top of page
Final.png

தமிழர் ஆடையும் அணிகலன்களும்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் ஆடைகள்பற்றியும் அணிகலன்கள்பற்றியும் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழர்களின் ஆடை, அணிகலன்கள்பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள்வழி அவர்கள் கொண்டுள்ள சமூகவியல், பண்பாட்டியல், அழகியல் போன்ற கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்ளலாம்.  தமிழர்கள் அணிந்த ஆடையும் அணிகலன்களும் காலந்தோறும் நாகரிகத்தின் வளர்ச்சியால் புதுப்புதுப் பொலிவினைப் பெற்றிருந்தாலும், அடிப்படையில் அவை இன்றளவும் தமிழர்கள் வாழ்வில் இடம்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. இனி, ஆடை அணிகலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஆடை

பண்டைக்காலம் முதற்கொண்டே மனிதனுக்கு உணவோடு உடையும் இன்றியமையாதவையாக இருந்துள்ளன. இக்கூற்றினையே புறநானூறு (189),

 

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்

நடுநாள்யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே

 

என்னும் அடிகளின்வழி எடுத்துரைக்கிறது[1]. பண்டைக்காலத்தில் குறிஞ்சி, முல்லை ஆகிய நிலங்களில் வாழ்ந்த தமிழர்கள் பூவையும் தழையையும் கோத்து ஆடைகளாக அணிந்தனர். இவற்றுடன் அவர்கள் கம்பளி ஆடைகளையும் அணிவதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்[2].  ஆனால், நகர்வாழ் மக்களோ ‘பஞ்சாலும் பட்டாலும் ஒருவகை மலையெலி மயிராலும், வேறு சிறு விலங்குகளின் மயிராலும்’ ஆடைகளை நெய்து அணிந்தனர். அக்காலத்தில் உருவெடுத்த ஆடைகளை விவரித்தே சிலப்பதிகாரத்தில் ஆடை வகைகள் 36 எனக் கணக்கிடப்பட்டுள்ளது[3].

 

தமிழர்கள் பருத்தியிலிருந்து பஞ்சை எடுக்கவும் நூல் நூற்கவும் ஆடை நெய்யவும் படிப்படியாக அறிந்துகொண்டனர். அந்தப் பருத்தி நெசவுத்தொழில்பற்றிச் சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, மரப்பட்டைகளை ஆடையாக அணிந்ததையும் பெண்கள் தழையுடையை அணிந்ததையும் பற்றிக் குறிக்கின்றன. இதனைத் திருமுருகாற்றுப்படை, “சீரைதைஇய உடுக்கையர்” என்னும் அடியின்வழி எடுத்துரைக்கிறது[1].

 

ஆடைகளின் நுண்மையையும் மென்மையையும் கருதியே அவை, ‘நுண்பூங்கலிங்கம்’ எனக் கூறப்பட்டன. மேலும், அரசர்கள் அணிந்திருந்த ஆடைகள் மென்மையும் மேன்மையும் கொண்டு விளங்கியதோடு எழில்மிகுந்த பூவேலைப்பாடுகளுடனும் தோன்றின. இந்த விளக்கங்களைப் பற்றியும் சங்க இலக்கியங்கள் விரிவாகக் கருத்துரைக்கின்றன. இதனைப் புறநானூறு, ‘திருமலரன்ன புதுமடி கொளீஇ’ (புறநானூறு 390) என ஆடைகளின் மென்மையையும் நுண்மையையும் பற்றி விளக்குகிறது[1]. மேலும், ஆடைகளில் வண்ணங்களைப் பற்றியும் சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. உதாரணத்திற்கு, ‘நீலக்கச்சைப் பூவார் ஆடை’ (புறநானூறு 274) என்னும் அடி, நீலநிற உடையில் பூவேலை செய்யப்பட்ட ஆடைபற்றியும் ‘கோபத்தன்ன தோயாப் பூந்துகில்’ (திருமுருகாற்றுப்படை 15) என்னும் அடி, கோவம் என்னும் பூச்சியின் நிறத்தைப் போன்ற சிவப்பு நிறத் துகில்பற்றியும் விளக்குகின்றன[1].

