top of page
Final.png

தமிழ்ப் பெயர்களும்

உறவுமுறைப் பெயர்களும்

தமிழ்ப் பெயர்கள்

உலகெங்கும் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவது பொதுவான வழக்காக இருந்தாலும், வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு போக்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பெயரை வைத்துக்கொள்வது என்பது நம்மை அடையாளப்படுத்துவதற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒருவர்க்கு வைக்கப்படும் பெயர் அவர் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது. தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பெயரிடும்போது 'பெயரில் எல்லாம் அடங்கியுள்ளது' என்று நம்பினர். பெயர்களை அலசி ஆராய்ந்த பிறகுதான் தங்கள் பிள்ளைகளுக்குப் பெயரிடுவார்கள். அப்பெயர் உணர்த்தும் பொருளின் தனிச்சிறப்புகளுக்கேற்பத் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் அர்த்தமுள்ளதாக அமையும் என்றும் நம்பினர். வார்த்தையின் வல்லமை வாழ்வின் மகிமை என்னும் உள்ளுணர்வு பல தமிழர்க்கு இருந்துள்ளது.

திருமாவளவன், நெடுஞ்செழியன், இரும்பொறை என்னும் பண்டைக்காலத் தமிழ்ப் பெயர்கள் இன்றும் மனத்தில் நிலைத்திருக்கின்றன. இதற்குக் காரணம், அவை தமிழ்ப் பெயர்களாக இருப்பது மட்டுமன்று. அதற்கும் மேலாக, ஒவ்வொரு பெயர்க்கும் பின்னணியில் வரலாற்றுச் செய்திகள் இருப்பதே ஆகும். இத்தகு பெயர்கள் பண்டைக்காலத் தமிழர்களால் வைக்கப்பட்ட அழகுப் பெயர்களாகும். இடைக்காலத்தில் இராஜராஜன், விஜயாலயன், இராஜேந்திரன் என்னும் பெயர்கள் உருவெடுத்தன. பிற்காலத்தில் கிருத்துவ, இஸ்லாமிய, பிறமொழிச் சேர்க்கைப் பெயர்கள் உருவெடுக்கத் தொடங்கின. நாட்டின் வரலாற்றுப் பின்னணியைப் பெயர்களின் மூலம் உணரலாம். அன்றைய தமிழர்கள் இயற்கைசார் பெயர்களையும் தேர்ந்தெடுத்துத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டினர். எடுத்துக்காட்டிற்கு, தாமரை, மலர், குறிஞ்சிவேலன் முதலியவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறு பொருட்சிறப்புமிக்க பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்துவதோடு பெருமிதமும் கொண்டனர். 

 

பின்வரும் காரணங்களின் அடிப்படையில் பெயர்வைத்தல் அமையலாம்:

 • மறைந்த மூதாதையர் பெயரை நினைவாகக் குழந்தைகளுக்கு வைத்தல்

 • தாத்தா, பாட்டியர் தங்கள் விருப்பத்தின்பேரில் பேரக்குழந்தைகளுக்குப் பெயர்வைத்தல்

 • பிடித்த தெய்வம், மொழி, தலைவர், கலைஞர் போன்றோரின் பெயரைக் குழந்தைகளுக்கு வைத்தல்

 • பிறந்த நாள், பிறந்த நேரம், பிறந்த நட்சத்திரம் பார்த்துப் பெயர்வைத்தல்

 • எண் ராசியின் அடிப்படையில் பெயர்வைத்தல்

 • எளிய உச்சரிப்பு, இனிய ஓசைநயம் காரணமாகப் பெயர்வைத்தல்

 

இன்றைய சூழலில், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போது, இரண்டு விதமான கண்ணோட்டங்களை மக்களிடம் காணலாம். அவற்றுள் ஒன்று, தன் சொந்த மொழி, பண்பாடுகளின் அடிப்படையில், அவற்றைப் பேணவேண்டும் என்னும் போக்கில் பெயர் வைத்துக்கொள்வது. மற்றது, அதற்கு மாறாக, தனக்குப் பிடித்த வகையில், வேறு பல காரணங்களுக்காகப் பெயர் சூட்டிக்கொள்வது. எடுத்துக்காட்டிற்கு, பிற இனத்தவர்கள் இலகுவாக அழைப்பதற்கு ஏற்ற வகையில் பெயர்களை வைத்துக்கொள்வதாகும்.

