Final.png

திருக்குறள்

 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு (குறள் 1)

என்னும் குறள் வெண்பாவில் தொடங்கி, 1330 பாக்களில் வாழ்வியல் தத்துவங்கள் பலவற்றையும் உள்ளடக்கியது திருக்குறள். இந்நூல், ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இது இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. தமிழ் இலக்கியங்களில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களுள் திருக்குறளும் ஒன்று. பழங்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்நூல் உரைக்கும் சிந்தனைகள் இன்றைக்கும் ஏற்புடையவையாக உள்ளன.

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், இந்நூல் தனி ஒருவரால் எழுதப்பட்டதன்று, பலர் எழுதிய பாக்களின் தொகுப்பு என்று சொல்வாரும் உளர். இருப்பினும், இக்கட்டுரையில் திருவள்ளுவர் மட்டுமே திருக்குறளின் ஆசிரியர் என்பதன் அடிப்படையில் கருத்துகள் தரப்பட்டுள்ளன.


திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு


திருவள்ளுவரின் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. அவர் கன்னியாகுமரியில் பிறந்தவர் என்றும் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வாழ்ந்தவர் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால், இதுவரை இவற்றுள் எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் பொ.ஊ.மு. 31ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்று கருதப்படுகிறது. இக்காரணம் கொண்டே ‘திருவள்ளுவராண்டு’  கணக்கிடப்படுகிறது.  

நூல் விளக்கம்


திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது. இவற்றின் உள்ளடக்கம் பின்வருவன:

  • அறத்துப்பால் – பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் உட்பிரிவுகளில் அறத்தைத் எடுத்துரைக்கிறது.

  • பொருட்பால் – அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல் முதலிய உட்பிரிவுகளில் ‘பொருள்’ என்று சொல்லப்படும் புறவாழ்க்கைபற்றிய பல சிந்தனைகளை எடுத்துரைக்கிறது.

  • காமத்துப்பால் – களவியல், கற்பியல் என்னும் தலைப்புகளில் தனிமனித உறவுகள்பற்றி விளக்கப்பட்டுள்ளன.


முதல் பிரிவில் 38 அதிகாரங்களும் இரண்டாவது பிரிவில் 70 அதிகாரங்களும் மூன்றாவது பிரிவில் 25 அதிகாரங்களும் உள்ளன. பிரிவிற்குப் பிரிவு அதிகாரங்களின் எண்ணிக்கை வேறுபடுவதற்குச் சரியான காரணம் புலப்படவில்லை. ஆயினும், ஒவ்வோர் அதிகாரத்திலும் சரியாகப் பத்தே பாடல்கள் என 133 அதிகாரங்களில் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு குறளும் ஏழு சீர்களிலும் ஈரடிகளிலும்  அமைக்கப்பட்டுள்ளது. பாக்கள் அனைத்தும் குறள் வெண்பா என்னும் பாவகையில் இயற்றப்பட்டுள்ளன. எனவேதான் இந்நூலுக்குக் குறள் என்றும், அதன் மகிமை கருதித் 'திரு' என்னும் அடைச்சொல்லையும் சேர்த்துத் திருக்குறள் என்றும் பெயர் பரவியதாகப் பலரும் கருதுகின்றனர். மிக ஆழமான கருத்தை மிகக் குறுகிய அளவில் பொதித்து வைத்திருப்பதனால்,

அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

என்று ஒளவையார் பாராட்டியுள்ளார்.  மேலும், அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான் என்றும் இதன் பெயர் முப்பால் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். கையில் கிடைத்துள்ள முதல் திருக்குறளின் அச்சுப் பிரதி 1812ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டுள்ளது. அதனை எந்தவித மாற்றமுமின்றி அப்படியே மீண்டும் அச்சிட்டுள்ளது சென்னையில் உள்ள ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.


