படும் கலைகளை ‘நுண்கலைகள்’ என்று பகுப்பார்கள். கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக் கலை ஆகியன அழகுக் கலைகள் என்று மயிலை சீனி வேங்கடசாமி கூறுவார் [2]. இயற்கைச் சூழலில் கலைகள் தோன்றியிருந்தாலும் பின்னர்ச் சமய அடிப்படையில் அவை வளர்ச்சிபெற்றன. புனிதத்தையும் பேராற்றலையும் அடிப்படையாகக் கொண்டு பல நாட்டுப்புறக் கலைகள் தோன்றியுள்ளன. சமூக வாழ்க்கை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை விளக்கும் தன்மையுடையனவாக நாட்டுப்புறக் கலைகள் விளங்குகின்றன [1]. 

இனி, தமிழர்களுக்கு உரித்தான சில நாட்டுபுறக்கலை ஆட்டங்கள்பற்றித் தெரிந்துகொள்வோம்.

karakattam.jpg

இது தமிழர்களின் பாரம்பரியம்மிக்க ஆட்டங்களுள் சிறப்புடையது. இக்கரகாட்டம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. சக்திக் கரகம் என்றும் அம்மன் கரகம் என்றும் அழைக்கப்படுவது முதல்வகை; கலை நிகழ்ச்சிகளுக்காக நடத்தப்படுவது இரண்டாம்வகை. சக்திக் கரகம் என்பது கோவில் திருவிழாக்களில் மட்டுமே தலையில் சுமந்துகொண்டு வீதி ஊர்வலம்வந்து மக்களுக்குத் தரிசனம் தரும் கரகமாகும் [3].

‘கரகம்’ என்னும் சொல்லாட்சியைப் பண்டைத் தமிழ் நூல்களான தொல்காப்பியத்திலும் கலித்தொகையிலும் காண்கிறோம். உபநிடதத்திலும் கரகாட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலம்பு குறிப்பிடும் குடக்கூத்திலிருந்தே இன்றைய கரகாட்டம் தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர் [1].

கரகம் என்னும் சொல் பண்டைய தமிழ் இலக்கிய நூல்களில் புனித நீர் வைக்கும் கமண்டலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. செம்பில் நீர் அல்லது மணலை வைத்து, அதன்மேல் தேங்காய் வைத்து, அதற்கும் மேல் கிளி பொம்மையைச் செருகி, அந்தப் பகுதிச் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவாறும் கலாசாரத்திற்கு ஏற்றவாறும் ஒப்பனைசெய்து கரகம் அழகுபடுத்தப்படுகிறது. கரகாட்டக் கலையின் கரகமானது செம்பு, பித்தளை, வெள்ளி போன்ற உலோகப்பொருளாலான சிறிய பானை வடிவில் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும். இக்கரகாட்டம் பெரிதும் கோவில் திருவிழாக்களின்போதும் வீடுகளில் சுப சடங்குகளின்போதும் நிகழ்கின்றன. [3]

‘எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்’ என்று ஔவை மொழிந்துள்ளார். இக்கரகாட்டத்தினைக் கூர்ந்து ஆராயும்போது, கரகம் நம் உடம்பின் உச்சியான தலையில் வைத்து ஆடப்படுவதற்குக் காரணம் உண்டு எனத் தோன்றுகிறது. தமிழ் முன்னோர்கள் உடம்பில் உள்ள பல்வேறு நாடிகளைக் குறித்த அறிவுடையவர்களாக இருந்துள்ளனர். மேலும், உடம்பில் ஓடும் இப்பல்வேறு நாடிகளும் தலையின் உச்சியில் உள்ள சுழுமுனை நாடியுடன் தொடர்புடையவை என்பதை அறிந்துள்ளனர். சுழுமுனையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள அறிபவன் தன்னையே ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் ஆற்றலைப் பெறுவான். இதை உணர்த்தும் விதமாகவே கரகாட்டம் ஆடப்படுகிறது.

காவடியாட்டம்

தமிழகத்தில் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக் கலை வடிவங்களுள் காவடியாட்டம் குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் சமய உணர்விற்கும் பொழுதுபோக்கிற்கும் நடத்தப்படும் கலையாகக் கருதப்படுகிறது. முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகக் கொண்டு ஆடப்படும் இக்காவடியாட்டத்தில் பல்வகை உண்டு. அவை பின்வருவன: சந்தனக் காவடி, சர்ப்பக்காவடி, சேவல் காவடி, மச்சக் காவடி, பால் காவடி, பழக்காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, சர்க்கரைக் காவடி, அன்னக் காவடி போன்றவை [3].

