top of page
Final.png

தமிழ் நெடுங்கணக்கு உணர்த்தும் பண்பாட்டுச் செய்திகள்

Tamil_vatteluthu_edited.jpg

எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சி

 

தமிழ் எழுத்துகளின் வரலாறு என்ன? அவ்வெழுத்துகள் தமிழில் எப்போது தோற்றுவிக்கப்பட்டன? அவை காலந்தோறும் வடிவம் திரியாமல் இப்போதிருப்பதுபோல் இருந்தனவா? அல்லது காலப்போக்கில் படிப்படியாகத் திரிந்து இப்போதுள்ள வடிவத்தை அடைந்தனவா? தமிழ்மொழியின் வாழ்வியல்சார்ந்த தத்துவ விளக்கங்கள் என்ன என்பது போன்ற கேள்விகள் நம்மிடையே அடிக்கடி எழக்கூடும்.

 

நாம் இன்று பயன்படுத்தும் தமிழ் எழுத்துகள் பழங்கால எழுத்து முறையான ‘தமிழி’ எனப்படும் ‘தமிழ்ப் பிராமி’ என்பதிலிருந்து வளர்ச்சியடைந்து இன்றைய வரிவடிவத்தை அடைந்துள்ளன என்கிறார் ஐராவதம் மகாதேவன். தமிழ்நாட்டில் கிடைக்கும் பழைய கல்வெட்டுகளுள் பெரும்பான்மையானவை தமிழ்ப் பிராமி எழுத்து முறையிலேயே உள்ளன. உரு, உணர்வு, ஒலி ஆகிய நிலைகளைத் தாண்டி, நெடுங்கணக்கெழுத்து நிலையில் விளங்கிய தமிழ்ப் பிராமி எழுத்துமுறை சுமார் பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் அதற்கு முன்பு இருந்த ஏதோ ஒருவகை எழுத்துமுறையை ஒதுக்கிவிட்டுச் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். எழுத்துகளின் வரிவடிவம் மாறுதல் அடைந்து வளர்ச்சி பெற்றதற்கும் இலக்கியம் முதலிய கலைகளின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு [1].

Source: https://ta.wikipedia.org/wiki/தமிழ்_எழுத்து_முறை

தொல்காப்பியம்: எழுத்துகளின் பிறப்பும் உடலியல் இயக்கங்களும்

ஒலிகளின் தொகுப்பே மொழி. இதனை அறிந்திருந்த மரபு இலக்கணத்தார் தத்தம் மொழிகளுக்கு இலக்கணம் எழுதியபோது ஒலிகளுக்கும் அவற்றின் பிறப்பியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் தம் மரபிலக்கண நூல்களில், எழுத்துப்பற்றிய விளக்கங்களுக்கு முதலிடம் அளித்தனர். தாம் எழுதிய இலக்கண நூல்களில் முதல் இயலாக ஒலிகள் குறித்து எழுதினர் [2].

பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் எழுத்துகள் எவ்வாறு தோன்றுகின்றன என்னும் முறையைப் பல்வேறு நூற்பாக்களின்வழித் தெளிவாக விளக்குகிறார். எழுத்துகளின் பிறப்பை, உந்தி முதலாகத் தொடங்கி விளக்கிவரும் அவரது நேர்த்தி இன்றைய ஒலியியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது [2]. இதன்வழி நம் மூதாதையர்கள் அறிவியல் அறிவு மட்டுமன்று, உடலின் இயக்கங்கள்பற்றிய அறிவிலும் தெளிவாக இருந்துள்ளனர் என்பது புலப்படுகிறது.

 

எழுத்துக்கும் உயிரியல் தத்துவத்துக்கும் உள்ள தொடர்பு

 