அறத்துப்பால்


மனிதனையும் சமுதாயத்தையும் செந்நெறிப்படுத்தும் ஒழுக்கநெறி அறம் எனப்படுகிறது. அறம் குறிக்கும் பொருள்கள் பலவெனினும், நற்பண்பு அல்லது ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பெரும்பாலும் அது வழங்கி வந்துள்ளது. குறளிலும் அப்பொருளே மேற்கொள்ளப்பட்டது. வரைவிலக்கணம் கூற முடியாத அறத்திற்குத் திருவள்ளுவர் இலக்கணம் கூறியுள்ளார்; ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்…’ (குறள் 34). அதாவது உள்ளத்தில் குற்றம் இல்லாமலிருத்தலே அறமாகும் என்பது இதன் விளக்கம்.
இல்வாழ்க்கைதான் அறம். இல்லறத்திலிருந்து வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துக்கு ஒப்ப கருதப்படுவான். இல்வாழ்வில் நின்று ஒழுகுபவர்கள், ஒப்புரவறிந்து, ஈகையால் புகழ்பெற்று, அதனையும் கடந்து அருள் முதலிய விரதங்களை மேற்கொண்டு, தவத்தில் ஈடுபட்டு, நிலையாமையை உணர்ந்து, துறவுநிலை மேற்கொண்டு, எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றுணர்ந்து, அம்மெய்யறிவால் துன்பத்துள் துன்பம் விளைவிக்கும் அவாவை அறுத்து, சிறப்பெனும் செம்பொருள் காண்கிறார்கள். அற ஒழுக்கத்தின் பயன், சிறப்பும் செல்வமும் ஆகும். இதுவே அறத்துப்பால் தரும் திரட்டு.


பொருட்பால்


பொருட்பால் அரசும் சமுதாயமும் மனிதநிறைவுக்கு வழிகோலும் முறையைச் சொல்கிறது. மக்கள் யாவரும் சமம்; மனிதரிடையே ஏற்றத்தாழ்வு யாதுமில்லை; யாரும் எப்பணியையும் மேற்கொண்டு வாழ்வு நடத்தலாம்; எதுவும் ஒடுக்கப்படவில்லை; எல்லா வினைகளும் அறத்தின்பாற்பட்டனவாக இருத்தல்வேண்டும். இவை பொருட்பால் கூறும் கருத்தின் சாரம்.

காமத்துப்பால்


குறளின் காமத்துப்பால் சங்க அக இலக்கியங்களின் கருத்துப் பிழிவாய் அமைந்து கற்பனைவளமும் இலக்கியச்சுவையும் சேர்ந்து காதலரின் கூடல், பிரிதல், ஊடல் என்னும் பிரிவுகளில் காதல் நாடகமாய் அமைகிறது என்று அறிஞர்கள் கூறுவார்கள். காமத்தினை இவ்வளவு தூய்மையாகப் பாடமுடியுமா என்றும் காதலரின் பண்பட்ட நெஞ்சத்தை விளக்கும் கற்பனைகலந்த உணர்ச்சிக் குவியலாகத் தீட்டப்பட்டு, அன்பும் அறனும் ஒன்றிய இன்பநெறியாய் ஒளிர்கிறது என்றும் பலரும் கருதுகின்றனர். காமத்துப்பால் சொல், பொருள், உவமை நயம்கொண்டு, மகிழ்ச்சி, இரங்கல், சோகம், காமம், உளவியல் இவற்றை அடக்கி இலக்கியச்சுவை ததும்பப் பாடப்பட்டுள்ளது என்பது பலரின் கருத்து.

வள்ளுவத்தில் புதுமைகள்


திருக்குறள் பல்வேறு நிலையில் புதுமையுடன் விளங்குகிறது. நூல் அமைப்பு, கடவுள் வாழ்த்தியல், சொல்லாட்சி, கருத்து, வாழ்வுமுறை, உவமைகள் முதலிய பலவற்றிலும் புதுமைகள் காணப்படுகின்றன என்று அறிஞர்கள் கூறுவார்கள். வயதால் மூத்தவரைப் பெரியவர் என்பது உலக வழக்கு. ஆனால், திருவள்ளுவர் காட்டும் பெரியவர் ‘வயது’ என்னும் அளவுகோலுக்கு ஆட்பட்டவரல்லர். அவர் ‘செயற்கு அரிய செய்வார் பெரியர்’ (குறள் 26) என்று புதுக்கருத்தைக் கூறுகிறார். நடந்ததை நடந்தவாறே கூறுவதுதான் உண்மை என்று இன்றும் நம்புகிறோம். ஆனால், உண்மைக்குத் திருவள்ளுவர் புதுவிளக்கம் தருகிறார்.

வாய்மை எனப்படுவ(து) யாதெனில் யாதொன்றும்

தீமை இலாத சொலல் (குறள் 291)

குற்றமற்ற நன்மை தருமாயின், பொய்யும் உண்மையை ஒத்ததாகும் என்று இதுவரை எவரும் கூறாத, கூறத் துணியாத ஒரு புதுக்கருத்தை அறிவிக்கிறார், திருவள்ளுவர்.