இன்று பயன்பாட்டில் உள்ள காவடிகள் பலவும் குறுந்தடியால் செய்யப்பட்டு வளைந்த அமைப்பில் இருக்கும். காவடி இருமுனைகளிலும் பால் குடங்கள் இருக்கும். இது அமுதத்திற்கு ஒப்பாகக் கருதப்படுகிறது. உடம்பில் அமுதுள்ளது என்பதைக் குறிக்கும் விதமாகவும் இது அமைகிறது. காவடியை ஆடுவோர், ஆடிக்கொண்டே தோளிலிருக்கும் காவடியைக் கழுத்திற்கும் முதுகிற்கும் மாற்றிப் பின்னர் மூக்கு நுனி, நெற்றி ஆகிய இடங்களில் நிறுத்திக்காட்டிப் பின்னர் இறுதியாகத் தலை உச்சியில் கொண்டுவந்து நிறுத்துவார்கள். தலைதான் மனிதனின் பிரதான இடம் என்பதைக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்கிறார்கள்.

Kaavadi.jpg

கூத்து

தமிழர்களின் பழமையும் சிறப்பும் மிகுந்த நாட்டுப்புறக் கலைகளுள் இக்கலையும் ஒன்று. கூத்துப் பழமையின் சின்னமாகவும் பண்பாட்டின் அடையாளமாகவும் விளங்குகிறது.

 

கூத்து ஆடுபவர்களுக்குச் சமூகப் பொறுப்பு இருந்தது. தாங்கள் ஆடும் கூத்தின்வழி மக்களுக்கு ஏதேனும் ஒரு செய்தி சொல்வதே அவர்களது நோக்கமாக இருந்தது. உலகம் என்பதே ஒரு நாடகமேடை, அதில் நாம் அனைவரும் நடிகர்கள். அதனால், உண்மை என்ன என்பதை உணர்ந்து வாழ்க்கையை நடத்து என்பதைக் குறிக்கும் வண்ணமாகவும் இக்கூத்துக்கலை நிகழ்த்தப்பட்டது.

கூத்துக்கான கரு மனித வாழ்க்கை முறைகளிலிருந்தும் புராண இதிகாசங்களிலிருந்தும் கிடைக்கிறது [1]. கூத்துகள் பல வகைப்படும். அவை பின்வருமாறு:

தெருக்கூத்து

தெருவில் நடத்தப்படும் கூத்து, தெருக்கூத்து. இது மேடையோ காட்சித் திரைகளோ இல்லாமல் எளிய முறையில் தெருவிலும் திறந்தவெளி அரங்கிலும் இரவு முழுவதும் நடைபெறுவதாகும். பண்டைய தமிழர்கள் அல்லியம், கொடுகொட்டி, குடை, நடம், பாண்டரங்கம், மல், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை என்னும் 11வகை ஆடல்களை ஆடினர் என்பதை இலக்கியங்களின்வழி அறியலாம். அதில் குறிப்பாக, கழைகூத்து, கணியான்கூத்து, பாவைக்கூத்து போன்ற தெருக்களில் ஆடப்படும் கூத்துகள் சிறப்பு வாய்ந்தவை. தெருக்கூத்து ஆடும் கலைஞர்கள் பெரும்பாலோர் ஆர்வலர்களையும் தொழில்முறையாளர்களையும் உள்ளடக்கும். இவர்கள் கதை தழுவியும் இசையின் பின்னணியிலும் இரவு முழுவதும் தெருக்கூத்துக் கலையை நிகழ்த்துவார்கள் [4].

Kazaikkoothu.jpg

தெருக்கூத்து, திரௌபதி அம்மன் வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாகத் தோன்றிற்று. மகாபாரதம், ராமாயணம், புராணங்கள், மதுரைவீரன் கதைகள் போன்றவை கூத்துகளாக இன்றும் நிகழ்த்தப்படுகின்றன. பல வேளைகளில் ஆடவர்களே பெண்வேடம் தரிப்பதுண்டு. இக்கலைக்கு முதுகெழும்பாக விளக்குபவன் கட்டியங்காரன். கூத்தின் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு அவன் கட்டுப்பாட்டில் இருக்கும். இவன் ஆட்டக்காரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பாலமாக விளங்குவான்.

