top of page
Final.png

தமிழ் விழாக்கள்

தோற்றமும் வரலாறும்

சங்ககாலத் தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள்பற்றிய குறிப்புகளைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அவற்றுள் சில சமயம் தொடர்பானவை; வேறு சில சமூகம் தொடர்பானவை. மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும் புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்கள். மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் முக்கிய நோக்கமாகும். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி, மறுமலர்ச்சி ஆகியவற்றை அச்சமுதாயம் காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடும் விழாக்களின் வழியாக அறியலாம்[1].

 

விழாக்கள் மக்களின் பாரம்பரியப் பண்பாட்டை வளர்க்கின்றன. சமய நம்பிக்கைகள் தழுவிய விரதங்கள் மனிதரின் உள்ளத்தைத் தூய்மையாக்கி, வாழ்வை மேன்மைப்படுத்துகின்றன. நாம் தினமும் வீட்டில் அல்லது வழிபாட்டு இடங்களில் கடவுளை வணங்குகிறோம். ஆனால், விழாக்காலம் வரும்போது, நம் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் அயலவர்களுடனும் சேர்ந்து குதூகலமாகக் கொண்டாடுகிறோம். நம் முன்னோர்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சில பண்டிகைகளையோ விரதங்களையோ மேற்கொள்வதை வழக்கமாகக்கொண்டிருந்தனர். தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் அம்மாதத்திற்குரிய பருவநிலைகளுக்கேற்ப விழாக்களும் கொண்டாடப்பட்டன. இனி, இக்கட்டுரையில் தமிழ் மாதங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் குறித்துப் பார்ப்போம்.

 

(அ) சமூகம் தொடர்பான விழாக்கள்

பொங்கல் (இது தை மாதத்தில் கொண்டாடப்படும்)

சமூக விழாக்களுள் முதன்மையாகக் கருதப்படுவது பொங்கல் திருவிழாவாகும். இது தமிழர் பண்பாட்டின் அடையாளமாக விளங்குகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்; வாழ்க்கை செழிக்கும்’ என்பது தமிழரது நம்பிக்கையாகும். தைத்திருநாள் ஓர் இயற்கைத் திருநாள். இந்தியாவில் இப்பண்டிகை போகிப்பண்டிகை, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரீசியசு எனத் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இப்பொங்கல்விழா சமயங்கள் கடந்து பெரும்பாலான தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல்விழா உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

 

மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப வீடுகளைப் புதுப்பொலிவு பெறச்செய்வது போகிப் பண்டிகையின் நோக்கமாகும். பழையவற்றையும் பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் 'போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி 'போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல்நிகழ்வுகளுக்கு நன்றிகூறும் நாள் போகி என்பாரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப் பண்டிகையாகும். சிலப்பதிகாரம் குறிப்பிடும் இந்திர விழாவே போகிப் பண்டிகை என்றும் கூறப்படுவதுண்டு.

a6 p4.jpg

வீட்டிலுள்ளோர் அனைவரும் தை முதல் நாளன்று அதிகாலை எழுந்து நீராடுவர்கள். வீட்டு முற்றத்தில் கோலமிட்டு அதன் நடுவில் புதுப் பானை வைப்பார்கள். அதில் புத்தரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவார்கள். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவார்கள். முற்றத்தில் கோலமிட்டுத் தலைவாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றிக் கதிரவனை வணங்கிப் பொங்கலிடத் தொடங்குவார்கள். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கிவரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடிநின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவுவார்கள். தமது முதற்பயனைக் கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தார்க்கும் சுற்றத்தார்க்கும் கொடுத்த பின்பே தாங்கள் உண்பார்கள். இது தமிழரின் பண்பாடாகத் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது. தம்மோடு சேர்ந்து மண்ணுழுது, உழைத்த கால்நடைக்கு

நன்றிசெலுத்தும் திருநாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது. மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டிட்டு, கொம்புகளுக்கு வண்ணந்தீட்டி, பொங்கல் ஊட்டி, வீதி உலாவரச்செய்து மகிழும் திருநாளாக இது கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் தமிழரின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும்.