 

அதுமட்டுமல்லாது, சங்ககாலப் பெண்கள் இலைதழைகளையும் மலர்களையும் மரல்நாரினையும் நறைநாரினையும் கொண்டு தொடுக்கப்பட்ட தழையுடைகளை அணிந்திருந்தனர். இதனைப் பிரதிபலிக்கும் வண்ணம்,

 

முடித்த குல்லை இலையுடை நறும்பூச்

செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு

சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை

திருந்து காழல்குல் திளைப்ப உடீஇ

(திருமுருகாற்றுப்படை:  201 – 204)

 

என்னும் பாடல் அடிகள் விளக்குகின்றன[1]. அன்று கலிங்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள் கலிங்கம் என்றும் கூறப்பட்டன. புறநானூறு அதன் 383ஆம் பாடலில் இடம்பெற்றுள்ள

 

 பாம்புஉரி யன்ன வடிவின காம்பின்

 கழைபடு சொலியின் இழையணிவாரா

 ஒண்பூங் கலிங்கம்

என்னும் அடிகள், பருத்தி ஆடைகள் கலிங்க நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்தன என்பதைப் புலப்படுத்துகின்றன [1].

 

அக்காலத்தில் பொதுவாக வேட்டியும் மேலாடையும் உயர்குடியில் பிறந்த ஆண்மக்களால் அணியப்பட்டன. மேலாடை என்று குறிப்பிடும்போது, உத்தரீயம் என்னும் ஆடையை அவர்கள் தங்களின் மார்பின் குறுக்கே அணிந்துகொண்டனர் [4]. சிலர் சட்டையையும் அணிந்துகொண்டனர். ஆனால், பொதுவாக மன்னரும் மன்னருடைய பணியாளர்களும் மட்டுமே சட்டை அணிந்துவந்தனர். அவர்கள் அணிந்துவந்த சட்டைக்குக் ‘கஞ்சுகம்’ என்று பெயர்.

 

பெண்கள் புடவையை அணிந்துவந்தனர். மார்பில் கச்சு அணியும் வழக்கமிருந்தது. ஆனால், புடவைக்கு உள்ளாக மேலாடையை அணியும் பழக்கம் இல்லை. எனவே, உடலின் மேற்பகுதியை மறைக்க அவர்கள் சந்தனத்தால் தொய்யில் எழுதியும் மலர்களை அணிந்துமே வந்தனர். பொதுவாகப் பெண்கள் இடையில் மேகலையணிந்து அதன்மேல் பூந்துகில் சுற்றிக்கொள்வார்கள். பாடினிகள் தம் உடம்பின் பெரும்பகுதியையும் வெளியில் காட்டிக்கொண்டனர். சில சமயம் பெண்டிர் துணியால் தம்மைப் போர்த்துக் கொள்வதுமுண்டு [2]. மேலும், புடவைகளைப் பெண்கள் சங்ககாலத்தில் தங்களின் தகுதிக்கேற்ப உடுத்தினர் என்பதைக் காப்பியங்கள் குறிப்பிடுகின்றன. அதில் குறிப்பாக, அரச குலத்தைச் சேர்ந்த பெண்கள் மேலாடையும் கச்சும் தைக்காத துணியையும் இருமடியாகப் பூந்துகிலினையும் அணிந்ததாகப் பெருங்கதை குறிப்பிடுகிறது. சங்க இலக்கியத்தில் பெண்கள் உடுத்தும் உடைகளுள் சிறப்பினைப் பெற்றது தழையாடை. இதற்குச் சான்றாகக் குறுந்தொகையில் 293ஆம் அடி குறிப்பிடுவதாவது:

 