பிற நாகரிகங்களின் தாக்கத்தினாலும் பிறமொழிக் கலப்பாலும் இயல்பான தமிழ்ப் பெயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, பெயர்கள் மாற்றம் பெற்றுவரும் போக்கு இன்றுள்ளது. இன்னொரு மொழியையும் பண்பாட்டையும் உயர்வாகக் கருதுவதில் தவறேதுமில்லை. ஆனால், தாழ்வு மனப்பான்மையாலும் நவநாகரிகத்தின் மோகத்தாலும் ஒருவர் தம் பெயரை நவீனமாக வைத்துக்கொள்ள விரும்புவதால் அவர் தம் அடையாளங்களை மறைத்துக்கொள்ளத் துணிகிறார். இதனால், தமிழ்ப் பெயர்களுக்குப் பதிலாகப் பிறமொழிப் பெயர்கள் ஊடுருவிவிட்டன.

பல்லினச் சமுதாயத்தில் பிறர் நம்மை ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் நம்மில் பெரும்பாலோர் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். அப்படிப் பார்க்கும்போது, மற்றவர்கள் நம்மையும் நம் பிள்ளைகளையும் அழைப்பதற்கு இலகுவான நல்ல அர்த்தம்கொண்ட அல்லது கொண்டிராத மொழிசார்ந்த பெயர்கள் அல்லது பிறமொழிப் பெயர்களை நாம் நாடுகிறோம். இதனை நாம் மொழிக்குச் செய்யும் கேடாகப் பார்ப்பதா மொழித்தடைகளை நீக்கிச் சமூகப் பிணைப்பை முன்னிறுத்துவதாகக் கருதுவதா? இத்தகு குழப்பத்தில் தடுமாறும் பலர் பல்லினச் சமுதாயத்தில் உள்ளனர்.

 

பலர் வீட்டில் வைத்த நல்ல பெயரைச் சுருக்கி எளிமையாக்கி விடுகின்றனர். பெயரின் பொருள் மாறிவிடுமே என்னும் அச்சமோ அக்கறையோ இல்லாமல் போய்விடுகிறது. ‘கரிகாலன்’ என்னும் நல்ல பெயரை 20 வயதைக் கடந்தவுடன் ‘காலன்’ என்று மாற்றிக்கொண்டு மகிழ்பவர்கள், அதன் பொருள் ‘எமன்’ என்று மாறிவிட்டதே என்று அறிந்துவைத்திருப்பதில்லை. சில நேரங்களில் வேற்றுமொழிகளில் பெயர் வைக்கும்போதும்கூட அப்பெயர்களின் பொருள் அறியாமல் வைத்துவிடுகிறோம். சியாமளா என்பதன் பொருள் கருப்பாயி என்பதாகும். கருப்பாயி எனத் தமிழில் பெயர்வைக்கத் தயங்கும் நாம், இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர்வைக்க விரும்புவது நகைப்புக்குரியதாக மாறிவிடுகிறது.   

சில நேரங்களில் நாம் வைக்கும் பெயர்களை நம்முடைய குடும்பப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவார்கள். தமிழ்மொழிப் பெயர்களின் ஒலிநயத்திற்கு ஒவ்வாத பெயர்களைச் சூட்டுவதால் உச்சரிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது இயல்பு. எடுத்துக்காட்டிற்கு, ‘ரமேஷ்’ என்னும் பெயர் ‘ரமேசு’வாக மாறிவிடுகிறது. சிலர் முனியாண்டி, மரியம்மாள் என்று பெயரிட்டுவிட்டுச் சுருக்கமாக முனியாண்டியை எண்டி என்றும் மரியம்மாளை மேரி என்றும் கூப்பிடுவதுண்டு. தமிழ்ப்பெயர்கள் இவ்வாறான மாற்றம் பெறுவதற்குக் காரணம் நாம் வைக்கும் பெயரின் முக்கியத்துவத்தை மறந்து நாகரிக மோகத்தில் மூழ்கியிருப்பதேயாகும்.

கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களை வைக்கத் தேவையில்லை. தமிழில், அழகிய, எளிய பெயர்கள் பல உள்ளன. இனிவரும் தலைமுறையினர் தமிழ்ப்பெயர்களின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் உணர்ந்து தங்களின் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவது குறித்துச் சிந்திக்கலாம். அவ்வாறு செய்தால் தமிழ்ப்பெயர் வைக்கும் முறைமை நெடுங்காலம் நீடிக்கும். தமிழ் உணர்வைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதற்கும் வாய்ப்பளிக்கும்.[1]

உறவுமுறைப் பெயர்கள்

மனிதன் தனித்து வாழ இயலாதவன். இவ்வுலகத்தில் தோன்றியதுமுதல் பூமியைவிட்டுப் போகும்வரை அவன் பெற்றுள்ள உறவுகளின் பிணைப்பைச் சுற்றியே இயங்குகிறான். இப்பிணைப்பு ஒருவர்க்கு ரத்தத் தொடர்பின் அடிப்படையிலோ திருமணத்தின் வாயிலாக ஏற்பட்ட புதுப்பிணைப்பின் அடிப்படையிலோ அமையலாம். இவ்வாறு அமையும் உறவுமுறைகளைச் சரியான பெயர்கள்கொண்டு அழைப்பது தமிழர் மரபு. தந்தை, தாய், உடன்பிறந்தான், உடன்பிறந்தாள், மகன், மகள், மனைவி, கணவன் என்பவை முதல்நிலை நேரடி உறவினர்கள். பாட்டன், பாட்டி, தாய்மாமன், அத்தை, பெரியப்பா, சிற்றப்பா, பெரியம்மா, சின்னம்மா என்று வருகிற உறவினர்கள் தந்தை அல்லது தாயின் மூலமாக வருகின்ற இரண்டாம்நிலை உறவினர்கள் என்று சொல்லப்படுகின்றனர். இவ்வாறு மூன்றாம், நான்காம்நிலை உறவினர்கள் பட்டியல் வளர்ந்துகொண்டே போகும்.

a16 p1.jpg

உறவினரின் உறவுத் தன்மையையும் அவர் எத்தன்மையான உறவினர் என்பதனையும் அடையாளங்காட்டப் பயன்படுத்த உதவும் சொற்கள் உறவுமுறைச் சொற்கள் அல்லது உறவுமுறைப் பெயர்கள் ஆகும். உறவுமுறைப் பெயர் ஓர் உறவினரை நேரடியாக அழைக்கவோ குறிக்கவோ பயன்படுகிறது. தந்தையின் சகோதரியைக் குறிப்பிடுவதற்கு 'அத்தை' என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். அதே சொல்லை அவரைக் கூப்பிடவும் பயன்படுத்துகிறோம். இவ்வாறு உறவைக் குறிக்கவும் கூப்பிடவும் ஒரே பெயர் பயன்படுத்தப்படுகிறது.[2]

தமிழ் முன்னோர்கள், குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே உறவுமுறைப் பெயர்களை  அறிமுகப்படுத்தினார்கள். அம்மா, அப்பாவில் தொடங்கி, அண்ணன், அக்கா, சிற்றப்பா, சித்தி, அத்தை, மாமா, அப்பத்தா, அம்மாச்சி, அய்யா, தாத்தா, அத்தான், மச்சான், அத்தாச்சி, மதினி, அண்ணி என்று தமிழ்மொழியில் ஒவ்வோர் உறவுக்கும் பெயர்கள் உள்ளன. தமிழில் உறவுப்பெயர்கள் வயது, பால், தாய்வழி - தந்தைவழி உறவுகள் முதலியவற்றின் அடிப்படையில் நுட்பமாக அமைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு, தந்தையினுடைய தம்பி மகனை ஒன்றுவிட்ட அண்ணனாகவும் தம்பியாகவும் கருதுகிறோம். தாயினுடைய தம்பியைத் தாய்மாமனாகக் கருதுகிறோம்.

வயதிற்கேற்ற மரியாதை அளிக்கவேண்டும் என்பதற்காக உறவுப்பெயர்கள்வழி உறவுக்குத் தரும் மரியாதையைக் காண்கிறோம். எடுத்துக்காட்டிற்கு, அண்ணன், அக்காள் வயதில் மூத்தவர்கள் என்பதால் மரியாதையை வெளிப்படுத்தும்வகையில் உறவுப்பெயர்கள் அமைந்துள்ளன. மேலும் சிற்றப்பா, சித்தி என்று அழைக்கக்கூடியவர்கள், பெற்றோர் இடத்தில் வைக்கப்பட்டு மரியாதையையும் உரிமையையும் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.  மாமா, அத்தை, மச்சான், அத்தான், அண்ணி, மதினி போன்றவர்கள் கேலியும் கிண்டலும் கொண்டு பழகக்கூடிய உறவினர்கள். அப்பாவழி அப்பத்தா, அய்யாவும் அம்மாவழித் தாத்தா, பாட்டியும் கிளைகளின் வேர்ச் சொந்தங்கள். 

