top of page
Final.png

தமிழ் நாட்டுப்புறக் கதைகள்

கற்றவர்களால் எழுதப்படும் இலக்கியங்கள் எழுத்திலக்கியங்கள் என்றும் பாமர மக்களால் படைக்கப்பட்டு  வாய்மொழியாக வழங்கிவரும் இலக்கியங்கள், வாய்மொழி இலக்கியங்கள் அல்லது ஏட்டில் எழுதப்படா இலக்கியங்கள் அல்லது நாட்டுப்புற இலக்கியங்கள் என்றும் கருதப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள்,  கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், வாய்மொழிக் கதைகள் முதலியன இவற்றுள் அடங்கும்.

பேச்சுவழக்கில் கூறப்படும் கதை வகைகள் நாட்டுப்புறக் கதைகள் என்று அழைக்கப்படுகின்றன. நிகழ்வுகளையோ அனுபவங்களையோ கற்பனையுடன் கலந்து உரைநடை பாணியில் சுவைபட விளக்கிக் கூறும்போது, அது கதை வடிவம் பெறுகிறது. இவ்வடிவில் அமைந்துள்ள வழக்காற்றுக் கதைகளான பழங்கதைகள், கிராமியக் கதைகள், தாத்தா சொன்ன கதைகள், பாட்டி சொன்ன கதைகள், நாட்டார் கதைகள் முதலியவை நாட்டுப்புறக் கதைகளுக்கு எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றன. இவை, வாய்மொழி வழக்கில் தலைமுறை தலைமுறையாக வழங்கப்பட்டு வருகின்றன. வெறும் பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சியூட்டுவதற்காகவும் மட்டுமின்றி, வாழ்வியல் நீதிகளையும் அறக்கோட்பாடுகளையும் எடுத்துக் கூறுவதற்காகவும் இக்கதைகள் கூறப்பட்டன.

 

நாட்டுப்புறவியல்

நாட்டுப்புறவியலைப் பற்றிய ஆய்வுகள் மேலைநாட்டவரிடையே பல்வேறு காலக்கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன[1]. அவ்வாய்வுகளில், ‘பொதுமக்களைச் சார்ந்த மரபு முறைகள்’ (Popular Antiquities), ‘பொதுமக்கள் இலக்கியம்’ (Popular Literature), ‘பொதுப் புராணவியல்’ (Common Mythology) என்னும் பெயர்களில் நாட்டுப்புறவியல் பகுக்கப்பட்டது. Folklore என்னும் ஆங்கிலச் சொல் வில்லியம் ஜான் தாமஸ் (William John Thomas) என்பவரால் பயன்படுத்தப்பட்டது[2]. அவர், சடங்கு முறைகள், நம்பிக்கைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், நாட்டுப்புறப்பாடல்கள் ஆகியவற்றை இச்சொல் உள்ளடக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழில் Folklore என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக நாடோடிக் கலை, நாடோடி இலக்கியம், நாடோடிப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், நாட்டார் வழக்காறு முதலிய பெயர்கள் வழங்கப்பட்டன. அதன்பிறகு ‘நாட்டுப்புறவியல்’ என்னும் சொல் உருவாக்கம் கண்டு, இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

 

நாட்டுப்புறக் கதைகளின் தோற்றம்

எழுதப்படாத வாய்மொழி இலக்கியங்கள் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு அடித்தளமாக அமைகின்றன என்பதை உலக மொழிகள் பலவற்றிலும் நாம் பார்க்கலாம். செய்யுள்கள், கவிதைகள், பாடல்கள், கலைகள் தோன்றுவதற்கு முன்னரே கதைகள் தோன்றியிருக்கின்றன என்பது அறிஞர்கள் பலராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது[1]. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் கண்ட, கேட்ட, அனுபவித்த நிகழ்வுகளையும் தம் உணர்ச்சிகள், ஆசைகள், விருப்பு வெறுப்புகள் முதலியவற்றையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முற்படும்போது கதைகள் பிறந்திருக்கின்றன. இந்தியாவில் அந்தக் காலத்தில் வீடுகளிலும் மக்கள் கூடும் விழாக்களின்போதும் வயல்வெளிகளில் உழும்போதும் ஊர்மடம், மரத்தடிகளில் ஓய்வெடுக்கும்போதும் அவர்களுடைய அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் நிலையில் அவை கதைகளாக உருவெடுத்தன. இத்தகு அடிப்படையில் உதித்த கதைகள் மக்கள் இனிமையாகப் பொழுதுபோக்குவதற்கு மட்டுமின்றி, கதையின் நீதிகளின்வழி வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதற்கும் பயன்பட்டிருக்கின்றன. மேலும், சிறுகதைகள், கவிதைகள் போன்ற பிற்கால இலக்கிய வளர்ச்சிக்கும் அவை பெரிதும் துணைபுரிந்திருக்கின்றன.

