top of page
Final.png

எண்ணெய்க் குளியல்

இந்திய மரபுசார் வாழ்வியலில் உடலை நோய் அண்டாமல்  பாதுகாத்துக்கொள்ளப் பல எளிய வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று எண்ணெய்க் குளியலாகும். தலைமுதல் பாதம்வரையிலான உறுப்புகள் அனைத்தும் உடலில் உள்ள கழிவுப்பொருள்களை ஒவ்வொரு கணமும் வெளியேற்றுகின்றன என்பதை நாம் அறிவோம். அவற்றை நீக்குவதற்குவேண்டி நீராடுவதால் உடல் தூய்மையுறுகிறது; புத்துணர்வும் பெறுகிறது [1]. ஆனால், சாதாரணக் குளியலிலிருந்து எண்ணெய்க் குளியல் முற்றிலும்  வேறுபட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்திருப்பது அவசியம்.

பொதுவாக, உடம்பின் தோல் வறட்சி அடையும்போது, அதன் ஆரோக்கியத் தன்மை குறைகிறது. அவ்வாறு குறையும் தருணத்தில், உடலை நோய்கள் தாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. வாதம் என்பது ஒருவகை இயக்கு சக்தியாகும். அது தோலில் மேலோங்கி இருக்கும். உடலின் தசை, மூட்டுகள், எலும்பு இவற்றின் பணியைப் பார்த்துக்கொள்ளும். அந்த வாதத்தைக் கட்டுப்படுத்த உதவுவது எண்ணெய்க் குளியலாகும்.

எண்ணெய்க் குளியலின் தனிச்சிறப்பு

பொதுவாக, நோய் வந்தபின் அதனைக் குணப்படுத்துவதிலும் கட்டுக்குள் வைத்திருப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தும் போக்கினை நவீன மருத்துவத்தில் நாம் காண்கிறோம். இதற்கு மாறாக, நம் பாரம்பரிய மருத்துவம், தேகத்தை நோய் அணுகாமல் பாதுகாக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கவும் நமக்கு வழிகாட்டியுள்ளது. இதற்கு எண்ணெய்க் குளியல் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். நாம் நாளும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது சிறப்பு. இது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருப்பது ஒரு நல்ல பழக்கமாகும். பழங்காலத்தில், எண்ணெய்க் குளியல் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

 

எண்ணெய்க் குளியலை எப்படிச் செய்வது?

அதிகாலையில் எழுந்து, காலைக்கடன்களைப் பூர்த்திசெய்த பின், யோகாசனப் பயிற்சிகளை முடித்துவிட வேண்டும். உடம்பில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பாக, அதனைச் சூடுகாட்ட வேண்டும். எண்ணெய்க் குளியலுக்கு உகந்த எண்ணெய் நல்லெண்ணெய். இவ்வெண்ணெய் உஷ்ணத் தன்மைகொண்ட பொருள். உச்சந்தலைமுதல் பாதம்வரை எண்ணெயை நன்றாகத் தேய்க்க வேண்டும். குறிப்பாக, தலை, செவி, பாதங்கள் ஆகிய மூவிடங்களில் தேய்ப்பது அவசியம். உடலில் தேய்க்கும்போது, உடலில் உள்ள ரோமங்களின் திசையில் அதாவது மேலிருந்து கீழ்நோக்கித் தேய்ப்பது சிறப்பு. மூட்டுகள் வருகின்ற இடங்களில் வட்டமிட்டுக்கொண்டே தேய்க்க வேண்டும். அதன்பின் ஒருமணிநேரம் காத்திருந்துவிட்டு,  சிகைக்காய்ப் பொடியைத் தேகத்தில் தேய்த்து நீராட வேண்டும். இறுதியாக, குளித்த பின் நன்றாகத் தலையையும் உடலையும் உலர்த்துவது அவசியம்.

 

எண்ணெய்க் குளியலின் பயன்கள்

எண்ணெய்க் குளியலின்போது உடல் முழுவதும் எண்ணெய் ஊட்டப் பெற்று, வியர்வை அணுத்துவாரங்கள்வழி வெளியேறி உடல் தூய்மைபெறுகிறது. தலைக்கிடும் எண்ணெய், தலையில் படிந்துள்ள அழுக்கு, சிடுக்கு, பிசுக்கு இவற்றையெல்லாம் நொய்தாக்கிப் போக்கவல்லது. நோயாளிகளுக்கு ஏற்படும் மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றுக்கு இன்றும் எண்ணெய்க் குளியல் பயன்படுகிறது.

a4 p1.1.jpg

மேற்குறிப்பிட்டவற்றோடு, தினமும் எண்ணெய்க் குளியல் புரியும்போது ஒருவர் மேலும் பல பயன்களைப் பெறுவதாகச் சித்த மருத்துவர்கள் கருதுகிறார்கள்:

  • முதுமைத்தோற்றத்தை ஒத்திவைத்தல்

  • உடல் சோர்வடைவதைத் தடுத்தல்

  • உடல் புத்துணர்ச்சியுற்றுத் திகழ்தல் 

  • கண்பார்வை நன்கு கூர்மையடைதல்

  • முகப்பொலிவு ஏற்படுதல்

  • தலைமுடியின் வேர் நன்கு வலுவடைதல்

  • நீளமான, கருமையான முடி வளர்வதற்கு உதவுதல்

  • இளநரை ஏற்படுவதைத் தவிர்த்தல்

  • செவிக்குள் எண்ணெய்விட்டுத் தேய்ப்பதால் கேட்குந்திறன் கூர்மையடைதல்

  • தாடைப் பிடிப்பு ஏற்படாமல் இருத்தல்

  • பாதங்களுக்கு வெடிப்பு ஏற்படாமல் இருத்தல்

  • காலில் நரம்புகளினால் ஏற்படும் வலியைத் தடுத்தல்

  • நீண்ட, ஆரோக்கியமான ஆயுள் கிட்டுதல்

  • நல்ல உறக்கம் கிடைத்தல்

யார் எண்ணெய்க் குளியலைத் தவிர்க்க வேண்டும்?

