top of page
Final.png

இரட்டைக் காப்பியங்கள்

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களும் இரட்டைக் காப்பியங்கள் எனப் பெயர் பெற்றவை. சிலப்பதிகாரம் கண்ணகி, கோவலன், மாதவி ஆகியோரின் கதையைக் கூறுவதாக அமைய, அதன் தொடர்ச்சியாக மாதவி கோவலனுக்குப் பிறந்த மணிமேகலையின் கதையை விளக்குவதாக அமைவது மணிமேகலை. சிலப்பதிகாரம் மனித வாழ்வில் பின்பற்றத்தக்க அறங்களையும் நெறிகளையும் வகுத்துரைக்கிறது. அதைப்போல் மணிமேகலை பௌத்த சமயக் கருத்துகளை எடுத்துரைப்பதோடு, அறங்களுள் தலையாய அறமான பசிப்பிணி போக்கும் உயரிய நெறியை வகுத்துரைக்கிறது. சிலப்பதிகாரம் சமண மதச்சார்புடைய காப்பியமாகவும் மணிமேகலை பௌத்த மதச்சார்புடைய காப்பியமாகவும் விளங்குகின்றன. சிலப்பதிகாரம் இல்லறத்தைப் போற்றுவதாகவும் மணிமேகலை துறவறத்தை வலியுறுத்துவதாகவும் அமைகின்றன. காலத்தாலும் கதைத்தொடர்பாலும் பாவகையாலும் ஒன்றுபட்ட சிலப்பதிகாரம், மணிமேகலைபற்றிய விளக்கங்களைக் காண்போம்.

சிலப்பதிகாரம்: கதைச்சுருக்கம்

சோழ நாட்டைச் சார்ந்த மாசாத்துவான் என்னும் பெருவணிகனின் மகன் கோவலனும் மாநாய்க்கன் என்பவனின் மகள் கண்ணகிக்கும் பெற்றோர் இசைவின்படி திருமணம் நடந்தது. கண்ணகியும் கோவலனும் இல்லறத்தின் பயனை அடைய வேண்டும் என அவர்களைத் தனி மனையில் தங்கவைத்தாள், கோவலனின் தாய். இவ்வாறு கண்ணகி இல்வாழ்க்கையில் சில ஆண்டுகள் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தாள்.  

 

மாதவி காவிரிப்பூம்பட்டினத்தில் நாடகக் கணிகை குலத்தில் பிறந்தவள். தனது கூத்துத் திறத்தை மன்னனிடம் காட்டித் தலைக்கோல் பட்டமும் ஆயிரம் தென்கழஞ்சு பொன்மாலையும் பெற்றாள். அவள் தோழி ஒருத்தி, அம்மாலையை வாங்குபவர் மாதவிக்கு உரியவன் என்று கூறி மாலையை விற்றாள். ஏற்கெனவே ஆடல் அரசியாகத் திகழும் அழகுப் பாவை மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு மனம் மயங்கிய கோவலன் அந்த மாலையை வாங்கிக்கொண்டு மாதவியின் வீட்டிற்குச் சென்று அவளுடன் வாழ்கிறான்; தனக்கு ஒரு கற்புடை மனைவி உள்ளாள் என்பதை மறந்துவிட்டான். கண்ணகி, கோவலன் பிரிவால் வாடினாள். கோவலன் தன்னைப் பிரிந்து சென்றபோதும் கற்பொழுக்கம் சிறிதும் பிறழாமல் அவனுடன் மனத்தளவிலேயே வாழ்ந்து வந்தாள் கண்ணகி. கோவலனின் செல்வம் கறைகிறது.

ஒருமுறை மாதவி பாடிய கானல்வரிப் பாடலில் உள்ள குறிப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு மாதவி வேறு யார் மீதோ காதல் கொண்டுள்ளாள் என்று நினைத்து, அவளைவிட்டுப் பிரிகிறான், கோவலன். பின் தன் மனைவி கண்ணகியைச் சென்றடைகிறான். அதன் பின்னர்ச் சமணத்துறவி கவுந்தியடிகளின் துணையோடு தான் இழந்த பொருளை ஈட்டக் கண்ணகியுடன் மதுரை நகர்க்குப் புறப்படுகிறான்.

 

கண்ணகியின் காற்சிலம்பை விற்றுவரும் பொருளில் வாணிகஞ்செய்து பொருள் ஈட்டலாம் எனச் செல்கிறான்.  பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், தனது மனைவியின் காற்சிலம்பைச் செப்பனிடத் தன் பொற்கொல்லனிடம் அதை அளித்திருந்தான். பொற்கொல்லனோ அதைக் களவாடிய காரணத்தால் சிலம்பைக் காணவில்லை எனப் பொய்யுரைத்தான்.

இந்நிலையில் பாண்டிய நாட்டிற்குத் தன் மனைவியுடன் வந்தடைந்தான், கோவலன். தன் மனைவியைச் சமணத்துறவி கவுந்தியடிகளின் பாதுகாப்பில் விட்டுவிட்டுக் கண்ணகியின் விலைமதிப்பற்ற காற்சிலம்பை அரசனிடம் விற்க விரும்பி, அவளது ஒரு காற்சிலம்பை மட்டும் எடுத்துக்கொண்டு அரசவைப் பொற்கொல்லனைச் சந்தித்தான்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி தனது கணவனான கோவலன் மீது பழியொன்று சுமத்தப்பட அதனால் தீங்குற்றதாகக் கனவு கண்டாள். ”தேவந்தி, நேற்று இரவு நான் கண்ட கனவிலே என் கணவன் வந்து என் இருகை பற்றி அழைத்துப் போனான். நாங்கள் ஒரு பெரிய நகரத்திற்குச் சென்றோம். அந்த நகரத்திலே இருந்த மக்கள் பொய்யான போலியான தேளைப்போட்டு பயங்காட்டுவது போல எங்கள் மேல் அடாத பழியைப் போட்டார்கள். அப்பழிச் சொல்லால் கோவலனுக்குத் தீமை விளைந்தது என்று பிறர் சொல்லக் கேட்ட நான் அது பொறுக்காமல் அவ்வூர் அரசன் முன் சென்று வழக்குரைத்தேன் அதனால் அவ்வரசனோடு அந்த ஊருக்கும் தீங்கு நேர்ந்தது. தீய கனவை சொல்லக் கூடாது. அதனால் அங்கு நேர்ந்ததை உனக்குச் சொல்லப் போவதில்லை. அது என் தீவினைப்பயன் என்று நினைக்கிறேன். ஆனால் என் மேலோனுடன் நான் பெற்ற நற்பேற்றை நீ கேட்டால் அது உனக்கு நகைப்பைத் தரும்” என்கிறாள்.

