top of page
red.png

சிங்கப்பூரில் நீங்கள் எந்த வகை இந்தியர்?

Lavanya.png

சிங்கப்பூரில் நீங்கள் எந்த வகை இந்தியர்?

முனைவர் லாவண்யா கதிரவேலு

உலகளாவியப் புலம்பெயர்தல் நம் சமகால வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. அதுவும் மக்கள்தொகை சரியாமல் பேணிக்கொள்ளத் தேவையான கருவளவிகிதம் இல்லாத சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் பிற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து மக்கள் வருவது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிட்டது. புதிய சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்வதில் புலம்பெயர்ந்தோர் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும், புதியமண்ணில் அவர்கள் வேர்விடத் தொடங்கும்போது அங்குள்ள சமுதாயத்துடன் ஒருங்கிணைவது அடுத்தகட்டச் சவால். இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்தல் கணிசமாக அதிகரித்தக் கடந்த கால்நூற்றாண்டில், உள்ளூர் இந்தியர்-புலம்பெயர் இந்தியர் ஒருங்கிணைவும் அவ்வாறு பல சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டது, இப்போதும் எதிர்கொள்கிறது. இந்த ஒருங்கிணைவு தொடர்பான சிக்கல்களையும் உராய்வுகளையும் ஆராய்ந்துள்ள முனைவர் லாவண்யா கதிரவேலு, தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் (மார்ச் 2021) ஒரு நேர்காணல் அளித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகளைச் சுருக்கி இங்கே தந்துள்ளோம் - உங்கள் சிந்தனைக்கு விருந்தாக.

ஒருங்கிணைவை எப்படி வரையறுப்பது?

 

ஒரு சமுதாயத்தின் பொதுவான வழமைகள், விழுமியங்கள், அமைவுகள் (structures) ஆகியவற்றோடு தனிமனிதர்கள் அல்லது சமூகங்கள் எந்த அளவுக்குப் பொருந்திப் போகின்றனர் என்பதையே சமுதாய ஒருங்கிணைவுக்கு ஒரு பொது வரையறை எனலாம். நடைமுறையில் ஒருங்கிணைவை அளக்கும் அளவீடுகள் என்றால், புலம்பெயர்ந்த ஒருவர் புதிய மண்ணின் மொழியைக் கற்பது, கல்வி பெறுவது, ஊழியரணியுடன் ஒன்றிணைவது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை ஒருங்கிணைவுக்கு உரமூட்டும் வழிகளாக உள்ளன. மேலும், வழிபாட்டுத் தலங்கள், சமூகக் குழுக்கள் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளின் வழியாகச் சமுதாயத்தில் நட்புறவு, தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் ஒருங்கிணைவுக்கான வழிகளே. 

 

சிங்கப்பூரில் ஒருங்கிணைவு எப்படி உள்ளது?

 

பிற நாடுகளோடு ஒப்பிடும்போது சிங்கப்பூரில் புலம்பெயர்ந்தோர் ஒருங்கிணைவு மிக நன்றாக உள்ளது என நினைக்கிறேன். ஒருங்கிணைதல் தொடர்பிலான வன்முறைச் சம்பவங்கள் ஏதுமில்லை என்பதோடு அன்றாட வாழ்க்கைப் பயணமும் சுமூகமாகவே நீடிக்கிறது. இந்த சுமூகமான பயணம் எப்போதுமே இப்படித்தான் இருக்கும் என்று அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்பதே சிங்கப்பூருக்கான சவால். மேலும், ஒருங்கிணைவு விஷயத்தைப் பொறுத்தவரை, மேம்போக்காகத் தென்படுவனவற்றை மட்டுமின்றி அதனடியில் மறைந்திருக்கும் உரசல்களைக் கண்டறிவதும் அதற்கான தீர்வுகளை நாடுவதும்கூடச் சவாலானதுதான். ஒரே தாய்மண்ணைக் கொண்டவர்கள் என்பதோ ஒரே இனம் என்பதோ புலம்பெயர்தலின்போது அவர்களுக்குள் ஒருங்கிணைவை எளிமையாக உண்டாக்கிவிடும் என்று அனுமானிப்பது பிரச்சனைக்குரியது. என்னுடைய ஆய்வின் அடிப்படையிலும் சரி, பிற ஆய்வாளர்களின் முடிவுகளின்படியும் சரி இக்கருத்து தொடர்ந்து உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரு நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையே நல்ல ஒருங்கிணைவு இல்லை என்றால், ‘இது நமக்கான நாடு’ என்னும் பிணைப்பும் விசுவாசமும் சில குழுவினரிடையே குறைவாக உணரப்படுகிறது என்று பொருள். அத்தகைய சூழல் ஒருமைப்பாட்டுடன்கூடிய தேசத்தை உருவாக்கும் முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கலாம். இவ்விஷயத்தில் இந்தியச் சமூகத்திற்குள்ளேயே குறிப்பிடத்தக்க அளவில் இறுக்கம் இருப்பதையும் அதனால் உரசல்கள் நிகழ்ந்துள்ளதையும் ‘Navigating Differences – Integration in Singapore’ என்னும் நூலிலுள்ள எனது இயலில் விவாதித்துள்ளேன். அதில் சிங்கப்பூரில் நிகழ்ந்த சம்பவங்களையே எடுத்துக்காட்டுகளாவும் அளித்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் வாசித்துப் பார்க்கலாம்.

