top of page
Final.png

தமிழரின் உலகு பற்றிய பரந்தநோக்கு

பழந்தமிழர்களுக்கு உலகுபற்றிய பரந்தநோக்கு இருந்துள்ளது என்பதற்குப் பற்பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. அவர்கள் மொழி, இனம், நாடு என்னும் குறுகிய வட்டங்களைக் கடந்து, உலக மனிதனின் நல்வாழ்வைச் சிந்தனையில் நிறுத்தி, பொதுநலம் கருதி, அறத்தின் அடிப்படையிலான நற்கருத்துகளை மொழிந்தனர். அத்தகு உலகச் சிந்தனை (world view) தமிழரின் தனித்துவப் பார்வையாகவும் வாழ்வியல் சார்ந்ததாகவும்  விளங்கியது.

கற்கால மனிதன், மனத்தளவில் பண்பட்டு, நாகரிக நிலையை எட்டுவதற்குப் பற்பல நூற்றாண்டுகள் எடுத்துள்ளான். தமிழரின் வரலாற்றையும் அவர்கள் கண்ட நாகரிக வளர்ச்சியையும் கண்ணுறும்போது, அவர்கள் அவ்வாறு நாகரிகமாக வாழ்ந்த காலத்தில், அன்றைய எத்தனையோ சமூகங்கள், பழங்குடி மக்களாகவும் நாடோடி மக்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை அறியலாம். அத்தகு பண்பட்ட அகவளர்ச்சியையும் புறவளர்ச்சியையும் பெற்று வாழ்ந்தமையால், உலக மக்களுக்குப் பொருந்துகின்ற பேரிலக்கியங்களையும் காலம், இடம் கடந்த உயர்சிந்தனைகளையும் தமிழர்களால் வழங்க முடிந்துள்ளன. மக்கள் ஒழுக்கமும் அமைதியும்கொண்ட வாழ்வை வாழ்ந்திடவேண்டி அவை படைக்கப்பட்டன.

தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் உலகு பற்றிய சிந்தனை

a15 p1.jpg

பழந்தமிழர்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளின் எல்லைகளுக்கு அப்பால் அனைத்து ஊரையும் தம் ஊராகவும் அதில் வாழும் அனைத்து மக்களையும் தம் உறவினராகவும் கருதினர். கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்,’ இதற்குச் சான்று பகர்கிறது (புறநானூறு: 192). இப்பாடல் மனிதநேயத்தை வளர்க்கவும் உலகை அமைதிப் பூங்காவாக வைத்துக்கொள்ளவும் வழிகாட்டுகிறது. தமிழ்ச் சான்றோர்கள் உலகுபற்றிய சிந்தனைமிக்கவர்களாக விளங்கினர் என்பதற்குத் தொல்காப்பியம், திருக்குறள், சங்ககாலப் பாடல்கள், காப்பியங்கள் போன்றவை எப்படிச் சான்றுகளாக அமைந்துள்ளன என்பதை ஆராய்வோம்.

தொல்காப்பியம்

தொல்காப்பியம் நமக்குக் கிடைத்த தொன்மை வாய்ந்த அரிய இலக்கண நூல். இதனை இயற்றிய தொல்காப்பியர் உலகத்தைப் பற்றிய பரந்த சிந்தனையைக் கொண்டவராகத் திகழ்ந்தார். தொல்காப்பியர் மரபியலில், எல்லா உயிர்களையும் அறுவகையெனப் பாகுபடுத்தி அவற்றின் அறிவுநிலையை விளக்கினார்:

ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே

ஆறறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே [நூற்பா: 1526 - மரபியல் 27]

தொடு உணர்வுகொண்ட ஓரறிவு உயிர்களுள் புல், மரம், கொடி, செடி போன்றவை அடங்கும். வாய் என்னும் உறுப்பைக் கொண்ட உயிர்களுக்கு ஈரறிவு உண்டு. அவை நத்தை, சங்கு, புழு போன்றவை. அடுத்து, மூக்கு என்னும் புலனைப் பெற்ற உயிர்களுக்கு மூவறிவு உண்டு. எடுத்துக்காட்டிற்கு, எறும்பு, கறையான், அட்டை போன்றவை. நான்கறிவுகொண்ட உயிர்களுக்குக் கண் உண்டு. நண்டு, வண்டு போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஐந்தறிவுகொண்ட உயிர்களுக்குச் செவி இருப்பதால் விலங்கு, பறவை போன்றவை அடங்கும். இறுதியாக, ஆறறிவுகொண்ட மனிதனை அவர் குறிப்பிடுகிறார். மனிதன் மனம் என்னும் அகக்கருவியைப் பெற்றிருப்பதால் சிந்தனைசெய்யும் தகுதியையும் திறனையும் பெறுகிறான். உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களின் அறிவுப் பரிணாமம்பற்றித் தொல்காப்பியர் அளித்த விளக்கம் அவர்தம் உலகச் சிந்தனையைப் புலப்படுத்துகிறது.