அனைவர்க்கும் எண்ணெய்க் குளியல் மருத்துவரீதியாகப் பயனளித்தாலும் கீழ்க்கண்டவர்கள் எண்ணெய்க் குளியலைத் தவிர்ப்பது நலம் என்று சொல்லப்படுகிறது.

  • அளவுக்கு அதிகமான உடல் பருமன் உடையவர்கள்

  • வாந்தி, பேதி உடையவர்கள்

  • செரிமானக் கோளாறு உடையவர்கள்

தீபாவளிப் பண்டிகையின்போது எண்ணெய்க் குளியல்

தமிழர்களுள் இந்துக்கள் குறிப்பாகத் தீபாவளிப் பண்டிகையின்போது எண்ணெய்க் குளியலை மேற்கொள்வார்கள். புராண நம்பிக்கையின்படி, கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய திருநாளில் சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்திற்கும் கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்று புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐதீகத்தின்படி, அன்றைய நாளில் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் நீரை கங்கை நீராகக் கருத வேண்டும். இக்காரணத்தால்தான், தீபாவளியின்போது நீராடுவதைக் கங்காஸ்தானம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தீபாவளியன்று, அதிகாலையில் எழுந்து, சூரியன் உதிக்கும் கீழ்த்திசை நோக்கியபடி, உச்சந்தலைமுதல் பாதம்வரை உடலில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளுக்குப் பெரியவர்கள் தலையில் எண்ணெய்வைத்துக் குளிப்பாட்டுவார்கள். எண்ணெய் தேய்த்த பின், குறைந்தது அரைமணி நேரமாவது காத்திருந்து, பின்னர் நீராடலாம். அக்காலத்தில் ஆற்றிலோ குளத்திலோ நீராடுபவர்கள் படிக்கற்களின்வழி நீருக்குள் கீழிறங்கும்போது, நீரானது பாதங்கள், இடுப்பு, நெஞ்சு, கழுத்து, தலை ஆகிய பகுதிகளை நனைக்கும். அப்போது உடம்பில் உள்ள வெப்பம் காதுகளின்வழி வெளியேறும். இன்றைய நவீன குளியல் வசதிகளைப் பயன்படுத்தி நீரைக்கொண்டு முதலில் தலையை நனைப்பது உகந்ததன்று. அது சில வேளைகளில், ஒருவர்க்கு மாரடைப்பை ஏற்படுத்தலாம். அடுத்து, உடம்பில் நன்கு சிகைக்காய்ப்பொடி அல்லது பஞ்சகற்பப் பொடியைத் (கஸ்தூரி மஞ்சள், மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லி வித்து, வேப்பம் வித்து) தேய்த்துக் குளிப்பது நலம்.

a4 p1.2.jpg

எண்ணெய்க் குளியலை மேற்கொள்ளும்போது ஒருவர் மருத்துவரீதியாக நிறைய பலன்களை அடைய முடியும் என்று சித்த மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால், உடல் ஆரோக்கியமாக இருப்பதால் மனவுளைச்சலைக் குறைத்து மனம் களிப்படைகிறது. அன்றாடப் பணிகளை மனிதன் எறும்பைப்போல் சுறுசுறுப்பாகச் செய்யவேண்டுமானால், எண்ணெய்க் குளியலை ஓர் அன்றாடப் பழக்கமாக்கிக்கொண்டு கடைப்பிடிப்பது நலம் தரும்.

சிங்கப்பூரில் எண்ணெய்க் குளியல்

பொதுவாக, சிங்கப்பூர்த் தமிழர்கள் எண்ணெய்க் குளியல்பற்றி அறிந்துவைத்திருந்தாலும், பெரும்பாலானோர் அன்றாடம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில்லை. குறிப்பிட்ட காலக்கட்டத்திலோ விழாக்காலங்களிலோ எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள்தாம் அதிகம். சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடநூல்களில் எண்ணெய்க் குளியல்பற்றி மாணவர்கள் பயின்றாலும் அந்தப் பழக்கம் இன்னும் பரவவில்லை. சிங்கப்பூர் மக்களில் பெரும்பாலானோர் தம்மீது எண்ணெய் மணம் வீசும்போது பிறர் முகம் சுளிப்பதனால் இந்தப் பழக்கம் வேரூன்றாது போனதும் ஒரு காரணமாகும். எனினும், அந்த மணத்தை மாற்றக்கூடிய வசதிகள் இப்போது இருப்பதனால், தொடர்ந்து எண்ணெய்க் குளியலை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

துணைநூல்கள்

[1]        நீங்களும் நூறாண்டு வாழலாம் – நலங்கிள்ளி (பக்கம் 34-35)

           

             நன்றி: ஆயுர்வேத மருத்துவர், டாக்டர் N K பார்த்திபன் (கோயம்புத்தூர்)

bottom of page