தமிழில் எழுத்து என்னும் குறியீடு, எழுப்பப்படுவது எனும் பொருள்படும்போது ஒலிவடிவத்தையும் எழுதப்படுவது எழுத்து எனும்போது வரிவடிவத்தையும் (script letter) குறிக்கும் ஒரே சொல்லாக இருப்பதும் ஒரு சிறப்பாகும். உயிர் என்றும் நிலைத்து இருப்பது என்பது தமிழர்தம் கொள்கை [3]. உயிர் ஒலிகளை ஒலிக்கும்போது, குரல்வளை வழியாக வரும் காற்றொலி வாயில் எவ்விதத் தடையுமின்றி உயிர்ப்புடன் வருவதால் அவை உயிரொலிகள் எனப்பட்டன. மெய் ஒலிகளை ஒலிக்கும்போது, குரல்வளை வழியாக வரும் காற்றொலி வாயில் நாக்கு, மேலண்ணம் ஆகியவற்றால் தடைப்பட்டு வருவதால் அவை ஒற்றொலிகள் எனப்பட்டன. வடிவத்தில் மெய் எழுத்துகள் புள்ளி பெற்றதால் புள்ளி என்றும் பெயர் பெற்றன. உடம்பு எனப்படும் மெய் நிலையற்றது; தனித்து இயங்காது. அது இயங்குவதற்கு உயிர் மிக அவசியம். உயிர் இருக்கும்வரை ஒருவரைப் பெயர் சொல்லி அழைக்கும் நாம், அவர் இறந்தபின்பு பிணம் (உடம்பு) என்று சொல்வதிலிருந்து மெய்யில் தங்கியிருக்கும் உயிரின் முக்கியத்துவத்தை உணரலாம்.

 

இதனை உணர்ந்துதான் முன்னோர்கள் தமிழ் எழுத்துகளை உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து எனப் பாகுபடுத்தி எழுத்துகளுக்குள்ளும் வாழ்வியல் தத்துவங்களைப் புகுத்தி உள்ளனர் என்பது விளங்குகிறது. 

உயிர் எழுத்துகளில் ‘சுழி’

 

வலஞ்சுழித்தல் தமிழரின் மரபு. தமிழ் உயிர் எழுத்துகள் பன்னிரண்டிலும் ‘சுழி’ இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. தமிழ் உயிர் எழுத்துகளில் முதல் எழுத்தான ‘அ’வை நாம் எழுதத் தொடங்கும்போது, சுழியிட்டுத் தொடங்குகிறோம். இதேபோல்தான் அனைத்து உயிர் எழுத்துகளிலும் சுழி இடம்பெற்றிருக்கும். தமிழ் எழுத்துகளை வடிவமைத்ததோடு நின்றுவிடாமல் நம் முன்னோர் அதனுள் வாழ்வியல் தத்துவங்களையும் (உண்மைகளை) மறைத்து வைத்துள்ளனர்.

‘சுழி’ என்பது என்ன? நாம் சுழிக்கப்பட்டதைச் சுழியம் (0) என்று அழைப்போம். சுழியம் என்றால் பூஜியம், சைபர் என்று பல வேற்றுமொழிகளில் குறிப்பிடுவதுண்டு. தமிழில் இதனைச் சுழியம் என்று பெயரிட்டுள்ளோம். உடலில் அமைந்துள்ள 72,000 நாடிகளுள் சுழுமுனையை நடுநாடி என்போம். இந்நாடி உயிரை இயக்கவல்லது என்பதை நம் முன்னோர் அறிந்துவைத்திருந்தனர்.

 

ஆய்த எழுத்தின் சிறப்பு

ஆய்த எழுத்து மூன்று சுழிகளைக் கொண்டு (புள்ளிகள்) அமைந்துள்ளது. இவ்வெழுத்து உயிர், மெய், உயிர்மெய் என்னும் பாகுபாடுகளுக்குள் அடங்காது தனித்து நிற்கும். கேடயம், அடுப்புக்குறி போன்ற அமைப்பைக் கொண்ட இவ்வெழுத்திற்கு ஏன் தமிழர்கள் ‘ஆய்தம்’ என்று பெயரிட்டனர்?

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்

ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல். சொல். - 330)

 

ஓய்தல் (நுணுகிய), ஆய்தல் (சுருங்கிய), நிழத்தல் (மெலிந்து), சாய் (சுருங்கி) ஆகிய நான்கு சொற்களும் நுணுக்கம் என்னும் பொருளுடைய சொற்களாகும். நுணுகிய ஒலி என்பதால் ஆய்தம் எனப்பட்டது. இதன்வழி ஆய்த எழுத்தின் நுட்பத்தை உணரலாம்.


