Final.png

தமிழர் வாழ்வில் நல்லறம்

பண்டைய தமிழர்கள் தனிமனிதனையும் சமுதாயத்தையும் நெறிப்படுத்தும் வாழ்க்கை முறையாக அறத்தைக் கருதினர். அறம் என்னும் சொல் அறு + அம் எனப் பிரிக்கப்படும். “ஒருவரின் நினைவு, சொல், செயல்களின் தீமையை அறுப்பதே அறம்” என்பார் மறைமலை அடிகள் [1]. அதாவது, ஒருவர் வாழ்க்கையில் தவிர்க்கப்பட வேண்டியதை அறுத்து விலக்குவது அறம் எனப்படும். திருவள்ளுவர் அறத்தை இருவகையாகப் பிரித்துள்ளார். ஒன்று இல்லறம்; மற்றது துறவறம். ஒருவர் தம் மண்ணுலக வாழ்வில் சிறப்பதற்கும் அவ்வாழ்வின்போது மனத்தால் பண்படுவதற்கும் பின்னர் அவ்வாழ்விலிருந்து விடுபட்டுப் பிறப்பற்ற பேறு பெறுவதற்கும் அறவாழ்வு இன்றியமையாதது எனத் தமிழர்கள் நம்பினர். அதற்கான பாதை அமைத்துக்கொள்ள இல்லறம் அல்லது துறவறம் பயன்படும் என்பது தமிழர்தம் கொள்கை ஆகும். இருசாராரின் கடமைகள் அனைத்தும் அறத்தின் அடிப்படையில் நெறிமுறைப்படுத்தப்பட்டன. இதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம் தொல்காப்பியம்முதல் சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம்வரை தமிழர்களது அறவாழ்வைப் பல்வேறு கோணங்களில் பிரதிபலிக்கின்றன. தமிழர்கள் வாழ்வில் பல நிலைகளிலும் அறத்தை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்டதால் பண்பாட்டின் உன்னதத்தை அடைய முடிந்தது.

 

இல்வாழ்க்கையில் அறம்

தமிழர் வாழ்வுநெறி அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும் நான்கு உறுதிப்பொருள்கள் அல்லது குறிக்கோள்கள் என்னும் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. வாழ்விற்கு முதலாகிய அறத்தின் வழிநின்று பொருளை ஈட்டி, அப்பொருளின்வழி உலகில் இன்பம் துய்த்தால் வீடுபேறு வாய்க்கும் என இவ்வாழ்வுநெறி வழிகாட்டுகிறது. அவ்வாறு வாழ்பவர்கள் மிகப் பெரிய சாதனையாளர்களாகக் கருதப்பட்டனர். இதனைத் திருவள்ளுவர்,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் (குறள் 50)

எனக் குறிப்பிட்டார். இக்குறள், உலகத்தின் அறநெறியில் நின்று வாழ்கின்றவன் வானுலகத்தில் உள்ள தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான் என விளக்குகிறது.         

அக்காலத் தமிழர்கள் இல்லறத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஓர் ஆணும் பெண்ணும் மலரும் மணமும்போல ஒன்றுபட்டு, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அன்பு வாழ்க்கை நடத்துவதே இல்லறம். திருவள்ளுவரும் இல்லறத்தின் சிறப்பைப் பற்றி மேலும் குறிப்பிட்டுள்ளார்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது  (குறள் 45)

இக்குறள், பெரும்பாலான தமிழர் திருமணப் பத்திரிகைகளில் இன்றுவரை இடம்பெற்றுள்ளது. இக்குறள்வழி இல்வாழ்க்கையில் ஒருவர் தம் துணையின்மீது வைத்துள்ள அன்பும் தம்மிடம் உள்ள பொருளைப் பிறரின் நல்வாழ்வுக்காகக் கொடுத்து உதவும் அறமும் இருந்தால், அதுவே இல்லறத்தின் பண்பும் பயனும் எனத் திருவள்ளுவர் விளக்குகிறார். அவர் மற்றோர் இடத்தில் ‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

IMG-9516.jpg

ஔவை ‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்று கூறியுள்ளார். குடும்பம் என்பது சமுதாயத்தின் ஓர் அமைப்பு. இல்லத்தில் கடைப்பிடிக்கப்படும் மேலான பண்புகளும் செயற்பாடுகளும் இல்லறமாகும். குடும்ப உறுப்பினர்களிடையிலும் அவர்கள் மற்றவர்களிடையிலும் காட்டும் அறச்சிந்தனையையும் செயற்பாடுகளையும் இல்லறம் குறிக்கும். எனவே, குடும்பத்தில் உள்ள ஒவ்வோர் உறுப்பினர்களாலும் பின்பற்றப்படும் அறம் இல்லறத்தை நல்லறமாக்குகிறது. ஒவ்வொரு குடும்பமும் அறத்தைப் பேணிக்காத்தால், பின் ஒரு சமுதாயமே மேன்மையடையும் எனலாம்..