பொங்கல் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெறுவது காணும் பொங்கல். மணமாகாத பெண்கள் நல்ல கணவன் வாய்க்கப்பெற வேண்டும் என்பதற்காகப் பொங்கல் வைத்து வழிபடுவதால் இது கன்னிப் பொங்கல் என்றும் தைநாளில் உறவினர்களை எல்லாம் ஒன்றாக வைத்துக் காண்பதால் காணும் பொங்கல் என்றும் பெயர் பெற்றது. இவ்வாறு பொங்கல் திருவிழா உழைப்பின் உயர்வை, உழவின் சிறப்பை, உறவின் பெருமையை எடுத்துக்கூறி, உலகனைத்தும் பரவியிருக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது[2].

​​(ஆ) சமயம் தொடர்பான விழாக்கள்

சித்திரைத் திருவிழா (இது சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும்)

 

மதுரை மாநகரில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது சித்திரைத் திருவிழா. இத்திருவிழா மதுரையில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மதுரையின் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் தம் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்குத் தாமதமாக வருகிறார். அதற்குள் மீனாட்சியின் திருமணம் முடிவடைந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த அழகர் வைகை ஆற்றில் நீராடிவிட்டுத் தங்கையைக் காணாமலே வீடு திரும்புகிறார். இந்த நிகழ்ச்சியே திருவிழாவாகக் கொண்டாடப்பெறுகிறது.

இந்து சமயத்தில் பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்தாலும் சைவம், வைணவம் என இருபிரிவுகளுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாடுகளும் ஒற்றுமையின்மையும் இருந்துவந்துள்ளது. சைவத் திருவிழா, வைணவத் திருவிழா எனச் சமயங்கள் தொடர்புடையனவாக மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் திருமாலின் அவதாரமான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இருசமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இருவிழாக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் அழகர்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் முதலிய பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி, அழகர் அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்.

மதுரைக்கு அருகில் இருக்கும் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த அழகர் (திருமால்) மதுரை வைகை ஆற்றில் இறங்கும்படியாக விழா மாற்றியமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும் தான் வருவதற்குள் திருமணம் முடிந்துவிடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பிவிடுவதாகவும் புதிய கதையும் புனையப்பட்டது. ஆனால், மண்டூக மகரிசிக்கு சாபவிமோசனம் தரவே அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே பழைய புராணக்கதையாகும். புராண அடிப்படையில் நிகழும் பெருந்தெய்வ விழாவாக இருந்தாலும் நாட்டுப்புற மக்களின் பங்கேற்பும் பங்களிப்பும் இவ்விழாவின் சிறப்பம்சமாகும். அழகர் கோவிலிலிருந்து மதுரை வரையுள்ள கிராமங்களில் பெருந்தெய்வக் கடவுளான அழகர் சிறுதெய்வமாகவே கருதி வணங்கப்படுகிறார். சிறுதெய்வக் கோவில்களில் மேற்கொள்ளப்படும் பலியிடல், மொட்டை போட்டுக்கொள்ளுதல்,  நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோவிலிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

 

சித்ரா பௌர்ணமி (இது சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும்)

பெளர்ணமி தினம் மாதந்தோறும் வரும். தமிழின மக்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தையும் இறை வழிபாட்டிற்குரிய நாளாகக் கருதுகின்றனர். தமிழ் மாதம் சித்திரையில் வரும் பெளர்ணமி, சித்ரா பௌர்ணமி  எனப்படும். அன்றைய தினம் தமிழ் மக்கள் வழிபடும் அனைத்துக் கோவில்களிலும் ‌சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும், சில கோவில்களில் சித்திரைத் திருவிழாக்கள் நடத்தப்பட்டுப் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுத் தீபாராதனை காட்டப்படும். பழ‌ங்கால‌த்‌தி‌ல், சி‌த்ரா பௌ‌ர்ண‌மி அ‌ன்று தாராளமாக‌க் ‌கிடை‌க்கு‌ம் மா, பலா, வாழை போ‌ன்ற பழ‌ங்களை இறைவனு‌க்குப் படை‌த்து வழிபடுவார்கள்.