அயவெள்ளாம்பல் அம் பகை நெறித்தழை

தித்திக் குறங்கின் ஊழ் மாறலைப்ப

 

குறிப்பாக, பெண்களுக்கென்று பல்வகை உடைகள் வகுக்கப்பட்டிருந்தன [4]. மணமகள் அணிந்துகொள்வதைக் கூறைப்புடவை என்றும் சிறுமிகள் அணிவதைச் சிற்றாடை என்றும் பருவமுற்ற பெண்கள் அணிவதைத் தாவணி அல்லது மேலாடை என்றும் வயதான பெண்கள் அணிவதை ரவிக்கை, கண்டாங்கிப் புடவை என்றும் மூத்த பெண்கள் அணிவதை ரவிக்கையில்லாப் புடவை என்றும் அழைத்தனர். மேலும், பருவநிலைக் காலத்திற்கேற்பப் பெண்கள் பருத்தி, ‘மயிராடை’ போன்ற உடைகளை அணிந்துகொண்டனர். மயிராடை என்னும் ஆடையினைப் பற்றிச் சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முத்துகளால் இணைக்கப்பட்ட விரிசிகை என்னும் உடையைப் பற்றியும் மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது [4].

 

Aadai1.jpg

குழந்தைகளுக்கு இடையில் ஒரு சிறு துணியினை மட்டும் கட்டப்படும் வழக்கம் இருந்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிடும் பாங்கில் ‘அற்றங்காவா சுற்றுடைப் பூந்துகில்’ (மணிமேகலை, 3:140) என்னும் அடி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொ.ஊ. 1770ஆம் காலம்வரையிலும் குழந்தைகளுக்கெனத் தனித்துவமிக்க உடை உருவாக்கம் முழுமையாகக் காணவில்லை என்றும் கருதப்படுகிறது[4].

 

காலப்போக்கில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அணியும் உடைகள் மாற்றங்கள் கண்டுள்ளன. ஆனால், காலவோட்டத்தில் உடுத்தும் பாணி வேறுபட்டபோதிலும், உடையின் தன்மையும் அணிபவரின் வழக்கும் மாறவில்லை. அன்றும் இன்றும் உயர்மட்டத்தில் உள்ளோர் உயர்தரமான உடைகளையும் கீழ்மட்டத்தில் உள்ளோர் எளிமையான உடைகளையும் அணிந்துவரும் பழக்கம் தொடர்ந்து காணப்படுகிறது. இனி, தமிழர் அணியும் அணிகலன்கள் குறித்துப் பார்ப்போம்.

அணிகலன்கள்

ஆடைகளைப் போன்றே அணிகலன்களும் தமிழர் வாழ்வில் முக்கியப் பங்குவகிக்கின்றன. பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழ்ப் புலவர்கள் தாங்கள் படைத்த காப்பியங்களுக்கு அணிகலன்களின் பெயர்களான சிந்தாமணி, சிலம்பு, வளை, குண்டலம், மேகலை எனப் பெயரிட்டனர்[4]. இந்த அணிகலன்கள் காப்பியங்களின் தலைப்புகளாக மட்டும் இருந்திடாமல், அவை அழகுணர்ச்சியை வெளிக்காட்டிடும் கண்ணாடியாகவும் அமைந்தன. மனிதன் இயற்கையில் கிடைத்த இலை, மலர், கொட்டைகள் போன்றவற்றை அணிகலன்களாக வடிவமைத்து அணிந்துகொண்டான்[4].

