top of page
red.png

இடைக்காலச் சோழர்கள்: பொன்னியின் செல்வனுக்கு அப்பால்

பதிவு 1: இடைக்காலச் சோழர்கள், கீழ்க்காவிரிப் படுகையின் பல்லவ-பாண்டிய எல்லைப் பகுதியில், முதலில் நிலப்பிரபுக்களாக இருந்தனர். ‘சோழர்’ என்ற பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டனர் என்றாலும், கரிகாற்சோழன் உள்ளிட்ட, சங்ககாலச் சோழர்களுக்கும் இவர்களுக்கும் கொடிவழித் தொடர்பு என்ன என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. பொ.ஆ. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை சமகால வரலாற்றுத் தரவுகள் என அனேகமாக ஏதுமில்லை. இடைக்காலத்தின் முதல் குறிப்பிடத்தக்கச் சோழ ஆட்சியாளர் விஜயாலய சோழன் (பொ.ஆ. 855-871). தஞ்சாவூரைக் கைப்பற்றியது அவரது அரசியல் வாழ்வின் உச்சம். அவ்வெற்றியை நினைவுகூறும் வகையில் சோழர்களின் போர்க்கடவுளான நிசும்பசூதனிக்குத் தஞ்சாவூரில் ஓர் ஆலயத்தை எழுப்பினார். விஜயாலய சோழன் கட்டிய கோவில் என இன்று அடையாளம் காட்டப்படும் கோவிலில், பல ஆயுதங்களைத்  தரித்தபடி  ஒன்பதாம் நூற்றாண்டு தேவி உருவம் ஒன்று இருக்கிறது என்றாலும் அதுதான் விஜயாலயன் கட்டிய கோவில் எனச்சொல்வதற்கு வேறு ஆதாரங்கள் கிட்டவில்லை. காங்கிரீட், நவீன வண்ணப்பூச்சுகள் எனப் பின்னாளில் செய்யப்பட்டுவிட்டப் பல மாற்றங்களும் கோவிலின் தொன்மையை இன்று அடியோடு மறைத்துவிட்டன. விஜயாலயன் வெற்றிச்சின்னமான கோவிலைக் குறித்துக் கூறும் திருவாலங்காட்டுச் செப்புப்பட்டயம் அக்கோவில் எங்கே கட்டப்பட்டது எனக் குறிப்பிடவில்லை. மேலும், எளிமையான கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ள இக்கோவில் ஓர் அரசனின் நினைவுச்சின்னமாகத் தோன்றுவதற்குரிய அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை. இக்கோவில் விஜயாலயன் கட்டியதோ இல்லையோ ஆனால் அவரது ஆட்சிக்காலத்திலிருந்தே உள்ள கோவில்தான் எனலாம்.

References:

Balasubrahmanyam, S. R. (1966). Early Chola Art (Vol. 1). Bombay: Asia Publishing House.

Schmid, C. (2020). Les «rois anciens» du pays tamoul. Bulletin de l'École française d'Extrême-Orient, 106, 109-156.

Kaimal, P. (1996). Early Cōḻa Kings and" Early Cōḻa Temples": Art and the Evolution of Kingship. Artibus Asiae, 33-66.

Picture1.jpg

நிசும்பசூதனி ஆலயம், தஞ்சாவூர், பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டு

பதிவு 2: நாகேஸ்வரன் கோவில் என அழைக்கப்படும் கும்பகோணத்தின் கீழ்க்கோட்டம், 10ஆம் நூற்றாண்டின் (பொ.ஆ. 910) ஆகச்சிறந்த சோழர்காலச் சிற்பங்கள் சிலவற்றைக் கொண்டுள்ளது. மேலும் கோவில் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் அன்றைய அரசியல், சமூகச் சூழல்களைப் ஓரளவு புரிந்துகொள்ள உதவுவதாலும் குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றுள் மூன்று சிற்பங்களை, முதல் மூன்று சோழ அரசர்களாக ஆர்.கே.கே. ராஜராஜன் உள்ளிட்ட கலை ஆய்வாளர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். விஜயாலய சோழன் (855-871), ஆதித்ய சோழன் (871-905), பராந்தக சோழன் (905-955) ஆகியோர் அம்மூன்று அரசர்கள். மூன்று சிற்பங்களுமே மேங்குடிச் சிகையலங்காரம், வேலைப்பாடுகளுடன்கூடிய மெல்லிய ஆடை, அரசகுடித் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஒருவர் கையில் வாளும் உள்ளது. இச்சிற்பங்களை அடையாளம் காட்டும் கல்வெட்டு ஏதுமில்லை என்றாலும் கோவிலின் உயர்தரச் சிற்பங்களும் நன்கொடையாளர்களின் விவரங்களும் அரச தொடர்பைக் காட்டுகின்றன.