 

இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் உறவாடியபடி நதிக்கரையில் உண்பதுதான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும். புழுக்கத்தையும் வெயிலின் வெப்பத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்தச் சித்ரா பெளர்ணமியின் அறிவியல் அடிப்படையிலான நோக்காகும்.

 

தீபாவளி (இது ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும்)

இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான பண்டிகை தீபாவளி (Deepavali). சமயம், மொழி, கலாசாரம் இவற்றினால் ஏனைய பண்டிகைகளுக்கு மக்கள் காட்டும் ஆர்வத்தில் வித்தியாசமிருக்கலாம். ஆனால், ஏழைமுதல் பணக்காரர்வரை எல்லா மக்களாலும் ஒரே மாதிரி வரவேற்பு பெறும் பண்டிகை தீபாவளி. பொதுவாக, தீபாவளி ஐப்பசி மாதங்களில் வரும். ஆனால், சில வருடங்களில் இந்த மாதத்தில் மாற்றம் நடப்பது உண்டு. ஐப்பசி இல்லை என்றால் புரட்டாசி. இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

 

தீபாவளி (தீபம் + ஆவளி) என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். தமிழர் பண்டிகைகளில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்துள்ளது. தீப ஒளி என்பதே தீபாவளி என்று மருவியது என்னும் கருத்தும் உண்டு. இது இரு பெயர்கள் ஒட்டிய கூட்டுச்சொல்லாகும். மறைமலையடிகள் இதைத் தீப + ஆவலி எனப் பிரித்தார், ஆவலி என்பது ஆவலம் என்பதிலிருந்து திரிந்தது. ஆவலம் கொட்டுதல் எனில் சுற்றி நின்று கைகொட்டி ஆடுதலாகும். மனிதன் தீபத்தை ஏற்றுவதற்கு அறிந்த நாள் முதல் இது வழங்கிவருவதாகச் சொல்லப்படுகிறது. ஆர்தல் = சூழ்தல். ஆர் > ஆவலம் எனில் வலமாகச் சுற்றி ஆடுதல். இதுவே ஆவலம் என்பதன் அமைப்புப் பொருளாகும். தீவாலி என்னும் வடமொழி வழக்கில் வலம் > வலி > வாலி என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். தீபாவளி எனில் தீராத பாவத்தை அழி என்பதன் திரிபு என்னும் கருத்தும் உண்டு. தீபாவளி என்னும் சொல் சமஸ்கிருதமாகும். இந்தியாவின் வட மாநிலங்களில் இதைத் 'திவாளி' (Diwali) என்கிறார்கள். அங்குத் தீபாவளியின்போது வீடுகளில் தீபாலங்காரம் விசேடமான அம்சமாகும். தீவாஸ் எனப்படும் அகல் விளக்குகள் அங்கே ஒளி வீசிச் சிரித்துக்கொண்டிருக்கும். 'திவாளி'ப் பண்டிகை வட மாநிலங்களில் இலட்மி பூஜையாகக் கருதப்படுகிறது. வியாபாரிகளும் தொழில் நிறுவனங்களும் அந்த ஆண்டின் புதுக்கணக்கைத் 'திவாளி' பண்டிகையின்போதுதான் ஆரம்பிப்பது வழக்கம்[1]

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தீபாவளிக்கும் நிறைய கதைகள் உள்ளன. தீபாவளியைத் தீப ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது அறிவையும் இருள் என்பது அறியாமையையும் குறிக்கும்[3]. 

தீபாவளிப் பண்டிகை, தீமையின் வடிவான அசுரர்களைக் கடவுளின் அவதாரம் அழித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள். நராகாசுரன் கதை  பெரும்பாலானோர்க்குத் தெரிந்த ஒன்று. நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றபோது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். அசுரவதத்தின்போது பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது. 