 

பண்டைக்காலத்தில், பெண்கள் தங்களின் உடலை ஆடைகளால் முழுதும் மறைத்திடாமல் அணிகலன்களால் மறைத்துக்கொண்டனர். பொன், முத்து, பவழம் போன்ற மணிவகைகளைக் கொண்டு இழைக்கப்பட்ட பல்வகையான அவ்வணிகலன்கள் பெண்களுக்கு மட்டுமில்லாது ஆண்களுக்கும் செய்யப்பட்டன[3].  அதுமட்டுமல்லாது, அக்காலத்தில் பெண்கள் அணிந்த அணிகலன்களை அடையாளமாகக் கொண்டு அவர்கள் அழைக்கப்பட்டனர். உதாரணத்திற்கு, ‘மாணிழை மகளிர்’, ‘வாலிழை மகளிர்’ எனப் பெண்கள் அணிந்திருந்த அணிகலன்களை அடைமொழியாகக் கொண்டே அவர்கள் அழைக்கப்பட்டனர்[1]. இதனை வலியுறுத்தும் வண்ணம்,

 

ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த

பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்

ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்

தருமமொடு இயல்வோள்

 

எனப் புறநூனூறு 353இல் பாடப்பட்டுள்ளது. இதற்கு மற்றுமோர் உதாரணம் கோவலன் தன் மனைவியான கண்ணகியைப் பார்த்து, ‘மாசறு பொன்னே வலம்புரிமுத்தே’ எனக் குறிப்பிட்டு வர்ணித்ததாகும்[1].

 

தன்னை அழகுபடுத்திக்கொள்வதற்காக மட்டுமே தமிழர்கள் அணிகலன்களை அணிந்துகொள்ளவில்லை. நோய் தீர்க்கவும் நீடித்த வாழ்நாள் பெறவும் செல்வம் பெருக்கவும் தமிழர்கள் அணிகலன்களை அணிந்தனர். மேலும், ஒருவரைக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டவும் அடையாளம் கண்டுகொள்ளவும் அணிகலன்கள் அணியப்பட்டன. உதாரணத்திற்கு, திருமணமான பெண்கள் தங்கள் கால் விரலில் அணியும் மிஞ்சியும் கழுத்தில் அணியும் தாலியும் அவர்களைத் திருமணம் முடித்தவராகச் சமுதாயத்திற்குக் காட்டுகின்றன. அதுபோல ஆண்கள் அணியும் மிஞ்சியும் அதையே புலப்படுத்துகிறது[4].

 

இதுபோன்றே கருவுற்றிருக்கும் பெண்களும் தீட்டு நாள்களிலுள்ள பெண்களும் அக்காலத்தில் இரும்பிலான வளையத்தைத் தங்கள் கால் விரலில் அணிந்துகொண்டனர். இந்த இரும்பிலான வளையத்திற்குத் தடை எனப் பெயராகும். கருவுற்றிருக்கும் பெண்களும் தீட்டு நாள்களிலுள்ள பெண்களும் பயந்துவிடாமல் இருப்பதற்காக இந்தத் தடையை அணிவார்கள். ஆனால், காலப்போக்கில் இது மாறி, இன்று விரும்புவோர் அணியும் அணிகலனாகத் தடை அணியப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு நடத்தப்படும் வளைகாப்பில் அவளுக்கு வெள்ளி, தங்கத்தினால் செய்யப்பட்ட மெல்லிய இழைபோன்ற வளையல் அணிவிக்கப்பட்டு அதனுடன் பல நிறங்களிலான கண்ணாடி வளையல்களும் அணிவிக்கப்பட்டன. இவ்வளையல்கள் மகப்பேற்றுக்காலம் வரையில் அணியப்பட்டிருப்பது அன்றைய வழக்கமாக இருந்தது. ஆனால், இன்று நம் சமுதாயத்தில் வளைகாப்புச் சடங்கு, கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நடத்தப்பட்டாலும் அனைத்து வளையல்களையும் மகப்பேற்றுக்காலம் வரையிலும் அணிந்திருக்கும் வழக்கமில்லை[4].