தமிழினம் தாய்மாமன் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது அதன் தனித்துவமாகும்.  செல்லமாகவும் உரிமையோடும் பேசும் உறவே தாய்மாமன்  உறவு.  தமிழ் முன்னோர்கள் மாமாவின் உறவைப் "பிறந்த குழந்தை தாய்மாமன் முகம் தேடும்," என்று சொல்வதை வழக்கமாக் கொண்டிருந்தார்கள். மேலும், “தந்தை எவ்வழித் தனயன் அவ்வழி”, “தம்பி உடையான் படைக்கு அஞ்சான்”, “அக்காள் இருக்கிறவரைதான் மச்சான் உறவு”, “மலைக்குப் போனாலும் மச்சினன் தயவு வேண்டும்” போன்ற பழமொழிகள் உறவுமுறைகளை மையமாகக்கொண்டு வழக்கில் உள்ளன.

தமிழர்கள் தொன்றுதொட்டே ரத்த உறவுகளுக்கு மட்டுமல்லாது அக்கம் பக்கத்தில் வாழ்பவர்களையும் உறவுமுறைப் பெயரிட்டே அழைத்தனர். பக்கத்து வீட்டு ‘அத்தை’, எதிர்வீட்டுச் ‘சிற்றப்பா’, கடைசி வீட்டு ‘அப்பத்தா’, தெரு முக்குக்கடை ‘அண்ணன்’ என்று அனைவரையும் முறைசொல்லிக் கூப்பிடும் வழக்கம் தமிழர்களுக்கு இருந்துள்ளது. உறவுமுறைப் பெயர்களைச் சரியாக அழைக்காதநிலை ஏற்படும்போது நாம் எதையோ ஒன்றைத் தொலைத்துவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். இன்றைய தலைமுறைக் குழந்தை அதன் அப்பா, தாத்தாவைத் தவிர வயதில் மூத்த ஆண்கள் அனைவரையும் ‘அங்கிள்’ (uncle) என்றும் அம்மா, பாட்டியைத் தவிர வயதில் மூத்த பெண்கள் அனைவரையும் ‘ஆன்ட்டி’ (aunty) என்றும் அழைப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.  இன்று பல இளம் பெண்கள் தங்கள் மாமனாரையும் மாமியாரையும் ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்று அழைப்பதைப் பார்க்கிறோம்.      

தனிக்குடித்தனம், பொருளாதாரச் சூழல், ஒரே குழந்தை, சமூக மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணங்களால் இன்று உறவுகள் சுருங்கிக்கொண்டிருக்கின்றன. முன்னோர் வாழ்ந்த வாழ்க்கைபற்றியும் அனுபவம்பற்றியும் அவர்கள் சொல்லிக்கேட்டுத் தெரிந்துகொள்வது இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம்.

பின்னிணைப்பு

சங்ககாலம்முதல் இன்றுவரை வழக்கில் உள்ள தமிழ்ப்பெயர்களுள் சில:

 • அறிவுடைநம்பி

 • அதிவீரபாண்டியன்

 • சீத்தலைச்சாத்தன்

 • திருமாவளவன்

 • செங்குட்டுவன்

 • அங்கயற்கண்ணி

 • முல்லைக்கொடி

 • முத்தமிழ்மொழி

பரவலாக வழக்கில் உள்ள தமிழ்ப்பெயர்களுள் சில:

 • அறிவழகன்

 • அன்பழகி

 • அகத்தியன்

 • அண்ணாமலை

 • அதியமான்

 • அமுதன்

 • அரசு

 • அருள்மொழி

 • ஆதவன்

 • ஆறுமுகம்

 • ஆழிமுத்து

 • இலக்குவன்

 • இளமாறன்

 • இளவரசி

 • இளவழகன்

 • உதியன்

 • எழிலரசி

 • எழிலரசன்

 • ஏழுமலை

 • ஐயப்பன்

 • ஐயாக்கண்ணு

 • ஓவியக்கதிர்

 • கயல்விழி

 • கண்ணகி

 • கலைவாணி

 • மாங்கனி

 • தாமரைக்கன்னி

 

துணைநூல்கள்   

[1]           இளவரசு, இரா. தமிழும் தமிழரும். மன்றல் விழா சிறப்பு வெளியீடு: சென்னை.  

 

[2]          வாழ்வியற் களஞ்சியம் (தொகுதி 5) – தமிழப் பல்கலைக்கழக வெளியீடு.

bottom of page