 

தமிழில் கதைகளைப் பற்றிய குறிப்புத் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது என்பதைப் “பொருளோடு புணரா பொய்ம் மொழி” (தொல்:பொருள்:செ.173) என்னும் தொல்காப்பியத்தின் கூற்றின்வழி அறிந்துகொள்ள முடிகின்றது. மேலும், தொல்காப்பியத்தில் “பொருளோடு புணராப் பொய்யாமொழி”, “பொருளோடு புணர்ந்த நகைமொழி” என்னும் இருவகைக் கதைகளுக்கான குறிப்புகள் உள்ளன என்று முனைவர் சு.சக்திவேல் குறிப்பிடுகின்றார்[1]. அப்படியானால், தொல்காப்பியத்துக்கு முன்னரே கதைகள் தோன்றியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவை எப்போது, யாரால், எப்படித் தோன்றின என்று கூற முடியாத அளவுக்குப் பழமையானவையாகக் கருதப்படுகின்றன. ஆதிமனிதன் காட்டில் வேட்டையாடச் சென்று இருப்பிடம் திரும்பியதும் மற்றவர்களுக்குத் தன் அனுபவங்களைக் கூறியபோதே கதையின் தொடக்கத்தைக் காணலாம் என்கின்றார், சக்திவேல். இருப்பினும், இக்கதைகளை வாழவைத்து, அவற்றை வளர்த்து வந்தவர்கள் தமிழகத்தின் பழங்குடியினரான பாணர், பறையர், பள்ளர், கடம்பர், துடியர் என்பவராவர்.

 

இலக்கியங்களில் வாய்மொழிக்கதைகள்

தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் உள்ள கிளைக்கதைகளும் துணைக்கதைகளும் நாட்டுப்புற வழக்காற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை எனலாம். பொதுவாகவே, ஒரு காப்பியத்தில் காணப்படும் கிளைக்கதைகள் கருத்து விளக்கமாகவும் காப்பிய மாந்தரை நினைவுக்கூர்ந்து உயர்த்தவும் நீதி, அற, சமயக் கருத்துகளை வெளிப்படுத்தவும் பயன்பட்டன[3]. இதற்குச் சான்றாகச் சிலப்பதிகாரத்தில் காணப்படும் ‘கீரிப்பிள்ளையும் பார்ப்பனியும்’ என்னும் கதையைக் குறிப்பிடலாம். இக்கதை சிலப்பதிகாரத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே வாய்மொழியாக வழங்கிவந்த கதையாகும். இதைப் போன்றே சிலப்பதிகாரத்தின் துணைக்கதைகளில் 43 புராணக்கதைகள், 11 வரலாற்றுக் கதைகள்,  7 நாட்டுப்புறக் கதைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்று தம் ஆய்வில் குறிப்பிடுகின்றார், முனைவர் முத்துச்சண்முகன்[4].

 

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநெல்வாடையில் போரிடச் சென்ற பாண்டியனின் மனைவிக்குச் செவிலியர் கதை கூறினர் என்றும் கம்பராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் இரவணன் அசோக வனத்தில் சீதையின் காவலுக்கு அரக்கியரை வைத்திருந்தபோது, தூக்கம் வராமலிருக்க கதைகள் கூறப்பட்டன என்றும் குறிப்புகள் உள்ளன. அக்கதைகள் பெரும்பாலும் வாய்வழிக் கதைகளாகவே கருதப்பட்டன.

 

நாட்டுப்புறக் கதைகளில் திரிபுகள்

நாட்டுப்புறக் கதைகள் வழிவழியாக இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறுபட்டு வந்திருப்பதால் பல மாற்றங்களையும் திரிபுகளையும் கொண்டுள்ளன. “பலரின் நாவில் புழங்கும்போது கதையில் கற்பனைக் கூறுகளும் நடைமுறைகளும் மாற்றமடைவது இயல்பாகும்” என்கிறார், முனைவர் பா.ரா. சுப்பிரமணியம்[1]. வாய்மொழிக் கதைகள் ஒவ்வொரு முறையும் கூறப்படும்போது, அந்தந்தக் கலாசாரம், சூழல், கதை கேட்போரின் இயல்பு முதலியவற்றுக்கு ஏற்றாற்போல், கூறப்படும் சொற்கள், கருத்துகள், கதைப்பகுதிகள் முதலியவை மாறுபடலாம். சில கதைகளில் வேறு கதைகள்கூட இணைத்துக் கூறப்படலாம். ஆயினும், இவற்றின் முக்கியக் கதை மாந்தர்கள் பெரும்பாலும் மாறுவதில்லை. அதற்குச் சான்றாக, முனைவர் ஆறு. இராமநாதன் தமிழகம் மற்றும் இலங்கையைச் சார்ந்த சில வட்டாரங்களில் நிட்டூரிக் கதைகளை ஆய்வு செய்யும்போது, கதையின் மூலக்கதைக் கூறுகள் (Basic Traits) குறைந்த அளவு மாற்றங்களுடன் இருந்தன என்றும் ஆனால் ஒவ்வொரு நிலப் பகுதிக்கும் உரிய தனித்தன்மைகளுடன் அதே கதைகள் மாற்றங்கள் பெற்று வழங்கப்பட்டன என்றும் தம் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்[5]. அதாவது, கதை வழங்கப்படும் நிலத்தின் கருப்பொருள்கள், சமுதாயத்தில் நிலவும் நம்பிக்கைகள் முதலியவற்றின் அடிப்படையில் கதைகளின் மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்படுகின்றன என்று அவர் குறிப்பிடுகின்றார்.

