top of page
Final.png

தொல்காப்பியம்

உலகின் மிகப் பழமையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ்மொழியின் தொன்மை குறித்துத் தொல்காப்பிய இலக்கண நூலின்வழி அறியமுடிகிறது. தமிழர்கள் தங்கள் நிலத்தையும் நூல்களையும் கடல்கோள்களால் இழந்திருந்தாலும், தொல்காப்பியத்தின் இருப்பால் அவர்கள் தங்கள் பண்பாட்டையும் நாகரிகத்தையும் காத்துக்கொள்ள முடிந்துள்ளது. இனி, தமிழின் தொன்மையைத் தொல்காப்பியத்தின்வழிக் காண்போம்.

தமிழின் தொன்மை உணர்த்தும் தொல்காப்பியம்

கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் முதலிய மொழிகளின் பழமையோடு இணைநிற்கும் தகுதி தமிழ்மொழிக்கு உண்டு. திராவிட மொழிகளுக்குக் கிடைத்த மிகப் பழமையான நூல், தொல்காப்பியம். இக்காரணத்தால் இந்நூல் தமிழரின் முதனூல் என்று சிறப்புப் பெற்றுள்ளது. மேலும், இது தமிழர்களுக்குக் கிடைத்த மிகப் பழமையான இலக்கண நூலாகவும் விளங்குகிறது.

தமிழ்மொழி பழங்காலந்தொட்டு, இன்றளவும் மக்களால் பேசப்பட்டுவரும் மொழியாகத் திகழ்கிறது. தமிழ்மொழியின் பழங்கால இலக்கிய வளங்கள் மிகவும் பண்பட்டவையாகவும் சிறப்பான கட்டுக்கோப்புடையனவாகவும் அமைப்பு அடிப்படையில் நெடுங்காலமாக வளர்ந்து வடிவம் பெற்றனவாகவும் தமக்கெனத் தனி மரபுடையனவாகவும் விளங்குகின்றன. தமிழ்மொழியின் இலக்கிய, இலக்கணத் தொடக்கம் பொ.ஊ.மு. 8ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும் [1] என மொழியியலாளர்கள் சிலர் கணக்கிட்டிருக்கிறார்கள். இதன்வழித் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே விரிந்த இலக்கிய, இலக்கணப் பரப்பு இருந்துள்ளது என்பது தெரிகிறது. தொல்காப்பியர் 250க்கும் மேற்பட்ட இடங்களில் என்ப, மொழிப, என்மனார் புலவர் என்று சுட்டியதிலிருந்து இலக்கிய, இலக்கணத் தொடக்கத்தின் தொன்மை புலப்படுகிறது. காலந்தோறும் உரைகள் எழுதப்பட்டதாலும் இடையறாது தொடர்ந்து தோன்றிய இலக்கண நூல்களாலும் இலக்கண மரபின் தொடர்ச்சிக்கு வழிவகுத்ததாலும் தொல்காப்பியத்தின் சிறப்பை உணரமுடிகிறது.

தமிழ்மொழியில் உள்ள அகம், புறம் என்னும் இலக்கிய மரபு மிகப் பழங்காலம்முதல் பயன்பாட்டில் இருந்தமையினைக் காணமுடிகிறது. நிலப்பாகுபாடும் அவற்றுக்கேற்பத் திணைப் பாகுபாடும் கருப்பொருளும் இலக்கிய உத்திகளும் உள்ளுறை உவமங்களும் தமிழ் மரபுக்கு உரியனவாக இருந்துள்ளன. இதேபோன்று இலக்கண மரபும் மொழியை ஆராய்கின்ற மொழியியல் மரபும் தமிழுக்கெனத் தனியாக உண்டு. இவ்வாறு அமைந்த தமிழர்களின் வாழ்வியல் சிந்தனைகளையும் இலக்கணத்தையும் சமூகவியல், அறிவியல் கண்ணோட்டங்கள்கொண்டு விளக்கிய பாங்கு தொல்காப்பியத்தைச் சாரும்.

