top of page
Final.png

தமிழர் வாழ்வில் பூக்கள்

பூவுலக வாழ்வில் பூக்கள் இயற்கை வழங்கிய ஓர் அருட்கொடையாக அமைகின்றன. பண்டைக்காலந்தொட்டுப் பூக்கள் தமிழர்களை ஈர்த்துள்ளமையால் அவர்கள் வாழ்வில் அவற்றுக்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டிருந்தது. தமிழர்கள் மல்லிகை, கோழிக்கொண்டை, சம்பங்கி, மனோரஞ்சிதம், செண்டு செவ்வந்தி போன்ற பெயர்களைப் பூக்களுக்குச் சூட்டினர். மூவேந்தர்களுக்கும் அடையாளமாகப் பூக்கள் விளங்கியுள்ளன. அவை பனம்பூ (சேரர்), ஆத்திப்பூ (சோழர்), வேப்பம்பூ (பாண்டியர்) ஆகியன. இனி, பழந்தமிழர்களின் வாழ்வில் பூக்கள்பெறும் இடத்தைப் பார்ப்போம்.

 

பண்டை இலக்கியங்களில் பூக்கள் பெற்ற முக்கியத்துவம்

தமிழர்கள், தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பூக்களின் பெயரிட்டு அடையாளப்படுத்தினர். அவர்கள் வாழ்ந்த நிலங்கள் செடியும் கொடியும் இலையும் தழையும் பூவும் கனியும் நிறைந்த சோலையாக விளங்கிற்று. குறிஞ்சி நிலத்திற்குரிய மலர், காந்தள், குறிஞ்சி, வேங்கை ஆகியன. முல்லைக்குரிய மலர், குல்லை, முல்லை, பிடவம், தோன்றி ஆகியன. மருதத்திற்குரிய மலர், தாமரை, குவளை, கழுநீர் ஆகியன. நெய்தலுக்குரிய மலர், தாழை, புன்னை, ஞாழல் ஆகியன. இதிலிருந்து இயற்கை வழங்கிய பூக்கள், எந்த அளவிற்குத் தமிழர்களின்  ஆழ்மனத்தில் தொன்மங்களாக உறைந்திருந்தன என்பதை அறிய முடிகிறது.

 

கடந்த நூற்றாண்டின் முற்பகுதிவரை தமிழகத்தில் ஆண்கள் நீளமான கூந்தலை வளர்த்து அள்ளிக் கொண்டையாகச் செருகியிருந்தனர். அக்கொண்டையில் ஆண்கள் பூக்களைச் சூடிக்கொண்டனர். போர்க்குக் கிளம்பிய வீரர்கள், தலையில் மலர்களைச் சூடியிருந்தனர் என்பது பண்டை இலக்கியங்கள் தரும் தகவலாகும்.  கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் ஏறத்தாழ 35 அடிகளில் 99 மலர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன (பின்னிணைப்பு)[1].

 

புனல்(நீர்) விளையாட்டில் ஈடுபட்ட ஆடவரும் பெண்டிரும் ஆம்பல் பூவின் தண்டினை வளையலாக அணிந்துள்ளனர் (புறம், 63). பெண்கள் ஆற்றில் உள்ள வண்டிமண் எடுத்துப் பாவைசெய்து விளையாடியதோடு அம்மணற்பாவைக்கு மலர்மாலை சூட்டியுள்ளனர் என்று புறநானூறு (243) விளக்குகிறது[2]. 

 

       செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ

       தண்கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து

 

இரும்பை மரத்தில் பூக்கும் வெண்ணிறப் பூக்கள் இன்சுவை மிக்கவை. அவற்றை உணவில் சேர்த்து உண்ணும்நிலை அன்று இருந்துள்ளது. கள் அருந்தும் பழக்கமுடையவர்கள் அதில் தும்பை மலரை இட்டுச் சுவைத்துள்ளனர் என்று புறநானூறு (347) குறிப்பிடுகிறது. மேலும், இடையர்கள், தாங்கள் உண்ட புளித்த கூழில், புளிப்புச் சுவைமிக்க வேளைப்பூவைச் சேர்த்து உண்டனர் என்றும் அறியலாம்[2].