அடுத்து, தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அமைந்துள்ள ஐந்திணைக் கோட்பாடுகள்பற்றிப் பார்ப்போம். உலகம் போர்க்களமின்றி அமைதிப் பூங்காவாக விளங்க இன்றியமையாதது அன்பு. இதனை வலியுறுத்தும் வகையில் தமிழரின் அகவாழ்க்கை அன்பைச் சார்ந்திருந்தது. மனிதன் அன்பினைப் பிறரிடம் காட்டவும் பிறரிடமிருந்து அதனைப் பெறவும் செய்கிறான். அன்பு என்பது ஒரு பொதுவுணர்வு. தமிழர்கள் ஐந்திணைசார்ந்த அகவாழ்க்கையில் அன்பினைப் போற்றி வாழ்ந்தனர். இதனைத் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் விளக்கியுள்ளார்.   

சங்ககாலப் பாடல்கள்

பண்டைக்காலம் முதற்கொண்டு புலவர்கள் பலரும் அன்பு குறித்துப் பாடினர். அன்பு என்பது பல நிலைகளில் வெளிப்படக்கூடிய ஒன்று. எடுத்துக்காட்டிற்கு, கற்பு, களவு, இறைபக்தி, நட்புப் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்த உள்ளப் பிணைப்பை அழகிய நடையில் சித்திரித்திருந்தனர் நம் முன்னோர்கள். இவர்களின் சித்திரிப்பில் மேலோங்கி நிற்பவை அகத்திணைப் பாடல்கள். அப்பாடல்கள் உலகுக்குப் பொருந்தும்படியாகப் பொதுநிலையில் பாடப்பட்டுள்ளன.

 

அகத்திணைப் பாடல்கள் தலைவன், தலைவியின் அன்பை மையமாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளன. அவை தலைவன் – தலைவி ஆகிய இருவருக்கிடையே நிகழும் நெருக்கத்தையும் ஊடலையும் பிரதிபலித்துக் காட்டுபவை. தலைவன், தலைவியின் இல்லற வாழ்க்கைக்கும் அவ்வாழ்க்கையை இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் ஒருவரோடொருவர் விட்டுக்கொடுத்துப் பகிர்ந்துகொள்வதற்கும் உகந்த ஆலோசனைகளையும் கருத்துகளையும் அடிப்படையாகக்கொண்டு விளங்குவதே அகத்திணைப் பாடல்களாகும்.

‘அன்பு’ என்பது உலக மக்களுக்கும் உயிரினங்கள் அனைத்திற்கும் உரிய பொதுச்சொத்து. இதனைக் கருத்திற்கொண்டு, அகத்திணைப் பாடல்கள் பாடிய புலவர்கள் தலைமக்களின் பெயர்களைப் பதிவுசெய்யவில்லை. “அவன்”, “அவள்”, “தோழி” என்று மட்டுமே குறிப்பிட்டனர். இதைச் சுட்டிக்காட்டும் வகையில் தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்’ என்னும் அடி 57ஆம் பாடலில் இடம்பெற்றுள்ளது.  மாறாகப் புறத்திணைப் பாடல்களில் கதைமாந்தர்களின் பெயர்கள் – பாண்டியன் நெடுஞ்செழியன், கரிகாற்சோழன், சேரன் செங்குட்டுவன் என வெளிப்படையாகக் குறிக்கப்பட்டுள்ளன.