தொல்காப்பியர்

தமிழ்மொழியின் மரபிலக்கணங்களுள் தலையாயதான தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர். ‘தொல்காப்பியர் எனத் தன்பெயர் தோற்றி’ என்னும் பாயிரத்தால், இவர் பெயரே நூலுக்காயிற்று என அறியலாம். ‘தொல்காப்பியர்’ என்னும் பெயர் இயற்பெயர் என்பார் சேனாவரையர் என்னும் உரையாசிரியர். இவர் வடமொழி இலக்கண நூல் இயற்றிய பாணினிக்கும் முற்பட்டவர் என்பதால் இவரது காலம் பொ.ஊ.மு. 5ஆம் நூற்றாண்டு என்று கருத இடமுண்டு. இவர் வடமொழி மரபைப் பின்னபற்றவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்நூலின் பொருளதிகாரச் செய்திகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்க்கு என்று மட்டும் இல்லாமல், உலக மக்கள் அனைவர்க்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன. எனவே, வெறுமனே இலக்கண நூலாக மட்டுமே கருதப்படாமல் மானுட வாழ்வுக்கு வழிகாட்டியாக விளங்கும் வாழ்வியல் நூலாகவும் இது போற்றப்படுகிறது.

தொல்காப்பிய அமைப்பு

 

தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன:

  1. எழுத்ததிகாரம்

  2. சொல்லதிகாரம்

  3. பொருளதிகாரம்

இவற்றுள் முதல் இரண்டு அதிகாரங்களிலும் தமிழ்மொழியின் இலக்கணத்தைத் தொல்காப்பியர் விளக்குகிறார். பொருளதிகாரத்தில், தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றிக் கூறுகிறார். ஏனெனில், மனிதனின் வாழ்வியலோடு ஒன்றியதே மொழி. மேலும், மனிதகுலத்தின் வளத்தையும் வாழ்வையும் பிரதிபலிப்பது மொழி.

 

1) எழுத்ததிகாரம்

தொல்காப்பிய எழுத்ததிகாரம் 480 நூற்பாக்களைக் கொண்டது. ஒன்பது இயல்களாக இந்நூற்பாக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருவன:

  1. நூன்மரபு

  2. மொழிமரபு

  3. பிறப்பியல்

  4. புணரியல்

  5. தொகை மரபு

  6. உருபியல்

  7. உயிர் மயங்கியல்

  8. புள்ளிமயங்கியல்

  9. குற்றியலுகரப் புணரியல்

 

இவற்றுள் முதல் மூன்றும் ஒலியனியல் (Phonemics) பற்றியன. மற்றைய ஆறு இயல்களும் உருபொலியனியல் (Morphophonemics) பற்றியன.

2) சொல்லதிகாரம்

தொல்காப்பியச் சொல்லதிகாரம் 493 நூற்பாக்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்நூற்பாக்கள் 9 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருவன:

  1. கிளவியாக்கம்

  2. வேற்றுமை இயல்

  3. வேற்றுமை மயங்கியல்

  4. விளி மரபு

  5. பெயரியல்

  6. வினையியல்

  7. இடையியல்

  8. உரியியல்

  9. எச்சவியல்

3) பொருளதிகாரம்

மற்ற அதிகாரங்களைப் போலவே இதிலும் 9 இயல்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

  1. அகத்திணையியல்

  2. புறத்திணையியல்

  3. களவியல்

  4. கற்பியல்

  5. பொருளியல்

  6. உவமயியல்

  7. மெய்ப்பாட்டியல்

  8. செய்யுளியல்

  9. பொதுவியல் / மரபியல்

இவற்றுள் முதல் ஐந்து இயல்கள் இலக்கியம் படைப்பதற்குத் தேவைப்படும் பாடுபொருளான (Themes) அடிக்கருத்தியல் செய்திகளைப் பற்றியவையாகும். மற்றையவை ஓர் இலக்கியம் சிறப்பாக அமையத் தேவையான கூறுகள் எவை என்று விளக்குபவையாகும்.

 

தமிழ் எழுத்துகளின் பிறப்பும் தொல்காப்பியரின் அறிவியல் நுட்பமும்

இன்றைய உலகில், எதையும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து பயன்பெறுவதே சிறப்புடையது என்னும் சிந்தனைகொண்ட காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். அந்த வகையில், ஒரு மொழியை அறிவியல் முறைப்படி ஆராயும் துறையாக மொழியியல் துறை உள்ளது.

