இத்தளம், தமிழர் பண்பாடுபற்றிய அடிப்படைத் தகவல்களை வழங்குகிறது. வேர்கள் மண்ணின் ஆழத்தை நோக்கி ஊன்றிச் செல்வதோடு பரப்பளவில் புதிய வழித்தடங்களை நோக்கியும் விரியும். அதுபோல், இத்தளம் வழங்கும் பண்பாட்டுத் தகவல்கள், தொப்புள்கொடி உறவான தமிழகத்தை ஆழ்நிலையில் பெரிதும் சார்ந்துள்ளது. அடுத்து, இம்மின்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கட்டுரைகள், சிங்கப்பூர்த் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை மண் வாசனையுடன் வழங்குகின்றன.
தமிழும் பண்பாடும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. குறிப்பாக, நம் எதிர்காலத் தலைமுறையினர், சிங்கப்பூரில் தமிழ் மரபையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டுமானால் அவைபற்றிச் சரிவரத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். தமிழ்ப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் தமிழ்ப் பண்பாட்டறிவை இதன்வழி வளர்த்துக்கொள்ளலாம். இதில் அடங்கியுள்ள பற்பல செய்திகள், சிங்கப்பூர்ச் சூழலுக்கேற்ப அமைந்திருந்தாலும், அவை பிறநாட்டுத் தமிழர்களுக்கும் பயன்மிக்கவையாக விளங்கும்.
இம்மின்தொகுப்பில் மொத்தம் ஐந்து இயல்கள் உள்ளன:
-
இயல் 1: தமிழரும் தமிழும்
-
இயல் 2: தமிழரின் சிந்தனைகள்
-
இயல் 3: தமிழரின் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்
-
இயல் 4: தமிழ்ப் பண்பாட்டுப் பொருள்களும் விழாக்களும்
-
இயல் 5: தமிழரின் தனித்துவங்கள்
இத்தளத்திற்குத் தாமரைப்பூ வடிவில் சின்னம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தாமரை என்னும் மலர், பண்பாட்டுச் சிறப்பும் மருத்துவச் சிறப்பும் கொண்டது. அதில் உள்ள ஐந்து இதழ்களும் ஐந்து இயல்களைக் குறிக்கும். தாமரை, நீரின் பரப்பில் மிதந்தாலும் அதன் வேர்கள் ஆழத்தில் ஊன்றியிருக்கும். அதுபோல் ஒருவர்தம் அடையாளங்களின் கட்டமைப்பிற்குப் பண்பாட்டு வேர்கள் காரணமாக அமைகின்றன.
இத்தளத்தை நன்முறையில் பயன்படுத்திப் பயன்பெறுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். இத்தொகுப்பு ஒரு கன்னி முயற்சி என்பதனையும் இதில் விடுபட்டு நிற்கும் செய்திகள், தகவல்கள் ஏராளம் என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இத்தொகுப்பைப் படிப்படியாக மேம்படுத்திக்கொண்டே இருப்போம். இத்தளத்தின் மேம்பாடு குறித்து ஏதேனும் ஆலோசனைகள் இருக்குமாயின், அன்புகூர்ந்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் (admin@singaporetamil.org) நன்றி.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்