 

மேலும், சமூகச் சூழல் போன்ற காரணங்களால் கதை கேட்போருக்குக் கதையில் ஐயங்கள் ஏற்படலாம். அவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகக் கதை கூறுவோர் தமக்குத் தாமே விளக்கங்களை அளித்து, அதனைக் கதை கேட்போருக்கு எடுத்துக்கூறுதல், கதைகளைப் பிழையாகக் கூறிவிட்டு அதனைப் பொருத்தமானதாக மாற்ற முயற்சிசெய்தல், கதைகூறும் உத்திமுறைகள், வட்டார வழக்குகள், வேறுபட்ட சமய நம்பிகைகள் முதலானவை வாய்மொழிக் கதைகளின் திரிபுகளுக்கும் மாற்றங்களுக்கும் காரணங்களாகின்றன.

நாட்டுப்புறக் கதைகளின் தன்மைகள்

நாட்டுப்புறக் கதைகளைச் சொல்பவரின் கற்பனைக்கும் அவற்றைக் கேட்பவரின் தன்மைக்கும் ஏற்ப அவை குறுகியதாகவும் நெடியதாகவும் நாட்டுப்புறக் கதைகள் அமையலாம். கதை சொல்லும் முறையும் வட்டாரச் சூழலும் மொழிவளமும் கதைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுருக்கமாக அமைந்திருக்கும் கதைகள் ஏறக்குறைய இரண்டு பாத்திரங்களையும் அவர்களுடைய உரையாடல்களையும் கொண்டிருக்கும். நீளமான கதைகள் பல்வேறு நிகழ்வுகளையும் பல பாத்திரங்களையும் கொண்டிருக்கும். இவ்வகைக் கதைகளில் கிளைக்கதைகளும் இணைத்துக் கூறப்படலாம். ஒரு சில கதைகளில் நாட்டுப்புறப் பாடல்களோ பழமொழிகளோ இடம்பெற்றிருக்கும்[2].

 

நாட்டுப்புறக் கதைகளின் பயன்பாடு

நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், கதைப்பாடல்கள் போன்ற நாட்டுப்புற வாய்மொழி இலக்கியங்கள் பல்வேறு தன்மைகளையும் நோக்கங்களையும் கொண்டிருந்தாலும் அவை ஒரு சமுதாயத்தின் வாழ்வியல் சிந்தனைகளையும் மரபுவழிச் செய்திகளையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் பிம்பமாய்ப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். “ஒரு ஊரிலே, ஒரு___ இருந்தாராம் / இருந்துச்சாம்..” என்று பெரும்பாலும் துவங்கும் நாட்டுப்புறக் கதைகளும் இதற்கு விதிவிலக்கன்று. கதை கூறுபவராயினும் கதையைக் கேட்பவராயினும் இருசாராருமே அந்தந்தக் கதைகளோடு தங்களை உணர்வுபூர்வமாய்த் தொடர்புபடுத்திக்கொள்ளவும் இணைத்துக்கொள்ளவும் முடிகின்றது. அதன் விளைவாக, கதைகள்வழிக் கூறப்படும் செய்திகளையும் நீதிகளையும் எளிதில் உள்வாங்கவும் அவற்றை மீண்டும் வெளிக்கொணரவும் சாத்தியமாகின்றது. தலைமுறை தலைமுறையாய் நாட்டுப்புறக் கதைகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருப்பதற்கான முக்கியக் காரணங்களுள் இதுவும் ஒன்று. 

 

நாட்டுப்புறக் கதைகள் கூறப்படும் சூழலுக்கேற்பவும் நோக்கத்திற்கேற்பவும் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன[6]. அவற்றுள் சில:

  • அடம்பிடிக்கும் குழந்தையின் மனத்தைத் திசைதிருப்பிச் சமாதானப்படுத்துதல் (எ-டு: பாட்டிமார்கள் தம் பேரப்பிள்ளைகளைச் சமாதானப்படுத்துதல்)

  • குழந்தைகள் விளையாடும்போது ஒருவர் மாற்றி மற்றொருவர் கதைகளைக் கூறுவதுண்டு. அவர்கள் முன்பு கேட்ட, தெரிந்துகொண்ட கதைகளைப் பரிமாறிக்கொள்ளுவதன்வழி நினைவுகூர்தல், கூறியது கூறல், ஆழக் கேட்டல் போன்றவை நினைவாற்றலை அதிகரித்தல்; பழைய கதைகளை மாற்றிக் கூறும்போதும் புதிய கதைகளைக் கற்பனைசெய்து படைக்கும்போதும் குழந்தைகளது படைப்பாக்கத் திறனை வளர்த்தல்

  • குழந்தைகள் உள்ளத்தில் நீதிகளையும் அறநெறிகளையும் ஆழப்பதிய வைத்தல். மராட்டிய மன்னர் சிவாஜி இளவயதில் தம் தாயிடமிடமிருந்து கதைகேட்டுணர்ந்த கதைகளே பிற்காலத்தில் அவரைச் சிறந்த வீரனாகாத் திகழ வைத்தது என்று கூறப்படுகின்றது.

  • வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து, வெற்றி காண்பதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல்

  • இளையர்களுக்குத் தேவையான வாழ்வியல் அறிவுரைகளைப் பெரியவர்கள் கூறுதல் (எ-டு: பழமொழிக் கதைகள் – உப்பிட்டவரை உள்ளளவும் நினை; கெடுவான் கேடு நினைப்பான்)

  • ஊர்த்தெய்வங்கள், ஊர்க்கோவில்கள், குலதெய்வங்கள் போன்றவற்றின் தோற்றத்தைக் கூறுதல்

  • நேர்த்திக் கடன்கள், விரத முறைகள், தெய்வம் தொடர்பான நம்பிக்கைகள் போன்றவற்றைக் கடைப்பிடிக்காவிடின் எப்படிப்பட்ட எதிர்மறை விளைவுகள் ஏற்படக்கூடும் என்று எடுத்துக்கூறுதல்

  • அரசர்கள் மற்றும் சாதாரண மக்களின் வீரச் செயல்களையும் புரட்சிமிகு எண்ணங்களையும் விளக்குதல்

  • ஒருசில குண இயல்புகளைக் கேலிசெய்யக் கதைகளைக் கூறிச் சுட்டிக்காட்டுதல் (சாப்பாட்டு ராமன், கும்பகர்ணன், புன்னாக்கு மாடன்) அல்லது புகழுதல் (மார்க்கண்டேயன்)

 

நாட்டுப்புறக் கதைகளின் சேகரிப்பும் பிறசேர்க்கையும்

நாட்டுப்புற இலக்கியங்களைப் பற்றி உலக அளவில் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கதைகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. அவை பல நாடுகளில் பல காலக்கட்டங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காகச் சேகரிக்கப்பட்டன. மதங்களைப் பரப்பும் நோக்கும் நாட்டுப்புற மக்களின் தனித்தன்மைமிக்க கலாசாரத்தை அழிக்காமல் பாதுகாக்கும் நோக்கும் அவற்றுள் ஒன்று. வெவ்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட கதைகளுக்கிடையே சில ஒற்றுமை வேற்றுமைகள் காணப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்[7]. பண்டைய காலங்களில் மக்கள் வாழ்வாதாரம், போர், பஞ்சம் முதலிய காரணங்களுக்காக இடம்பெயர்ந்தவண்ணம் இருந்ததால், வாய்மொழிப் பரவல் அந்தந்தக் கலாசாரங்களுக்கேற்பவும் சூழல்களுக்கேற்பவும் மாற்றம் அடைந்துகொண்டே வந்துள்ளன என்பது ஆய்வாளர்களின் கருத்து[5].

 

இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அச்சுத் தொழில்நுட்பம் வந்தபோது அதிகமான அளவில் நாட்டுப்புறக் கதைகளும் பிற வாய்மொழி இலக்கியங்களும் பதிப்பிக்கப்பட்டன. தமிழில் 1867-ஆம் ஆண்டு வீராச்சாமி நாயக்கர், ‘மயில் ராவணன்’ என்னும் கதையை வெளியிட்டதிலிருந்து நாட்டுப்புறக் கதை வெளியீட்டுப் பணி துவங்கியது எனலாம். அவர் நாட்டுப்புறக் கதைகள் தொடர்பான பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அதன்பிறகு வந்த பிற வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கவை சில:

  • கா. அப்பாதுரையின் நாட்டுப்புறக் கதைகள்

  • சு.அ.இராமசாமிப் புலவரின் தென்னாட்டுப் பழங்கதைத் தொகுதிகள்

  • வை. கோவிந்தனின் தமிழ்நாட்டுப் பழங்கதைகள்

  • கி.ராஜநாராயணின் தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்

  • கு.சின்னப்ப பாரதியின் தமிழக கிராமியக் கதைகள்

  • வை. கோவிந்தனின் பாரத நாட்டுப் பாட்டிக் கதைகள்

  • அ.கா. பெருமாளின் நாட்டார் கதைகள்

1979-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கதைத் தொகுப்புகளில் சில:

  • க.கிருட்டினசாமியின் கொங்கு நாட்டுப்புறக் கதைகள்

  • கி.ராஜநாராயணின் தாத்தா சொன்ன கதைகள்

  • ஆறு.இராமநாதனின் நாட்டுப்புறக் கதைகள்

 

இந்தியாவைச் சேர்ந்த பிற மாநிலக் கதைகளும் பிற நாடுகளைச் சேர்ந்த கதைகளின் மொழிபெயர்ப்புக் கதைகளும் நாட்டுப்புறக் கதைகளின் வெளியீட்டில் சேர்ந்துகொண்டன. விக்கிரமாதித்தன் கதைகள், சதமுக ராவணன் கதை, மரியாதைராமன் கதை மற்றும் தமிழறியும் மந்தை கதை, புரூரவ சக்கரவர்த்தி கதை, கதாமஞ்சரி, இலண்டனிலிருந்து தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் பரமார்த்த குருவின் கதை (குரு சிம்பிள்டன்), தமிழில் பஞ்சதந்திரக் கதை ஆகியவை வெளிவந்தன.

தெனாலிராமன் கதைகள், ஈசாப் கதைகள், அரபுக் கதைகள், நவரத்தினமாலை (சோவியத் நாட்டுக் கதைகள்), ஆர்மீனிய கதைகள், கிரேக்க நாடோடிக் கதைகள் முதலிய சில மொழிபெயர்ப்புக் கதைகளும் நாட்டுப்புறவியல் (1987-88) இதழில் தமிழகத்திலிருந்து இதுவரை வெளிவந்த நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு நூல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