இல்வாழ்க்கையில் பொருள்

இல்லறத்தில் உள்ளோர் தம்மைச் சுற்றியுள்ள பலர்க்குத் துணையாகநின்று அவர்களுக்கு உதவிபுரிய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர்,

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

என்னும் குறள்வழி உணர்த்துகிறார். அதாவது, இல்லறத்தான் இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் சிறந்த துணையாக இருப்பவனாவான் என்று குறிப்பிட்டுள்ளார். இல்வாழ்வான் தன்னையும் தன்னை நம்பிவந்த பெண்ணையும் பெற்றோரையும் தனக்குப் பிறக்கும் பிள்ளைகளையும் காக்கக் கடமைப்பட்டவனாகிறான். அத்தகைய குடும்பத் தலைவனின் தலையாய கடமைகளுள் ஒன்று, பொருளீட்டல். ஆனால், ஆண் பொருளீட்டுவதோடு நின்றுவிடாமல், தனது வருமானத்தைத் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் (இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்தினர், உறவினர்) ஆகியவர்களுக்கும் பகிர்ந்துகொடுக்க வேண்டும் என்னும் நிலை இருந்தது. எனவே, பொருளீட்டும் கடமை ஆணுக்குரியதாக இருப்பினும், பெண்டிர்க்கு அதனைப் பாதுகாக்கும் கடமை இருந்துள்ளது.

a1 p2.jpg

பண்டைத் தமிழரின் வாழ்க்கை முறையில் இல்லறத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மேற்கொள்ளவேண்டிய கடமைகள் இன்னவை என வகுத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. பொருளீட்டுதல் ஆணின் கடமையாகக் கொள்ளப்பட்டதுபோல் இல்லத்தைப் பேணுதல் பெண்ணின் கடமையாகக் கருதப்பட்டது. மனையாள், இல்லாள் போன்ற பெயர்கள் இப்பொருள்படுவனவாக அமைந்தன. இல்லாள் என்பது இல் + ஆள் எனப் பிரிக்கப்படும். அது இல்லத்தை ஆட்சி செய்பவள் என்னும் பொருளில் அமையும். மேலும், கணவனின் வருவாய் அறிந்து கட்டுப்பாட்டுடன் செலவுசெய்யும் பெண்ணால் குடும்பம் முன்னுக்கு வரும் என்றும் கருதப்படுகிறது. இப்படிக் குடும்பத்தைப் பற்றிக் கவலையுள்ள பெண்களைப் போற்றும் வழக்கத்தைப் பழந்தமிழ் நூல்களில் உள்ள பாடல்கள் விளக்குகின்றன. புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்கள் தங்கள் கணவன்மார்கள் தேடித்தரும் செல்வத்தைக் கொண்டே இல்வாழ்க்கை நடத்திவந்தனர். எவ்விதப் பிரச்சினையிலும் தந்தை வீட்டின் உதவியைப் பெறுவது அவமானம் என்றுகூட எண்ணினர் என்பதை

அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள்கொல்?

 கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்

 கொடுத்த தந்தை கொழும்சோறு உள்ளாள்;

 ஒழுகுநீர் நுணங்கறல் போலப்

 பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே (110)

என்னும் நற்றிணைப் பாடலில் தந்தை ஒருவர் விளையாட்டுப் பெண்ணாக இருந்த தம் மகள், அவர் உதவிக்காக அனுப்பிய பொருள்களைக் கொள்ள மறுத்து, சிரமப்பட்டாலும், கணவனின் வழியிலேயே நடக்கிறாள் என்பதை எண்ணிப் பெருமைகொள்வதாக அமைகிறது. இத்தகைய பாடல்கள் பழந்தமிழர் இல்லறத்தில் புகும் பெண்கள் கணவனுக்கு மறுபாதியாக விளங்கிச் சிறப்புற்றிருப்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

இல்லறத்தில் விருந்தோம்பல்

பண்டைய தமிழரின் பண்பாடுகளில் முக்கியமான ஒன்று விருந்தோம்பலாகும். விருந்தோம்பல் என்பது இல்லம் தேடிவரும் எவரையும் இன்முகத்துடன் வரவேற்று அவர்களிடம் அன்பாகப் பேசி உபசரித்து உணவளிக்கும் உயரிய பண்பாகும். அக்காலத்தில் தலைவன் – தலைவி இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பிறர்க்கு விருந்தோம்பும் கடமையில் ஈடுபட்டனர். கணவன் வீட்டில் இல்லாவிட்டாலும், அந்தப் பண்பினை மனைவி கடைப்பிடித்தாள். இதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் அதிகம் உள்ளன.

சிலப்பதிகாரத்திலிருந்து சில அடிகள்...

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை... (சிலம்பு 16, 71-73)

கோவலன் பிரிவால் கண்ணகி விருந்துசெய்ய முடியாதநிலை ஏற்பட்டதை எண்ணி வருந்துவதாகப் பாடல் குறிப்பிடுகிறது.

 

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு (குறள் 81)


என்று திருவள்ளுவர் விருந்தினரை வரவேற்று உணவிடுதலே இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களின் கடமை என்று விளக்குகிறார். பசி என வந்தோர்க்கு உணவளித்தலை முக்கியமாகக் கருதி, அதை முறைப்படி செய்வதையும் திருவள்ளுவர் வலியுறுத்தினார். எவ்வளவு எளிமையான உணவாக இருப்பினும், அதனை இன்முகத்துடன் வழங்குவது சிறப்பாகும்.