 

நரகாசுரன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனைக் கொல்ல நினைத்தார். ஆனால், நரகாசுரன் பூமித் தாய்க்குப் பிறந்தவன். அவன் தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே, மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். நரகாசுரன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு மகாவிஷ்ணு மயக்கம் அடைவதுபோல் கீழே விழுந்தார். இதைப் பார்த்த சத்தியபாமா கோபம் அடைந்து நரகாசுரனைப் போர்க்கு அழைத்தார். சத்தியபாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்குப் பலியாகிச் சரிந்தான். அப்போதுதான் அவனுக்குச் சத்யபாமா தனது தாய் என்று தெரியவந்தது.

vila 2.jpg

நரகாசுரன் தனது தாயிடம், ''அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனத்தில் நிற்க வேண்டும்; என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாகக் கொண்டாட வேண்டும்'' என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதைக் கிருஷ்ண லீலை என்கிறது புராணம்.

 

வால்மீகி ராமாயணத்தில் ராமன் கொடியவனான ராவணனை அழித்துவிட்டுத் தனது வனவாசத்தை முடித்துக் கொண்டு மனைவி சீதையுடனும் சகோதரன் லட்சுமணனுடனும் அயோத்திக்குத் திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாகத் தீபாவளி பிறந்தது என்று சொல்லப்படுகிறது.

 

ஸ்கந்தபுராணத்தின்படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிந்தது இந்தத் தினத்தில்தான். விரதம் முடிவடைந்த பின்னர்ச் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார். இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதி வடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீப வழிபாடு தீபாவளி என நாம் கொள்ளலாம். மேலும், ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன்னாளினை நினைவுபடுத்துவதாகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்கிறது ஸ்கந்தபுராணம். 

 

தீவாளித் திருநாளில், திருக்கயிலாயத்தில், சிவனும் பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு ஆடியதாக ஒரு புராணக் குறிப்பு உண்டு. இதை நினைவூட்டும் விதத்தில் குஜராத்தில் தீபாவளி தினத்தில் இந்து மக்கள் சொக்கட்டான் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

சீக்கியர்கள் 1577ஆம் ஆண்டு பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கிய தினத்தைத் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர் என்னும் கருத்தும் உண்டு. சமணர்கள், மகாவீரர் முக்தி அடைந்த நாளைத் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர் என்கின்றனர்.

 

பொதுவாக, ஐப்பசி மாதம் பனி நிறைந்த மாதம். இல்லந்தோறும் குளிர் அதிகமாக அண்டும் காலம். இருள் கூடும் காலம் என்றும் இதைக் கூறலாம். அந்தக் காலக்கட்டத்தில் ஒளியை பெருக்கி உஷ்ணத்தை வீடுகளில் உருவாக்க இந்தப் பண்டிகையை மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கலாம் என்பது கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி ராஜநாராயணன் கருத்து.

 

திருக்கார்த்திகை வழிபாடு (இது கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும்)

vila 3.jpg

தமிழர்கள் கொண்டாடிய விழாக்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற இவ்விழாவானது அடிப்படையில் சமய விழாவாகப் பார்க்கப்படுகிறது. இவ்விழாவினை இன்றும் நாம் கடைப்பிடித்தும் வருகிறோம். இவ்விழாபற்றிய குறிப்புச் சங்ககால நூலான நற்றிணையில் (நற்றிணைப் பாடல் - 202) கூறப்பட்டுள்ளது இங்குக் கவனிக்கத்தக்கதாகும். வீடுகளும் தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அதற்கு ஆதாரமாக அகநானூற்றுப் பாடல் (அகம் - 141) ஒன்றும் நமக்குச் சான்று பகர்கிறது.

 

கார்த்திகை மாதம், பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாளில் கார்த்திகை விழா ஆரம்பமாகி, சிவ கார்த்திகை, விஷ்ணு (பெருமாள்) கார்த்திகை, குப்பை கார்த்திகை என்னும் மூன்று திருநாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

 

ஆதிகாலத்திலிருந்தே மக்கள் தீயைத் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர். ஐம்பூதங்களுள் ஒன்றான தீயை மகிழ்விப்பதே இப்பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். நமது புராணங்களும் திருக்கார்த்திகை விழாவுக்கான காரணக்கதைகளை அழகாக வர்ணிக்கின்றன. திருக்கார்த்திகைக்குரிய தெய்வங்களான சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களை வழிபடும்படி கூறுகின்றன.

சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாக உதித்த முருகக் கடவுளைத் தாலாட்டிச் சீராட்டி, பாலூட்டி வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்களால் வளர்க்கப்பட்டதால் முருகப்பெருமானுக்குக் கார்த்திகேயன் என்னும் பெயர் உண்டாயிற்று. தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பளிக்கும் விதம், கார்த்திகை மாதம் பௌர்ணமியோடுகூடிய திருக்கார்த்திகை நட்சத்திரத்தில் அகல் விளக்கேற்றி அதன் தீப வடிவில் தன்னை வழிபடுவோர்க்கு நலன்கள் யாவும் தருவதாக முருகப்பெருமான் அருள்புரிந்தார் என நம்பப்படுகிறது. திருக்கார்த்திகைத் திருநாளில் அதிகாலை நேரத்தில் வீட்டை நன்றாகக் கழுவிச் சுத்தஞ்செய்து, மாவிலைத் தோரணம் கட்டி, மாக்கோலமிட்டு அலங்கரிப்பார்கள். அன்றைய நாளில், தீபங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டித் தீபமேற்ற உகந்த நேரம் மாலை வேளை என்பதால், அந்நேரத்தில் வீடுகளில் தீபமேற்றி வழிபட்டனர்.

 

தைப்பூசம் (இது தை மாதத்தில் கொண்டாடப்படும்)

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களுள் முக்கியமானது தைப்பூசம். மொத்தம் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களுள் எட்டாவது நட்சத்திரம் பூசம். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் நாள் தைப்பூச விழாவாகத் தமிழ் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும். அன்றைய தினம் குழந்தைகளுக்குத் காதுகுத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றைச் செய்துவைப்பார்கள். இந்த நாளில் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் எல்லாச் சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தைப்பூசத்தன்று முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்துகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு முருகப் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குகின்றனர்.

 

சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணஞ்செய்து தைப்பூசத்தன்று முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுசெய்து விரதத்தை முடிப்பார்கள். 

vila 4.jpg

தைப்பூசத்தின்போது காவடி எடுப்பது ஏன்?

 

அகத்தியர் தம் சீடர்களுள் ஒருவரான இடும்பனை அழைத்துத் தமது வழிபாட்டிற்காகக் கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இருசிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார். அகத்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தான்.

முருகன், இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும் இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். இடும்பன் வழி தெரியாமல் திகைத்தபோது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்துவந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார். இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்துவிட்டுப் புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படிக் காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய்க் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால், அந்தச் சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம்போல் கீழே சரிந்து விழுந்தான். இதைக் கண்ட அகத்தியர், இடும்பன் மனைவியுடன் சென்றுவேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தமது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன்போல் காவடியேந்திச் சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களைத் தம் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார். அப்போது முதல் முருகனுக்கு இந்தக் காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகிவிட்டது என்பது புராண வழக்கு.

தை மாதத்தில் வரும் இத்திருவிழா தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தைப்பூச விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் தைப்பூசம்

சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்திலிருந்து முருகக் கடவுள் வெள்ளி ரதத்தில் அதிகாலையிலேயே ஊர்வலமாகப் புறப்பட்டு, கியோங் செய்க் ரோட்டில் உள்ள அருள்மிகு லயன் சித்தி விநாயகர் கோவிலுக்குத் தமது தமையனைச் சந்திக்கச் செல்வார். அவ்வாறு செல்லும் வழியில் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தமது தாயரான பார்வதி தேவியின் அம்சமான ஸ்ரீ மாரியம்மனின் ஆசிபெற்றுப் பின்னர், அருள்மிகு லயன் சித்தி விநாயகர் கோவிலை நோக்கிச் செல்வார். அங்கு வெள்ளி ரதத்திலிருந்து முருகப்பெருமான் இறக்கப்பட்டுப் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்டு, ஆலயத்தில் வைக்கப்படுவார். பின்னர் மாலை நேரத்தில் ஸ்ரீ முருகன் அங்கிருந்து அண்ணன் விநாயகப் பெருமானின் ஆசியுடன் புறப்பட்டு, தமது ஆலயத்தை வந்தடைகிறார். அங்குச் செட்டியார் சமூகத்தினர் முருகனுக்குச் சர்க்கரைக் காவடி எடுத்து, ஆடிச் சமர்ப்பிப்பார்கள். இதனைச் ‘செட்டிப் பூசம்’ என்று அழைப்பதுண்டு.