 

தமிழ்ப் பெண்கள் தலைவாரிப் பூச்சூட்டிக்கொள்ள விரும்புவது இயல்பு. அவர்கள் அழகும் மணமும்கொண்ட பூக்களைக்கொண்டு தங்களை அலங்கரித்துக்கொண்டார்கள். அன்றைய இளம் பெண்கள், வேங்கை மரத்திடம் சென்று “புலி, புலி” என்று குரல் எழுப்பியதாகவும் அம்மரம் அதன் கிளைகளைத் தாழ்த்திப் பூக்களைக் கொடுக்கும் என அவர்கள் நம்பியதாகவும் குறிப்புகள் உள்ளன. அதோடு, வேங்கை மலரும் காலம், திருமணத்திற்குரிய காலம் என்றும் அம்மலர்கள் விழுந்து கிடக்கும் முன்றிலே திருமணத்திற்குரிய நிகழிடம் என்றும் கருதினர் என்கிறது கலித்தொகைப் பாடல் ஒன்று[3].

       வருமே தோழி நன்மலை நாடன்

       வேங்கை விரிவிட நோக்கி

       வீங்கிறைப் பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே

       (கலித்தொகை – குறிஞ்சி 2)

       புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில்

       நனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றே

       (கலித்தொகை – குறிஞ்சி 13)

 

மணமக்களை வாழ்த்தும் பெரியோர் மலர்தூவி வாழ்த்தும் வழக்கு இருந்தது. அதற்குச் சான்று,

 

       நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

       பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க

       (அகநானூறு – 86)

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், கோவலன், கண்ணகி திருமணத்தின்போது மணமக்களுக்கு மலர்தூவி வாழ்த்தியதை குறிப்பிடுகிறார்.

       காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்

       தீதறுகென வேத்திச் சின் மலர் கொடு தூவி

       (சிலப்பதிகாரம் 1)

 

சங்ககாலப் புறவாழ்க்கையில், குறிப்பாகப் போர்களில், பூக்கள் ஓர் இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன. பண்டைய காலத்தில் போர்புரிவது ஒரு நெறியாகக் கருதப்பட்டது. போரின் ஒவ்வொரு நிலையையும் வெளிப்படுத்தப் போர்வீரர்கள் ஒவ்வொரு வகையான மலர்களை அணிந்து சென்றனர். புறத்திணைக்குரிய பொருண்மையாகப் பின்வருவன அமைகின்றன[4].

வெட்சித்திணை

நிரைகவர்தலும் மீட்டலும்

வஞ்சித்திணை

பகையரசர் மீது போர் தொடுத்தலால் எழுதல்

உழிஞைத்திணை

 

அரணை முற்றுதலும் மதிற்போர் புரிதலும்

தும்பைத்திணை

 

அதிரப் பொருதல்

வாகைத்திணை

 

​வெற்றி

       காஞ்சி – நிலையாமை கூறல்

       பாடாண் – தலைவனைப் போற்றுதல்

பண்டைத் தமிழர்கள் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகல் எழுப்புவது மரபாகும். அந்நடுகல்லுக்கு மயில் தோகையுடன் சிவந்த மலர்கள் சூட்டப்பட்டன என்று புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது:

       பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,

       மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு,

       அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து

       இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு

       கறவை தந்து பகைவர் ஓட்டிய

       நெடுந்தகை கழிந்தமை அறியாது

       இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே? (புறம், 264)

            

அன்றைய மன்னர்கள் தம்மைப் பாடிய புலவர்களுக்குப் பரிசாகப் பொன்னால் செய்யப்பட்ட தாமரைப் பூவையும் வெள்ளி நாரால் கட்டிய பூங்கொத்தினையும் வழங்கினர். பாணர்கள் தங்கள் இசைக்கருவிகளை மலர்களால் அலங்கரித்தனர்[3].

