top of page
Final.png

உணவும் உணர்வும்

தமிழ் முன்னோர்கள் “உணவே மருந்து” என்னும் வாழ்வியல் கொள்கையை வலியுறுத்தியமையால் அவர்கள் உணவை உண்பதில் பல கட்டுப்பாடுகளை விதித்தும் கடைப்பிடித்தும் வந்துள்ளனர். பொதுவாக, தாவர மூலிகைகளையும் சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்வது தமிழர்களின் உணவுப் பழக்கமாகும். உண்ணும் உணவைப் பொறுத்தே மனிதனின் குணமும் ஆரோக்கியமும் அமையும் என்பது இன்றைய அறிவியல் கண்டறிந்த உண்மை.

தமிழர் உணவுவகை

சங்ககால இலக்கியங்களைக் கண்ணுறும்போது, தமிழர்கள் பயன்படுத்திய மிளகு, நெய், புளி, கீரை, இறைச்சி முதலிய உணவுவகைகள் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றன. ஒவ்வோர் அந்நிய மத, பண்பாட்டு ஆட்சியின் விளைவால் தமிழர்களின் உணவு வகைகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டுக்கு, பக்தி இயக்கக் காலக்கட்டத்தில், தமிழர்கள் உணவில் லட்டு, எள்ளுருண்டை, அப்பம் முதலிய உணவு வகைகள் சேர்ந்தன. சோழர் காலத்தில் சர்க்கரைப் பொங்கல், பணியாரங்கள் முதலியவை குறிப்பிடப்படுகின்றன. விஜய  நகர ஆட்சிக்காலத்தில் இட்டிலி, தோசை, அதிரசம் முதலிய உணவு வகைகள் மக்கள் வாழ்க்கையில் காணப்பெற்றன. எளிய மக்கள் நீரில் தானியங்களை வேகவைத்துக் கஞ்சியாக உண்டனர். வற்றல் உணவு மழைக்காலத்திற்கென்று சேகரிக்கப்பட்ட உணவு வகைகளுள் அடங்கும். தமிழர்கள் வழங்கும் காய்கறி என்னும் சொல் காய்களையும் மிளகையும் குறிக்கும். தமிழர் வரலாற்றில், பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டிலிருந்து மிளகாய் புகுந்தது. அதற்கு முன் தமிழர்கள் தாங்கள் உண்ட இறைச்சி உணவில் கறுப்பு மிளகையே சேர்த்துள்ளனர் [1].

உப்பு என்னும் சொல், சுவை என்னும் பொருளைக் குறிக்கும். கடற்கரையில் கிடைக்கும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச்சொல்லும் வணிகர்களை அன்று உமணர்கள் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. அரிசி என்னும் சொல் நெல் தானியத்தை மட்டும் குறிக்காமல் அவித்து உண்ணும் சிறிய தானியங்களையும் குறித்தது.               

 

 உணவே மருந்து

நோய் வந்தபின் மருந்தை நாடுவது வாழும் கலைக்குப் புறம்பானது. வாழ்க்கை முழுவதும் உணவையே மருந்தாக்கிக் கொள்ளவேண்டும் என்பதைத் திருவள்ளுவர், தமிழ்ச் சித்தர் பெருமக்கள், சித்த மருத்துவர்கள் முதலியோர் பலவாறு வலியுறுத்தியுள்ளனர். சிலர் உயிர் வாழவேண்டிச் சாப்பிடுவர், வேறு சிலர் சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்வர் என நகைச்சுவையாகக் கூறப்படுவதைக் கேட்டிருப்போம். தமிழர்கள் உணவை வெறுமனே சுவைக்காக மட்டும் உண்ணாமல், உடல்நலத்தைப் பேணிக் காக்கும்பொருட்டு அறுசுவைகொண்ட உணவை உண்டனர். உடம்பில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தை உறையவைக்கத் துவர்ப்பு, ஞாபக ஆற்றலுக்கு உப்பு, தசையை வளர்க்க இனிப்பு, ரத்தக் குழாயிலுள்ள அழுக்கை நீக்கப் புளிப்பு, உடலிலுள்ள கிருமிகளை அழிக்கக் கசப்பு, உடலுக்கு வெப்பத்தை அளிப்பதோடு உணர்ச்சிகளைக் குறைக்கவும் கூட்டவும் காரம் [2] எனப் பயன்கருதி அறுசுவை வகைகள் சேர்க்கப்பட்டன. `நோய்க்கு இடங்கொடேல்` என்னும் பழமொழிக்கு ஏற்ப மக்கள் தங்களது அன்றாட உணவில் உடலுக்கு வலுச்சேர்க்கக்கூடிய பல்வேறு உணவுப்பொருள்களைப் பயன்படுத்தினர். மேலும், சில பழமொழிகளை எடுத்துக்காட்டுகளாய்ப் பார்ப்போம்:

 

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி

வெந்தயம் தீர்க்காத வேக்காளமா

வெள்ளுள்ளி கொடுக்காத செரிமானமா

 

வாழையிலையில் உணவு

வாழைமரம் எளிதாக வளரக்கூடியது. அது சிறப்பான மருத்துவத் தன்மை கொண்டது. எனவே, தமிழர்கள் வாழையிலையில் உணவு உண்பதன் முக்கியத்துவத்தை அறிந்துவைத்திருந்தனர். பொதுவாக, இன்றைய நாகரிக வாழ்க்கையில் பண்டிகைக் காலங்களிலும் திருமணம், காதணி, பாரம்பரிய நிகழ்ச்சிகளின்போதும் வாழையிலை பயன்படுத்தப்படுகிறது. வாழைமரத்தின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், பட்டை, தண்டு, நீர், கிழங்கு ஆகிய எல்லாப் பாகங்களும் மருத்துவப் பலன்களைத் தருகின்றன.[3] வாழை ஒருமுறை குலை தள்ளிய பின் இறந்துவிடுகிறது. ஆனால், அதன் சந்ததிகள் உடனே தோன்றிவிடுவதால் வாழை அதன் சந்ததிகளை விட்டுச்செல்லும். அதனால்தான், இன்றும் நம் பெரியவர்கள் புதுமணத் தம்பதியினரை ‘வாழையடி வாழையாக வாழ்வாயாக’ என்று வாழ்த்துகின்றனர்.

a13 p1.jpg

வாழையிலையில் ஒருவகை மூலிகைச் சத்தும் மணமும் இருக்கின்றன. நாம் சூடான உணவை வாழையிலையில் பரிமாறும்போது, அதிலுள்ள மூலிகைச் சத்தும் மணமும் உணவில் கலந்து நம்முடைய பசியினைத் தூண்டும். வாழையிலையின் மேற்பரப்பில் உள்ள பசுமை (குளோரோபில்), உண்ணும் உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப்புண்ணையும் ஆற்றும் தன்மைகொண்டது. வாழையிலையில் உணவு சாப்பிட்டுக்கொண்டு வந்தால் பார்வைக் கோளாறு, முடி உதிர்வது, முடி நரைப்பது, மந்தம், வலிமைக்குறைவு, பித்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால்தான், வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வர் என நம்பப்படுகிறது.

வாழையிலையின் அகன்ற பகுதி உணவு உண்பவரின் வலது கைப்பக்கமும் நுனிப்பகுதி இடது கைப்பக்கமும் இருக்குமாறு இலையை இடுதல் வேண்டும். பின்வரும் முறையில் உணவுப்பொருள்கள் வாழையிலையில் பெரும்பாலும் பரிமாறப்படும்: உப்பு, வாழைப்பழம், ஊறுகாய், அப்பளம், வடை, பொரியல், சாதம், கூட்டு, வறுவல், தயிர்ப்பச்சடி, இனிப்பு, பருப்பு மசியல், நெய், கிண்ணங்களில் தனித்தனியே சாம்பார், புளிக்குழம்பு, ரசம், பாயசம், மோர் போன்றவையாகும். மக்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பச் சில மாற்றங்களோடு உணவுப்பொருள்கள் பரிமாறப்படும். நுனிப்பகுதியைக் கொண்டிருக்கும் இலை ‘தலைவாழையிலை’ என்றும் இலையின் நரம்பு அகற்றப்பட்டுச் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட பகுதி ‘ஏடு’ என்றும் அழைக்கப்படுகின்றன.