vila 5.jpg

இரண்டாம் நாளில் தைப்பூச நடவடிக்கைகள் அதிகாலையிலேயே தொடங்கிவிடும். முதல் நாள் நள்ளிரவுக்குப் பின் வழிபாடுகள் நடத்தப்பட்டு, முதல் தொகுதிப் பக்தர்கள் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து தங்கள் பால் குடங்களுடன் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்துக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். காவடி ஏந்தும் பக்தர்கள் விரைவில் தங்கள் காவடிகளுடன் அவ்வாலயத்தை விட்டுப் புறப்படுவார்கள். இப்படியாக அன்று இரவு 7.00 மணிவரை ஸ்ரீ பெருமாள் கோவிலிலிருந்து காவடிப் பிரார்த்தனை உட்பட இதரப் பிரார்த்தனைகளை நிறைவேற்றப் பக்தர்கள் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தை நோக்கிப் பாத ஊர்வலமாகச் செல்வார்கள்.

 
ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தைப் பக்தர்கள் வந்தடைந்ததும் தங்கள் பிரார்த்தனைப் பால்குடங்களைச் சன்னதியில் சமர்ப்பிப்பார்கள். அதிலுள்ள பால், வேலுக்கு ஊற்றப்படும். வேல்தான் இங்கு மூலவர். இவர்க்குப் பாலாபிஷேக வழிபாடு நீண்ட நேரம் நடக்கும். பிரார்த்தனைகளை முடித்த பக்தர்களுக்கு விபூதிப் பிரசாதம் கொடுக்கப்படும்.

 

இவ்வாறு ஆண்டுதோறும் நாதஸ்வரம், மேள தாள இசையுடன் உறுமி மேளமும் காவடிச் சிந்தும் வழியெங்கும் இசைக்கத் தைப்பூசத் திருவிழா பக்திப் பரவசத்துடன் சிங்கப்பூரில் இனிதே நடைபெறும். சிங்கப்பூரில் பல்லின, சமய சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வளர்க்கும் விழாவாகவும் இது அமைகிறது.

 

மலேசியாவில் தைப்பூச விழா

மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ்பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். மலையையொட்டிச் சுங்கைப் பத்து ஆறு ஓடுகிறது. பத்துமலைக் கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா, பத்துமலையில் குவிவார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிலிருந்து பத்துமலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருவார்கள். நேர்த்திக்கடன் செலுத்த, சிலர் காவடி எடுத்து வருவார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோரும் உண்டு. சுங்கைப் பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருவது நம்பிக்கை.

 

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர்மலைக் கோவிலில் பினாங்குத் தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மட்டுமின்றி, சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளைப் பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

 

மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலிலும் தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

மொரீஷியசில் தைப்பூசம்

சுப்பிரமணியர்க்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களும் இங்கும் உண்டு.

ஆஸ்திரேலியாவில் தைப்பூசம்

ஆஸ்திரேலியாவில் உள்ள சிவா விஷ்ணுக் கோவிலில் இந்துக் கழகத்தின் சார்பில் தைப்பூச விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியர்க்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் தங்கள் வேண்டுதலைச் செலுத்துகிறார்கள். 

