Final.png

தமிழர் பண்பாட்டில் கோலங்கள்

கோலக்கலை இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றியது என்று கருதப்படுகிறது.  கோலம் (கோல் + அம்) என்னும் சொல்லில் உள்ள கோல் என்பது சித்திரம் தீட்டும் கோலைச் சுட்டுவதாகக் கழகத் தமிழகராதி குறிப்பிடுகிறது. கோலம் என்பது அழகு, அலங்கரிப்பு, ஒப்பனை என்றும் பொருள்படும். இக்கலை இந்தியாவின் பல பகுதிகளில் தொன்றுதொட்டுக் காணப்படுகிறது. கோலம் என்னும் சொல், சங்க இலக்கியங்களில் 6 இடங்களிலும் சிலப்பதிகாரத்தில் 42 இடங்களிலும் மணிமேகலையில் 11 இடங்களிலும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 7 இடங்களிலும் இடம்பெற்றுள்ளது[1]. ஆண்டாள் வாழ்ந்த காலம் முதலே வாசலில் இடப்படுவது கோலம் எனப்பட்டது. இக்கலை அரங்கத்திலிருந்து (கோவில்) அம்பலத்திற்கு (வீட்டுவாசல்) வந்திருக்க வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள்.

இன்றும் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் மலைகளிலும் பள்ளங்களிலும் குகைகளிலும் உள்ள பாறைகளைப் பார்க்கையில் அவற்றில் கோலங்கள் போன்ற பல வடிவங்கள் உள்ளதைக் காணலாம். பொதுவாக, ஓவியம், சிற்பம் போன்ற கலைகளை ரசிப்பதற்கு நுண்கலைகள்பற்றிய அறிவும் ரசனையும் இருக்க வேண்டும் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், வீடுகளில் அழகிய கைவண்ணத்தில் இடப்படும் கோலங்களை யாவரும் ரசிக்க முடிகிறது.

a9.9 p1.jpg

கோலமிடுதல் மகளிர்க்குரிய கலையாக அன்றும் இன்றும் உள்ளது. இக்கலை பெண்களின் மனவியல்பு, கற்பனைநயம், அறிவாற்றல், அழகுணர்ச்சி போன்றவற்றை வெளிக்காட்டுவதாக உள்ளது[2]. பச்சரிசி மாவில் புள்ளிவைத்து, இழை இழையாகப் இடும் கோலம், தமிழர் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று. குறிப்பாக, மார்கழி மாதந்தோறும் தெருக்களில் கோலம் இடுவது தமிழ்நாட்டு வழக்கமாக இருந்து வருகிறது. இருள் பிரியாத முன்பனிக் காலையில் எழுந்து, போட்டி போட்டுக்கொண்டு வீட்டுக்கு வீடு வாசலில் பெண்கள் கோலமிடுவார்கள்.

 

பொதுவாக, அரிசி மாவினால் கோலமிடுவது தமிழர் மரபு. தினந்தோறும் இல்லங்களின் முகப்பை அலங்கரிக்கும் கோலங்களுக்குப் பல சிறப்புகள் உண்டு. கோலங்கள் வீட்டுக்கு அழகும் மங்கலமும் தருகின்றன என்பதோடு வேண்டாத எண்ணங்களை நீக்கி, மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும் தருகின்றன.

கோலம்பற்றிய வாழ்வியல் தத்துவம்

மனித வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் ஏற்றமும் இறக்கமும் நெளிவுசுளிவும் மிக்கது. கோலத்தில் வளைவுகளையும் கோடுகளையும் புள்ளிகளையும் இடுகிறோம். வாழ்க்கை என்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியக்கூடியது. அதுபோல் கோலம் இடுவதை எங்கு ஆரம்பித்தாலும் பல புள்ளிகளையும் வளைவுகளையும் கொண்டு அது முற்றுப்பெறுகிறது[3]. புள்ளிகள் என்னும் தடைக்கற்களைக் கடந்து வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு கடப்பது அவசியம். அவ்வாறு பண்பட்டு வாழ்க்கையை ஒருவர் அமைத்துக்கொண்டால் வாழ்வானது அழகிய கோலத்தைப்போல் நிறைவாகத் தோன்றும்.       