Pecholi.jpg

ஒரு மொழியின் அமைப்பினை ஆராய ஒலியியல் அறிவு மிகவும் தேவை. ஒலியியல் அறிவும் ஆராய்ச்சியும் மொழி ஆராய்ச்சிக்கு இன்றியமையாதன. தொல்காப்பியர் இதனை நன்கு உணர்ந்தவராக இருந்திருப்பார் என்பது அவர் பிறப்பியல் என்னும் இயலை வகுத்து அதில் ஒலியியலை விளக்கும் பாங்கிலிருந்து அறியலாம். பேச்சொலிகளின் தோற்றத்தை உந்தி முதலா முந்துவளித் தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ [2] என்னும் நூற்பாவின்வழி விளக்குகிறார். பிறப்பியல், பேச்சு உறுப்புகளாகச் செயற்படும் உடல் உறுப்புகளையும் அவ்வுறுப்புகளின் செயற்பாட்டையும் தெளிவாக விளக்குகிறது.

 

ஒவ்வோர் ஒலியின் பிறப்பின்போது, அடிவயிற்றிலிருந்து கிளர்ந்து எழும் காற்று, தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இடங்களில் நிலைபெறும். அதனைத் தொடர்ந்து, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் (உள்வாயின் மேற்பகுதி) ஆகிய உறுப்புகளில் காற்றானது பொருந்தி, ஒலிகளாகப் பிறக்கும். அவ்வொலிகளை எழுப்பும்போது, ஒலி உறுப்புகள் செயற்படும் விதத்தையும் உந்தி (தொப்புள்) முதலாகத் தொடங்கி விளக்கிவரும் நேர்த்தியும் இன்றைய ஒலியியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன [3]. இங்குத் தமிழ் இலக்கணம் கூறும் பிறப்பியல் பகுதி அன்றைய தமிழரின் மானிட உடல் உறுப்புப் (Anatomy) பற்றிய அறிவையும் காட்டுவதாக உள்ளது [1].

பேச்சொலிகளை உயிர், மெய் எனப் பாகுபடுத்திய தொல்காப்பியர் உயிரொலிக்கு விளக்கமும் தந்துள்ளார்.

பன்னீருயிரும் தந்நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும் [4]

என்பதே அவர் கூறும் விளக்கம். உள்ளே இருந்துவரும் காற்று எவ்விதமான தங்குதடையும் இன்றி வாய்வழிவந்து வெளிப்படும் தன்மை உயிர் ஒலிகள் தோன்றும் விதமாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறன்றித் தந்நிலை திரிந்து வாய், மூக்கு, நாக்கு, இதழ், பல் போன்ற இடங்களில் தடைபட்டு வெளிவரும் ஒலிகளே மெய்யொலிகள் ஆகும். இத்தகு கருத்தைக் கிட்டத்தட்ட 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் சிந்தித்து வழங்கியமை இவரது அறிவியல் நுட்பத்தைப் புலப்படுத்துகிறது [1].

 

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை

ஒரு நாட்டு மக்களின் பண்டைய வரலாற்றினையும் வாழ்க்கை முறையையும் நாகரிகத்தையும் தெரிந்துகொள்வதற்கு அந்நாட்டில் காணப்படும் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், நிலத்தின் கீழ்ப் புதைந்த கட்டட வகைகள், பழங்கால நாணயங்கள், பழங்கால இலக்கியங்கள் முதலியவை கருவிகளாக உதவுகின்றன. தமிழரின் வரலாற்றை அறிவதற்கு இலக்கியக் கருவூலமாக இருப்பது தொல்காப்பியமாகும். பழங்கால நூல்களுக்கு இலக்கணம் கூறும் நூலாக இது கருதப்பட்டாலும் அதன் பொருளதிகாரச் செய்திகள் பழந்தமிழ் மக்களின் நாகரிக வரலாற்றினை எடுத்துக்கூறுவதற்குப் பெருந்துணை புரிகின்றன.

 