 

ஏற்கெனவே, அரசியின் சிலம்பைப் பொற்கொல்லன் களவாடியிருந்தான். பாண்டிய மன்னனும் சிலம்பைக் களவாடியவனைத் தேடிக்கொண்டிருந்தான். பொற்கொல்லன் கோவலன் வைத்திருந்த சிலம்பு அரசியின் காற்சிலம்பை ஒத்திருப்பதைக் கண்டு சூழ்ச்சி செய்தான். வஞ்சம் மிகுந்த அவன், காவலர்களை அழைத்துக் கோவலனே அரசியின் சிலம்பைக் களவாடியவன் எனப் பொய்யுரைத்தான். வழக்கைத் தீர விசாரிக்காத நெடுஞ்செழியன் பின்வருமாறு உரைக்கிறான்:

 

     கன்றிய கள்வன் கைய தாகில்

     கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கென

     (சிலப்பதிகாரம், கொலைக்களக் காதை)

அக்கள்வனைக் கொன்று அச்சிலம்பினை இங்குக் கொண்டு வருகவென்று மன்னன் சொல்கிறான். ஆதலால், கோவலன் கொலைக்களத்தில் கொல்லப்படுகிறான்.

கோவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த கண்ணகி தன் வசமிருந்த மற்றொரு காற்சிலம்புடன் அரசவைக்கு விரைந்தாள். அரசனிடம் நீதி கேட்டு முறையிட்டாள். அரசியின் காற்சிலம்பில் இருந்ததோ முத்து மணிகள் தன் காற்சிலம்பில் இருந்தவையோ மாணிக்கப் பரல்கள் என்பதை நிரூபிக்க, அரசனிடமிருந்த தன் காற்சிலம்பை விட்டெறிந்தாள். உதிர்ந்த மாணிக்கப் பரல்களைப் பார்த்துத் தான் தவறிழைத்ததை உணர்ந்த நெடுஞ்செழியன், “யானோ அரசன்? யானே கள்வன்” என்றுரைத்த வண்ணம் தரையில் வீழ்ந்து உயிரிழந்தான். பின் அதைக் கண்டு அவன் மனைவி பாண்டிமாதேவியும் உயிரிழந்தாள்.

கோபம் தணியாத கண்ணகியின் கற்பின் கனலைத் தாங்க இயலாமல் மதுரை கொழுந்துவிட்டு எரிந்தது. அவளது கோபத்திற்குத் தவறிழைத்த அனைவரும் பலியாயினர். பின்பு சேர நாடடைந்து குன்றின் மேல் வேங்கை மர நிழலில் நிற்கிறாள். குன்றக் குறவர்களிடம் தான் உற்ற துன்பம்பற்றிக் கூறுகிறாள். பின்பு வானுலகோர் அவள் கணவனுடன் வந்து அவளை அழைத்துச் செல்கின்றனர். கண்ணகியின் இந்த வரலாறு செங்குட்டுவனிடம் கூறப்படுகிறது. செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வஞ்சி நகரில் கண்ணகிக்குக் கோவில் கட்டுகிறான். இதுதான் சிலம்பின் கதை [1].

மணிமேகலை: கதைச்சுருக்கம்

கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. கோவலன் மதுரையில் கொலையுண்ட செய்தியினை அறிந்த மாதவி தன் பொருட்களை எல்லாம் போதி மரத்தின்கீழ் அறவண அடிகள் முன்னர்த் தானஞ்செய்து துறவறம் ஏற்கிறாள். தன் பெண்ணான மணிமேகலையையும் துறவறத்தில் ஈடுபடுத்துகிறாள்.

மாதவி, மணிமேகலை இருவரும் துறவு மேற்கொண்டு வாழ்ந்துவரும் வேளையில் பூம்புகாரில் இந்திரவிழா நடைபெறுகிறது. அவ்விழாவில் நாடக மடந்தையரின் ஆடலும் பாடலும் முதன்மையானவை. மாதவியும் மணிமேகலையும் அவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால், ஊர் மக்கள் அவர்களைப் பற்றிப் பழி பேசுகின்றனர். ஊர் பழிக்கவே, மாதவியின் தாயான சித்ராபதி மாதவியின் தோழி வயந்தமாலையை அழைத்து ஊர்ப் பழியைக் கூறி மாதவியை அழைத்து வருமாறு கூறுகிறாள்.

வயந்தமாலை மாதவியிடம் சென்று உரைக்கிறாள். ஆனால், மாதவி தான்கொண்ட ஒழுக்கத்தையும் மணிமேகலையின் உறுதியையும் விளக்கிக் கூறுகிறாள். மணிமேகலையை ‘மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள்’ என்று சொல்வதன் மூலம் மணிமேகலையின் வாழ்வுப் போக்கின் திசையைத் தெளிவாக உணர்த்திவிடுகிறாள்.

கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய மூவர்க்கும் ஏற்பட்ட துன்பங்களை மாதவி கூறியதைக் கேட்டு அங்கு மாலை தொடுத்துக்கொண்டிருந்த மணிமேகலை கண்ணீர் சிந்துகிறாள். கண்ணீர் படிந்து பூசைக்குரிய மாலை தூய்மை இழந்தது. அதனால், புதிய மலர்களைக் கொய்து வருமாறு மணிமேகலையிடம் மாதவி கூறுகிறாள். மணிமேகலையும் அவள் தோழி சுதமதியும் உவவனம் என்னும் சோலைக்குச் செல்கின்றனர்.


மணிமேகலையின்மீது காதல்கொண்டிருந்த அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் அவளைத் தேடி உவவனத்திற்கு வருகிறான். அவனிடமிருந்து தப்பித்துக்கொள்ள எண்ணிய மணிமேகலை, அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள். உதயகுமரன் பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியாமையால் மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறான்.

இந்திர விழாவினைக் காணவந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் நிலையை அறிந்துகொள்கிறது. மணிமேகலையை மணிமேகலா தெய்வம் உவவனத்திலிருந்து மணிபல்லவம் என்னும் தீவில் சேர்ப்பித்துவிட்டுச் செல்கிறது.


மணிபல்லவத் தீவிலே தனியாக விடப்பட்ட மணிமேகலை விழித்தெழுந்து தனிமையால் துன்புற்று அழத் தொடங்குகிறாள். அப்போது அவள்முன் ஒரு புத்த தரும பீடிகை தோன்றுகிறது. தரும பீடிகை என்பது புத்தர் அமர்ந்து அறம் உரைத்த ஆசனமாகும். அதைக் காண்போர்க்கு அவர்களுடைய பழம்பிறப்புகள் விளங்கும். மணிமேகலை அதனை வணங்குகிறாள். அதன் மூலம் தன் பழம்பிறப்பை உணர்கிறாள்.

மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு அவள் விரும்பும் வேற்று உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும் வான்வழியாகச் சென்றுவர உதவும் மந்திரத்தையும் பசியைப் போக்கும் மற்றொரு பெரிய மந்திரத்தையும் உரைத்துவிட்டுச் செல்கிறது. அப்போது, இந்திரன் ஏவலால் அத்தீவைக் காத்துவரும் தீவதிலகை என்னும் காவல் தெய்வம் அவள்முன் தோன்றுகிறாள். அவள் அத்தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையில், புத்தர் பிறந்த தினமான வைகாசித் திங்கள் விசாக நட்சத்திர முழுநிலவு நாளில் தோன்றும் அமுதசுரபி என்னும் பாத்திரத்தைப் பற்றிக் கூறுகிறாள். அப்பாத்திரம் ஆபுத்திரன் கையில் இருந்தது என்றும் அப்பாத்திரத்தில் இடும் உணவானது எடுக்க எடுக்கப் பெருகிக்கொண்டே இருக்கும் சிறப்புடையது என்றும் கூறுகிறாள்.

 

இன்று அப்பாத்திரம் மணிமேகலையைவந்து சேரும் என்றும் கூறுகிறாள். அதனைக் கேட்ட மணிமேகலை கோமுகிப் பொய்கையை வலம்வருகிறாள். அப்போது பொய்கையில் தோன்றிய அமுதசுரபி மணிமேகலையின் கையில்வந்து சேர்கிறது. மேலும், தீவதிலகை அறவண அடிகளிடம் ஆபுத்திரனின் வரலாற்றைக் கேட்டுத்தெரிந்துகொள்ளும்படி மணிமேகலையிடம் கூறியதால்  அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வான்வழியே புகார் நகரை அடைகிறாள். அறவண அடிகளைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறுகிறாள்.

மணிமேகலைக்கு அறவண அடிகள், சிந்தாதேவி ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்த வரலாற்றைக் கூறுகிறார். மேலும், “ஆபுத்திரன் மூலமாக உலக மக்களின் பசியைப் போக்கிய அமுதசுரபி பயன்படுத்தப்படாமல் இருப்பது தவறு. எனவே, நீ அப்பணியை மேற்கொள்,” எனவும் உரைக்கிறார். கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெற்றுக் காயசண்டிகையின் பசியைத் தீர்க்கிறாள்.

உதயகுமரன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளாத வகையில் மணிமேகலை காயசண்டிகையின் வடிவங்கொண்டு பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைப் புரிந்துவருகிறாள். காயசண்டிகையின் வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று அறிந்த உதயகுமரன் அவளை அடைய முற்படுகிறான். அப்போது காயசண்டிகையைத் தேடிவந்த அவள் கணவன் காஞ்சனன் என்பவன் உதயகுமரன் காயசண்டிகையை அடைய விரும்புவதாகத் தவறாக எண்ணி அவனை வாளால் வெட்டிக் கொன்று விடுகிறான்.

 

உதயகுமரன் இறப்பிற்கு மணிமேகலையே காரணம் என எண்ணிய அரசன் அவளைச் சிறையிலிடுகிறான். அரசமாதேவி தன் மகன்மேல்கொண்ட பாசத்தினால் மணிமேகலையை வஞ்சித்து வருத்திட முயல்கிறாள். மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அவளுக்கு மயக்க மருந்து ஊட்டுகிறாள். அவளுக்குத் தீங்கு இழைக்குமாறு கல்லாத இளைஞன் ஒருவனை ஏவுகிறாள்; புழுக்கறையில் அடைக்கிறாள்; ஆனால் மணிமேகலை இக்கொடுஞ்செயல்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அஞ்சித் தன் பிழையினை உணர்கிறாள். மணிமேகலை அவளுக்கு நல்லறங்களைப் போதிக்கிறாள். காமத்தின் கொடுமை, கொலையின் கொடுமை, கள்ளின் கொடுமை, பொய்யின் தீமை, களவின் துன்பம் எனத் தீய குற்றங்களின் தன்மையை உணர்த்துகிறாள். பசிபோக்குவதும் உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள். அப்போது அங்கு வந்த அறவண அடிகள் அரசிக்கு மேலும் பல அறநெறிகளை அருளுகிறார். மணிமேகலை அனைவரையும் வணங்கிச் சாவக நாட்டிற்குச் செல்கிறாள்.