 

 உணவின் தன்மைகள்

மருந்தில்லாமல் உண்ணும் உணவுகளைக் கொண்டு நாம் நலமாக வாழ முடியும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீரகம், கறிவேப்பிலை, மஞ்சள், வெங்காயம், கீரை வகைகள் போன்ற அனைத்துப் பொருள்களும் மருத்துவக் குணம்கொண்டவை என்று பண்டைய தமிழ் மருத்துவர்கள் கணித்து வைத்திருக்கின்றனர். அவற்றுள் சில: [4]

உணவு தரும் உணர்வு

குழந்தை பிறந்ததும் அதன் பசி அழுகை கேட்ட தாயின் மார்பில் தாய்ப்பால் சுரக்கும் என்பது மருத்துவ உண்மை. குழந்தையின் பசியுணர்வைப் புரிந்துகொண்டு அதற்கேற்பத் தாய் அமுதூட்டுவதை நாம் அறிவோம்.  

a13 p2.jpg

பசியுணர்வும் சுவையுணர்வும் மனிதனை உண்ணத் தூண்டுகின்றன. அவ்வாறு உண்ணப்படும் உணவு, நம் இரைப்பைக்குள் சென்று அரைக்கப்பட்டு உடலுக்குத் தேவைப்படும் சத்துகளை அளிக்கிறது. திடப்பொருள் அல்லது திரவியப்பொருளான உணவுப்பொருள் உடலுக்குள் சென்று மனவுணர்களையும் இயக்கச் செய்கின்றன என்பதை இன்றைய அறிவியல் அறிந்துள்ளது.

 

மனிதனின் அன்றாட வாழ்வில் தோன்றும் எண்ணங்கள் குணங்களாகத் திரிந்து, செயல்களாக வெளிப்படுகின்றன. அவ்வாறு தோன்றும் எண்ணங்களுக்கும் குணங்களுக்கும் உட்கொள்ளும் உணவுகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?

 

பொதுவாக, விலங்குகள் அவற்றிற்குரிய உணவுகள் எவை என்பதை அறிந்துவைத்துள்ளன.     அதற்கேற்ப மனிதனும் தன் உள்ளத்தை அமைதியாக வைத்துக்கொள்ள உதவும் இயற்கை தரும் தாவரம், காய், கிழங்கு முதலிய உணவு வகைகள் உட்கொள்வது சிறப்பு. அசைவ உணவு வகைகள் உடம்பில் செரிக்க 72 மணிநேரம் ஆகும். அதோடு, அவை மனிதனுக்குள் காம குரோத குணங்களைத் தூண்டும் என்று நம் தமிழ்ச் சித்த மருத்துவ நூல்கள் எச்சரிக்கின்றன. நாம் நம் உடலை உற்றுக் கவனித்தாலே நம் உடம்புக்கு எவ்வகை உணவுகள் தேவை என்பது புலப்படும். மனிதன் உண்ணும் உணவைப் பொறுத்துத்தான் அவன் பெறும் உயிராற்றல் என்பதைத் தமிழர்கள் அறிந்துவைத்துள்ளனர். பசி அல்லது தாகத்தின் உந்துதலால் உடம்பு உணவையும் நீரையும் கேட்கும்போது மட்டுமே ஒருவர் உண்ணுவதும் அருந்துவதும் நலம்..              

             

தமிழ்ப் பண்பாட்டில் உணவு என்பது பசியைப் போக்குவதற்கு மட்டுமின்றி உடல் நலத்தையும் பேணுவதற்காகப் பயன்படுகிறது. அவ்வாறு உண்ணப்படும் உணவு தரத்திலும் அளவிலும் சரியாக அமைந்தால் மட்டுமே எண்ணத்திலும் வாழ்விலும் நாம் நலமுற இயங்க முடியும்.

துணைநூல்கள்   

[1]   பரமசிவன், தொ. (2001). பண்பாட்டு அசைவுகள். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.

[2]   குருஜி. (2008). உயிரைக் காக்கும் உணவே மருந்து. கரூர், நவயுகம் பதிப்பகம்.

[3]   கோதண்டம், கொ. மா. (2012). சித்தர் மூலிகை மருத்துவக் கையேடு. சென்னை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம்.

[4]   சின்னசாமி, க. (2011). நோய்களைக் குணமாக்கும் கீரைகள், சிதம்பரம், தென்றல் நிலையம்.

bottom of page