ஒருங்கிணைவு தொடக்ககாலச் சிக்கலா? நிரந்தரப் பிரச்சனையா? 

 

உள்ளூர் இந்தியர்-புலம்பெயர் இந்தியர் ஒருங்கிணைவு, சிங்கப்பூரில் முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோர் மட்டுமே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை எனச் சிலர் கருதுகின்றனர். அப்படியில்லை. புலம்பெயர்ந்தோரில் முதல் தலைமுறையினர் அனைவருக்கும் அதிநிச்சயமாக இங்கே ஒருங்கிணைவுச் சிக்கல் உள்ளது என அனுமானிக்கக் கூடாது. சிலர் மற்றவர்களைவிட விரைவாக உள்ளூர் இந்தியச் சமூகத்துடன் ஒருங்கிணைந்துவிடுகின்றனர். ஆகவே பொதுமைப்படுத்துவதில் கவனம் தேவை.  புலம்பெயர்ந்தோருக்கு, புதிய மண்ணின் சமுதாயத்துடன், இரண்டாம் தலைமுறையில் தொடங்கி அடுத்தடுத்த தலைமுறைகளில் மேம்பட்ட ஒருங்கிணைவு நிகழ்வதைப் புலம்பெயர்வு குறித்த பெரும்பாலான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும் இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. குறிப்பாக இனம், வர்க்கப் பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைவு ரீதியான கட்டுப்பாடுகளைக் கொண்ட சமுதாயங்களில் புலம்பெயர்ந்தோர் பல தலைமுறைகளாக மையப்போக்குடன் ஒன்றிணைய இயலாமலேயே நீடிக்கின்றனர். ஒரே இன மக்களிடையே உள்ள பண்பாட்டு வேறுபாடுகள் அவர்களுக்குள் சில எல்லைக்கோடுகளை வரைந்துகொள்வதற்கும் மேல்கீழ் பார்ப்பதற்கும் வழிசெய்கின்றன. சமூக-பொருளாதார நிலை, மதம், மொழி, பிறந்தநாடு ஆகியவையும் பிரிவினைகளை உருவாக்குகின்றன. சிங்கப்பூரின் சீன சமூகத்திலும் இது உண்டு. மேலும், சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த இந்தியச் சமூகத்தினரிடையே பிரிவினைகளோ மேல்கீழ் பார்ப்பதோ கிடையாது என்று நாம் அனுமானித்துக்கொள்ளவும் கூடாது.

இந்தியாவைக் குறித்த உள்ளூர்ப் பார்வையின் தாக்கம் 

 

உள்ளூர் இந்தியர் உள்ளிட்ட சில சிங்கப்பூரர்களுக்கு, இந்தியா மோசமான சுகாதாரச் சூழலும், பாலின சமத்துவமின்மையும், உற்பத்தித் திறன் குறைபாடுகளும் கொண்ட ஒரு ‘மூன்றாம் உலக’ நாடு என்னும் எண்ணமுண்டு. அத்தகைய எண்ணம் அங்கிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயரும் இந்தியரைக் குறித்து ‘இவர்கள் இப்படித்தான்' (stereotypes) என்னும் கண்ணோட்டத்தை அவர்கள் உருவாக்கிக்கொள்ள வழிவகுக்கிறது. இவ்விரு குழுவினரிடையே சமுதாய அளவிலான உறவுகள், தொடர்புகள் மேம்படுவதையும் அக்கண்ணோட்டம் பாதிக்கிறது. மொழி, மதம், உணவு போன்ற பல விஷயங்கள் பல சமயங்களில் சிங்கப்பூர் இந்தியருக்கும் புலம்பெயர் இந்தியருக்கும் பொதுவானவை. மேலும் இந்தியச் சமூகத்திற்குள் பண்பாட்டு மேம்பாடு, இந்நாட்டுக்குப் பங்களிக்கும் வேட்கை ஆகியவற்றையும் பொது அம்சங்களாகக் குறிப்பிடலாம். இருப்பினும் வேறுபட்ட பின்புலங்களைக்கொண்ட பல நாடுகளிலிருந்து வருவோர் பல்வேறு வேறுபாடுகளோடுதான் வருவர் என்ற அனுமானத்தோடு தொடங்குவதே சரியானவழி என நினைக்கிறேன். பிறகு அந்த வேறுபாடுகளைத்தாண்டி அவர்களோடு ஒருங்கிணைந்து வாழ்வதற்கான வழிகளை நாம் கண்டறியவேண்டும். 

