top of page
Final.png

வீரமாமுனிவர்

தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்கள் தமிழினத்தவர்கள் மட்டுமே என்று கருதிவிட முடியாது. தமிழ்மொழியின்பால் ஈர்க்கப்பட்டு, அம்மொழியைக் குற்றமறக் கற்றுத்தேர்ந்து மொழிப் பணியாற்றிய மேனாட்டு அறிஞர்கள் பலருண்டு. கடந்த 17, 18ஆம் நூற்றாண்டுகளில், தமிழ்நாட்டுக்குக் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்பவந்த மேற்கத்திய அறிஞர்களுள் தமிழ்மொழிக்கு மிகச் சிறந்த முறையில் தொண்டாற்றியவர், வீரமாமுனிவர். இவரின் இயற்பெயர் கான்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) என்பதாகும். இவர் 1680இல் இத்தாலி நாட்டில் பிறந்தார். இவர் தம் 30ஆம் வயதில் தமிழ்நாடு வந்து, ஏறக்குறைய 37 ஆண்டுகளாக அங்கேயே தங்கிச் சமயப்பணிபுரிந்த இயேசு சபைக் குருவாவார். இத்தாலி, கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் (Hebrew) ஆகிய மொழிகளில் சிறந்த தேர்ச்சியுடையவர். தமிழகம் வந்தபின்னரே தமிழ் பயின்ற இவர், தமிழ்மொழியிலும் ஆழ்ந்த புலமையை வளர்த்துக்கொண்டார். இவர் தைரியநாதர், வீர ஆரியன், செந்தமிழ்த் தேசிகர், தத்துவ போதகர், இஸ்மாத்திய சந்நியாசி எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டார். ஆனால், வீரமாமுனிவர் என்னும் பெயரே இவர்க்கு நிலைத்துவிட்டது[1].

 

எழுத்துச் சீர்திருத்தம்

வீரமாமுனிவர் சமயம் பரப்புவதில் மட்டும் கவனம்செலுத்தாமல், பல்வேறு மொழி, சமுதாயப் பணிகளையும் செய்தார். இவர் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டுகள் பலதரப்பட்டவையாகும். முற்காலத்தில், ஆகாரத்தை எழுதும்போது அகரத்தின் மேல் புள்ளியிட்டு எழுதுவது வழக்கம். அதனைவிடுத்து அகரத்திற்குச் சுழியிட்டு ஆகாரத்தை எழுதினார். `கெ’ `கொ’ என்னும் குற்றெழுத்துக் கொம்புகளை மேற்சுழித்துக் `கே’ `கோ’ என்று நெடிலாக மாற்றியமைத்தவரும் வீரமாமுனிவரே[2].

 

படைத்த நூல்கள்

வீரமாமுனிவர், கிறிஸ்துவ சமயக் கொள்கைகளை விளக்கும் வேதவிளக்கம், திருச்சபை பேதகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய உரைநடை நூல்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்தது பரமார்த்த குரு கதையாகும். அந்நூலைப் பிறகு இலத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தார். பொதுவாக, மேற்கத்தியர்களைப் பின்பற்றித்தான் தமிழில் சிறுகதை வடிவம் அறிமுகம் கண்டது என்று கொள்ளப்படுகிறது. வீரமாமுனிவர் படைத்த பரமார்த்த குரு கதை, தமிழில் வந்த சிறுகதைத் தோற்றத்திற்கு முதல் வித்தாக அமைந்தது என்று கருதுவோரும் உள்ளனர். நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட இந்நூல் பிரெஞ்சு, ஜெர்மன், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம்[3] முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் வந்த வரலாற்று நூல்களுக்குத் தோற்றுவாயாக இவர் படைத்த வாமன் சரித்திரம் என்னும் நூலைக்கொள்ளலாம். 