‘கடமையைச் செய்; பலனைப் பற்றிக் கவலைப்படாதே’ என்று வலியுறுத்துகிறது கீதை. காந்தியடிகள், ‘எனக்கு முடிவைப்பற்றிக் கவலையில்லை; செய்யும் முறையைப் பற்றியதே என் சிந்தனை’ என்று கூறினார். இந்தக் கருத்து வள்ளுவத்தில் பின்வரும் குறளில்,  

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது (குறள் 772)


என்று படைச்செருக்குடைய ஒரு வீரன் கூறுகிறான். இதன் வாயிலாக வெற்றியைவிட நோக்கமே பெரிது என்னும் விழுமியக் கருத்தைத் திருவள்ளுவர் அறிவிக்கும் பாங்கு புதுமையானது.

 

திருக்குறளில் வீடுபேறுபற்றிய சிந்தனைகள் உள்ளனவா?

திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப்பொருள்களை உள்ளடக்கியது. அதில் நான்காவது உறுதிப்பொருளான வீடு என்பது தனியே வகுத்துக் காட்டப்படாதது உண்மையே. அக்காரணத்தால் அது ‘சமயம் கடந்த நூல்’ என்று அறிஞர் பெருமக்கள் பொதுவாகக் கருதுகின்றனர். திருவள்ளுவர் தம் பொதுமறையில், எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தோ தழுவியோ படைக்கவில்லை. அதே வேளையில், அது முற்றிலும் கடவுள் மறுப்புக் கொள்கைசார்ந்த நூல் என்று கருதுவதற்கும் இடமில்லை.
 
திருக்குறள் இறைபற்றியும் இம்மை மறுமைக் கொள்கைபற்றியும் பல குறட்பாக்களைத் தன்னகத்துக் கொண்டுள்ளது. அதில் சமயக் கருத்துகள் இல்லாவிடினும், ஆன்மீக சிந்தனைகள் பரவலாக உண்டு.

சான்றுக்குச் சில குறட்பாக்களைப் பார்ப்போம்:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (குறள் 10)     

      

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும் (குறள் 349)

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)   

ஒருவர் உலக வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம் ஆகியனவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், அவர்க்கு வீடுபேறு என்பது இயல்பாகக் கிட்டும் என்னும் வாழ்வியல் நெறியைக் காட்ட முனைகிறது, திருக்குறள். அதனால், முப்பால் நூலில் உள்ள பல்வேறு குறட்பாக்களில் மனிதன் என்பான் எப்படித் தெய்வநிலைக்கு உயர முடியும் என்பதைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (குறள் 50)பிறநாட்டு அறிஞர்களின் கருத்துகள்


திருக்குறளின் சிறப்பை உணர்ந்துகொண்ட மேலை நாட்டு அறிஞர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அதனைத் தங்கள் மொழிகளுக்கு எடுத்துச்செல்லத் தலைப்பட்டனர். வீரமாமுனிவர் இலத்தீனிலும் கிண்டர்ஸ்லி (Kindersley – 1974), எஃப் டபிள்யூ எல்லிஸ் (F W Ellis –1812), ட்ரூ (Rev W H Drew – 1840), கோவர் (C E Gover – 1871), ராபின்சன் (E J Robinson – 1873), லாசரஸ் (Rev J Lazarus – 1885), ஜி யூ போப் (Rev G U Pope – 1886) ஆகியோர் ஆங்கிலத்திலும், ஏரியல் (M Ariel), தூமா (M de Dumas), லாமெரஸ் (M Lamairesse) போன்றோர் பிரெஞ்சிலும் டாக்டர் கிரால் (Dr Grawl) இலத்தீனிலும் ஜெர்மனியிலும் மொழிபெயர்த்து, மேலை நாட்டார்க்கு வழங்கினர். ஏரியல் “திருக்குறள் மனித இனத்தின் மிகவுயர்ந்த, மிகத் தூய்மையான வெளிப்பாடுகளில் ஒன்று” என்றும் “தலையாய சொற்சிறப்பிலும் அறமேம்பாட்டிலும் கிரேக்கர்களுக்கு ஹோமர் எவ்வாறோ, அவ்வாறான மீவுயர் நிலையில் தமிழர்களுக்கு வாய்த்தவர் வள்ளுவர்,” என்றும் பாராட்டுகிறார்.