நாட்டுப்புறக் கதைகளின் வகைகள்

நாட்டுப்புறக் கதைகளை வகைப்படுத்துவது எளிமையானதன்று. லிண்டா பே (Linda Bay) நாட்டுப்புறக் கதைகளைத் தெளிவாக வகைப்படுத்துவது என்பது மிக அரிதான ஒன்று என்கிறார். வாய்மொழியாகக் கூறப்படும் நாட்டுப்புறக் கதைகளில் பல திரிபு வகைகள் காணப்படுவதே இதற்குக் காரணம். ஒரு பண்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு மரபு, இன்னொரு பண்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக இருக்கலாம். தமிழில் நாட்டுப்புறக் கதைகள் தமிழ் அறிஞர்களால் சூழலுக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் கிருஷ்ணசாமி, சு.சண்முகசுந்தரம், லூர்து, சத்தியமூர்த்தி, கி.ராஜநாராயணன், அய்யனார், சு.சக்திவேல், நடராசன், ஜான்சி, விமலா ராணி, இரா.சுரேந்திரன், நாகலிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

முனைவர் சு.சக்திவேல் நாட்டுப்புறக் கதைகளை 6 வகைகளாகப் பிரித்துள்ளார். அவையாவன:  

(தழுவல்: http://www.tamilvu.org/ta/courses-degree-a061-a0613-html-a0613100-10632 )(6)

naattupura kathaigal.png

நாட்டுப்புறக் கதைகள் பல அறிஞர்களால் மேலும் வெவ்வேறு வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முனைவர் வீ. அய்யனார் கதைப் புலப்பாட்டுப் பொருளை அடிப்படையாகக் கொண்டு நாட்டுப்புறக் கதைகளைக் கீழ்க்காணும் வகையில் வகைப்படுத்தியுள்ளார்.[7]

  • பண்புவிளக்கக் கதைகள்

  • நீதிவிளக்கக் கதைகள்

  • சமயமரபு தழுவிய கதைகள்

  • சமூக வரலாற்றுக் கதைகள்

  • நகைச்சுவைக் கதைகள்

  • குலமரபுக் கதைகள்

  • நம்பிக்கை விளக்கக் கதைகள்

  • இயற்கை இகந்த நிகழ்வுக் கதைகள்

  • பிறவகைக் கதைகள்

 

இவைபோன்ற வகைப்பாடுகள் முழுமை பெற்றவை என்று கூறிவிட முடியாது. இருப்பினும், நாட்டுப்புறக் கதைகளைப் புரிந்துகொள்ள இவ்வகைப்பாடுகள் உதவுகின்றன என்றே கூறலாம்.

 

தற்போதைய நிலை

நாட்டுப்புறக் கதைகள் முற்காலத்தில் வழங்கிவந்த அளவுக்குத் தற்போது இல்லை எனலாம். மற்ற வகை எழுத்திலக்கியங்களின் வளர்ச்சியும் தகவல்தொழில்நுட்பத் தொடர்புச் சாதனங்களின் தாக்கமும் நாட்டுப்புறக் கதைகள் புழக்கத்தின் சரிவுக்கு வித்திட்டன. முந்தைய காலம்போல இப்போதுள்ள வாழ்க்கைமுறை இல்லை. பரபரப்பான இந்த வாழ்க்கைமுறையில் கதையைக் கூற யாருக்கும் நேரமும் இல்லை. அவற்றைக் கேட்க யாருக்கும் பொறுமையும் இல்லை. கதை சொல்லும் திறமையும் அதனைக் கேட்கும் திறனும் தற்போது குறைந்துள்ளன. அதோடு, அறிவியல் கண்கள்கொண்டு பார்க்கும் மனப்போக்கு, இந்தக் கதை சாத்தியமாகுமா? இது நம்பக்கூடியதா? மிருகங்கள் பேசுமா? முதலிய கேள்விகளை எழுப்புகிறது. மேலும், கிராமப்புற மக்களின் நகர்ப்பெயர்வாலும் நகர்வாழ்க்கைச் சூழலாலும் கிராமங்களில்கூட இவை அழிந்துவரும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், கிராமியத் திரைப்படங்கள் நாட்டுப்புறவியலின் சில தன்மைகளைப் பிரதிலிக்கின்றன. பழைய மரபுகளைப் புதியனவற்றில் இணைத்துக் காட்டுவதால் நாட்டுப்புறப் பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆவணங்களாக இவை செயல்படுகின்றன. அது மட்டுமின்றி, நாட்டுப்புற வழக்காறுகள் பல ஏட்டிலக்கியங்களில் இடம்பெற்றிருக்கின்றன. பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிலையங்களிலும் நாட்டுப்புற இலக்கியத்திற்கென்று தனித் துறைகளும் அதற்குரிய பாடத்திட்டங்களும் உள்ளன. ஆய்வாளர்கள் தொடர்ந்து நாட்டுப்புறவியலை ஆய்வுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் தமிழ் நாட்டுப்புறக் கதைகள்