கழைக் கூத்து

கழைக் கூத்தும் தெருவில் நடத்தப்படுவதாகும். மூங்கில்மேல் நடந்து செல்லும் இக்கூத்தைக் கழைக்கூத்து என்பார்கள். இக்கூத்து ஆடுபவர்கள் கழைகளிலும் கம்பியிலும் நடந்து வித்தை காட்டுவார்கள்.

பாவைக் கூத்து

பாவைகளை (பொம்மைகளை) மரத்தாலும் தோலாலும் செய்து நூல்களைக் கட்டி ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் ஆட்டியசைத்துக் கதைகளை விளக்கிச் செய்யும் நாட்டுப்புறக் கலைக்குப் பாவைக்கூத்து என்று பெயர். இது நிழலாட்டம் என்றும் பொம்மலாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தோற்பாவைக் கூத்தும் இதை ஒட்டியதே ஆகும். தோற்பாவைக் கூத்து என்பது தோலால் செய்யப்பட்ட பதுமைகளை இயக்கி நிகழ்த்தப்படும் கருத்துப் புலப்படுத்தக் கலையாகும். தோற்பாவைக் கூத்துப் பொழுதுபோக்குக் கலையாக மட்டுமின்றி மக்களுக்குப் புராணங்கள், இதிகாசங்கள், சமூக நடப்புகள் முதலியவை குறித்த செய்திகளை  எடுத்துரைக்கப் பயன்படுகிறது. கலைஞர்களின் கைவண்ணத்தில் உயிரற்ற பொருள்கள் உயிர்பெற்று இயங்கவல்லன. இதில் வண்டற்பாவை, மரப்பாவைக் கூத்து, பொம்மலாட்டம் முதலியவை அடங்கும். ஒரு காலத்தில் அட்டைகள் கொண்டு செய்யப்பட்ட உருவங்கள், இன்று துணியும் தோலும் கொண்டு செய்யப்படுகின்றன. இந்த ஆட்டத்திற்கு அரங்கம் அவசியம் தேவைப்படுகிறது.

Paavaikkoothu.jpg

திரைக்குப் பின்னால் உள்ள விளக்கொளியில் ஆட்டுவிக்கும்போது இந்தப் பாவைகளின் நிழல்கள் திரையில் வீழ்ந்து உயிரோட்டத்துடன் காணப்படுகின்றன. இக்காரணத்தால், இதனைச் சிறுவர்முதல் பெரியவர்வரை கண்டுகளிப்பார்கள். தோற்கூத்தில் எட்டுக்கூறுகள் உள்ளன. அவை கடவுள் வாழ்த்து, கோமாளியின் தன்னறிமுகம், கூத்து அறிமுகம், நகைச்சுவைக் காட்சி, கதை ஆரம்பப் பாடல், கதை நிகழ்வுகள், நகைச்சுவைக் காட்சி, கதை முடிவு ஆகியன. பத்து நாட்கள்வரை

நீடிக்கக்கூடிய இக்கலைக்கு ஏற்பாடு செய்வதால் தீமைகள் நீங்கி நன்மைகள் பிறக்கும் என்று மக்கள் நம்பினர். தொடக்கக்காலத்தில் மழைவேண்டி இக்கூத்து நடத்தப்பட்டது. இன்று சில செய்திகளை மக்களுக்குப் புரியவைப்பதற்கான ஊடமாகப் பயன்படுகிறது. இன்று இக்கலை அருகிவரும் கலையாக உள்ளது. இக்கலை தமிழகம் மட்டுமின்றி, தென்கிழக்காசிய வட்டாரத்தில், குறிப்பாக, கம்போடியா, தாய்லாந்து, மலேசியா. இந்தோனீசியா போன்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கலைஞர்கள் மகாபாரதம், ராமாயணம் ஆகிய இதிகாசக் கதைகளை இந்நாடுகளில் பரவலாக நிகழ்த்துகின்றனர் [4].

