top of page
Final.png

உமறுப்புலவர்

சைவத்தின் பெரியபுராணமும் வைணவத்தின் கம்பராமாயணமும் சமணத்தின் சீவகசிந்தாமணியும் பெளத்தத்தின் மணிமேகலையும் கிறித்துவத்தின் தேம்பாவணியும் தமிழர்கள் பெரிதும் போற்றும் காப்பியங்களாக விளங்குகின்றன. இந்த வரிசையில், இஸ்லாமிய நெறிசார் காப்பியமாக விளங்குவது ‘சீறாப்புராணம்’. அரபு மொழியில், ‘சீறத்’ என்றால் வரலாறு எனப் பொருள்படும். அண்ணலார் நாயகத் திருமேனி முஹம்மதின் (சல்) வரலாற்றைக் காப்பிய வடிவில் தர முற்பட்டவர் கவிஞர் உமறு. அது ‘சீறாப்புராணம்’ என்னும் புகழ்பெற்ற காவியமாக உருப்பெற்றது.

 

பொ.ஆ. (பொது ஆண்டு) 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் உமறுப்புலவர் திருநெல்வேலியில் எட்டையபுரத்தை அடுத்த நாகலாபுரத்தில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் முகம்மது நெயினார் பிள்ளை என்றும் இவர் பிறந்தது ஹிஜ்ரி 1052 ஷஅபான் மாதம் 9ஆம் பிறையில் என்றும் காலமானது அவரது 63ஆம் வயதில் எட்டயபுரத்தில் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.   

 

உமறுப்புலவர் எட்டயபுரத்து அரசவைக் கவிஞராக விளங்கிய கவிக்குயில் கடிகை முத்துப் புலவரிடம் தமிழ் கற்று, 16 வயதிலேயே, வடநாட்டுக் கவிஞர் வாலை வாருதி என்பாரைத் தம் வாதத்தால் வென்ற காரணத்தினால் எட்டையபுரத்து அரசவைக் கவிஞராக ஏற்றம் பெற்றார். உமறுப்புலவர், மகாகாவியமான சீறாப் புராணத்தோடு ‘முதுமொழி மாலை’ என்னும் 88 பாடல்களாலான மாலையையும் தொடுத்திருக்கிறார். ‘சீதக்காதி திருமண வாழ்த்து’ என்னும் பாடல் தொகுப்பையும் இவர் பாடியுள்ளார்.

 

காப்பிய இலக்கியத்திற்கான கூறுகள் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றது சீறாப்புராணம். இந்தக் காப்பியம் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்றத்துக் காண்டம் என முப்பெருங்காண்டங்களைக் கொண்டது. அக்காண்டங்கள் 92 படலங்களையும் 5027 பாடல்களையும் கொண்டமைந்தனவாகும். சீறாப்புராணத்தின் பாட்டுடைத் தலைவரான, நபிகள் நாயகம் முகம்மதின் (சல்) அவர்களின் தலைமுறை, பிறப்பு, இளமை, இளமையில் நிகழ்ந்த முக்கியச் சம்பவங்கள் முதலியன விலாதத்துக் காண்டத்தில் இடம்பெற்றுள்ளன. நுபுவ்வத்துக் காண்டம் என்பது பெருமானார் நபிப்பட்டம் பெற்ற நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பமாகி 13 ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களை வர்ணிக்கிறது. ஹிஜ்றத்துக் காண்டம், அவரின் இறுதி 11 ஆண்டுகளில் 6 ஆண்டுக்கால வரலாற்றினைக் கூறுவதாகும்[1].