சிங்கப்பூரில், தமிழ் ‘நாட்டுப்புறக் கதைகள்’ என்பது வழக்கில் இல்லாவிட்டாலும், தெனாலிராமன் கதைகள், ஈசாப் கதைகள், பீர்பால் கதைகள், தேவதைக் கதைகள் முதலான கதைகள் மரபுசார்ந்த கதைகளாக வழக்கில் இருக்கின்றன. இந்தக் கதைகள் குழந்தைகளுக்குப் பல்வேறு நிலைகளில் கூறப்பட்டு வருகின்றன. வீட்டில் சில பெற்றோர்கள் மிகுந்த சிரத்தையுடன் குழந்தைகளுக்குக் கதைகளைக் கூறுகின்றனர். சிங்கப்பூர்த் தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டத்தில் மரபுசார் கதைகளுக்கு முக்கிய இடம் தரப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள், கதைநூல்கள், மின்னூல்கள் முதலிய கற்றல் கற்பித்தல் வளங்களின்வழிப் பாலர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் தங்கள் தமிழாசிரியர்கள்மூலம் இக்கதைகளைக் கேட்டு மகிழ்கின்றனர். சுட்டிமயில் போன்ற மாத இதழ்கள் வண்ணப் படங்களோடு பலதரப்பட்ட கதைகள், விடுகதைகள், புதிர்கள், செய்தித்துணுக்குகளை அச்சிடுகின்றன. மாணவர்கள் அவற்றைப் படித்துப் பயன்பெறுகின்றனர். அது மட்டுமில்லாமல், தேசிய நூலக வாரியத்தின் நூலகங்களிலும் வண்ணமயமான கண்கவர் படங்களோடு நூற்றுக்கணக்கான நாட்டுப்புறக்கதைத் தொகுப்பு நூல்கள் உள்ளிட்ட பல்வகைக் கதைநூல்கள் குவிந்து கிடக்கின்றன. அதோடு, தேசிய நூலக வாரியத்தின் ‘கதை நேரம்’ என்னும் நிகழ்ச்சிகள் வாயிலாகவும் சில தொண்டூழிய அமைப்புகளின் முயற்சிகளாலும் குழந்தைகளும் மாணவர்களும் கதைகளைக் கேட்டும் கதைகளைக் கூறியும் பயனடைகின்றனர்.

அவற்றுக்குரிய ஒளிக்காட்சிகள் தேசிய நூலக வாரியத்தின் இணையத்தளத்திலும் முகநூல் பக்கத்திலும் இடம்பெற்றுள்ளன. அவ்வப்போது தனியார் கலை அமைப்புகளும் கதைகளை நாடகம், கதைப்பாடல்கள், வில்லுப்பாட்டு போன்றவற்றின் மூலமாகக் குழந்தைகளை மகிழ்வித்து வருகின்றன. பல்வேறு நாடுகளை உள்ளடக்கும் கதைகளைக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மனங்கொள்ளும் வகையில் சொல்லும் ஆற்றலுடைய புகழ்பெற்ற கதைசொல்லியான ஜீவா ரகுநாத்தை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. சிங்கப்பூர் உட்பட, பல நாடுகளில் அவர் நடத்திக்கொண்டிருக்கும் கதை சொல்லும் பாங்கினைப் பற்றிய பட்டறைகளில் மட்டுமில்லாது, கதை விழாக்களிலும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர். நம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் இதுபோன்ற கதைகளின்வழி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்னும் நோக்குடைய இம்முயற்சிகள் முக்கியமானவை.

 

சிங்கப்பூரில் நாட்டுப்புறவியல் உயர்கல்வி நிலையிலும் கற்பிக்கப்படுகின்றன. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (Singapore University of Social Sciences) தமிழ் நாட்டுப்புறவியல் இலக்கியம் (Folk Literature) தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பட்டக்கல்வியிலும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைகழக தேசிய கல்விக்கழகத்தின் (Nanyang Technological University-National Institute of Education) தமிழாசிரியர் பட்டக்கல்வியிலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வழங்கப்படும் Diploma in Tamil Studies with Early Education என்னும் பட்டயக்கல்வியிலும் ‘Folklore and the Arts’ என்பது ஒரு பாடக்கூறாகக் கற்பிக்கப்படுகிறது.

 

முடிவுரை

நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் வாய்மொழிக் கதைகளும் உள்ளடங்கும். எழுதப்படாமலிருந்த  இவை, இன்று பல அறிஞர்களது முயற்சிகளால் எழுதப்பட்ட ஏட்டிலியங்களாகவும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட ஆய்வுக் களஞ்சியங்களாகவும் உயர்தகுதியைப் பெற்றுள்ளன.  இன்று,  நாட்டுப்புறக் கதைகள் கூறும் பாணி பல மாற்றாங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்குக் கதைப்புத்தகங்களிலிருந்து சொற்களை வாசிக்கும் விதத்திலேயே கதைகூறும் பாங்கு அமைந்துள்ளதே தவிர, முந்தைய காலங்கள்போல் கதைகளை உள்வாங்கி அவற்றை உணர்வுபூர்வமாகக் கதை சொல்லிக்கதை கேட்பவர் உளவியல் பாங்கினைக் கொண்டு வெளிக்கொணருவது தற்போது குறைந்துகொண்டே வருகிறது எனலாம்.  நாட்டுப்புறக் கதைகள் மனித சமுதாயத்தைச் செம்மைப்படுத்தும் மிகச் சிறந்த கருவிகளுள் ஒன்று. அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை நம் அனைவரிடத்திலும் உள்ளது.

துணை நூல்கள்

[1]    Ganan Hapiseba, M. (2014). Vaaimozhik Kathaigal. Tirunelveli: Manonmaniam Sundaranar. University. (http://hdl.handle.net/10603/43228)

 

[2] John Yesupadam. A Comparative Study Of Tamil And Telugu Folkstories Of Chittoor District: Tirupathi: Sri Venkateswara University (http://hdl.handle.net/10603/106283)

[3]    Vanathaiyan, P. (2002). Arulnirai Mariyammai Kaviyam Oar Ayvu. Chennai: University of Madras.  (http://hdl.handle.net/10603/148056)

[4]    முத்துச்சண்முகன் & பிரேமா. இரா. (1980). இரட்டைக் காப்பியக் கிளைக்கதைகளும் துணைக்கதைகளும். மதுரை: முத்துப் பதிப்பகம்.