References:

Rajarajan, R. K. K. (2008). Identification of Portrait Sculptures on the" Pāda" of the Nāgeśvara Temple at Kuṃbhakoṇam. East and West, 58(1/4), 405-414.

Picture2.jpg

விஜயாலயன் (855-871)

Picture3.jpg

ஆதித்யன் (871-905)

Picture4.jpg

பராந்தகன் (905-955)

பதிவு 3: சோழர்களுக்குத் தஞ்சாவூர் முக்கியமாக இருந்தபோதிலும், கும்பகோணம்-பழையாறை  பகுதிதான் (இன்றைய கும்பகோணமும் அதைச்சுற்றிய கிராமங்களும்) சோழப் பேரரசின் நீடித்த தலைநகராக இருந்தது. நாடு முழுவதுமுள்ளப் பல்வேறு அரண்மனைகளில் அரசர் வசித்திருக்கலாம் என்றாலும், நிர்வாகம், இராணுவம், அரசகுடும்பத்தினர் ஆகியோர் பெரும்பாலும் கும்பகோணம்-பழையாறையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமே வாழ்ந்ததாகக் கல்வெட்டுத் தகவல்கள் மெய்ப்பிக்கின்றன. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் தலைநகர்களான தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் இரண்டின் பெயர்களும் 12ஆம் நூற்றாண்டில் மங்கிப்போயின. ஆனால் பத்தாயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு வியாபித்திருந்த கும்பகோணம்-பழையாறை அன்று இந்தியாவின் ஆகப்பெரிய நகரங்களுள் ஒன்று.  அந்நகரிலும் சுற்றுப்பகுதிகளிலுமே 12ஆம் நூற்றாண்டுச் சோழ அரச வழிபாட்டு ஆலயங்கள் அமைக்கப்பட்டன. சோழப்பேரரசு 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சரிந்ததும் பழையாறை பல கிராமங்களாகச் சிதறுண்டது. இருப்பினும் கும்பகோணம் இன்றும் ஒரு நகரமாகவே நீடிக்கிறது. ஏராளமான கோவில்கள் இருப்பதால் பழையாறைக்கு ‘ஆயிரத்தளி’ என்ற பெயரும் உண்டு. தளி என்றால் கோவில். கல்லால் எழுப்பப்பட்ட கோவில்கள் கற்றளிகள் (கல்+தளி = கற்றளி) எனப்படுகின்றன. சோழர்கால எச்சங்களைக்கொண்ட பல கோவில்கள் இன்றும் பழையாறைப் பகுதியில் உள்ளன. இங்கே படத்தில் காணப்படுவது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழையாறை சோமநாதர் ஆலயம்.

References:

Ayyar, V. Āyirattali - A Cola Capital, Proceedings of the Indian History Congress 9 (1946), 160-165

பாலசுப்பிரமணியன், கு. (1992). நந்திபுரம். சென்னை: இன்டாக் நிறுவனப் பதிப்பு.

Champakalakshmi, R. (1978). Kudamukku-Palaiyarai, The Twin City of the Colas. Proceedings of the Indian History Congress, 39, 168-179.