 

உமறைச் சீறா இயற்றச் சொன்னவர், காயல்பதியில் வாழ்ந்த சீதக்காதி எனப் புகழப்பெற்றவரும் பெரியதம்பி மரைக்காயரின் புதல்வருமான செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்பவர். அக்காப்பியத்துக்கு உரை வழங்குபடி கூறி, அவர் உமறுப்புலவரைச் செய்குசதக்கத்துல்லா அப்பாவிடம் அனுப்பினார். உமறுவின் தோற்றத்தைக் கண்ட அப்பா, “இந்துக்களின் கோலம் பூண்டுள்ள இவரா எம்பெருமானாரின் சரித்திரத்தை இயற்றத் தகுதி வாய்ந்தவர்?” என்று வெகுண்டு இவரை விரட்டிவிட்டார். உமறு மிகுந்த மன வேதனையோடு மசூதியில் அமர்ந்து ‘எம் பெருமானார் முகம்மது நபியை என்று காண்குவேன்?’ என்று நெக்குருகி ‘முதுமொழி மாலை’யைப் பாடினார். உடனே பெருமானார் உமறுவின் கனவில் மட்டுமல்லாமல் அப்பாவின் கனவிலும் தோன்றினாராம். உடனே மனம் மாறிய அப்பா, உமறுக்கு உரைவிளக்கம் கொடுக்க ஏற்பாடு செய்தார். பிறகு அப்பா, தம்மிடம் வந்த உமறுக்குச் சீறாக் காவியம் பாடுவதற்கான விவரங்களைக் கொடுத்து அருளினார். சீதக்காதியின் பொருளுதவியாலும் அப்பா கொடுத்த உரையாலும் உமறு சீறாவை இயற்றினார்.

 

உமறுப்புலவர் கீழக்கரையில் திருமணம்புரிந்து அங்கேயே வாழ்ந்ததாகவும் அந்த ஊரில் நடக்கும் ஒவ்வொரு திருமணத்திலும் ‘புலவர் பணம்’ என்னும் ஒரு மரபையும் ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு உமறுப்புலவர் அங்குக் கெளரவிக்கப்பட்டார். இம்மரபு இன்றும் கடைப்பிடித்து வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது[2].

பண்பு நலன்கள்

உமறுப்புலவர் உண்மைக்குப் பாத்திரமானவர். “நான் சொல்லாததையோ, செய்யாததையோ, நான் சொன்னதாவோ, செய்ததாகவோ சொல்வது பாபமாகும்” என உண்மையின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் எச்சரித்துச் சென்றிருக்கிறார்கள்[3]. அவ்வாறே பின்னாளில் புலவர் உமறு, தம் காப்பியப் பெருமானார் மீது இலக்கியச் சுவைக்காகக் கற்பனையை ஏற்றிக் கூறுவது தவறாகும் எனக் கருதினார்.

படைத்த சாதனைகளும் சமுதாயப் பங்களிப்பும்

 

பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம், “இஸ்லாம்-தமிழ் என்னும் இருபெரும் பண்பாடுகள் இணைந்து அளவளாவி, ஒன்றையொன்று வளர்த்து உலகத்தையே வளர்க்க வேண்டும் என்று கவிஞர் உமறு கண்ட பெருங்கனவு சீறாப்புராணமாக வடிவெடுத்தது” என்று கூறுவது கவனிக்கத்தக்கது. அந்தச் சீறாவைச் செந்தமிழ் அறிந்தோர் சிந்தையிலெல்லாம் இடம்பெறச் செய்ய ஜனாப் மணவை முஸ்தபா எடுத்துக்கொண்ட முயற்சி, சிந்தைக்கினிய சீறாவாக உருப்பெற்றது. சீறாவின் சிறப்பைப் பல்வேறு கோணங்களில் சுவைத் தேர்ச்சிமிக்க அறிஞர்பெருமக்கள் திறனாய்வுசெய்து வெளியிட்டுள்ள பாங்கு வியந்து பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

 

முனைவர் க ப அறவாணர், உமறுப்புலவரின் இலக்கியத் திறனை, "காவியத்தில் பரவிக் கிடக்கும் அரபு, பாரசீகக் சொற்கள் சுவைஞனின் பார்வையில் சுமைதான் எனினும், மேலே அழுத்தமான தோல் இருக்கிறதே என்பதற்காகப் பலாப்பழத்தை விட்டுவிடுகிறோமா? பல்லை உடைக்கும் கணுக்கள் இருக்கின்றனவே என்பதற்காகக் கரும்பை விரும்பாதவர் உண்டா...?” என்று கேட்டு, ‘சீறாப்புராணம் – நல்ல கவிதைகளின்  களஞ்சியம், கற்பனைத் திறன்களின் கருவூலம், கருத்துகளின் உருவப் பேழை, கவரும் உவமைகளின் பெட்டகம்” எனக் கூறிச் சிறப்பித்துள்ளார்.