நாகரிகம் (Civilisation) என்பது அக நாகரிகம் (Internal civilisation), புற நாகரிகம் (External civilisation) என இருவகைப்படும். அக நாகரிகம் என்பது அனைத்து உயிர்களிடத்தும் காணப்படும் ‘அன்பு’ என்னும் நுண்பொருளை (கண்களால் காண முடியாது; உணர்வால் அறியக்கூடியதும் அழியாத் தன்மையுடையதும்) அடிப்படையாகக் கொண்டது. புற நாகரிகம் என்பது ‘செல்வம்’ என்னும் பருப்பொருளை (கண்களால் காண முடியும்; திடப்பொருளாக அமையும், அழியும் தன்மையுடையது) அடிப்படையாகக் கொண்டது. அகத்தே, அதாவது மனத்தில் தோன்றும் அன்புணர்வு வலிமைபெற்று வளர்வதற்குப் புற நாகரிகத்திற்கு அடிப்படையாக விளங்கும் செல்வம் துணைபுரிய வேண்டும். இத்தகைய வழியில் வாழ்க்கை நடத்தும் மக்கள் சமூகத்தில்தான் இருவகை நாகரிகங்களும் ஒன்று மற்றொன்றோடு முரண்படாமல் அமைந்து அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பங்களைச் செம்மையாக வழங்கி அவர்களது வாழ்வினை வளமாக்கும் [5]. இவ்வாறு இல்லாமல் புறவாழ்வுக்குத் தேவையான செல்வம் அகவாழ்வுக்கான அன்புக்குத் துணைபுரியாமல் போகுமானால் அது நாகரிகத்தினை அழித்துவிடும்.

தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் செய்திகள்

தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் உலக வழக்கையும் செய்யுள் (இலக்கிய)  வழக்கையும் அடிப்படையாகக் கொண்டவை. மக்களிடையே காணப்படும் சொல் வழக்காறுகள், வாய்மொழிப் பாடல்கள், ஏட்டில் ஏறா இலக்கியங்கள் முதலிய இயல்பான  வாழ்வியல் முறைகளை ‘உலக வழக்கு’ என்பர். இது உலகிலுள்ள தரமான பேச்சுவழக்கைக் குறிக்கும். கொச்சைமொழி, பிழைபட்டவை முதலியவற்றைத் தொல்காப்பியர் உலக வழக்கு என்று ஏற்கவில்லை. பேசுபவன் வாழும் காலம்வரை பேச்சுவழக்கு இருக்கும்.

 

உலக வழக்கில் சிறப்புடையதாக விளங்கும் முறைகளைத் தேர்ந்தெடுத்துப் பிற்கால மக்களின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்று கருதிப் புலவர்களால் பலபடப் புனைந்து படைக்கப்படுவது ‘செய்யுள் வழக்கு’ என்று அறியலாம். செய்யுள் என்பதை இன்றைய படைப்பிலக்கியங்களாகக் கொள்ள முடியும். செய்யுளை இயக்க வல்லவர், பல்வகைச் சொற்கள், அவை உணர்த்தும் பொருண்மை, அழகுபட உணர்த்தும் முறைமை ஆகிய நான்கும் அவசியம்.

 

பேச்சுவழக்குக்கும் செய்யுள் வழக்குக்கும் கருத்துணர்வே அடிப்படையாக உள்ளது. தொல்காப்பியம் பண்டைத் தமிழரின் வாழ்க்கை முறைகளைப் பக்குவமாக எடுத்துக்கூறும் விழுமிய நூல் என்பது தெளிவாகிறது. இவ்விழுமிய நூலில் காணப்படும் ஒருசில குறிப்புகளைக் கொண்டு பண்டைத் தமிழரின் வாழ்க்கைமுறை குறித்த ஒரு சில செய்திகளைப் பார்ப்போம்.

வாழ்க்கை நலம்

ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை நலத்தை அறிவதற்கு அந்நாட்டு மக்களின் கருத்துவளம் அளவுகோலாக அமைகிறது. இக்கருத்து வளத்தை அந்நாட்டு மக்களின் இலக்கியங்களில் காணலாம். இத்தகைய கருத்து வளத்தைக் கொண்ட இலக்கியங்களுக்கும் வாழ்க்கை இயல்பிற்கும் இலக்கணம் கண்டது தமிழ்மொழி. தொல்காப்பியம் மக்கள் வாழ்வினை அகவாழ்வு, புறவாழ்வு என இருபிரிவாகப் பிரித்து விளக்கியுள்ளது. அகவாழ்வுபற்றிக் கூறுவது அகத்திணை; புறவாழ்வினைப் பற்றிக் கூறுவது புறத்திணை. இதில் திணை என்பது ஒழுக்கம் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. அதாவது, வாழ்க்கைமுறை / வழிமுறை என்று கொள்ளலாம். அகத்திலே – அதாவது மனத்திலே – நிகழும் ஒழுக்கம், அகத்திணை; புறத்திலே நிகழும் ஒழுக்கம், புறத்திணை. இவற்றை அகப்பொருள் என்றும் புறப்பொருள் என்றும் வழங்குவதுண்டு. தமிழரது பண்பாட்டின் மேன்மையை அவர்களது அகவாழ்வும் புறவாழ்வும் நன்கு புலப்படுத்துகின்றன. தமிழ் இலக்கியம் கூறும் திணைக் கோட்பாட்டினைத் திராவிட அழகியல் கோட்பாடு (Dravidian Aesthetics) என்று முனைவர் பணிக்கர் கூறுவது குறிப்பிடத்தக்கது