மேலும், ஆய்த எழுத்தின் வடிவமைப்பு குறித்து, ஆன்மீகம்சார்ந்த மெய்யியல் விளக்கமும் உண்டு. ஆய்த எழுத்தில் கீழுள்ள இரண்டு சுழிகள் புறக்கண்களை (ஊனக்கண்களை) உணர்த்துகின்றன. மேலுள்ள சுழி, நெற்றிப்பகுதியின் (மத்தகம்) நடுவில் இருக்கும் சுரப்பியைக் (pituitary gland) குறிக்கிறது. அங்குதான் சுழுமுனைநாடி உள்ளது. அதுவே அகக்கண் என்றும் கூறப்படுகிறது.
     

 

எண்களுக்கு எழுத்து வடிவம்

 

எண்ணும் எழுத்தும் நெருங்கிய தொடர்புடையவை. இதற்குச் சான்றாகப் பின்வரும் முன்னோர் மொழிகளைச் சுட்டலாம்:

 

  • எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் (கொன்றைவேந்தன்)

  • எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

                           கண்ணென்ப வாழும் உயிர்க்கு (குறள் 392)

  • எண்ணெழுத்து இகழேல் (ஆத்திசூடி)

  • எழுத்தறிவித்தவன் இறைவனாகும் (வெற்றிவேற்கை)

 

பண்டை மக்கள் எண்ணை எழுத்தின் ஒரு பகுதியாகவே கருதி வந்தார்கள். அவர்கள் எண்களைக் குறிக்கப் பலவித முறைகளைப் பயன்படுத்தி வந்தார்கள் [1].

 

எண்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் பட்டியல்:

Source: https://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/31/மத-அரசியல்-43-ஆசீவகம்-எண்ணியல்-3068506.html

இன்றைய தமிழ் எண் வரிவடிவத்திற்கும் எழுத்தின் வரிவடிவத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளதையும் நோக்கலாம். சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:

க (1),  உ (2),  ங (3),  ச (4),  ௫ (5),  ௬ (6),  ௭ (7),  அ (8),  ௯ (9),  ௰ (10),  று (100),  த (1000).

இதுகாறும் குறிப்பிட்ட செய்திகளிலிருந்து தமிழர்கள் மொழி குறித்தும் எழுத்துகள் குறித்தும் மிகத் தெளிவான சிந்தனைகளைக் கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது. மேலும், அவர்கள் எழுத்துகளுக்கு வரிவடிவம் கொடுத்தபொழுது ஒலிப்புமுறைகளுக்கு ஏற்ப அவற்றை இனம்பிரித்த திறம் வியப்பை ஊட்டுகிறது.

 

ஒருவர் தம்மை அறியாமல், பிறரையோ பிறவற்றையோ அறிந்துகொள்ள முயல்வது முழுமை பெறாது என்பதில் தமிழர்கள் திடமான நம்பிக்கைகொண்டிருந்தனர். அதன் அடிப்படையில், நெடுங்கணக்கின் இயக்கத்திற்கும் உடல், உயிர்சார் இயக்கத்திற்கும் உள்ள தொடர்பினைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. இத்தகு நெருங்கிய தொடர்பினைத் தமிழ்மொழி தன்னகத்துக் கொண்டிருப்பது அதன் சிறப்பியல்பாகும்

துணைநூல்கள்

 

[1]     சுப்பிரமணியன், தி. நா. (1996). பண்டைத் தமிழ் எழுத்துக்கள். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு.

[2]     தாள் 2 – ஒலியியலும் ஒலியனியலும், முதுகலை – மொழியியல் முதலாமாண்டு பாடநூல் அண்ணாமலைப் பல்கலைகழகத் தொலைதூர

         இயக்ககத்தின் வெளியீடு.

[3]     சுப்பு ரெட்டியார், ந. (2011). தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. சென்னை: சந்தியா பதிப்பகம்.

தலைப்புக்குப் பொருத்தமான பிற வளங்கள்

  1.    முனைவர் ப ஜெயபால், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோயமுத்தூர் - ஆய்வு: சீகன்பால்கு பார்வையில்         தமிழ் எழுத்திலக்கணம். (Tuesday, 03 May 2016 20:09) https://www.geotamil.com/index.php

  2.   உ வே சாவின் சரித்திர நூல்கள் வழி அறியப்படும் தமிழ்க் கல்விமுறைகள். எழுத்தாளர்: கன்னியம் அ.சதீஷ் பிரிவு: பிப்ரவரி 10,                       வெளியிடப்பட்டது: 24 மார்ச் 2010. https://keetru.com/index.php/

bottom of page