 

சீறாப்புராணத்தின் இறுதிப் பகுதி முடிவதற்குள் புலவர் உமறும் காலமாகிவிட்டார். இதற்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர்ப் பனூ அஹ்மது மரைக்காயர் என்னும் பெரும் புலவர் 1829 பாடல்கள் இயற்றி நூலை முழுமை பெறச் செய்தார். இந்தப் பிற்பகுதி ‘சின்னச் சீறா’ என்று அழைக்கப்படுகிறது. 

 

சிங்கப்பூரில் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி

இரண்டாம் உலகப் போர்க்குப் பின், 1946ஆம் ஆண்டு தமிழ்க் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அ. ந. மொய்தீன் என்பார், சிங்கப்பூரில் ஒரு தமிழ்ப் பள்ளியைத் தொடங்க விரும்பினார்.  “கடல் கடந்து சிங்கப்பூர் சீமையில் கடையநல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் கடினமாக உழைத்துத்தான் ஜீவனம் நடத்தவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். படிப்பறிவு குறைந்தவர்களாக இருக்கிறார்கள். சரியான கல்வி அறிவு பெற்று ஏனையவர்களைப் போல நம் மக்களும் முன்னேறாவிட்டால் எதிர்காலத்தில் நம் சமூகம் சிங்கப்பூரில் பெயர்போட முடியாது!” என்றார்  திரு அ. ந. மொய்தீன். நெஞ்சில் பதிந்த நினைவுச் சுவடுகள் என்னும் நூலில் இந்த விவரங்கள் பதிவாகியுள்ளன.

 

கடையநல்லூர் முஸ்லீம் லீக் என்னும் அமைப்பு, 1946 ஜனவரி மாதம் தஞ்ஜோங் பகாரில் ஒரு கடைவீட்டின் ஓரறையில் உருப்பெற்றது. அச்சங்கக் கூட்டத்தில், பள்ளிக்கூடம் நிறுவப்பட்டு உடனடியாகவே 54 மாணவர்கள் அப்பள்ளியில் சேர்ந்தனர். பின்பு 1946இல் மேக்ஸ்வெல் ரோட்டில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஓர் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு 1949இல் 80 பிள்ளைகள் படிக்கக்கூடிய இரண்டு வகுப்பறைகள் மட்டுமே அமைந்த ஒரு சிறு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் அப்பள்ளி சாதாரணமாகச் ‘சிறுவர் தமிழ்ப் பாடசாலை’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. சிங்கப்பூர்த் தமிழர்களின் முன்னேற்றத்துக்காக அப்போது தன்னலம் பாராது உழைத்த மனிதர், ச சா சின்னப்பனார். அப்பள்ளிக்குச் சிறப்புப் பெயர் வைக்கப்படவேண்டும் எனக் கருதிய அவர், அதற்கு உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளிக்கூடம் என்று பெயரிடுமாறு கேட்டுக்கொண்டார்.

 