அறப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்ட மணிமேலைக்கு அறவண அடிகள்,  பிறர் மதத்தையும் தம் மதத்தையும் எடுத்துரைத்து, மெய்ப்பொருளாகிய தருமநெறியின் நுண்மையான பொருட்களை விளக்குகிறார். மணிமேகலை அவர் உணர்த்திய ஞான விளக்கின் துணையால் தெளிவுபெறுகிறாள். முடிவில், ‘என் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் நீங்குக’ என வேண்டி நோன்பு நோற்கத் தொடங்குகிறாள்.

 

சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருந்த ஆபுத்திரனைச் சந்திக்கிறாள். அவன் தன் பழம்பிறப்பை உணர்ந்துகொள்ள மணிபல்லவத் தீவிற்குச் செல்லுமாறு தூண்டுகிறாள். தானும் மணிபல்லவத் தீவை அடைகிறாள். அங்குப் புண்ணியராசன் தன் பிறப்பை உணர்ந்துகொள்கிறான். அப்போது காவல்தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம், கோவலனின் முன்னோன் ஒருவன் கடலில் விழுந்து தவித்தபோது, மணிமேகலா தெய்வம் அவனைக் காப்பாற்றிக் கரைசேர்த்தது. உயிர்தப்பிய அவன் தான தருமங்கள் பல செய்தான். அவன் செய்த நற்செயல்களை அறிந்துகொள்ள வஞ்சி நகர்க்குச் செல்லுமாறு கூறுகிறது. மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் உரைத்துப் பின் வஞ்சி நகர்க்குப் புறப்படுகிறாள்.

மணிமேகலை வஞ்சி மாநகரை அடைந்து, அங்கிருந்த சமயக் கணக்கராகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகிய பலரும் தத்தம் சமயத்தின் நுண்பொருட்களை உரைக்கக் கேட்டு அறிகிறாள். அவள் மனம் அமைதி பெறவில்லை. அங்கிருந்து காஞ்சி மாநகரம் செல்கிறாள். அங்கு அறவண அடிகளைச் சந்தித்து மெய்ப்பொருள் உரைத்தருளுமாறு வேண்டுகிறாள். இந்நிகழ்ச்சியுடன் மணிமேகலைக் காப்பியக் கதை நிறைவுபெறுகிறது.

 

சிலப்பதிகாரத்தின் சிறப்புகள்

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’ என்று பாடினார் பாரதி. இக்காப்பியம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. தமிழ் மரபையும் பண்பாட்டையும் தமிழரது வாழ்க்கை முறைகளையும் அது வெளிக்காட்டுகிறது. இயல், இசை, கூத்து என முத்தமிழையும் தன்னகத்தே உள்ளடக்கி இன்றுவரை தமிழர்க்குப் பெருமை சேர்த்துவருகிறது.

சிலப்பதிகாரம் முப்பெரும் உண்மைகளைக் கொண்டுள்ளது. அவை பின்வருவன: 

1) அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்

2) உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்

3) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்

             (சிலப்பதிகாரம் பதிகம் 55-57)

ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்; கற்புடைப் பெண்டிரை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள்; ஊழ்வினை விடாதுபற்றித் தொடரும் என்னும் கருத்துகளையே மேற்குறித்த வரிகள் சுட்டுகின்றன [2].

இம்மூன்று உண்மைகளும் காப்பியத்தின் கதையோட்டத்தில் தெளிவாக எடுத்தாளப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆனாலும், காப்பியம் பல்வேறு சிறப்புகளையும் போற்றுதலையும் பெறுவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன.

1) குடிமக்கள் காப்பியம்

தெய்வங்கள், தெய்வத் தொடர்புடைய ராமன் போன்ற பாத்திரங்கள், முடி மன்னர் ஆகியோரைப் பாட்டுடைத் தலைவர்களாகப் பாடிவந்த காலத்தில் வித்தியாசமாக வணிகக் குடியில் பிறந்த கோவலனையும் கண்ணகியையும் காவியத் தலைவன் தலைவியாக அமைத்திருக்கிறார், இளங்கோவடிகள். தன்னிகரில்லாத் தலைவர்களைப் பாடிய காலக்கட்டத்தில்  தனிமனிதரின் வளர்ச்சிபற்றியும் முழுநிலை வளர்ச்சிபற்றியும் வாழ்க்கைக் குறிக்கோள்பற்றியும் சிந்தித்த முதல் காப்பியம் சிலப்பதிகாரமாகும். அதனால், அதனைக் குடிமக்கள் காப்பியம் என்பர் என அறிமுகம் செய்கிறார், அறிஞர் ச வே சுப்பிரமணியன்.  

2) வித்தியாசமான கருப்பொருள்

காவியத் தலைவன் அல்லது தலைவியின் வீரதீரங்களைக் கருப்பொருளாகக் கொள்ளாமல், காவியத் தலைவியின் சிலம்பைக் கருப்பொருளாகக் கொண்டு புனையப்பட்ட காவியம் சிலப்பதிகாரம்.