காதல் நிகழ்ச்சிகளும் வீர நிகழ்ச்சிகளும் எல்லா மொழிகளிலும் எல்லா நாட்டு இலக்கியங்களிலும் காணப்பெறும் செய்திகளே. ஆனாலும், இந்த இரண்டு உணர்ச்சிகளின் அடிப்படையில் தோன்றும் நிகழ்ச்சிகளுக்குத் திணை, துறைகள் அமைத்து இலக்கண வரம்புக்குள் அடக்கி, இலக்கிய மரபுகளாகச் செய்த பெருமை தமிழ்மொழிக்கு உண்டு [5].

சமூக வாழ்க்கை

தொல்காப்பிய நூலிலிருந்து அந்நூல் எழுதப்பட்ட காலத்திலும் அதற்கு முன்பும் சமூக வாழ்க்கை எங்ஙனம் இருந்தது என்பதைச் சில குறிப்புகளால் அறிந்துகொள்ளலாம். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் மக்களிடையே பலவிதமான பிரிவுகள் ஏற்பட்டிருந்தன. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் பிரிவுகள் இருந்தன.

மேற்குறிப்பிட்ட பிரிவுகள் யாவும் பிறப்பினால் ஏற்பட்டவையன்று என அறிஞர்கள் கருதுகிறார்கள். அவரவர் செய்யும் தொழில், ஒழுக்கம், கல்வி, திறமை காரணமாகவே இப்பிரிவுகள் அமைந்தன. தமிழர்களின் வாழ்வியல், அரசியல், பொருளியல் ஆகியவை எவ்விதத் தடையுமின்றி நடைபெறவேண்டும் என்பதற்காக முன்னோர்களால்  ஏற்படுத்தப்பட்ட இப்பிரிவுகள் அவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்துகின்றன.

இவர்களைத் தவிர பாணர், கூத்தர், பொருநர், பார்ப்பார், அடிமை வேலை செய்வோர், தேர்ச்சிபெற்ற தொழிலாளர்கள், யாழ் வாசிப்போர், நாடகம் நடிப்போர் போன்ற பல பிரிவினர்களும் இருந்தனர். இது குறித்த குறிப்புகள் யாவும் நமக்குத் தொல்காப்பியரின் புறத்திணையியல்வழித் தெரியவருகின்றன.

முப்பொருள் உண்மை

தொல்காப்பியர் காலத்திலும் அவர்க்கு முன்னும் மக்கள், உலகம், உயிர், இறை என்னும் முப்பொருள்களின் உண்மையை நன்கு அறிந்திருந்தனர். இவற்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு ஏற்ற மெய்யுணர்வு அவர்களிடம் அமைந்திருந்தது. உயிர் அழிவில்லாதது என்பது தமிழரின் கொள்கை. இதனால்தான் அது ‘மன்னுயிர்’ எனத் தமிழ் மரபில் வழங்கப்படுகிறது. இம்மரபினைத் தொல்காப்பியர் ‘தொல்லுயிர்’ எனக் குறிப்பிடுகிறார். உயிர் எத்தகையது? என்னும் வினாவிற்கு அது உணர்தல் தன்மையுடையது என்கிறார் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களுள் ஒருவரான சேனாவரையர்.

 

உடல் வேறு உயிர் வேறு என்னும் நம்பிக்கை தொல்காப்பியர் காலத்திலும், அதற்கு முன்னரும் இருந்து வந்துள்ளது. உடம்பை நடமாடச் செய்யும் உயிர் ஒரு தனிப்பொருள் என்பதே தொல்காப்பியரின் கொள்கையாகும். உயிர்கள் தாங்கள் குடிகொண்டுள்ள உடம்பில் அமைந்த உறுப்புகளின் வழியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். இவ்வுலகில் உள்ள உயிர்களை ஓர் அறிவு உடையன என்பது தொடங்கி ஆறு அறிவு உடையன என்பது வரையில் அறுவகையாகப் பிரிக்கப்பட்டு இருந்ததைப் பின்வரும் தொல்காப்பிய நூற்பா குறிக்கிறது.