 

திருக்குறளில் பூக்கள்பற்றிய குறட்பாக்கள்

திருக்குறளில் மலர்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. காமத்தைக் குறிக்க முனைந்த திருவள்ளுவர் “மலரினும் மெல்லியது காமம்” (குறள் 1289) என்று குறிப்பிட்டுள்ளார். குறட்பாக்களில், அவர் 2 பூக்களை உவமையாகச் சுட்டியுள்ளார். ஒன்று அனிச்ச மலர், மற்றொன்று குவளை மலர்[]. அவை பின்வருவன:

 

       அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

       அடிக்கு நெருஞ்சிப் பழம்  (குறள் 1120)

       காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

       மாணிழை கண்ணொவ்வேம் என்று  (குறள் 1114)

 

மலர்களின் பருவநிலை வளர்ச்சியும் பெயர்களும்

பூக்களைக் குறிக்கும் சொற்கள் தமிழில் நிறைய உள்ளன. அதன் பருவத்தைச் சுட்டிநிற்கும் சொற்களும் நிறைய உண்டு. அதோடு, பூவின் மென்மையையும் மெருகையும் பெண்களுடன் ஒப்பிட்டுப் பேசும் கவிதைகளும் பற்பல உண்டு. பூக்கள்வழித் தமிழ்மொழியின் செழிப்பையும் வளத்தையும் அறியலாம். ஒரு மனிதன் பிறந்து இறக்கும்வரை அவனது உடலும் தோற்றமும் எம்மாதிரியான மாறுதல்களுக்கு உள்ளாகின்றதோ, பூக்களும் அவ்வாறே உருமாறுவதால் அவற்றின் பருவங்களை விளக்கும் வகையில் தமிழ்மொழியில் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன[6].

  • அரும்பு – தோன்றுநிலை

  • நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை

  • முகை – நனை முத்தாகும் நிலை

  • மொக்குள் – ‘’முகை மொக்குள் உள்ளது நாற்றம்’’

        – திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)

  • முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்

  • மொட்டு – கண்ணுக்குத் தெரியும் பருநிலை

  • போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

  • மலர் – மலரும் பூ

  • வீ – உதிரும் பூ

  • பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை

  • பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்

  • செம்மல் – உதிர்ந்த பூ செந்நிறம் பெற்று அழுகும் நிலை

பூவின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் மறைவையும் குறிப்பதற்குத் தமிழில் வார்த்தைகள் உள்ளன என்பதற்கு மேற்குறிப்பிட்ட சொற்கள் சான்றுகளாக அமைகின்றன. பூக்களின் பருவநிலைகள், பூமியில் பிறந்த எல்லா உயிரினங்களும் நிலையாமை என்னும் இயற்கை விதிகளைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்னும் உண்மையை வலியுறுத்துகின்றன. மலர்கள் மனத்தை மயக்கும் மணம் தரும் தன்மை உடையன. அவை சுற்றுப்புறத்திற்கு அழகும் மணமும் சேர்ப்பதுபோல, மனிதர்களும் இப்பூவுலகில் உயிரோடு இருக்கும்வரை மற்றவர்களின் வாழ்க்கையிலும் வசந்தத்தைப் படரவிட்டுச் செல்வது இன்றியமையாதது என்னும் வாழ்வியல் பாடத்தை நமக்குக் கற்றுத் தருகின்றன.

poo 1.jpg

பூக்களும் விழாக்களும்

மலர்களைக் கொண்டு இறைவழிபாடு செய்வது தமிழர் மரபு. ‘பூ செய்’ என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு, வடசொல்லான பூஜை என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மலர் வழிபாடு என்பது தமிழர்களிடம் பன்னெடுங்காலமாக இருந்துள்ளது என்று சுநீதகுமார சட்டர்ஜி குறிப்பிட்டுள்ளார்[3]. தமிழர் பண்பாட்டிலும் சடங்குகளிலும் பூக்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. பிறந்த குழந்தைக்கு முடியை இறக்கும் சடங்கின்போது கழுத்தில் மாலை இடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் இந்துக்களின் கொண்டாட்டமான விநாயக சதுர்த்தி அன்று பயன்படுத்தும் பூக்களின் வகைகள் மட்டுமே 21 இருக்கின்றன. அவை புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி என்பவை.