கோவலன் பொருளீட்டச் சிலம்பினை எடுத்துச் சென்றான். அரசியின் சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டான், அரசியின் சிலம்பை மீட்டுத்தர வேண்டும் என்ற அவசரத்தில் மன்னன் சற்றும் யோசிக்காமல் தவறிழைத்தான். சிலம்பிலிருந்து சிதறிய மாணிக்கத்தைப் பார்த்து நீதி தவறிய மன்னன் உயிரிழந்தான். இப்படிச் சிலம்பினைச் சுற்றிப் பல நிகழ்வுகள் பின்னப்பட்டிருப்பதால் சிலம்பு, இக்காப்பியத்தின் கருப்பொருளாகத் திகழ்ந்து, சிலப்பதிகாரம் என்னும் பெயரும் இக்காப்பியத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.

குடிமகளாய்ப் பிறந்த கண்ணகி, முடிமன்னனின் செங்கோல் பிழைத்தமையை நிறுவுவதற்குத் தனது காற்சிலம்பைப் பயன்படுத்தினாள். பாண்டியனும் அவன் தேவியும் தங்களது உயிரைப் போக்கி, வளைந்த செங்கோலை நிமிர்த்தியதும் அச்சிலம்பின்வழி அவர்கள் அறிந்த உண்மையினாலேயே எனக் காப்பியத்தில் சிலம்பின் முக்கியத்துவத்தை விளக்குகிறார், சோமசுந்தரம் பரமசாமி [3].

3) மூவேந்தர்களையும் இணைத்த காப்பியம்

சிலப்பதிகாரம் மூவேந்தர்களையும் ஒற்றுமைப்படுத்திய காப்பியமாகும். இக்காப்பியத்தில் புகார்க் காண்டம் சோழ நாட்டிலும் மதுரைக் காண்டம் பாண்டிய நாட்டிலும் வஞ்சிக் காண்டம் சேர நாட்டிலும் இடம்பெற்றுள்ளது.  புறநானூற்றுப் பாடல்கள், மூவேந்தர்கள் மனக்கசப்புக் கொண்டு போரிட்ட கதைகளைக் கூறுகின்றன. ஆனால், அவர்கள் மூவரையும் தம் காப்பியத்தில் இணைத்துள்ளார், இளங்கோவடிகள்.

 

மூவேந்தர்கள் ஆளும் தத்தம் நாடுகளில் கதை நடந்ததாகக் காட்டப்படுகிறது. சோழ நாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் கணவனை இழந்து, சேர நாட்டில் தெய்வநிலை எய்தினாள், கண்ணகி. அது மட்டுமல்லாமல் கதையைக் கொண்டு செல்லும் போக்கில் அந்தந்த நாட்டின் இயற்கை வளம், தொழில், கலை, நாட்டு வளம் எனப் படிப்போரை ஈர்க்கின்றன. மேலும், அவர் எந்த மன்னரின் ஆட்சியையும் குறைகூறாது அந்நாட்டுப் பெருமைகள் வெளிப்படும் வகையில் சிறப்பித்துள்ளார்.

 

4) பெண்ணின் பெருமை

சிலப்பதிகாரம் பெண்ணின் பெருமையைப் போற்றிய ஒரு காப்பியமாகும். உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் என்னும் உண்மையை விளக்க இளங்கோவடிகள் தமது காப்பியத்தில் பல நிகழ்வுகளை அமைத்துள்ளார்.

முதலில், காப்பியத்தின் தொடக்கத்திலேயே கண்ணகியை அறிமுகம் செய்த பின்னரே கோவலனை அறிமுகம் செய்கிறார். மதுரை மாநகரைக் காவல்செய்த மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன்வரத் தயங்கி, அவள் பின்பக்கமாக நின்று பேசுகிறது. கண்ணகி மதுரையை எரித்தபோது, தீக்கடவுள் அவள் ஏவல் கேட்டுச் செயல்படுகிறது. மேலும், இக்காப்பியத்தில் பத்தினி வழிபாடு என்பது அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்குச் சேர மன்னன் பத்தினிக் கோட்டம் எழுப்பிப் பெண்களுக்குப் பெருமை சேர்க்கிறான் [2].

5) முத்தமிழ்க் காப்பியம்

சிலப்பதிகாரம் ஒரு முத்தமிழ்க் காப்பியம் எனப் புகழப்படுகிறது. இளங்கோவடிகள் வழங்கிய இவ்வியற்றமிழில், நாடகத் தமிழ்க் கூறுகளும் இசைத்தமிழ்க் கூறுகளும் செறிந்து கிடக்கின்றன. இக்காப்பியத்தில் அரங்கேற்றுக் காதை தமிழர்களின் கலைச் சுரங்கமாக விளங்குகிறது. இங்கு ஆடலாசிரியன், இசையாசிரியன், இயற்றமிழாசிரிய நன்னூல் புலவன், தண்ணுமையாகிய மத்தள ஆசிரியன், குழலாசிரியன், யாழ்ப்புலவன் ஆகியோரின் தகுதிகளும் புலமையும் கூறப்பெற்றுள்ளன.

காப்பியத்தில் கடல் ஆடு காதையில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடலையும் பல்வேறு வகை ஆடல் மரபுகளையும் ஆசிரியர் விளக்கியுள்ளார். நாட்டுப்புறக் கலைகளும் இக்காப்பியத்தில் நிரம்ப உள்ளன. வரி என்னும் சொல் இசையையும் கூத்தையும் குறிக்கும். கானல்வரி இசையாலும் வேட்டுவ வரி, ஊர்சூழ் வரி இரண்டும் கூத்தாலும் பெற்ற பெயர்கள். மேலும், கானல்வரிக் காதையில் தமிழர்களின் இசைக்கருவியான யாழின் தன்மையும் கூறப்படுகிறது. பாலை நிலத்து மக்களாகிய வேட்டுவர் ஆடிய கூத்தைப் பற்றிக் கூறுவதாக அமையப் பெற்றது வேட்டுவவரிக் காதை. கண்ணகி, வேட்டுவர் ஆடிய வரிக்கூத்து, முல்லை நில மக்கள் ஆடிய குரவைக் கூத்து ஆகியவற்றைக் கண்டு களிக்கிறாள். இவ்வாறு முத்தமிழைக் கட்டிக்காக்கும் பொருட்டுக் கதையின் நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. முத்தமிழானது தமிழ் மக்களின் வாழ்வோடு ஒன்றிய ஒன்றாகவே விளங்குகிறது.