தீச்சட்டி ஆட்டம்

மனிதகுலத்தின் மலர்ச்சிக்குத் தீயின் கண்டுபிடிப்பும் வேளாண்மைத் தொழிலும் முக்கியக் காரணிகளாக இருந்துள்ளன. நெருப்பு வழிபாடு என்பது பல்வேறு நாடுகளிலும் சமூகங்களிலும் காணப்படுகிறது. அன்றும் இன்றும் தமிழகத்தில் வழக்கில் காணப்படும் ஒரு கலை தீச்சட்டி ஆட்டமாகும். இது தீயினை மையமாகக் கொண்டதோடு இசையுடன் ஆடப்படும் நடனமாகும். கப்பரை என்று அழைக்கப்படும் கனன்றெரியும் தீச்சட்டியை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, சூடு பொறுக்காமல் இருகைகளிலும் மாற்றி மாற்றி வீதியுலா வந்தவண்ணம் கலைஞர்கள் ஆடுவார்கள். அவர்கள் ஏந்தியுள்ள தீச்சட்டிக்குக்கீழ் வேப்பிலைக் கொத்துகள் பரப்பப்பட்டிருக்கும். ஆட்டக்காரர்களுக்கு மாலை, காணிக்கை, தெய்வத்திற்கு அளிக்கும் மரியாதை பெறல் போன்றவை கிட்டும். இந்நடனம் பெரும்பாலும் காளியம்மன், மாரியம்மன் ஆலயங்களில் நடைபெறும் [4].

மயிலாட்டம்

 

மயில் உருவத்தாலான பொம்மையில், ஒருவர் தம் உருவத்தை மறைத்துக் கொண்டு, நையாண்டி மேளத்தின் இசைக்கேற்ப ஆடும் ஆட்டத்தை மயிலாட்டம் என்பார்கள். ஆடுபவரின் தோற்றம் மறைந்திருப்பதால் அவர்தம் வயது, தோற்றம் குறித்துப் பார்ப்போர் அறிந்துகொள்ள முடியாது. சில வேளைகளில், இவ்வாட்டம் கரகாட்டத்தோடு ஆடப்படும் துணைநிலை ஆட்டாக விளங்குகிறது. திருச்சியைச் சார்ந்த சுந்தரராவ் என்பார் மயில் ஆட்டத்தை முதலில் கண்டுபிடித்து ஆடிய கலைஞர் என்று கருதப்படுகிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

மயிலின் உறுப்புப் பாகங்களான தலை, உடல், இறக்கைகள் தனித்தனியே உருவாக்கப்படுகின்றன. பிறகு மயில் கூட்டுக்கு வண்ணம் தீட்டப்படுகிறது. மயிலாட்டக் கலைஞர், தாம் ஆடும்போது, உடலைக் குவிந்தும், குனிந்தும் விரிந்தும் அசைவுகள்செய்து உயிருள்ள மயில்போல் ஆடுவார். பார்வையாளர்களால் தரையில் போடும் பணத்தை மயில் அதன் அலகால் கவ்வி எடுப்பது போன்று கலைஞர் நடித்துக்காட்டுவார். 

WhatsApp Image 2019-11-26 at 15.43_edite

சிங்கப்பூரில் நாட்டுப்புறக் கலைகள்

 

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, நாட்டுப்புறக் கலைகள், இங்கு வாழும் தமிழ் மக்களுக்குக் குறிப்பாக இளம் சமுதாயத்தினர்க்குத் தங்கள் பாரம்பரியம், கலாசாரம் இவற்றை அறிவுறுத்தும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. சிங்கே ஊர்வலத்திலும் தேசிய தினக் கொண்டாட்ட விழாக்காலங்களிலும் பள்ளிகளில் நடக்கும் முகாம்களிலும் நாட்டுப்புறக் கலைகள்  அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதற்கென உள்ளூரில் பயிற்சி பெற்றவர்கள் எவரேனும் இருந்தார்கள் என்றால் அவர்களை அழைத்து அக்கலைகளைச் செய்துகாட்டச் சொல்வதும், அவ்வாறு உள்ளூரில் ஆட்கள் கிடைக்காத பட்சத்தில் மலேசியா, தமிழ்நாடு ஆகிய நாடுகளிலிருந்து நாட்டுப்புறக் கலைஞர்களை வரவழைத்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அக்கலைகள் குறித்த அறிவும் ரசனையும் ஊட்டப்படுகின்றன.