 

ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே

இரண்டறிவு அதுவே அதனொடு நாவே

மூன்றறிவுஅதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே

ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே [6]

ஓரறிவாகிய தொடுதல் உணர்வு மட்டும் உடையன புல், மரம் போன்றவை. அடுத்தநிலையில் தொடுதல் உணர்வும் சுவை உணர்வும் கொண்ட (வாய்) ஈரறிவு உயிர்களாக நத்தை, கிளிஞ்சல் முதலியனவற்றை அடக்குகிறார். அதற்கடுத்த நிலையில் இன்னுமோர் அறிவு கூடி நுகர்தல் உணர்வு (மூக்கு) உடைய கறையான், எறும்பு முதலியன அடங்குகின்றன. மூன்றறிவோடு நாலாவது அறிவான பார்த்தல் உணர்வு (கண்) சேர்ந்து நண்டு, தும்பி முதலியனவாய்ப் பிறக்கின்றன. அதன்பின் இன்னும் ஓர் அறிவு கூடிச் கேட்டல் உணர்வு (செவி) பெற்ற விலங்குகளாகப் பிறவி எடுக்கின்றன. அதற்குப் பிறகு அறிவு விளக்கம் மிகவும் விரிவடைந்து மன அறிவும் பெற்று ஆறறிவுடைய மக்களாகப் பிறவி எடுக்கின்றன [5]. இதனை அறிவியல் அறிந்தோர் டார்வினின் பரிணாமக் கொள்கையோடு ஒப்பிடுவார்கள். ஆனால், நாம் ஒன்றை இங்குத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். டார்வினின் கொள்கை பரிணாம வளர்ச்சி குறித்தது; ஆனால், தொல்காப்பியர் விளக்குவது படைப்புக் கொள்கை குறித்ததாகும்.

எங்கும் நீக்கமற நிறைந்த முழுமுதற்பொருளைக் ‘கடவுள்’ என்னும் பொதுப்பெயரால் சிறப்பித்துப் போற்றியுள்ளார், தொல்காப்பியர். கடவுள் என்னும் சொல் இன்ன நிறம் இன்ன உரு என்று அறிய முடியாத நிலையில் எல்லாத் தத்துவங்களையும் கடந்து நிற்கும் முழு முதற்பொருளைக் குறிக்கும் காரணப் பெயராகும். கடவுள் – கடந்து நிற்றல்; அதாவது, பொதுத்தன்மையைக் கடந்து நிற்றல். எல்லாப் பொருள்களையும் உள் நின்று இயக்குபவன் இறைவனாதலின் ‘இயவுள்’ என்ற பெயரும் அவனுக்குப் பெயராக அமைந்தது.

 

மேற்கண்ட செய்திகளிலிருந்து பண்டைத் தமிழர்களின் பெருமைக்கு நற்சான்றாய் விளங்குவது தொல்காப்பியப் பொருளதிகாரம் என்பது தெளிவாகிறது. அது மட்டுமின்றி, உலகில் தோன்றி வளர்ந்த பண்பட்ட மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று என்றும் அம்மொழியைப் பேணி வளர்த்த தமிழர்கள் பண்பட்ட நாகரிகமுடையவர்கள் என்றும் அறிகிறோம் [5].

துணைநூல்கள்

[1]    பாடம் 7 - தமிழ் மொழியியல் மரபு, தாள் 1 மொழியியல் வரலாறு, முதுகலை – மொழியியல் முதலாமாண்டு, அண்ணாமலைப் பல்கலைகழகத்

        தொலைதூர இயக்ககத்தின் வெளியீடு.

 

[2]    தொல்காப்பியப் பிறப்பியல் – நூற்பா 83.

 

[3]   பாடம் 2 – ஒலியியல் பிரிவுகள், தாள் 2 ஒலியியலும் ஒலியனியலும் (எழுத்தியல்), முதுகலை – மொழியியல் முதலாமாண்டு, அண்ணாமலைப்

        பல்கலைகழகத் தொலைதூர இயக்ககத்தின் வெளியீடு.

 

[4]   தொல்காப்பியப் பிறப்பியல் – நூற்பா 84.

 

[5]   சுப்பு ரெட்டியார்,  ந. (2011), தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, சென்னை: சந்தியா பதிப்பகம்.

 

[6]   தொல்காப்பியம், மரபியல் – நூற்பா 26.

Iyal 1 Chap 1 references
bottom of page