 

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து (குறள் 90)

அனிச்சம் மிக மென்மையான ஒரு மலர். அது நுகர்ந்தாலே வாடிவிடும் தன்மை உடையது. அதுபோல விருந்தினர்களின் முகமும் நாம் இன்முகத்துடன் வரவேற்காவிட்டால் வாடிவிடும் என்று குறிப்பிடுகிறார், திருவள்ளுவர். மணிமேகலையில்,

‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணிமேகலை 11, 95-96)

என்னும் அடிகள் விருந்தோம்பலை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. விருந்தோம்பல் என்பது பிறர்க்கு வாய்க்கு ருசியாக உணவு வழங்குவதோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை. அது முக்கியமாகப் பிறர் பசியைப் போக்குவதாகும். இவ்வுலகில் வாழும் மக்கள் அனைவர்க்கும் அவர்கள் சாக்காட்டினின்றும் மீள உணவளிக்கவேண்டும். இவ்வாறு உணவளிப்பவர்கள்தாம் மக்களுக்கு உயிர்கொடுத்துக் காப்போராவார் என விருந்தின் முக்கிய நோக்கத்தை விளக்குகிறார், முனைவர் அ கிருட்டினன் [2].

பிறர்க்கு உணவளிக்கும் பண்பினால் தமிழர் தங்கள் வாழ்க்கை முறையை அதற்கேற்ப அமைத்திருந்தனர். வீடுகளில் திண்ணைவைத்துக் கட்டியிருந்தனர். அது வருவோர் தங்கி உணவருந்த வசதியாக இருந்தது. சங்க இலக்கியமான குறிஞ்சிப் பாட்டில்,

சாறயர்த் தன்ன மிடாஅச் சொன்றி

வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப

மலரத் திறந்த வாயில் பலருணப்

பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில்

வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு

விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை

நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங்

கறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை (குறிஞ்சிப் பாட்டு, 200)

‘பலரும் உண்ணும்படி அகலமாகக் கதவு திறந்து கிடக்கும் வாசலையுடைய பெரிய வீட்டில், சோற்றை வருகின்றவர்களுக்கு எல்லாம் இல்லையென்னாமல் இட வேண்டும். அதனால் வீடு பொலிவுபெற வேண்டும். விருந்தினர் உண்டது போக மிஞ்சியிருக்கும் உணவை மனைவியாகிய நீ இட நான் உண்ண வேண்டும். அவ்வுயர்ந்த இல்லறம் நம்மைக் கரையேற்றும்’ [3] என்று தலைவன் தன் தலைவியிடம் கூறுகிறான். இப்பாடல் இல்லத்தில் விருந்தோம்பலுக்கு இருந்த முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

சங்ககாலத்தில் லட்சிய வாழ்க்கை எப்படி இருந்தது என்று நோக்கும்போது பின்வரும் போக்குகள் புலப்படுகின்றன: மக்கள் தங்கள் வீடு, பிள்ளை என்று சுயநலத்தோடு வாழாமல், சமூகத்தின்மீது அக்கறை கொண்டவர்களாக வாழ்ந்தனர். எப்படியும் வாழலாம் என்று இருப்பதைவிடத் தமிழர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று தங்கள் வாழ்க்கைச் சட்டங்களை அமைத்துக்கொண்டனர். இப்படித்தான் வாழவேண்டும் என்று தமிழன் வகுத்துக்கொண்ட அறக்கோட்பாடுகள் பழமையும் செம்மையும் திட்பநுட்பமும் செறிந்தனவாகும். இளமையில் இன்பங்களை அனுபவித்துப் பின் முதுமையில் பல நல்லறங்களைச் செய்துகொள்ளலாம் என்று நினைக்காமல், பொருளீட்டத் தொடங்கிய உடனே அறம் செய்ய வேண்டும் என்னும் வழக்கத்தைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். இல்லறத்தில் நல்லறம் காண்பதோடு, பொதுநலத்திலும் அக்கறையுடன் ஈடுபடப் பல பழக்கவழக்கங்களைத் தங்கள் வாழ்க்கைமுறையாக்கிக் கொண்டனர்.

a1 p4.jpg

​Source: http://www.poornachandran.com/நம்-பண்பாட்டை-அறிவோம்-க-6/

துணைநூல்கள்

[1]   மறைமலை அடிகள். (1997). வாழ்வும் வழிபாடும். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

[2]   கிருட்டினன், அ. (1994). தமிழர் பண்பாட்டியல். சென்னை, மணிவாசகர் பதிப்பகம்.

[3]   சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை - Tamil Virtual University

        http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311664.htm

 

தலைப்புக்குத் தொடர்புடைய பிற வளங்கள்

1.   சிவபாலு, த. தமிழர் வாழ்வியல் மரபு ஒரு நோக்கு. 
       http://www.tamilauthors.com/01/444.html
 
2.   செல்வா, மு. 2016. அகநானூறு தமிழர்.
       https://eluthu.com/kavithai/278459.html