திருக்குறள்

உலக மக்கள் ஒவ்வொருவரும் பிறர் நலம் கருதிப் பிறரின் துன்பத்தைத் துடைக்கும் மனப்பான்மையினைக் கொண்டவர்களாக வாழ்ந்திடல் வேண்டும் என்பதனைப் புலப்படுத்தும் வகையில் தமிழ்ப் புலவர்கள் பரந்த உள்ளத்தோடு தங்கள் படைப்புகளை இவ்வுலகிற்குத் தந்துள்ளனர். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் தம் பெயர், குடி, மொழி, இனம் போன்ற அடையாளங்களைப் பற்றிய விளக்கத்தை எங்கும் குறிப்பிடவில்லை. அதற்குக் காரணம் என்ன? அவர் உலகுபற்றிய பரந்த சிந்தனைமிக்கவராகத் திகழ்ந்ததாலும் உலகப் பொதுமறை படைக்க முயன்றதாலும் தம்மைப் பற்றிய தகவல்களை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக, தாம் கூற விழைந்த கருத்துகளை உலகம் பின்பற்றி நடப்பதே முக்கியம் என்று அவர் கருதியிருக்கக்கூடும்.  

திருவள்ளுவர், ‘அகர முதல எழுத்தெல்லாம்,’ என்னும் முதற்குறளின் மூலம் ‘உலகு’ பற்றிய கருத்தினை விளக்கியுள்ளார். உலகம் என்னும் பரந்த நிலத்தில் மனிதன் மட்டுமே வாழ்ந்து இன்புறுவதற்காகப் படைக்கப்பட்டதன்று. ஐம்பூதங்களையும் சார்ந்துள்ள உயிரினங்களும் பூத்துக்குலுங்கும் மரஞ்செடிகொடி தாவர வகைகளும் வாழ்வதற்காகவும் செழித்திடுவதற்காகவும் இவ்வுலகம் படைக்கப்பட்டுள்ளது. எனவே, பிற உயிரினங்களோடு மனிதன் ஒத்திசையும் மனத்துடனும் புரிந்துணர்வுடனும் வாழ்வது இன்றியமையாததாகும். திருக்குறள் அனைத்து உயிர்களின் நலன்கருதிப் பாடப்பட்டதால் அது உலகின் எல்லாச் சமூகங்களும் சமயங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.   அதோடு, அதில் வகுக்கப்பட்ட வாழ்வியல் சிந்தனைகளும் கூறுகளும் மனிதகுலத்திற்குத் தேவையான செந்நெறிபற்றிப் பொதுநிலையில் விளக்கப்பட்டுள்ளது.   

அடுத்து,

 

     நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
     வான்இன்று அமையாது ஒழுக்கு (குறள் 20)

என்னும் குறள் உலகுபற்றிய பார்வையை உணர்த்துகிறது. மழையில்லாமல் எவ்வாறு உலகம் இயங்க இயலாதோ, அதேபோன்று ஒழுக்கம் இல்லாமல் மனிதன் இப்பூவுலகில் வாழ்வது சாத்தியப்படாது என்பது கருத்து. ஒழுக்கமே மனித வாழ்க்கைக்கு வித்தாகும். ஏனெனில், ஒழுக்கம் இல்லையெனில் மனிதன் பண்பட்டவனாக வாழ இயலாது. மேலும், அவனால் பிறர்நலம் கருதி அன்பும் அறமும் கொண்டவனாகவும் செயல்பட இயலாது.

 

     பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
     செய்தொழில் வேற்றுமை யான் (குறள் 972)

உலக மக்கள் அனைவரும் பிறப்பால் ஒன்றுபட்டவர். உயர்வு தாழ்வின்றி மனிதன் சமத்துவ எண்ணத்தோடு உலகில் வாழ்வது இன்றியமையாததாகும்.

மேற்கூறப்பட்ட காரணங்களால் திருக்குறள் மனித குலத்திற்கு உரிய பொதுச்சொத்து என்றும் இந்நூல் அனைவர்க்கும் பயன்படும் ஓர் அரிய நூல் என்றும் கருத்திற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமனிதனுக்கு உரிய நீதிக்கருத்துகள் திருக்குறளில் பாடப்பட்டுள்ளபடியால் திருக்குறள் ‘பொதுமறை’ என்றும் வழங்கப்படுகிறது.

திருக்குறளில் இடம்பெற்ற 133 அதிகாரங்களும் தமிழர்களுக்கு மட்டும் பயன்படுமாறு அமைக்கப்படவில்லை. எடுத்துக்காட்டிற்கு, இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், அன்புடைமை, விருந்தோம்பல், கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் உலக மக்கள் அனைவர்க்கும் பொதுமையானவையாக விளங்குகின்றன [1].    