ஆல்பர்ட் ஸ்வெய்ட்சர் (Albert Schweitzer) என்பார், “திருக்குறள் எனும் நூலே, அன்போடு வாழும் அறம் (living ethic of love) ஆகும். எளிய, அறவுணர்வுகொண்ட மாந்தரின் குறிக்கோளைத் தவறில்லாது அழுத்தமாக எடுத்துச்சொல்வது. மனிதன் தன்னிடமும் உலகத்தாரிடமும் நடந்துகொள்ள வேண்டிய பண்பாட்டின் பலதரப்பட்ட சிக்கல்கள்பற்றிய அதன் கூற்றுகள் நல்லறிவுக்கேற்றவை, உயர்ந்தவை. பேரறிவின் விளைவாகிய இத்தகைய அறக்கோட்பாடுகளின் தொகுதியை உலக இலக்கியத்தில் வேறெங்கும் காண்பது அரிது. குறள் கூறும் செயல்மிகு வாழ்வால் பெறும் இன்பம்பற்றிய கருத்துகள், வாழ்க்கை ஏற்பிற்கும் உலகின் உறுதிப்பாட்டிற்கும் சாட்சியம் அளிப்பவை...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பன்மொழி இலக்கியங்களுள் ஆழங்கால்பதித்த அரவிந்தர், “அறக்கருத்துகளைச் சுருங்கச் சொல்லும் கவிதையெனும் இலக்கிய வகையையெடுத்துக் கொண்டோமானால், தமிழ் முனிவராகிய திருவள்ளுவரின் நூலுக்கு இணையாக, கட்டமைப்பிலும், சொல்லும் பொருளும் இணைந்தியங்கும் ஆற்றலிலும் சிறந்த நூல் வேறில்லை” என்றார்[1].

 

Thirukkural 1.jfif
Thirukkural 2.jpg

உலக மொழிகளில் திருக்குறள்


இந்நூல் உலகத்தின் முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் ஏறத்தாழ 140 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பெற்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மட்டுமே 40 மொழிபெயர்ப்புகள் உள்ளன. இவை திருக்குறளின் பெருமையை உணர்த்துகின்றன [5].

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், திருவள்ளுவரின் புகழைப் பறைசாற்றும் விதமாகப் பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. திருக்குறளின் மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில் இச்சிலை 133 அடி உயரமுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிலையின் உட்புறச் சுவரில் ஒவ்வோர் அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.


திருவள்ளுவரின் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும் இந்த நினைவக மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. கடந்த 1975-76வாக்கில் அன்றைய மாநில முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் 128 அடி உயர ரதம், வள்ளுவர் கோட்டமாகக் கட்டப்பட்டது.

லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

Thirukkural 3.jpg

சிங்கப்பூரில் திருவள்ளுவர் சிலை

 

திருவள்ளுவர் திருவுருவச் சிலைகள் சிங்கப்பூரிலும் உள்ளன.

Thirukkural 4.jpg

1)    உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் திருவள்ளுவர் சிலை

Thirukkural 5.jpg

2)    முனீஸ்வரர் ஆலயத்திலுள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை    

Thirukkural 6.jpg

3)    MDIS வளாகத்தில் மற்ற உலக அறிஞர்களுடன் அமர்ந்துள்ள நிலையில் திருவள்ளுவர் சிலை

Thirukkural 7.jpg

4)    புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் அமைந்துள்ள முருகன் திருக்குன்றம் ஆலயத்திலுள்ள திருமண மண்டபத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூரில் திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து ‘திருக்குறள் விழா’வை நடத்திவருகிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, நம் சமூகத்திற்குப் பெருமை சேர்ப்போரைக் குறள் விழாவில் பாராட்டிச் சிறப்பிப்பதை 1999இல் கழகம் தொடங்கியது.

தொடக்கப்பள்ளி முதற்கொண்டு, உயர்நிலை, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து நிலையிலும் திருக்குறள் நம் தமிழ் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.சுருங்கக்கூறின், திருக்குறள் சமயம் கடந்த நூலாகத் திகழ்வதோடு நின்றுவிடாமல், பொதுமனிதன் வீடுபேறு அடைவதற்கான நோக்கத்தையும் வழிமுறைகளையும் எடுத்தியம்பும் நெறிநூலாக விளங்குகிறது என்பது தெளிவு. திருக்குறள் தமிழ் நூல்களிலேயே அதிகம் படிக்கப்பட்ட, பேணப்பட்ட நூலாகும் எனவும் கருதப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

துணைநூல்கள்

[1]    மருதநாயகம், ப. (2008). ஒப்பில் வள்ளுவம். சாரதா பதிப்பகம்.
[2]    மலையமான். (1991) திருக்குறள் துளிகள். ஒளிப் பதிப்பகம். சென்னை 600018.
[3]    அண்ணாமலை, சுப. (2000). திருக்குறள் சிந்தனைகள்–அறத்துப்பால். வானதி பதிப்பகம்.
[4]    ஆண்டியப்பன், தே.  (1978). குறள் கண்ட நாடும் வீடும். திருநாவுக்கரசு தயாரிப்பு.
[5]    மீனாட்சி சோமசுந்தரம். ச. மெ. (2010) உலக அறநூல்களின் இமயம் திருக்குறள். மணிவாசகம் ஆப்செட் பிரிண்டர்ஸ். சென்னை 600021.