 

பெண்களைப் பயத்திலிருந்து காப்பதில் குறியாக இருந்த பண்டைக்காலத் தமிழர்கள், குழந்தைகளை நோயிலிருந்து காப்பாற்றும் பொருட்டு இரும்பு, செம்பு, வெள்ளியிலான முறுக்குக்காப்பு என்னும் அணிகலனைக் கால்களில் அணிவித்தனர்[4]. குழந்தைகளைப் போன்றே ஆண்களுக்கென்றும் குறிப்பிட்ட அணிகலன்கள் இருந்தன. இதைப் புறநானூற்றுப் பாடல் 398இல் காணலாம்:

 

வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்

விரவு மணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு

புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்

உரைசெல அருளி யோனே

 

பண்டைக்கால ஆண்கள் கழுத்தில் அணிந்த புலிப்பல் தாலியும் கைகளில் அணிந்த தொடியும் காலில் அணிந்த கழலும் அவர்களின் வீரத்தைக் காட்டுபவையாக இருந்தன. அவை இக்காலக்கட்டத்தில், சிங்கப்பூர்த் தமிழர்களிடையே புழக்கத்தில் இல்லாதபோதிலும், இடைக்காலத்தில் அணியப்பட்ட காதணிகள் மட்டும் இன்றும் சில ஆண்கள் அணிவதைக் காணமுடிகிறது[4].

 

உடைகளைப் போன்றே அணிகலன்களிலும் உயர்நிலை, கீழ்நிலை என வேறுபாடு காட்டப்பட்ட காலம் பண்டைக்காலம். அக்காலத்தில் உயர்நிலையிலுள்ள பெண்கள் பொன் போன்ற உயர்தரமான அணிகலன்களையே அணிந்தனர். ஆனால், கீழ்நிலைப் பெண்களோ தங்களை இயற்கை வழங்கும் பூக்கள், இலைகள் போன்றவற்றைக்கொண்டு அணிகலன்கள் செய்து அலங்கரித்துக்கொண்டனர்[4]. அக்காலச் செல்வநிலைச் சீமாட்டிகள் நவரத்தின வளையல்களை அணிந்திருந்தனர். ஆனால், ஏழ்மையில் புரண்ட பெண்களோ வயல்களில் களைபறிக்கையில் களையாகக் கருதப்பட்ட குவளை ஆம்பலின் தண்டுகளைக் கொண்டு வளையல்களைச் செய்து அணிந்துகொண்டனர். இந்தக் காட்சியைத்தான் புறநானூறு 352, “ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்” எனக் குறிப்பிடுகிறது [1].

இனி, அக்காலப் பெண்களும் இக்காலப் பெண்களும் அணிந்திடும் அணிகலன்களில் குறிப்பிட்டுக் காதில் அணியப்படும் அணிகலனைப் பார்ப்போம். அன்று பெண்கள், மகரக்குண்டலம், பூங்குழை, ஒண்குழை, கனங்குழை, கடிப்பு, குழை, தாளுருவி, தோடு முதலியனவற்றை அணிந்தனர். ஆனால், இன்றைய பெண்களோ, கம்மல், தோடு, தொங்கட்டான், சிமிக்கி முதலியவற்றை அணிகின்றனர். மேலும், அக்காலத்தில் மூக்கணி எனப் பழந்தமிழரால் அணியப்பட்ட அணிகலன் இன்று மூக்குத்தியாகத் தமிழர்களால் மட்டுமல்லாது பிற இனத்தவராலும் அணியப்படுகிறது. இதுபோன்று அன்று கைகளில் அணியப்பட்ட வளையல்கள் தொடி, கடகம், நிலக்கடைச்செறி, வளை என்று கூறப்பட்டன. இன்றோ வளையல், காப்பு என்று மட்டுமே அழைத்திடும் பழக்கம் உருவாகியுள்ளது. அதே போன்றுதான் விரலணிகள். அன்று மோதிரம், மோசை என்று கூறப்பட்டது. இன்று மோதிரம் என்று மட்டுமே கூறப்படுகிறது. இடுப்பணிகளை மேகலை, காஞ்சி ஏணிப்படுகால், பாண்டில் எனக் கூறப்பட்ட காலம் மாறி, இன்று ஒட்டியாணம் என்று மட்டும் பயன்பாட்டில் இருந்துவருகிறது[4].