அடுத்து, யோகக்கலையிலும் உடல் நாடிகளின் அமைப்பை விளக்க மூலாதாரத்தில் நான்கு இதழ் தாமரை தொடங்கி, அதனைத் தொடர்ந்து ஆறு, எட்டு, பத்து என்று ஆயிரம் இதழ்கொண்ட தாமரைவரை உள்ளன என்று குறிப்புகள் புலப்படுத்துகின்றன. இவை வரையப்பட்டுள்ள வரைபடங்களைக் கண்டால் அவை கோலங்களாகவே தோன்றும்[4].


கோலம்பற்றிய நம்பிக்கைகள்

அக்காலத்தில் வாயிலில் கோலங்களை இடுவது ஒரு பழக்கமாக இருந்ததற்குச் சில காரணங்கள் இருந்துள்ளன. துஷ்ட தேவதைகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கவும் தர்ம தேவதைகளை உள்ளே அழைக்கவும் தூய ஆவிகளை உள்ளே அழைக்கவும் லஷ்மி தேவியை உள்ளே அழைக்கவும் எனப் பல காரணங்களுக்காகப் பலவிதமான கோலங்கள் இடப்பட்டன. கோலமிடும் பெண்கள் சில மந்திரங்களையும் உச்சரித்தவாறே கோலமிட்டு வந்தனர் என்பது கிராமியக் கதையாக இன்றும் உள்ளது.

அரிசி மாவினால் இடப்படும் கோலங்கள் புழு பூச்சிகளுக்கு உணவாக அமையும். அதனைத் தின்னும்போது, அவை நம்மை வாழ்த்திவிட்டுச் செல்லும் என்பது நம்பிக்கை. அது மட்டுமின்றி, வீட்டின் வெளியில் சுற்றித் திரியும் ஆவிகள் அந்த அரிசி மாவைத் தமக்குப் போடப்பட்ட உணவாகக் கருதி அந்த வீட்டில் உள்ளவர்களை வாழ்த்திவிட்டுப் போகுமாம். எனவே, நன்மைகள் அனைத்தும் எளிதாக அவர்களின் இல்லம் தேடி வந்தடையும் என்னும் நம்பிக்கை பொதுவாக நிலவுகிறது. அமாவாசை அன்று இறந்தவர்களின் ஆவிகள் மனை தேடிவரும் என்னும் நம்பிக்கையால் வீட்டுவாசலில் கோலம் இடுவதில்லை. இம்மரபு தமிழகத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மார்கழி மாதத்தில் விடியற்காலையில் கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மார்கழி மாதப் பனிக்காற்று, உடம்பெல்லாம் குளிர்ந்தாலும், உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்ல மருத்துவக்குணம் மிக்கது என்கிறது மருத்துவம். மார்கழி மாதத்தின் அதிகாலை நேரத்தில் பூமியையொட்டிய காற்றுமண்டலத்தில் தூய பிராணவாயு அடர்த்தியாக வியாபித்து இருக்கும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அந்த நேரத்தில் வீட்டுவாசலில் கோலம் போடுவதால் தூய பிராணவாயு நிரம்பிய காற்றைச் சுவாசிக்க முடிகிறது. அதனால்தான் முன்னோர்கள், மார்கழி மாதந்தோறும் அதிகாலையில் வீட்டுவாசலில் கோலமிடும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். மார்கழி மாதத்தில் எல்லாக் கோவில்களும் அதிகாலை வேளையிலேயே திறக்கப்பட்டு, தெய்வ வழிபாடுகளும் நாம சங்கீர்த்தனங்களும் நடந்துகொண்டிருக்கும். இதேபோல்  வீடுகளையும் தூய்மைப்படுத்தி, வீட்டுவாசலில் கோலமிட்டால் லட்சுமி கடாட்சம் அந்த வீட்டுக்குத் தானாக வந்துவிடும். இம்மாதத்தில் இடப்படும் கோலத்தின்மீது பறங்கிப் பூவை வைத்து அலங்கரிப்பார்கள். மார்கழி மாதம் முழுவதும் கோலத்தின்மீது பூவைப்பது மரபாகும். பின்னர் அப்பூக்களையும் சாணத்தையும் வறட்டியாகத் தட்டிச் சேகரித்துத் தைப்பொங்கல் நாளில் பொங்கல் அடுப்பிற்குப் பயன்படுத்தும் வழக்கம் இன்றும் சிலவிடங்களில் நிகழ்கிறது.