6) நாடகக் காப்பியம்

தற்குறிப்பேற்ற அணி

தற்குறிப்பேற்றம் என்னும் உத்தி இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது.  மதுரையில் கண்ணகிக்கு நேரப்போகும் துயரினை அறிந்து, அதனால் தனக்குப் பெருகிய கண்ணீரைக் கோவலனும் கண்ணகியும் அறியாவாறு பூக்களாகிய ஆடையால் மறைத்துக்கொண்டது வையை ஆறு. இவ்வருணனையில் தற்குறிப்பேற்ற அணி பயன்படுத்தப்பட்டுள்ளது.

     வையை என்ற பொய்யாக் குலக்கொடி

     தையற்கு உறுவது தான்அறிந் தனள்போல்

     புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்

     கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி  

     (புறஞ்சேரி இறுத்த காதை -2086-2089)

மதுரை மாநகரை நோக்கிச் சென்ற கண்ணகி, கோவலனைப் பார்த்துக் கோட்டை மீது பறந்த கொடிகள் ‘வராதீர்கள்’ என்பதுபோல மறித்துக் கைகாட்டின எனவும் தற்குறிப்பேற்ற அணியின் மூலமாகப் பின்னர்வரும் அவலத்தை முன்னர் அறிவிக்கும்போது இளங்கோவின் நாடகத் திறன் வெளிப்படுகிறது.

பின்னோக்கு உத்தி

நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைவுகூர்தல் என்னும் அமைப்பில் கதை பின்னப்படும் முறை பின்னோக்கு உத்தி எனப்படும். கோவலன் கொல்லப்படுவதற்கு முன்பாக, அவனைக் குறித்துப் புகழ்கிறான் மாடல மறையோன்.

 

மணிமேகலைக்குப் பெயர் சூட்டிய நாளில், பரிசுபெற வந்த முதியவர் ஒருவரை யானை தன் துதிக்கையால் பற்ற, உடனே ஓடிச்சென்று அவரை மீட்டு யானையை அடக்குகிறான், கோவலன். இதனால், ‘கருணை மறவன்’ எனப் பாராட்டப் பெற்றதைப் பின்னோக்கி நினைத்துப் பார்த்து, அவனது பெருமையை விளக்குகிறான்.

தன் குழந்தையைப் பாம்பிடமிருந்து காத்த கீரிப்பிள்ளையைத் தவறுதலாகப் புரிந்துகொண்ட பார்ப்பனி, அதனைக் கொன்றதால் தன் கணவனால் புறக்கணிக்கப்பட்டபோது, வேண்டியன செய்து அவர்களை ஒன்று சேர்க்கிறான், கோவலன். அதனால், ‘செல்லாச் செல்வன்’ எனப்பட்டான் என்றும் பொய் சாட்சி கூறிய ஒருவனைச் சதுக்கப் பூதம் விழுங்க முற்பட்டபோது, கோவலன் அவனுக்காகத் தன் உயிரைத் தரமுனைகிறான். அவ்வுதவி ஏற்கப் பெறாமையால் அவன் குடும்பத்தைக் காக்கிறான். இதனால், ‘இல்லோர் செம்மல்’ எனப்பட்டான் என்றும் பின்னோக்கிக் கோவலனின் பெருமைகள் கூறப்படுகின்றன. அதுவரை காப்பியத்தைப் படித்தவர்கள் கோவலனின் செய்கையினால் வருந்தினாலும் கோவலனின் சிறப்புகளைக் கூற இந்த உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

7) கற்பனை நயம்மிக்க காப்பியம்

இளங்கோவடிகள் இயற்கையை வருணிக்கும்போது, கற்பனைத்திறத்தோடு செய்யுட்களை அமைத்துள்ளார். அதே சமயம் பல கதைகளின் மூலம் அவர் கூற விரும்பும் அறங்களையும் உரைக்கிறார். பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது, பிறர் மனைவியை விரும்பக்கூடாது, அடுத்தவனைப் பற்றிப் புறஞ்சொல்லக்கூடாது, பொய்யான தவவேடம் போடக்கூடாது எனப் பலவற்றை மக்களிடையே கொண்டுசெல்லக் கற்பனைவழியைக் கையாள்கிறார். சிலப்பதிகாரத்தில், புகார் நகரில் ஐம்பெரு மன்றங்கள்வழிப் பல கதைகளைக் கற்பனையாக உருவாக்குகிறார். எடுத்துக்காட்டாக, வெள்ளிடை மன்றத்தில் திருடிய பொருள் திருடனோடு ஒட்டிக்கொள்ளும், பின் ஊரைச் சூழ்விக்கும் திருடன் திருடன் என்னும் சப்தம் போடும். இத்தகைய மன்றத்தைத் தமது கற்பனையால் உருவாக்கியுள்ளார். அடுத்து, பூத சதுக்கத்தில் பொய் சாட்சி சொல்லுவோர், புறம் கூறுவோர், பிறர் மனைவியை விரும்புவோர், தவவேடம் போட்டுத் தவறு செய்வோர், பிழையாக நடக்கும் பெண்டிர் அவர்களை எல்லாம் பூதம் தன் கையிலுள்ள கயிற்றால் இழுத்து 40 மைல் அளவுக்குச் சப்தம் கேட்கும்படி ஒலியெழுப்பி அடித்து உண்டுவிடும். தவறுகளைத் தண்டிக்கக் கற்பனையால் ஒரு வழியைக் கண்டுபிடித்தார், சாத்தனார்.