 

தீமிதித் திருவிழா (இது ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும்)

தீமிதித் திருவிழா தென்னிந்தியாவில் தோன்றியது. இத்திருவிழாவிற்கும் மகாபாரதக் கதைக்கும் தொடர்பிருப்பதாகக் கருதப்படுகிறது. மகாபாரதக் கதையின் திரெளபதி மாரியம்மனின் அவதாரமாகக் கருதப்படுகிறார். கௌரவர்களுக்கும் பஞ்சபாண்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் பஞ்சபாண்டவர்கள் வெற்றியடைந்ததை முன்னிட்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது. தீமிதித் திருவிழாவிற்கு முன்பாக மகாபாரதக் கதை கூறப்படும். சில இடங்களில் நாடகமாக நடிக்கப்படும். தீமிதியைப் பூக்குழி இறங்குதல் என்றும் குறிப்பிடுவார்கள். இந்தியாவில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தென்னிந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் தீமிதித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

        

சிங்கையில் நார்த் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் தீமிதித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்குத் தீமிதிக்குரிய சடங்குகள் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கப்படுகிறது. இத்திருவிழா தொடங்குவதற்கு அறிகுறியாகக் கொடியேற்றம் நடைபெறும். அதன் பின்னர்ப் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் அனுசரிப்பார்கள். இத்திருவிழா, தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஆண்கள் அங்கப்பிரதட்சணமும் (கோவிலுக்குச் செல்பவர்கள் இடமிருந்து வலப்பக்கமாக மூன்று முறையாவது தெய்வச்சிலை உள்ள கருவறையைச் சுற்றி நடப்பதற்குப் பதிலாகப் படுத்து உருண்டுகொண்டு சுற்றுவது) பெண்கள் கும்பிடுதண்டமும் (பெண்கள் குளித்துவிட்டு ஈரச் சேலையோடு தண்ணீர் சொட்டச் சொட்ட, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் மண்ணில் குனிந்து, இரண்டு கைகளையும் அகல விரித்து, மண்ணைக்குவிப்பதுபோலத் தரை தடவி, தலைக்கு மேல் கொண்டு சென்று, மண்ணை அள்ளியபடி எழுந்து, முன்னே அம்மண்ணை இறைத்து விட்டு, மண்ணை அள்ளிய இடத்திற்குச் சென்று, அந்த இடத்தில் நின்றபடி மீண்டும் குனிவார்கள். இப்படிப் பிரகாரத்தை மூன்று வளையம் சுற்றி வருவது) செய்வார்கள்[2]. சிலர் பால் குடம் எடுத்து அம்மனுக்குப் பால்காணிக்கை செலுத்துவார்கள். தீமிதிக்கு இரண்டு நாட்ளுக்கு முன்பு வெள்ளி ரதம் தெலுக் பிளங்கா, புக்கிட் மேரா சாலைகளில் ஊர்வலமாக வரும். தீமிதியன்று பக்தர்கள் ஏறத்தாழ காலை நான்கு மணியளவில் தீயில் இறங்குவார்கள். இவ்வாறு சிங்கையில் தீமிதி விழா கொண்டாடப்படுகிறது.

 

மானுட வாழ்வில் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் படுகுழியில் இடப்படும் நெருப்புக்கனல் மிகுந்த கரித்துண்டுகளோடு ஒப்பிடப்படுகிறது. தீக்குழியைத் தாண்டிவந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றுவது, துன்பங்களைக் கடந்துவந்து வாழ்வில் நாம் கொண்டுள்ள இலக்கை அடைவதைக் குறிப்பிடுகிறது.  

 

நவராத்திரி விழா (இது புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும்)                             

                      

ஸ்ரீ பராசக்தி சண்டிகா தேவிகாளி உக்கிரத்துடன் அவதரித்து மகிசாசுரனுடன் போர்புரிந்து அவனை வீழ்த்தினாள். இவ்வாறு சண்டிகா தேவி மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்து அசுரனை அழித்த விழாவே நவராத்திரி விழா. நவராத்திரி, உத்தரபிரதேசத்தில் "ராம்லீலா' என்னும் பெயரிலும், வங்காளிகள் "காளிவழிபாடு', "துர்க்கா வழிபாடு' என்றும் கர்நாடகத்தில் "தசரா வழிபாடு' என்றும் கொண்டாடுகின்றனர். தில்லியில் விஜயதசமி அன்று ராவணன் பொம்மைகளை எரித்து ராவணன் சம்காரமாகக் கொண்டாடுகின்றனர்.