Picture5.jpg

சோமநாதர் ஆலய கோபுரத்தின் அடிப்பகுதி, பழையாறை, 12ஆம் நூற்றாண்டு

Picture6.jpg

போர்யானை வடிவப் படிக்கட்டு, சோமநாதர் ஆலயம், பழையாறை, 12ஆம் நூற்றாண்டு

பதிவு 4: நவீனகாலத்துக்கு முந்தைய இந்தியாவின் ஆலயச் சடங்குகளில் நடனம் ஓர் இன்றியமையாத பகுதியாக இருந்தது. சோழர் கோவில்களிலும் அப்படியே. அரச ஆலயங்களுக்கு நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான பொருளுதவி வாரிவழங்கப்பட்டது. முதலாம் ராஜராஜனின் அரசாலயமான தஞ்சாவூர்ப் பெரியகோவிலில் (ராஜராஜேஸ்வரம்) சுமார் 400 நடனமணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரின் பெயரும் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. கரணங்கள் என அழைக்கப்பட்ட முத்திரைகளுடன்கூடிய நடனமணிகளின் உருவங்கள் 12ஆம் நூற்றாண்டுச் சோழர் ஆலயங்களில் பரவலாகக் காணப்பட்டன. அவ்வுருவங்களை நோக்கும்போது, நடனக்கலை பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாகவே தோன்றுகின்றன. அதற்குமுன், நடனக் கலைஞர்களும் நர்த்தனக் கடவுள்களும் தனித்தனியாகவோ சிறு குழுக்களாகவோ சித்திரிக்கப்பட்டிருந்தாலும், கோவில் சிற்பங்களில் முத்திரைகளை விரிவாகப் பிரதிநிதிக்கும் முறையான முயற்சி எதுவும் இருந்ததில்லை. கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி கோவிலின் பிரதான சன்னதி, கீழ்க்கோபுரம் இரண்டின் அடிப்பகுதிகளிலும் பிற்காலச் சோழ (12ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை) நடனமணிகளின் சிற்பப்பட்டிகள் விதவிதமான அசைவுகளுடனும் முத்திரைகளுடனும் அமைந்திருப்பதைக் காணலாம். 

References:

Michell, G. (2012). Chola and Neo-Chola temple architecture in and around Kumbakonam, Tamil Nadu. In Hegewald, J. A., and Mitra, S. K. (eds.). Re-Use-The Art and Politics of Integration and Anxiety. Delhi: Sage Publications, 86-106.

Vatsyayan, K. (1982). Dance sculpture in Sarangapani temple. Madras: Saher publications.

Picture7.jpg

சாரங்கபாணி கோவில் பிரதான சன்னதியின் அடிப்பகுதியில் இடம்பெற்றுள்ள நடனமணிகள், கும்பகோணம், 12ஆம் நூற்றாண்டு - 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி

Picture8.jpg

சாரங்கபாணி கோவில் பிரதான சன்னதியின் அடிப்பகுதியில் இடம்பெற்றுள்ள நடனமணிகளின் இன்னொரு தோற்றம், 12ஆம் நூற்றாண்டு - 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி, கும்பகோணம் 

பதிவு 5: சோழப்பேரரசின் கடைசி அரசாலயம் கும்பகோணத்தின் அருகிலுள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் (திருபுவனவீரேஸ்வரம்). மூவுலகை வென்றவர் எனப்பொருள்படும் திரிபுவனவீரன் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொண்ட அரசரின் பெயரில் அமைந்த ஆலயம். அப்பெயரானது பாண்டிய, கேரள, இலங்கைப் பகுதிகள் என முப்பெரும் நிலப்பரப்புகளை வென்ற மூன்றாம் குலோத்துங்கச் சோழனையும் (1178-1218) திரிபுரமெரித்த திரிபுரந்தகனான சிவபெருமானையும் ஒருங்கே குறிக்கிறது. குறிப்பிடத்தக்க அளவுக்கு அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த கடைசிச் சோழ அரசர் மூன்றாம் குலோத்துங்கனே. தம் ஆட்சிக்கெதிராக எழுந்த சிக்கல்களைத் தொடர்ந்து சமாளித்தார் என்றாலும் 1216-17 காலகட்டப் பாண்டியர் படையெடுப்புக்குப்பின் சோழர்கள் தலையெடுக்கவில்லை. சோழப்பேரரசின் கடைசிக் கட்டடக்கலை வெளிப்பாடான கம்பகரேஸ்வரர் கோவில், சோழப்பேரரசு அதன் உச்சத்திலிருந்தபோது முதலாம் ராஜராஜனால் கட்டப்பட்ட (பொ.ஆ. 1010), தஞ்சாவூர் பெரியகோவிலை நினைவூட்டும்படி அதன் சாயலிலேயே அமைந்தது பொருத்தமானதே.

References:

Sarkar, H. (1974). The Kampaharesvara Temple at Tribhuvanam. Madras: Department of Archaeology, Government of Tamil Nadu.

Picture9.jpg

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் (திருபுவனவீரேஸ்வரம்), 1200-1212

Picture10.jpg

பிரகதீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர், பொ.ஆ. 1010

bottom of page