SGArts.jpg

சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளில் தமிழ் மாணவர்களுக்காக வருடந்தோறும் மொழி மற்றும் பண்பாட்டு முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இத்தகைய முகாம்களில் தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் தொடர்புடைய கலைகள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவை தவிர, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு முதலிய நாள்களை முன்னிட்டு, அந்தந்தப் பள்ளிகளில் இருக்கும் தமிழாசிரியர்களின் முயற்சியால் உறியடி, சிலம்பாட்டம், காவடியாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகள் தமிழ் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பிற இன மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

AKT.jpg

அண்மையில் ஏ கெ தியேட்டர் லிமிடட் (AK Theatre Ltd) (www.aktheatre.com) என்னும் அமைப்பு, சிங்கப்பூரில் கரகம் என்னும் பெயரில் தமிழ்ப் பண்பாட்டு நிகழ்ச்சிகளைப் பொதுமக்களுக்காக நிகழ்த்தி வருகிறது. அதோடு, அது பள்ளியில் பயிலும் தமிழ் மாணவர்களுக்குத் தமிழாசிரியர்களின் உதவியோடு நாட்டுப்புறக் கலைகள் குறித்துப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு அவர்களை அவற்றில் ஈடுபடுத்தி அனுபவங்களையும் பெற்றுத்தருகிறது. இதன்வழிச் சிங்கப்பூர்த் தமிழ் மாணவர்களும் பொதுமக்களும் நாட்டுப்புறக் கலைகள் குறித்து விழிப்புணர்வு பெற்று வருகின்றனர்.

கடந்த 2018இல் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் அதன் ஏற்பாட்டாளர்கள் அவ்விழாவின் ஓர் அங்கமாகத் தமிழில் கதை சொல்லும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதன் சிறப்பு என்னவென்றால், நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்றான வில்லுப்பாட்டின்வழிக் கதைசொல்லும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகும். இதற்கெனத் தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு வில்லுப்பாட்டுக் குழுவை வரவழைத்திருந்தனர். இது மாதிரியான நிகழ்ச்சிகள் இங்குள்ள சமூக மன்றங்களிலும் மற்ற நிறுவனங்களின் வழியும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இதிலிருந்து, தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றுக்குச் சிங்கப்பூரில் அளித்துவரும் முக்கியத்துவம் குறித்து அறியலாம்.

பின்னிணைப்பு

பின்வரும் நாட்டுப்புற ஆட்டங்களைத் (நிகழ்த்து கலைகள்) தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் பரவலாகக் காணமுடிகின்றன:

 1. சிலம்பாட்டம்

 2. காவடியாட்டம்

 3. கரகாட்டம்

 4. மயிலாட்டம்

 5. கும்மியாட்டம்

 6. ஒயில் கும்மி அல்லது ஒயிலாட்டம்

 7. கோலாட்டம்

 8. பின்னல் கோலாட்டம்

 9. பொய்க்கால் குதிரையாட்டம்

 10. தேவராட்டம்

 11. சேவையாட்டம்

 12. சக்கையாட்டம்

 13. கழியல் ஆட்டம்

 14. சிம்ம ஆட்டம்

 15. வேதாள ஆட்டம்

 16. பொடிக்கழி ஆட்டம்

 17. பகல் வேஷம்

 18. கரடி ஆட்டம்

 19. வர்ணக் கோடாங்கி ஆட்டம்

 20. புலி ஆட்டம்

 21. பூத ஆட்டம்

 22. பேய் ஆட்டம்

 23. கணியான் ஆட்டம்

 24. வில்லுப்பாட்டு

 25. கூத்து

 • தெருக்கூத்து

 • கழைக்கூத்து

 • பாவைக்கூத்து

 • தோற்பாவைக் கூத்து

துணைநூல்கள்

[1]           சக்திவேல், சு. (2010). நாட்டுப்புற இயல் ஆய்வு, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

[2]         இறையரசன், பா. (1993). தமிழர் நாகரிக வரலாறு, சென்னை: பூம்புகார் பதிப்பகம்.

[3]         தனசேகரன், கே. (2010). கிராமியக் கலைகள், சென்னை: திருவரசு புத்தக நிலையம்.

        

[4]         எழிலவன். (2010). தமிழகத்தின் மரபுக் கலைகள். சென்னை: பிளாக்ஹோல் மீடியா பப்ளிக்கேஷன்.

 

தலைப்புக்குத் தொடர்புடைய பிற வளங்கள்

Villuppaattu.jpg