பிற நூல்கள்

புலவர் சேக்கிழாரின் பெரிய புராணம், ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்,’ என்னும் அடியில் தொடங்குகிறது. தமிழர்கள் கொண்டிருந்த உலகுபற்றிய சிந்தனைக்கு இது மற்றோர் எடுத்துக்காட்டு. கவிச்சக்கரவர்த்தி கம்பர் ராமவதாரம் என்னும் தலைப்பிலான காப்பியத்தை உலகம் என்னும் சொல்லில் தொடங்குகிறார்:

 

     உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்

     நிலைபெறுத்தலும்  நீக்கலும் நீங்கலா

     அலகு இலா விளையாட்டு உடையார் – அவர் தலைவர்

     அன்னவர்க்கே சரண் நாங்களே

உலகங்கள் பல என்று நம்பும் கம்பன், அவை அனைத்தையும் படைத்த தலைவன் ஒருவனே என்றும் அவனுடைய விளையாட்டு அளவிட முடியாத ஒன்று என்றும் போற்றுகிறார். 

அடுத்து, உலகநாதன் இயற்றிய ‘உலகநீதி’யைக் குறிப்பிடலாம். இந்நூல், உலக மக்களுக்குப் பொதுவான அறக்கருத்துகளைச் சொல்கிறது. தாயுமான சுவாமிகள் ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லால் வேறொன்றறியேன் பராபரமே,’ என்னும் சிந்தனை, உலக உயிர்கள்மீது அவர் கொண்டுள்ள கருணையுணர்வை நமக்குப் பறைசாற்றுகிறது. தன்னலம்பற்றி மட்டும் எண்ணி இன்புற்றிராமல், எல்லா உயிர்களும் இன்புற்றிட வேண்டும் என்னும் பரந்த எண்ணம் தமிழர்களிடையே பண்டைக்காலம் தொட்டுத் தொடர்ச்சியாக நிலவி வந்துள்ளது.

பாரதியாரின் கவிதைகளில், ‘காக்கை குருவி எங்கள் ஜாதி, கடலும் மலையும் எங்கள் கூட்டம்,’ ‘தனியொருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்,’ போன்ற வரிகள் தமிழர்கள் உலகை நேசித்திடும் மனப்பாங்கைக் காட்டுகின்றன.

 

சமத்துவநோக்கு

தமிழர்களின் உலகுபற்றிய சிந்தனை பெருமைக்குரியதாகும். தம் இனத்தவர் மட்டும் ஒற்றுமையுடன் வாழ்தல் வேண்டும் என்று கருதாது, உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையே அவர்கள் நம்பினர்; விரும்பினர். இதற்குச் சான்றாக அமைவது திருமூலரின் அடியான, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதாகும். உலக மக்கள் பல்லினம், பல சமயங்கள் சார்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் தங்களின் இனம், சமயம் ஆகிய வேறுபாடுகளைக் களைந்து, சமத்துவத்துடன் வாழவேண்டும் என்பதை அவரது உயர்சிந்தனை புலப்படுத்துகிறது.  

 

உலகச் சிந்தனை

கவிமணி தேசிக விநாயகபிள்ளை பரந்துபட்ட உலகச் சிந்தனை கொண்டவராகத் திகழ்ந்தார். அவரின் உலகச் சிந்தனையின் வாயிலாக வெளிவந்ததே அவர் இயற்றிய ஆசிய சோதி, உமார் கய்யாம் பாடல்கள். கவியரசு கண்ணதாசன் இயேசு காவியம் என்னும் தமிழ்க் காப்பியத்தை இயற்றினார். கவிமணி தேசிக விநாயகபிள்ளை, கவியரசு கண்ணதாசன் போன்றோர் பரந்த உலகச் சிந்தனையோடு செயல்பட்டமை கவனத்திற்குரியது.

காப்பியங்கள்

தமிழர்கள் உலகிற்கு அளித்த சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களுள் மணிமேகலை சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகும். சிலப்பதிகாரம் நமக்குக் கிடைத்த முதல் பெருங்காப்பியம். மணிமேகலை நமக்குக் கிடைத்த முதல் பௌத்த காப்பியமாகும். சிலப்பதிகாரம் ஒரு சமயக் காப்பியமன்று.