[5]    இராமநாதன். ஆ. (1988). வரலாற்று நிலவியல் ஆய்வுமறை: அறிமுகமும் ஆய்வுகளும். தஞ்சாவூர்:  தமிழ்ப் பல்கலைக்கழகம். 

[6] இராமநாதன்.ஆ. நாட்டுப்புறவியல் இலக்கியங்கள் (மேற்பட்டயக் கல்வி): சென்னை: தமிழ் இணையக் கல்விக்கழகம்.(http://www.tamilvu.org/ta/courses-degree-a061-a0613-html-a0613100-10632)

 

[7]     சக்திவேல், சு. (1996). நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம். தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

[8]     முத்துசாமி. மு. (2016-2017). நாட்டுப்புறவியல். திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகம்.

[9]    ராஜநாராயணன், கி. (2007). நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம். தஞ்சாவூர்: அகரம் பதிப்பகம்

 

பின்னிணைப்பு

  • திரைப்படப் பாடல்களில் கதைகூறும்-கதை கேட்கும் பாங்கு 

பாடல்: முன்பு ஒரு காலத்துல

திரைப்படம்: மூன்றாம் பிறை

https://www.youtube.com/watch?v=vPsHZYU1lVo

பாடல்: ஒரே ஒரு ஊருக்குள்ளே

திரைப்படம்: தெய்வத் திருமகள்

https://www.youtube.com/watch?v=8ld6v4PltMM

 

  • தேசிய நூலக வாரியத்தின் ‘கதை நேரம்’- இதற்கான இணையத்தளங்கள்

http://www.nlb.gov.sg/discovereads/diy-resources/storytime-with-our-librarians/archived-storytime-tamil/ 

 

  • Posts by Renu Siva:

https://www.facebook.com/groups/598526033854488 

  • உலகப் புகழ்பெற்ற கதைசொல்லி ஜீவா ரகுநாத்தின் கதை நேரம் மற்றும் பட்டறைகள்

https://www.youtube.com/watch?v=ybFPKu-aUm4&t=389s
https://www.youtube.com/watch?v=fSrSBPgmf_A   (1.32 onwards)
https://www.youtube.com/watch?v=_vJYvtuIaY0

https://www.youtube.com/watch?v=J_AYrnAIKkQ
https://www.youtube.com/watch?v=EGhOjdrzE7E
https://www.youtube.com/watch?v=oqq9xelk8w0
http://www.jeevaraghunath.com/story-time/

  • அசைவூட்ட உயிரோவியங்களால் அமைக்கப்பட்ட கதைகள்

https://www.youtube.com/watch?v=RevJ1DpCPuY

https://www.youtube.com/watch?v=ru-ZNz3ZPsk

https://www.youtube.com/watch?v=sp_EofM4S2o

https://www.youtube.com/watch?v=2os3PdF4Ee0

https://www.youtube.com/watch?v=D0aNTFZMye0

https://www.youtube.com/watch?v=2TY_h5CXQyE

https://www.youtube.com/watch?v=bGBt9XagkA4

 

  • கதைகள்

 (மூலம்: நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம், கி.ராஜநாராயணன்)

கதை 1

ஒரு ஊரில ஒரு அம்மா இருந்தாங்க. அவங்க தன்னோட பையன்கிட்ட “டேய் அப்பாவோட வயலுக்குப் போய் வேலை செய்டா” என்று சொல்லி அனுப்புனாங்க.  பையனுக்கோ வயலில வேலை செய்யப் பிடிக்கலை. யாராவது விளையாடக் கிடைப்பாங்களான்னு பார்த்தான். அப்போ அங்கே ஒரு எறும்பு வருது. “எறும்பே எறும்பே, என்கூட விளையாட வர்றியா?” ன்னு அவன் கேட்க, அது உடனே “போ போ, உனக்குத்தான் வேலை இல்லை. நான் என் குழந்தைகளுக்குத் தீனி கொடுக்கணும். அரசி, நெய் எல்லாம் சேகரிக்கணும்”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டுது.

 

அங்கே ஒரு தேனீ வருது. “தேனீ, தேனீ, என்கூட விளையாட வர்றியா?”ன்னு கேட்கிறான் அந்தச் சோம்பேறிப் பையன். அது உடனே “போ போ, உனக்குத்தான் வேலை இல்லை. எனக்குத் தேன் எல்லாம் எடுக்கணும். பூவெல்லாம் குறுகி மூடறதுக்குள்ள தேன் சேர்க்கணும்” ன்னு சொல்லிட்டுப் பறந்துபோய்ட்டுது.

 

ஒரு வீட்டு வாசல்ல கழுதை நிக்குது. அந்தப் பையன்  “கழுதை கழுதை, என்கூட விளையாட வர்றியா?” ன்னு கேட்க, “போ போ, உனக்குத்தான் வேலை இல்லை. என் எஜமானோட உப்பு மூட்டய, புளி மூட்டய சுமக்கணும். நான் வரலை. அதோ, ஒரு குட்டிச் சுவரு பாரு. அங்கே போய் கேளு”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டுதாம்.

