top of page
red.png

உரைகள்

திருமதி ஜெயந்தி சங்கர்
எழுத்தாளர்

வணக்கம்.

என்னுடைய அனுபவங்கள் வாயிலாக எனக்குக் கிடைத்த நம்பிக்கைகளைச் சொல்ல இருக்கிறேன். மின்னூல்கள் வாசிக்கும் Kindle போன்ற சாதனங்கள் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். எந்த மொழியாக இருந்தாலும் இனி வரும் தலைமுறையினர் அதிகமாக வாசிக்கப் போவது மின்னூல்களாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. ஆகவே, மின்னூல்கள் மேலும் பிரபலமடைய இந்தப் புதிய திட்டம் ஒரு முதற்படியாக அமையும். இதில் தேர்வுகள் என்று ஏதுமின்றி அனைவருடைய ஆக்கங்களையும் ஆவணப்படுத்த இருக்கிறார்கள். ஆகவே, தனி நபர் அளவிலும் இது ஓர் அரிய வாய்ப்பு.

புதிதாக வரும் போது எதுவுமே சின்னதொரு மிரட்சியை ஏற்படுத்தும். ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் பயன் தெரிய ஆரம்பிக்கும். அப்போது அதுவே இயல்பாகி விடும். தொழில்நுட்ப யுகத்தின் மாற்றங்களை ஏற்றால் பயன் என்னவோ நமக்கும் நம் மொழிக்கும் தான். ஆறாம் திணையான இணைய வெளியில் 2002 வாக்கில் எழுத ஆரம்பித்த காலம் தொட்டு எனக்குக் கிடைத்த வாசகர்கள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகளவில் பரந்து பட்டவர்கள். வாசகர்கள், வாசக எழுத்தாளர்கள், எழுத்தாள வாசகர்கள் என்று எனக்குக் கிடைத்த நண்பர்களும் நிறையபேர். இப்போது இருக்கும் பரவலான இணையப்பயன்பாடு குறித்து பலரும் முன்னுணர்ந்ததைப் போல அப்போது நான் உணரவில்லை. இருப்பினும், மனதில் சந்தேகங்களே இல்லாமலே இணையவெளியை அன்று நான் ஏற்றேன்.

எழுத்தென்பது கலையாகும். இங்கே விலைக்கு வேலை இல்லை. அதனால்தான் எழுதுவது வேறு, அந்த எழுத்தைச் சந்தைப்படுத்துவது முற்றிலும் வேறு. அடிப்படையான இந்த விஷயத்தை அவ்வப்போது கணக்கிலெடுக்கத் தவறுவதுடன் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறோம். சிங்கப்பூரில் என்று இல்லை தமிழிலேயே இன்றுவரை எழுத்தின் மூலம் பணம் சம்பாதித்தவர் மிகச் சிறிய விழுக்காடினர் தான். ஆகவே, அச்சுப்பிரதிகள் விற்காமல் போகுமே, கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போகுமே என்ற கவலையெல்லாம் தேவையே இல்லை என்பது எனது அனுபவப்பாடம். என்னைப் போல சந்தைப் படுத்தத் தெரியாதவர்கள் பிரதிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமலும் வீட்டு அலமாரியில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்குமே என்றும் முன்பெல்லாம் ஏற்பட்ட ஏமாற்றமும் சலிப்பும் இப்போதெல்லாம் ஏற்படுவதில்லை. இதுவரை 24 நூல்கள் எழுதிய அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். குறைந்தபட்சம் நிறைய பேருக்கு வாசிக்கக் கிடைத்தால் எழுத்துக்கான நோக்கம் நிறைவேறியதாகவே நினைக்கிறேன்.

நூலகத்தில் பிரதிகள் கொடுக்கவேனும் முடிந்தவர்கள் அதிருஷ்டசாலிகள்! அந்த அதிருஷ்டம் மிகச் சில நூல்களைத் தவிர எனக்குப் பெரும்பாலும் வாய்த்ததில்லை. இருந்தும் விடாமல் தொடர்ந்து நான் எழுதுவது எழுத்தில் கிடைக்கும் ஆத்ம திருப்திக்காகத் தான். ஆனால், ஆத்மதிருப்தி என்பதே கட்டுக்கதை, ஆத்மதிருப்தியால் அரைக்கிலோ அரிசி வாங்க முடியுமா என்பது போன்ற விவாதங்களுக்குப் பொருளில்லை; அவற்றுக்கு முடிவுமியில்லை. இது போன்ற நல்ல திட்டங்கள் மூலம் எழுத்து மேலும் அதிகமானவர்களுக்குச் சென்றடையுமென்றால், எப்போதுமே மகிழ்ச்சி தானே. வாசகர் வட்டம் விரிவடையும் போது தான் எழுத்துக்கான, எழுதப்பட்டுள்ள கருத்துக்கான உரிய கவனமும் கிடைக்கும். படைப்புகள் வழியாக மொழியையும் வளப்பமுடனும் உயிர்ப்புடனும் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்க முடியும். இதற்கு மின்னூல்கள் பெருமளவில் உதவும்.

நம் தேசத்துக்கு பரிசாகவிருக்கும் மின்னூல் திட்டம் வேறு பல வாயில்களையும் திறந்து விடலாம் என்றே முன்னுணர்கிறேன். முக்கியமாக, அச்சுப்பிரதிகள் கொடுக்காத நிரந்தரத்துவத்தை நம் ஆக்கங்களுக்குக் கொடுக்கும். நல்வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.

bottom of page