poo2.jpg

பூப்புனித நீராட்டு விழாவின்போது, பெண்ணுக்குத் தாய்மாமன் மாலை சூட்டுவது வழக்கம். பெண்பார்க்கும் நிகழ்ச்சியில், ‘பூ வைத்தல்’ சடங்கு குறிப்பிடத்தக்கது. பெண் பிடித்துவிட்டது என்றால் அவளை விரைவில் மணமகளாக ஏற்றுக்கொள்கிறோம் என்று உறுதியளிக்கும் வகையில் பையனின் தாயாரோ சகோதரிகளோ அப்பெண்ணின் தலையில் பூவைச் சூட்டுவார்கள். தங்கள் குடும்பத்திற்கு மணமகளாக வரவிருக்கும் இளம் பெண்ணின் தலையில்  பூவைச் சூட்டுதல் மூலம் தங்களுடைய உரிமையை உறுதிசெய்துகொள்வது இன்றும் வழக்கத்தில் உண்டு. திருமண நாளில் மணப்பெண்ணுக்குத் தலைமுடி தெரியாத அளவுக்குப் பூச்சரத்தைச் சூட்டுவதன் மூலம், அந்தப் பெண்ணின் மனத்தில் குதூகலத்தை ஏற்றுகின்றனர். ஆகவே, மனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் தன்மை பூக்களுக்கு இருக்கிறது என்று நம்பப்படுவதால், சுபமங்கலக் காரியங்களுக்குப் பூக்களின் பயன்பாடு மேலோங்கி இருக்கிறது.

​மலர்களால் மலரும் உறவுகள்

பூக்கட்டுவது கிராமத்துப் பெண்களின் பொழுதுபோக்கு. தாங்கள் கட்டிய பூக்களைத் தாங்களே சூடிக்கொள்வதோடு அவற்றை இறைவழிபாட்டிற்கும் அவர்கள் பயன்படுத்துவார்கள். முக்கியமாக, இல்லங்களில் நிகழும் மங்கல காரியங்களின்போது, பெண்கள் தங்கள் உறவினர்களோடு சேர்ந்து பூக்கட்டும்போதும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவிக்கொண்டு தொடுக்கும்போதும் அவர்களிடையே உள்ள உறவு வலுவாகிறது. இப்பாரம்பரியம் இன்றுவரைக்கும் கட்டிக்காக்கப்பட்டு வருகிறது.

 

பூக்களின் பெயர்களைப் பெண்களுக்குச் சூடுதல்

பூக்கள் என்றவுடன் அதன் அழகு, மணம், வண்ணங்கள் நம் மனக்கண் முன் நிழலாடுகின்றன. இப்புனிதங்களைப் பெற்ற பூக்களின் பெயர்களைப் பெண்களுக்குச் சூட்டும் வழக்கம் இன்றுவரை நிலவிவருகிறது. செண்பகம், மலர், அல்லி, மல்லிகா, தாமரை போன்றவை மலர்களைத் தழுவிய பெயர்களாகும்.

poo 3.jpg

தமிழ்மொழிக்குப் பூக்கள் சேர்க்கும் இனிமை

செம்மொழியான தமிழுக்கு இனிமை சேர்ப்பதில் பூக்களும் பங்குவகிக்கின்றன. ‘பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும்’ என்னும் உவமைத்தொடர் பூவின் தன்மையைக் குறிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. பூவோடு சார்ந்திருக்கும் நார் எவ்வாறு அதனிடமிருந்து நற்குணங்களைப் பெறுகிறதோ, மனிதர்களும் நல்ல பண்புகள் கொண்டவர்களுடன் பழகினால் அவர்களின் வாழ்வும் சிறக்கும் என்பதே அத்தொடர் உணர்த்தும் கருத்தாகும். கொடியிடை என்று மெலிந்த பெண்ணின் இடையைக் குறிப்பதற்கும் பூவின் உறுப்பைக் குறிக்கும் சொல்லாகிய ‘கொடி’ பயன்படுத்தப்படுகிறது.

 

திரைப்படப்பாடல்களிலும் பூக்களின் மகிமை குறிப்பிடப்பட்டுள்ளன. கவிஞர் வைரமுத்து எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்களில் பூக்கள் இடம்பெற்றுள்ளன.

 

       வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே!