இவ்விரண்டு காப்பியங்களிலும் உலகுபற்றிய பரந்தநோக்குக் காணப்படுவதே இவ்விரு காப்பியங்களின் சிறப்புத் தன்மையாகும். சிலப்பதிகாரத்தில் மனித வாழ்க்கைக்குத் தேவையான விழுமியங்கள் கூறப்பட்டுள்ளன. அவை பொதுமனித வாழ்க்கைக்கு உகந்த பொதுக்கருத்துகளாக அமைந்துள்ளன. உலகத்தார் வாழ்ந்திட வேண்டிய சீரிய ஒழுக்க முறையினைப் பற்றி அமைந்துள்ளன. உதாரணத்திற்குக் கணவன்-மனைவி உறவினைப்பற்றிச் சிலப்பதிகாரமும் பிறர் நலனை மனத்தில் நிலைநிறுத்தி வாழும் வாழ்க்கையைப்பற்றி மணிமேகலையும் வலியுறுத்துகின்றன. மணிமேகலையை உற்றுநோக்கும்போது, இது அடிப்படையில் ஒரு பௌத்த காப்பியமாக இருந்தபோதிலும், இக்காப்பியத்தின் ஏடுகளில் உலகுபற்றிய பரந்தநோக்கு பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது.  

இவ்விரண்டு காப்பியங்களும் தமிழர்கள் படைத்தவை. இருப்பினும், இவற்றுள் கூறப்பட்டுள்ள கருத்துகள் தமிழர்களுக்கு மட்டுமே பொருந்துவதன்று. அவை உலக மக்களின் நல்வாழ்க்கைக்கு உகந்தவையாக அமைக்கப்பட்டன.

ஆன்மநேய ஒருமைப்பாடு

உலகுபற்றிய பரந்தநோக்கைக் கொண்ட சான்றோர்களுள் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருட்பிரகாசர் வள்ளலார் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியவர். அவரது பரந்த சிந்தனை எல்லாச் சமயங்களையும் அரவணைக்கும் விதமாக அமைந்திருந்தது. எல்லா உயிர்களும் ஒன்றே என்றும் எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் கருத வேண்டும்; அவற்றைச் சமத்துவ நோக்கோடு பாவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்தகு பண்பு அவரிடம் இருந்தமையால்தான் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று அவரைப் பாட வைத்தது.

  

‘உலகு,’ என்னும் விரிந்த சிந்தனை மனிதகுலத்தை வாழ்விக்க வந்த அறச்சிந்தனையாகும். ஆகையால், உலக மக்கள் மனிதநேயம் என்னும் சிந்தனையையும் கடந்த ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வோடு வாழ்வது வாழ்க்கையை வாழ்வதற்கான வித்தாகும் என்பது வள்ளலாரின் குறிப்பிடத்தக்க நெறியாகும்[2]. உலக உயிர்களை அரவணைத்துப் போற்றும் வள்ளலாரின் சிந்தனையில் உலகுபற்றிய பார்வை மேலிடுகிறது.

      

நம் பண்டைத் தமிழர்களைப் போலவே, நம் சிங்கப்பூர்த் தமிழர்களும் உலகுபற்றிய பரந்த பார்வையைக் கொண்டுள்ளனர். அவர்கள் உலக மக்களின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் கொண்டுள்ள அக்கறையின்பால் பல நல்ல திட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர்.  முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் 1997ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அவ்வாண்டு தொடங்கி இந்த மாநாடு ஆண்டுதோறும் இந்தியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி  எனப் பல நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் முதலாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டை 1992இல் தொடங்கியது. கடந்த 2011ஆம் ஆண்டில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைச் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்’ என்பதாகும். சிங்கப்பூரின் 50வது சுதந்தர நாளையொட்டி, இந்நாட்டின் 50 ஆண்டுகாலத் தமிழ் இலக்கிய நூல்களை மின்மயமாக்கி இலவசமாக உலகெங்கும் பரப்ப வழி செய்யப்பட்டது. உலகுபற்றிய ஒருங்கிணைப்புச் சிந்தனை நம் சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு இருக்கிறது என்பதற்கு இவை நற்சான்றுகளாகும்.

 

துணைநூல்கள்

[1]   தமிழாய்வுத்துறை தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி. (புதுப்பித்த பதிப்பு 2002-2003). சமூகவியல் நோக்கில் தமிழ்

       இலக்கிய வரலாறு.

[2]   பேரின்பன், தேவ. (2014). தமிழர் வளர்த்த தத்துவங்கள். சென்னை: பாரதி புத்தகாலயம்.

bottom of page