“தென்கிழக்காசியாவிலேயே தொடக்கநிலை முதல் உயர்நிலை இறுதிவரை தமிழில் பல பாடங்களைக் கற்பித்த ஒரு பள்ளியாக - ஓர் உயர்நிலைப்பள்ளியாக உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளி” 1946முதல் இருந்தது. தமிழ்வழிக் கல்வி வழங்கிய பள்ளிகளைத் தமிழ்ப் பள்ளிகள் என அழைத்தனர். கடந்த 1951இல் ஏறத்தாழ 20 தமிழ்ப்பள்ளிகளில் ஆயிரம் மாணவர்கள் இருந்தனர். இவை அனைத்தும் தொடக்கப்பள்ளி நிலையில், தமிழ்மொழி வாயிலாகப் பலவகைப் பாடங்களைக் கற்பித்துவந்தன. இந்நிலையில் 1960இல் உயர்நிலையில் அமைந்த தமிழ்ப்பள்ளியாக ‘உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளி’ உருவாயிற்று. பிறகு 1965ஆம் ஆண்டுமுதல், ஆங்கிலம், சீனம், மலாய்ப் பள்ளிகளில் வழங்கப்படும் இறுதியாண்டு கல்விச் சான்றிதழுக்கு இணையாக உமறுப்புலவர் பள்ளியின் கல்விச் சான்றிதழும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ் வாயிலாகக் கல்வி பயின்ற மாணவர் எண்ணிக்கை 1968இல் 1843ஆக இருந்தது. ஒரு காலத்தில் பாரதிதாசன், அரவிந்தர், நாகம்மையார், நீலாம்பிகை, சாரதாதேவி, திருவள்ளுவர், வாசுகி, விவேகானந்தர் முதலியோர் பெயரால் தமிழ்ப்பள்ளிகள் இயங்கின என்று முனைவர் சுப திண்ணப்பன், சிங்கப்பூரில்  தமிழும் தமிழ்க் கல்வியும் என்னும் தம் உரையில் குறிப்பிட்டுள்ளார்[4]. எனினும், ஆங்கிலத்தின் செல்வாக்குச் சிங்கப்பூர் மக்களிடையே படிப்படியாக வளர்ந்து வலுவுற்றதால் தாய்மொழிவழிக் கல்வி கற்பவர் தொகை குறைந்தது. தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த 1982இல் உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளியும் மூடப்பட்டு,  தமிழ்வழிக் கல்வி நிலையங்களே சிங்கப்பூரில் இல்லாதநிலை உருவாகிவிட்டது. எனினும், தமிழ்க் கல்வி ஆங்கிலவழிக் கல்வி நிலையங்களில் பெரிய அளவில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

 

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

உமறுப்புலவர் உயர்நிலைப்பள்ளியின் மேலாண்மைக் குழு, உமறுப்புலவர் என்னும் பெயரை ஏதேனும் ஒரு பள்ளிக்குச் சூட்டித் தக்கவைத்துக்கொள்ள விரும்பியதால் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் திரு எஸ் சந்திரதாஸுடன் கலந்துபேசியது. இப்பெயரை அன்று செயிண்ட் ஜார்ஜஸ் தமிழ் நிலையமாக இயங்கிவந்த நிலையத்திற்கு வைக்கலாம் என்று அவர் கல்வி அமைச்சுக்குப் பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்றுக்கொண்ட கல்வி அமைச்சு, 1983ஆம் ஆண்டு, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் என்னும் பெயரைச் செயிண்ட் ஜார்ஜஸ் தமிழ் நிலையத்திற்குச் சூட்டியது. உமறுப்புலவரின் பெயர் இந்நிலையத்தின் மூலம் தொடர்வது, அவர்க்கும் அவர் புலமைக்கும் சிங்கப்பூர் செலுத்தும் நன்றிக்கடனாகக் கருதப்படுகிறது.

துணைநூல்கள்

[1]    Uwise, MM. (1984) Islam Valartta Tamil International Institute of Tamil Studies.

[2]    செய்யது முஹம்மது ஹஸன், எம். (1987). சீறாப்புராணம். மரைக்காயர் பதிப்பகம்.

[3]    கனி, ஆர். பி. எம். (2007). இஸ்லாமிய இலக்கியக்கருவூலம். நேஷனல் பப்ளிஷர்ஸ்.

[4]    திண்ணப்பன், சுப. முதன்மை உரை. அனைத்து இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற மாநாடு.   

தலைப்புக்குத் தொடர்புடைய பிற வளங்கள்

 

  1. உமறுப் புலவர்:

        http://www.tamilvu.org/courses/degree/a011/a0113/html/a01134l1.htm

 

    2. உமறுப் புலவர் – இந்திய இலக்கியச் சிற்பிகள், சி. நயனார் முகமது. 

         http://www.tamildigitallibrary.in/admin/assets/book/

bottom of page