8) சிலப்பதிகாரத்தில் தமிழர்களின் பல தொழில்கள்

சிலப்பதிகாரத்தில் பல்வகைத் தொழில்கள் காப்பியம் முழுக்க நிரம்ப இடம்பெற்றுள்ளன. தொழில்வழிப் பெயர்களான ஆயர், வேடுவர், எயினர், பொற்கொல்லர் ஆகியவை இடம்பெறுகின்றன. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரு ஊர்களைப் பற்றிக் கூறும்போது பல்வேறு தொழில்கள் விளக்கப்படுகின்றன. மருவூர்ப்பாக்கத்தில் செம்பு, வெண்கலப் பாத்திரம் விற்போர், தையற்காரர், செம்மார், பொம்மைகளும் சிலைகளும் செய்வோர் எனப் பல்வகைத் தொழில்கள் செய்வோர்பற்றிய செய்திகளை எடுத்துக்கூறுகிறார், இளங்கோவடிகள். சேர நாட்டில் அரசியல் பணியாளர்கள்பற்றிக் கூறுகையில் ஐம்பெருங்குழு, எண்பேராயம், கணக்கியல் வினைஞர் என அரசியல் பணியாளர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர் [4].

9)  சீர்திருத்த முயற்சிகள்கொண்ட காப்பியம்

பரத்தையர் தொழில் செய்வோர் எப்போதும் இழிவாகப் பேசப்பட்ட அக்காலக்கட்டத்தில் அக்குலத்தில் பிறந்த பெண் ஒருத்தி, காப்பியத்தின் முக்கியப் பாத்திரமாக விளங்குகிறார். மேலும், எந்த விதத்திலும் மாதவியைக் குறைவாக மதித்து அவர் எழுதவில்லை. மாதவியும் பரத்தையாகப் பிறந்தாலும், அவ்வாறு வாழவில்லை. ஒருவனுக்கே உண்மையாக இருந்தாள். பின் தன் மகளையும் நல்வழிப்படுத்தினாள்.

பெண்கள் கணவனைத் தெய்வமாக நினைத்துப் போற்றினாலும், கோவலனின் வார்த்தைகளைக் கேட்டு நடந்துகொண்டிருந்த கண்ணகி, அநீதி ஒன்று நிகழ்ந்தபோது அதைத் தட்டிக்கேட்கும் பண்புடையவளாக இருக்கிறாள். அக்காலக்கட்டத்தில் பெண்கள் இப்படித் தங்களுக்காக வாதிட முன்வருவதே புதுமைதான்.

தமிழ் மரபை அடித்தளமாகக்கொண்டு இக்காப்பியம் முன்னோர்களின் பழக்கவழக்கங்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் நமக்கு விளக்குகிறது. இப்படிப் பண்பாட்டுப்பெட்டகமாக விளங்கும் சிலப்பதிகாரம், தமிழர் வாழ்வு, இலக்கியம், கலை போன்ற தகவல்களை வாரிவழங்குகிறது.

மணிமேகலை

சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய நயம் நிரம்பப்பெற்ற காப்பியம் மணிமேகலையாகும். சிலப்பதிகாரம் காலணியால் பெற்ற பெயராக இருக்க மணிமேகலை இடையணியால் பெற்ற பெயராகும். சங்கம்மருவிய காலத்தில் பௌத்த சமயம் தமிழகத்தில் விரிவாகப் பரவி மக்களிடையே செல்வாக்குப்பெற்ற காலத்தில் தோன்றிய நூல், மணிமேகலையாகும். மணிமேகலையின் வரலாற்றைக் கூறும் இக்காப்பியம், மணிமேகலை துறவு என முதலில் பெயரிடப்பட்டு பின்னர் மணிமேகலை என வழங்கப்படுகிறது.

மணிமேகலையின் சிறப்புகள்

1) பெண்ணின் பெருமை

சிலப்பதிகாரம் போலவே தன்னிகரில்லாத காப்பியத் தலைவியாக ஒரு பெண் இடம்பெறுகிறாள். இக்காப்பியத் தலைவியாக மணிமேகலை பல அறங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கிறாள். மேலும், பெண்களைத் தங்கள் வாழ்வில் எதிர்ப்படும் இன்னல்களைச் சமாளிக்கும் திறம் பெற்றவர்களாய்ச் சித்திரிக்கிறார், சாத்தனார்[4]. சித்திராபதியின் விண்ணப்பத்தையும் ஊராரின் பழி தூற்றலையும் பொருட்படுத்தாத மாதவி தனது கொள்கையிலும் பரத்தையொழிப்பிலும் தீவிரமாகச் செயல்படுகிறாள். மணிமேகலை காதல், அச்சம், துக்கம் எனப் பல உணர்வுகளுக்குள்ளாகிப் பின் மனத்தை ஒருநிலைப்படுத்தி வெற்றி காண்கிறாள். துன்பங்கள் ஒருவரைப் பண்படுத்தும் என்னும் வாழ்வியல் தத்துவத்தை மணிமேகலை உணர்த்துகிறாள்[4].

2) சமயக் காப்பியம் - மொழிபெயர்ப்பு முன்னோடி

தமிழ்மொழியில் தோன்றிய முதல் சமயக் காப்பியம், மணிமேகலை. இது ஒரு பௌத்த காப்பியமாக விளங்குகிறது. பௌத்த சமயத்தின் பெருமைகளை வெளிக்கொணரும் அதே வேளையில், அதன்வழி உலக நீதிகளை வெளிப்படுத்துகிறார், சாத்தனார். இம்மதம் தொடர்பான கருத்துகள் பல வடமொழியில் இருந்தாலும், அவற்றை மொழிபெயர்த்துத் தமிழில் பாடி, மொழியாக்கத் துறையில் வெற்றி கண்டவர், சாத்தனார். இதன்மூலம் அவர்க்குப்பின் சமயம் தொடர்பாக எழுந்த நூல்களை இயற்றுபவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். ‘சமய சம்பந்தமான சில சொற்களையும் தொடர்களையும் வேறு சிலவற்றையும் இடத்திற்கேற்ப இவர் மொழிபெயர்த்து அமைத்திருத்தல் மிகப் பாராட்டிற்கு உரியதொன்றாம்’ என்பது தமிழ்ப் பெரியார், உ வே சாவின் புகழுரை என்கிறார்,  முனைவர் வ சுப மாணிக்கனார்.