 

நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவார்கள். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள். நவராத்திரியின் முதல்நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பார்கள். ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் வழிபாடு செய்வது வழக்கம். ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம். பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது நம்பிக்கை.


நவராத்திரி வழிபாட்டினைத் தெய்வங்களும் தேவர்களும்கூடச் செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைக்கேற்ப ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்துச் சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இவ்வழிபாடு செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த வழிபாடு செய்ததால்தான். நவராத்திரியில் ஒன்பது நாட்களும் வழிபாடு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.

 

விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் சக்தியாலும் வறுமை செல்வத்தினாலும் அறியாமை ஞானத்தினாலும் வெற்றிகொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியர்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது நம்பிக்கை.


‘நவம்’ என்னும் சொல்லுக்கு ஒன்பது என்று பொருள். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள்முதல் தொடங்கி ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரியாக அனைவரும் கொண்டாடுகிறார்கள். பத்தாவது நாள் விஜயதசமி நாளையும் இணைத்து மொத்தம் பத்து நாட்கள் நவராத்திரி விழா முடியும். பத்து நாட்கள் வீட்டில் கொண்டாடப்படும் ஒரே விழாவாக நவராத்திரி இருப்பதால், வீட்டை அழகுபட அலங்கரிக்க வேண்டும். பலவிதமான பொம்மைகளால் கொலு அமைத்து, விரதம் இருந்து, வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்கறுக்கும் கன்னிப் பெண்களுக்கும் தகுந்த உபசரிப்புச் செய்து, அவர்களை மகிழ்விப்பார்கள். சிங்கப்பூரிலும் அனைத்து இந்துக் கோவில்களிலும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாளும் கோவில்களில் கடவுளர்களுக்கு ஒன்பது விதமாக அலங்காரங்கள் செய்வார்கள். பொம்மைகளைக்கொண்டு கொலு வைக்கிறார்கள். வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், இசைக்கச்சேரி போன்ற விதவிதமான கலைநிகழ்ச்சிகளை மாலை நேரங்களில் நடத்துகிறார்கள். பத்தாம் நாள் விஜயதசமி விழாவினைக் கொண்டாடி நவராத்திரி விழாவினை நிறைவு செய்வார்கள். அன்று புதுப் பாட வகுப்பைத் துவங்குவது வழக்கம்.

 

இக்கட்டுரையின்வழித் தமிழ் முன்னோர்கள் வாழ்வில் விழாக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ளலாம். சங்ககாலத்தில் விழாக்களுக்குக் குறைவில்லை. சமய விழாக்களே பெரும்பான்மையாக இருந்திருக்கின்றன. இவ்விழாக்களின்போது பாட்டும் கூத்தும் விருந்துகளும் நிறைந்து மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இயற்கையில் ஆரம்பமாகிய வழிபாடு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தொடங்கி இன்றளவும் தொடர்ந்து இருந்து வருகிறது.

 

ஒவ்வொரு மாதத்திலும் விழாக்களை அமைத்துக் கொண்டாடியதால் மக்களிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் மேம்படும் என்பதோடு, நாம் பண்டிகைகள், விழாக்கள் வழியாகத் துன்பங்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் வாழ்வியல் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் தமிழ் முன்னோர்கள் கருதினார்கள்.

துணைநூல்கள்

[1]   சேதுராமன், சி. (2009) பழந்தமிழர் விழாக்கள். வாழ்வியற் களஞ்சியம், தொகுதி 5, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.

[2]   சக்திவேல், சு. (1983) நாட்டுப்புற இயல் ஆய்வு.  மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.

[3]   ஞான அலாய்ச்சியஸ் (தொகுப்பாசிரியர்) அயோத்திதாசர் சிந்தனைகள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம். தூய சவேரியர் கல்லூரி, 

        பாளையங்கோட்டை.

 

குறிப்பு: தீமிதித் திருவிழாவைப் பற்றிய தகவல்கள் மாரியம்மன் கோவிலைப் பற்றிய ஆங்கிலத் தொகுப்பிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது.

bottom of page