 

பண்டைக்காலத்தில் தங்களின் அழகை வெளிக்கொணரப் பெண்கள் அதிகமாக அணிகலன்களை அணிந்தனர் என்பதை நம்மால் சான்றுகள்வழி அறிந்திட முடிகிறது. ஆனால், காலப்போக்கில் இவ்வழக்கு மாறியுள்ளதை நாம் நம் சமுதாயத்தில் உருவெடுத்திருக்கும் மாற்றங்களின் அடிப்படையில் காண்கிறோம். இன்று நவீனமயமாகிவரும் உலகில், நவீனத்தின் தாக்கத்தாலும் பாதுகாப்புக் காரணத்தினாலும் பொருளாதாரச் சூழலினாலும் பெண்கள் அணிகலன்கள் அணிவதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன[4].

Aadai2.jpg

சிங்கப்பூர்த் தமிழ்மொழிக் கல்வியில், பாலர்பள்ளி முதற்கொண்டு தொடக்கக்கல்லூரி வரையில் பயிலும் தமிழ் மாணவர்களுக்குத் தமிழர்களுடைய பாரம்பரிய ஆடை அணிகலன்களைப் பற்றிய சில விளக்கங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது தொடக்கப்பள்ளிகளுக்கென உருவாக்கப்பாட்ட பாடவளங்களில் கற்றல்சார் விளையாட்டுகளிலும் ஆடை அணிகலன்களைப் பற்றின தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பள்ளிகளில் தாய்மொழிகளுக்கான இருவார நடவடிக்கைகளின்போதும் பாரம்பரிய ஆடை அணிகலன்களைப் பற்றியும் ஆசிரியர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆண்டுதோறும்  ஜூலை மாதம் 21ஆம் தேதியன்று சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் சமூக மன்றங்களிலும் இன நல்லிணக்கக் கொண்டாட்டங்கள் நடைபெறும். அப்போது பல்லின மாணவர்களும் ஆசிரியர்களும் பெரியவர்களும் பிற இனத்தவருடைய பாரம்பரிய ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்துகொண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள்.  

 

சிங்கப்பூர்த் தமிழர்கள், பண்டிகைகளின்போது சிராங்கூன் சாலையில் (லிட்டில் இந்தியா) உள்ள துணிக் கடைகளிலும் நகைக் கடைகளிலும் ஆடை அணிகலன்களை வாங்கி அணிந்துகொள்வதைப் பரவலாகக் காணலாம். திருமண நிகழ்ச்சிகள், குடும்ப விழாக்கள் முதலியவற்றின்போது தமிழ் ஆண்களும் பெண்களும் தங்கள் பாரம்பரிய உடைகளையும் அணிகலன்களையும் அணிவது வழக்கம். காலத்தின் தேவைக்கேற்பச் சிங்கப்பூர்த் தமிழர்கள் தாங்கள் அணியும் தமிழர் ஆடை அணிகலன்களை நவீனப்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். அதோடு, இங்குள்ள தமிழர்கள் பிற இந்திய சமூகத்தினரின் பாரம்பரிய ஆடைகளை அணிவதையும் காணமுடிகிறது.

 

துணைநூல்கள்

 

[1]     பெருமாள்சாமி, வெ. (2007). சங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை. சென்னை: பாரதி புத்தகாலயம்.

 

[2]     பிள்ளை, கே கே. (2009). பண்டைத் தமிழரின் வாழ்க்கை.

 

[3]     பிள்ளை, கே கே. (2009). தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும். சென்னை: International Institute of Tamil Studies.

 

[4]     கலியபெருமாள், கா. (1997). உலகத்தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம். மலேசியா: வள்ளலார் அன்பு நிலையம், ஈபோ & தமிழ்நாடு: வள்ளலார் 

         அருட்பெருஞ்சோதி அறக்கட்டளை மதுரை தமிழ்ச் சங்கம்.

bottom of page