 

அந்தப் பையனும் அந்தக் குட்டிச் சுவரு மேல ஏறிக் குதிச்சி விளையாடுறான். அந்தச் சுவரு மழைல ஊறி இருந்ததுனால அவன் குதிச்சதும் பொல பொலன்னு விழுந்து சரிஞ்சிடுச்சு. அப்போ அதுல இருக்கிற பூச்சி, எறும்பு, வண்டு எல்லாம் வெளில வருது. அவை எல்லாம் அந்தப் பையன்கிட்டே “அடப் பாவி! உனக்குத்தான் வேலை இல்லைன்னா, நாங்க கஷ்டப்பட்டுச் சேர்த்து வச்ச பொருள்களையெல்லாம் இப்படிப் பாழாக்கிட்டியே. எங்க வீட்டைக் கலைச்சிட்டியே!”ன்னு சொல்லி அவனோட கால்ல கைல ஏறி நறுக்கு நறுக்குன்னு கடிச்சிதுங்க.

 

அந்தப் பையன் வலி பொறுக்க முடியாம வீட்டுக்கு ஓடி வந்து, அம்மாகிட்டே, “அம்மா, அம்மா. எல்லாரும் வேலை செய்றாங்க. ஈ, எறும்புகூட சும்மா இல்லாம உழைக்குது. இனிமே நானும் சோம்பி இருக்க மாட்டேம்மா. சுறுசுறுப்பா வேலை செய்வேம்மா”ன்னு சொல்லி உழைக்க ஆரம்பிச்சானாம்.

உழைப்பே உயர்வு தரும் என்னும் சமூகக் கருத்தை வலியுறுத்தும் கதை இது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உழைத்துத்தான் உயிர் வளர்க்கின்றன. இதனை எடுத்துக்காட்டிச் சோம்பேறிகளைச் சாடுகிறது இந்தக் கதை.

 

கதை 2

ஒரு குட்டையில இரண்டு தவளைங்க ஒத்துமையா வாழ்ந்து வந்ததுங்க. கோடை காலம் வந்ததும் எல்லாக் குளத்திலும் குட்டையிலும் தண்ணி வத்த ஆரம்பிச்சது. இவை தங்கி இருக்கிற குட்டையிலேயும் தண்ணி வத்தவே, இரண்டும் என்ன செய்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுதுங்க. பக்கத்துல இருக்கிற கிணத்துக்குப் போயிடலாம்னு முதல் தவளை சொன்னது. அதற்கு இன்னொரு தவளை, “கிணத்திலேயும் தண்ணி வத்திடுச்சுன்னா எப்படி வெளிய வர்றது? அதனால அங்க வேணாம்”ன்னு பதில் சொல்லியது. முதல் தவளை, “நீ வராட்டிப் போ! நான் கிணத்துக்குப் போறேன்,”ன்னு சொல்லிக் கிணத்துல குதிச்சுட்டுது. இரண்டாவது தவளை வருத்தப்பட்டுகிட்டே பக்கத்துல இருக்கிற ஒரு சின்ன குட்டைக்குப் போனுது. அங்கே நிறைய சேறு இருந்ததனாலே, தண்ணி வத்தலை.

கொஞ்ச நாளானதும் இரண்டாவது தவளைக்கு, கிணத்துத் தவளை நண்பனோட நினைப்பு வந்துது. உடனே கிணத்துக் கட்டையில உக்காந்துகிட்டு, “என்னப்பா, எப்படி இருக்கே”ன்னு கூப்பிட்டுக் கேட்டுது. கிணத்துத் தவளை எட்டிப் பார்த்து, “அட நீயா! பாருப்பா, உன் பேச்சைக் கேட்காம இங்க வந்து மாட்டிகிட்டேன். இந்தக் கிணத்துலேயும் தண்ணி கொஞ்சம்தான் இருக்குது. அதுவும் வத்திப் போச்சுன்னா நான் என்ன செய்வேன்? நீதாம்பா என்னைக் காப்பாத்தணும்”ன்னு கெஞ்சிக் கேட்டுது. இந்தத் தவளையும் “சரி, இரு வரேன்.”ன்னு சொல்லி, நிறைய கொடி, தழை, கயிறு, எல்லாத்தையும் சேத்துக்கட்டி, கிணத்துக்குள்ள விட்டு, பிடிச்சிக்கச் சொன்னது. அந்தத் தவளை கெட்டியா பிடிச்சிகிட்டதும் மெல்லமா கொஞ்சம் கொஞ்சமாக வாயால கெளவி மேலே இழுத்தது. தவளையும் வெளியே வந்தது. “நண்பா! என் உயிர் இருக்கிற வரைக்கும் இந்த உதவிய மறக்க மாட்டேன். இனி நீ சொல்றபடியே நடந்துக்கிறேன்,” ன்னு சொல்லியது. இரண்டும் குட்டைக்கே போய் சந்தோஷமாக வாழ்ந்ததுங்க.

என்ன வசதி கிடைத்தாலும் பிறந்து வளர்ந்து பழகிய இடத்தின் அருமை வராது என்பதோடு சிறு வயதிலிருந்து கூடவே பழகிய நண்பனையும் மறக்க இயலாது என்பதையும் இந்தக் கதை நமக்கு வலியுறுத்துகிறது.

Iyal 1 Chap 1 references
bottom of page