       விடியும் பூமி அமைதிக்காக விடிகவே!

       மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே!

       மலரே சோம்பல் முறித்து எழுகவே! (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்)

 

மேற்குறிப்பிட்டுள்ள முதல் வரியில் வெள்ளை பூக்கள் என்னும் சொற்றொடர் உலகில் நிம்மதியும் அமைதியும் வேண்டும் என்னும் கருத்தை முன்வைப்பதற்குக் கவிஞர் பயன்படுத்தியிருக்கிறார்.

 

சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வில் பூக்களின் முக்கியத்துவம்

சிங்கப்பூர்த் தமிழர்களிடையே பூக்கள் பண்டிகைக் காலங்களின்போதும் திருமண வைபவங்களின்போதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பூக்கள் இல்லாத விசேஷங்கள் இல்லை. உறவினர்களோடு பூக்கட்டும் பாரம்பரியம் சிங்கப்பூர்த் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படாவிட்டாலும் வழிபாடு மற்றும் சுபமங்கல காரியங்களில் பூக்களின் முக்கியத்துவத்தையும் மனத்திற்கொண்டு  பூக்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். பொங்கல், சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது, சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்னும் இடம், மக்கள் கூட்டத்தினால் விசேஷ கோலாகலத்தில் ஆழ்ந்திருக்கும். இப்பண்டிகைகளுக்குத் தேவையான பொருட்களோடு உதிரிப் பூக்களும் மலர் மாலைகளும் பரவலாக விற்கப்படும். 

 

மங்கலக் காரியங்களுக்கு மட்டுமல்லாமல் ஈமச் சடங்குகளுக்கும் பூக்களின் பயன்பாடு பரவலாக இருக்கிறது. அமரராகியவர்களுக்கு மலர் மாலைகளை அணிவித்து மரியாதை செலுத்தும் பழக்கம் சிங்கப்பூர்த் தமிழ் இந்துக்களிடையே மட்டும் இல்லாமல் கிறிஸ்துவர்களிடையேயும் பௌத்தர்களிடையேயும் நிலவிவருகிறது. இவர்கள் மலர் வளையங்களைப் பயன்படுத்துவார்கள். மொழி, பண்பாடு தழுவிய தமிழ் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கும் பழக்கம் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு விருந்தினர் பிற இனத்தவரைச் சார்ந்தவராக இருந்தாலும்கூட, இம்முறை செயலாக்கப்பட்டு வருகிறது.

 

மலரும் நினைவுகள், மறுமலர்ச்சி போன்ற தமிழ்ச் சொற்கள் பூக்களோடு தொடர்புபெற்றுள்ளன. இயற்கை நமக்களித்த கொடை, பூக்கள். அவற்றை வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் பயன்படுத்திச் சிறப்பிப்பது தமிழர்தம் வாழ்வில் பூக்களுக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தைப் புலப்படுத்துகிறது. சுருங்கக்கூறின், தமிழர்தம் அக வாழ்விலும் புற வாழ்விலும் பூக்கள் பெறும் முக்கிய இடத்தை அறிய முடிகிறது. 

பின்னிணைப்பு

99 வகையான பூக்களின் பெயர்கள்

துணைநூல்கள்

[1]   செல்வமணி. (2015). 99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்.  https://eluthu.com/kavithai/260458.html

[2]   பிரபு, ம. (2018). சங்கப் பாடல்கள் புலப்படுத்தும் தமிழர் பண்பாட்டில் மலர்கள். தமிழியற் புதுவைக்கழகம்.

       https://www.geotamil.com/index.php

[3]  பாலசுப்பிரமணியன், சி. (1982). மலர் காட்டும் வாழ்க்கை. சென்னை: பாரி நிலையம்.

[4]  பாலசுப்பிரமணியன், கு. வெ. (2018). அனைவர்க்கும் தமிழ் இலக்கணம். தஞ்சாவூர்: உமா நூல் வெளியீட்டகம்.

[5]  கிருஷ்ணன். (2017). திருக்குறளில் மணம் வீசும் மலர்கள்.

      http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=17851&cat=3

[6]  https://ta.wikipedia.org/wiki/மலர்

bottom of page