 

திருக்குறளின் தெள்ளிய நயமும் சிந்தாமணியின் செழுஞ்சுவையும் கம்பராமாயணத்தின் கவியின்பமும் இவர் மனத்தைக் கவர்ந்தன. சிந்தாமணியைப்போல் கிறிஸ்துவ சமயசார்புடைய ஒரு பெருங்காவியத்தை வடிக்க விரும்பினார். அதன் காரணமாகத் தேம்பாவணி என்னும் அருங்காப்பியத்தை இயற்றினார். இக்காவியம் ஏசுபிரானின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியதாகும். இது 3 காண்டங்களையும் 3615 விருத்தப் பாக்களையும் 36 படலங்களையும் கொண்டமைந்ததாகும். இக்காவியத்தைப் படிப்போர், கம்பரின் கவிநயத்தையும் திருக்குறளின் மணத்தையும் நுகர்வார்கள். அதோடு, இக்காவியத்தில் நாட்டுப்புற இலக்கியத்தின் கூறுகளும் படிந்திருப்பதைக் காணமுடிகிறது. அடுத்து, இவர் திருக்காவலூர் தேவமாதாவின்மீது சந்த இன்பம் நிறைந்த 101 பாக்களைக் கொண்ட திருக்காவலூர்க் கலம்பகத்தை இயற்றியுள்ளார். போர்த்துகீசிய நாட்டு வேதசாட்சியான கித்தேரி அம்மாள் மீது பாமரரும் படித்து இன்புறத்தக்க கித்தேரி அம்மானை என்னும் இனிய எளிய நூலை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பிற நூல்கள் அடைக்கல நாயகி வெண்கலிப்பா, கருணாகரப் பதிகம் போன்றவையாகும். மேலும், இவர் தமிழில் உள்ள நீதி நூல்களைத் தமிழ்ச் செய்யுள் தொகை எனத்  தொகுத்துள்ளார்.

 

திருக்குறளை ஐரோப்பிய மொழி ஒன்றில் முதன்முதலில் மொழிபெயர்த்தவர் வீரமாமுனிவர். திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் 1760ஆம் ஆண்டில் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவரது அரிய பணியால், ஐரோப்பிய நாட்டவர் திருக்குறளின் பெருமையையும் பிற தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளையும்பற்றித் தெரிந்துகொண்டனர். தமிழகத்தில் திருக்குறளைப் பரப்பவேண்டி, 200 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்குப் பேச்சுமொழியில் உரை எழுதினார்[4].

 

வீரமாமுனிவர் குட்டித் தொல்காப்பியம் எனப்படும் தொன்னூல் விளக்கம் என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலுக்குத் தாமே உரையும் எழுதியுள்ளார்.  பிறநாட்டு அறிஞர்கள் பலர் தமிழ் இலக்கண நூல்கள் எழுதியிருந்தாலும் விரிந்த அளவில் இலக்கணம் எழுதிய பெருமை வீரமாமுனிவரையே சாரும். உலக வழக்கில் காணப்படும் தமிழ்மொழியைச் ‘செந்தமிழ்’ `கொடுந்தமிழ்’ என இருவகைப்படுத்தி இலத்தீன் மொழியில் இலக்கணம் எழுதியுள்ளார். வீரமாமுனிவர் தம் இலக்கண நூல்களில் எடுத்தாண்ட சான்றுகளைக் கண்ணுறும்போது, இவர்தம் ஒப்பிலக்கணப் பார்வை வெளிப்படுகிறது. முனிவரின் ஆராய்ச்சித் திறத்தைப் ஜி யு போப் (George Uglow Pope),  ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) போன்றோர் பெரிதும் பாராட்டினர். அவர்கள் தமிழில் எழுதிய நூல்களுக்கும் இந்நூல் பெரிதும் துணைபுரிந்தது.

a17 p1.jpg

தமிழ் அகராதித் துறைக்கு மூலவராக விளங்கியவர், வீரமாமுனிவர். தமிழ்ச் சொற்களை அகர வரிசையாகத் தொகுத்துப் பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு அதிகாரங்களாகப் பகுத்துச் சதுர் அகராதி என்னும் அரிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதுவே தமிழில் வெளிவந்த முதல் அகராதியாகும். அதனைத் தொடர்ந்து, தமிழில் வந்த அகராதிகள் பலவும் சதுரகராதியை அடிப்படையாகக்கொண்டு தொகுக்கப்பட்டன. இவர் 900 தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் விளக்கி, தமிழ் - இலத்தீன் அகராதி ஒன்றை எழுதியுள்ளார். அதோடு, போர்த்துகீசியம்-தமிழ்-இலத்தீன் அகராதி என்னும் நூலலையும் இயற்றியுள்ளார். இம்மூன்று நூல்களும் தமிழ்நாட்டார் கற்பதற்குப் பேருதவி புரிந்துவருகின்றன[5].