3) பசிப்பிணி போக்கும் அறம்

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. மணிமேகலைக் காப்பியத்தில் பசிப்பிணி போக்குதலின் அவசியம் விளக்கப்படுகிறது. உயிர்களின் பசியை ஒழிப்பதே மணிமேகலையில் வலியுறுத்தப்படும் பேரறமாகும். பசியின் கொடுமை மிகப் பெரியது என்றும் அப்பசிப்பிணி ஒருவரைத் தொற்றினால் அவர்க்குப் பல புறநோய்களும் அகநோய்களும் ஏற்படும் என்றும் இதனால் அறம் இல்லாத செயல்கள் பெருகும் என்றும் சாத்தனார் எடுத்துரைக்கிறார்.

பசிப்பிணி என்னும் பாவியது தீர்ந்தோர்

இசைச்சொல் அளவைக் கென்னா நிமிராது” (மணி 1239-40)

உலகில் வாழ முதலில் உணவு, மானத்தைக் காப்பாற்ற உடை, பாதுகாப்போடு வாழ வீடு இவையே மனித சமுதாயத்தின் அடிப்படைத் தேவைகள் என்றும் அவற்றை ஒருவர் பெறச் செய்வதே மனித அறம் என்கிறது, மணிமேகலை.

அறம்எனப் படுவது யாது? எனக்கேட்பின்

மறவாது இதுகேள், மன்உயிர்க்கு எல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல்     (மணி, 25, 227-230)

4) சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்ட காப்பியம்

பரத்தமையை ஒழித்தல்

பரத்தையர் குலத்தில் பிறந்த மாதவி கோவலனையே தன் கணவனாகக் கொண்டு இருந்தாள். பின் அவள் துறவுபூண்டாள். அவள் தன் மகளையும் பௌத்த சமயத்தில் ஈடுபடச் செய்தாள். பரத்தமைத் தொழிலில் இருந்த ஒருத்தியைக் காப்பியத் தலைவியாக அமைத்தது சிறப்பு. பசிக்கொடுமையினால் மற்றக் குற்றச் செயல்கள் பெருகுவதைப்போல, பரத்தையர் தொழில் மற்றக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் பரத்தை ஒழிப்பில் மணிமேகலையும் மாதவியும் அதிக முயற்சி செய்துள்ளனர்.

சிறைச்சாலைகள் அறச்சாலைகளாதல்

சிறைச்சாலைகளை அறச்சாலைகளாக மாற்றிய பெருமை மணிமேகலைக் காப்பியத்திற்கே உண்டு. சிறைச்சாலைக்குச் செல்வோர் அனைவரும் மனந்திருந்தி வாழ, சிறைக் கைதிகளுக்கென மறுவாழ்வுத் திட்டம் பல நாடுகளில் உருவாக்கப்படுகின்றன. அதுபோல மணிமேகலையில் சிறைச்சாலைக்குள் புகுந்தபோது, அங்கே தண்டிக்கப்பட்டுப் பசியால் வருந்திய அனைவரிடமும் இன்மொழி பேசி அவர்களின் பொருட்டு மனமிரங்கி அவர்களுக்கு உணவளிக்கிறாள். மன்னர்க்கும் அறிவுறுத்தி சிறைச்சாலைகளை அறச்சாலைகளாக மாற்றுகிறாள்.

சமூக நெறிகள்

மணிமேகலையில் கள்ளுண்ணாமை, பொய்யுரையாமை, கொலை செய்யாமை, விபசாரம் செய்யாமை, களவு செய்யாமை போன்ற நெறிகள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றின்படியே சாத்தனார் பாத்திர அமைப்பையும் கையாண்டு உள்ளார். மணிமேகலை  தனக்கென வாழாது சமுதாயத்தின் நலனுக்காகத் தன்னலத்தைத் தியாகம் செய்தவள்.

மணிமேகலை சமயக் காப்பியமானாலும், அதுவும் தமிழர் வாழ்வினை நமக்கு விளக்கும் ஒரு நூலாகவே விளங்குகிறது. மணிமேகலை என்னும் கதாபாத்திரத்தின்வழிப் பிறப்பு எதுவாக இருந்தாலும் நல்வழியில் நடந்து வீடுபேறு அடைய ஒருவரால் முடியும் என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது. பல உலக அறநெறிகளும் வலியுறுத்தப்பட்டு, அறங்களுள் பேரறமான பசிப்பிணி போக்குதலை மனிதர்களின் தலையாய கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

 

துணைநூல்கள்:

 

[1]   மாணிக்கம், வ. சுப (2007). இரட்டைக் காப்பியங்கள். சென்னை, மோனார்க் கிராபிக்ஸ்.

[2]   தமிழ் இணையப் பல்கலைக் கழகம். (2012). http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm

 

[3]   பரமசாமி, சோ. (2010). சமய நோக்கில் தமிழ் இலக்கியச் சிந்தனைகள், அன்னை வெளியீடு.

[4]   ஸ்ரீலக்ஷ்மி, எம். எஸ். (2018) ஐம்பெரும் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல், சிங்கப்பூர்: அகநாழிகை பதிப்பகம

Iyal 1 Chap 1 references
bottom of page