தகுதிக்கு முன்னுரிமை அளிப்பது ஒருங்கிணைவை பாதிக்குமா?

 

தகுதிக்கு முன்னுரிமை (meritocracy) என்னும் அடிப்படியில் நிகழும் புலம்பெயர்வு சமுதாய ஒருங்கிணைவை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறித்து நான் ஆராயவில்லை. ஆனால் சிங்கப்பூரும் ஏனைய பல நாடுகளையும்போலவே மேலான தொழில்திறன் உள்ளவர்களைக் குடியேற அனுமதிக்கிறது. அவர்களின் மதிப்பைச் சிங்கப்பூர் உணர்ந்திருக்கிறது. ஆகவே தகுதியடிப்படையிலான சேர்க்கை என்பதைத் திறமைசாலிகளைக் கைப்பற்றுவதில் உலக நாடுகளுக்கிடையிலான போட்டி எனலாம். ஆங்கிலம் பேசும் திறன் சமுதாய ஒருங்கிணைவில் முக்கியமானதாகக் கருதப்படுவதைக் கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. அதைப்போலவே சிங்கப்பூரின் தனித்துவத்துடன் பேசப்படும் ஆங்கிலமான சிங்கிலீஷைப் பயன்படுத்துவதும் சிங்கப்பூரர் என்ற அடையாளத்தை வலுப்படுத்தும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே சரியான வகையில் அல்லது போதிய அளவில் சிங்கிலீஷ் பயன்படுத்த இயலாவிட்டால் “சிங்கப்பூரர்தன்மை” இல்லாதவர் என ஒருவர் கருதப்படலாம். இருப்பினும், சிங்கிலீஷிலும் பல வகைகள் இருக்கின்றன என்பதை மொழியியலாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். ஆகவே ஒரேயொரு தரப்படுத்தப்பட்ட சிங்கிலீஷ் பயன்பாட்டை எதிர்பார்ப்பதும் பிரச்சனைக்குரியதே. 

இனக் கண்ணோட்டமும் தொடர்பு கோட்பாடும்

 

ஒருங்கிணைவை உண்டாக்குவதில் பல காரணிகள் ஒருசேரப் பங்காற்றுகின்றன. மேலும் ஒருங்கிணைவு என்பது நீண்டகால அளவில் தொடர்ந்த முயற்சிகளைக் கோரும் ஒன்று. அரசுக்கொள்கை என்னும் நிலையில் பார்த்தால், சிங்கப்பூரில் பல்வேறு இனங்களை வகைப்படுத்தும் முறைமையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். முன்னொரு காலத்தில் இருந்த அதே அர்த்தத்தில் இன்று அந்த இன வகைப்படுத்தல்கள் பார்க்கப்படுவதில்லை. உங்களிடமிருந்து இனம், மொழி, மதம் போன்ற பல்வேறு விதங்களில் வேறுபடும் மக்களோடு உங்கள் அன்றாடத் தொடர்புகள் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்குக் அவர்களைக் குறித்த எதிர்மறை எண்ணங்கள் குறையும். இதுவே ‘தொடர்பு கோட்பாடு’ (Contact Theory). பல இனங்கள் கலந்து வசிப்பதைத் திட்டமிட்டும் கட்டாயமாகவும் உறுதிப்படுத்தும் நமது வீடமைப்புப் பேட்டைகளில் இக்கோட்பாடு குறிப்பிடத்தக்க அளவுக்குச் செயல்பட்டுள்ளதாகவே தெரிகிறது. உள்ளூர் மக்களுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையே அன்றாட ஊடாட்டங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஊக்குவிக்கவும் முனைந்தால் ஒருங்கிணைவு மேம்பாட்டில் சாதகமான தாக்கத்தை விளைவிக்கலாம்.
 

bottom of page