 

சமுதாயப் பங்களிப்பு 

வீரமாமுனிவர், கிறிஸ்துவ மக்களுக்குக் காப்பியத் தந்தையாகவும் தமிழ் மக்களுக்கு உரைநடை இலக்கிய முன்னோடியாகவும் அங்கத இலக்கிய ஆசிரியராகவும் அகராதி நூல்களின் தலைவராகவும் மொழி நூலாராய்ச்சியில் முதல்வராகவும் மொழிபெயர்ப்பு நூல்களின் வழிகாட்டியாகவும் விளங்கினார்.   

 

பன்முகத்தன்மைகொண்ட வீரமாமுனிவர், மேற்குறிப்பிட்ட பணிகளோடு நின்றுவிடாமல் ஆய்வுநெறிப் பணி, கலைப் பணி, பண்பாட்டுப் பணி எனப் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். குறிப்பாக, இன்றைய ஆய்வாளர்கள் கையாளும் ஆய்வுநெறிமுறைகளுக்கு வீரமாமுனிவர் முன்னோடியாக இருந்துள்ளார். தற்காலத்தில், ஆய்வேடுகளின் இறுதியில் பொருள் அட்டவணைப் (Index) பட்டியலிடுவதைப் பார்த்திருப்போம். ஆய்வேட்டில் உள்ள செய்திகளை உடன்தெரிந்துகொள்ள இவ்வட்டவணைகள் உதவுகின்றன. தமிழ்நூல்களில் இத்தகு பட்டியல்முறைகளை அறிமுகம் செய்தவர், வீரமாமுனிவர். அதோடு, தம் தமிழ் நூல்களின் இடையிடையே மேற்கோள்களைச் சுட்டி எழுதிய பெருமையும் இவரையே சாரும். இவர் ஓவியக் கலையிலும் வல்லுநராக விளங்கினார். அன்னை மேரியின் திருவுருவைத் தமிழ்ப் பெண்ணாக வரைந்து, அதனை மணிலாவுக்கு அனுப்பியுள்ளார் [4]. மேனாட்டுத் துறவியர் அணியும் ஆடையை அணியாது; தமிழ்த் துறவியைப் போல் உடை அணிந்திருந்தார். தம்மைத் தமிழராகக் காட்டிக்கொள்ளவே முனைந்தார். இவர்க்குத் தமிழ் மருத்துவத்திலும் ஈடுபாடு இருந்துள்ளது என்பதை இவர் தொகுத்த இலத்தீன் அகராதியில் உள்ள சொற்கள் புலப்படுத்துகின்றன.        

 

சுருங்கக்கூறின், இவர் ஒரு பல்துறை வித்தகர்: இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியல் சிந்தனை எனப் பல்வகைத் திறமைகளைக் காட்டியுள்ளார். பாரதி, தேமதுரத் தமிழோசையை உலகெங்கிலும் பரவும்வகை செய்தல் வேண்டும் என்று கூறுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே வீரமாமுனிவரின் செயற்பாடுகளும் சாதனைகளும் அத்தகு நோக்கோடு அமைந்துள்ளன.   

துணைநூல்கள்   

 

[1]     அடைக்கலசாமி, எம். ஆர். (1989). தமிழ் இலக்கிய வரலாறு (2ஆம் பதிப்பு). சென்னை: சைவ சித்தாந்த வெளியீடு.

 

[2]     வரதராசன், மு. (1972). தமிழ் இலக்கிய வரலாறு (முதற் பதிப்பு).சாகித்திய அகாதெமி ஸ்ரீ வெங்கடேசா பிரிண்டிங் ஹவுஸ்.

 

[3]     பரமார்த்த குரு கதை (ஆங்கில வடிவம்):

          https://www.worldcat.org/title/paramartha-guruvin-kathai

[4]     இன்னாசி, கு. (1995). வீரமாமுனிவர். இந்திய இலக்கியச் சிற்பிகள். சாகித்திய அக்காதெமி.

 

[5]     இலக்குவன், சோ. (2001). கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு (முதற் பதிப்பு). அப்பர் அச்சகம்.

தலைப்புக்குத் தொடர்புடைய பிற வளங்கள்

 

[1]     (Father Constantine Joseph Beschi), எழுதியவர்: Dr.Ramani Naidu, 25/06/07. http://tamilnation.co/literature/veeramamunivar.htm

 

[2]     வீரமாமுனிவர் வாழ்க்கை வரலாறு! Posted by vasuki on 02/22/2017 in வரலாற்று சுவடுகள்

          http://worldtamilforum.com/historical_facts/veeramamunivar-history-22022017/

bottom of page