கோலத்தின் வகைகள்


தமிழர்களது பண்பாட்டில், கோலம் பல்வேறு வகைகளில் வரையப்படுகிறது. மாக்கோலம், புள்ளிக்கோலம், நெளிகோலம், கோட்டுக்கோலம், இழைக்கோலம், சிக்குக்கோலம், அங்கக்கோலம், மணற்கோலம், வெள்ளைக்கல் மாவுக்கோலம், பூக்கோலம், பயறுக்கோலம் முதலியவை குறிப்பிடத்தக்கவை. கோலத்தை எடுப்பாகக் காட்டுவதற்குக் காவி நிறத்தையும் பயன்படுத்துவார்கள்.

கோலத்தில் மிகவும் சிக்கலான கோலத்தைச் `சிக்குக் கோலம்’ என்று குறிப்பிடுவார்கள். இது புள்ளிகளை மையமாகக் கொண்டு இடப்படும் கோலமாகும். இதனை இடுவதற்கு நினைவாற்றலும் அதிகக் கவனமும் தேவை. கோலங்களில் உள்ள புள்ளிகளை நேர்கோடுகளால் இணைத்தும் அவற்றின் இடையே வளைகோடுகளை வைத்தும் வரையப்பெறுகின்றன.

சிறிதளவு தண்ணீரைப் பெரிய வாயுள்ள பாத்திரத்தில் விட்டு, அதில் மிகக் கவனமாகக் கோலம் இடுவது ஒரு கலையாகும். மெதுவாக, கோலப் பொடியினைத் தூவினால் அது நீரில் அழுந்தாமலும் கலையாமலும் காட்சி தரும். இதனை நீர்க் கோலம் என்பார்கள்.


கோலமிடும் முறை

பெருவிரலுக்கும் அடுத்த ஆள்காட்டி விரலுக்கும் இடையில் கோலப் பொடியினை வைத்து நெடிதாய் விழுமாறு செய்து, வடிவங்களை அமைப்பது கோலமாகும். பண்டைய காலத்தில் வீட்டின் முன்புறத்தை அழகூட்ட வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாமல், தத்தம் வீடுகளில் நடக்கும் விழாக்களைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் அழகான கோலங்கள் இட்டனர். அக்காலத்தில் கிராமப்புறங்களில் வீட்டுவாசலிலும் முற்றத்திலும் கோலங்கள் இடப்பட்டன. கோலமிடுவதற்கு முன்னர்ப் பெண்கள் வீட்டுவாசலைச்  சாணத்தால் மெழுகி அரிசிப் பொடியினைக் கொண்டு கோலமிட்டனர்.

கோலமிடுபவர் உட்கார்ந்துகொண்டோ குத்தவைத்துக் கொண்டோ இடக்கூடாது. காரணம், அது சோம்பலை உருவாக்கும் என்பது இயற்கை விதி. ஆகவே, குனிந்து நின்றுதான் கோலமிட வேண்டும். கோலத்தை கையாலும் கருவிகளாலும் இடலாம். கோலம் வீட்டைப் பார்த்து அமைய வேண்டும். இடது கை அசுத்தத்தைக் கழுவுவதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படுவதால், வழக்கம்போல் வலது கையால் கோலமிட வேண்டும் என்பார்கள்.   

கோலத்தை இரட்டைக்கோடுகளாக இடவேண்டும். ஒரு கோடு மட்டும் வரைந்து கோலம் இடுவது அசுபகாரியங்களுக்குத்தான் என்கிறது சாத்திரம்.   பொதுவாக, தெய்வங்களின் சின்னங்களை வீட்டின் வாசலில் கோலமாக இடுவதில்லை. காரணம், அந்தக் கோலங்களை யாராவது அறியாமல் மிதித்துவிட்டாலும் குற்றம் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. இறைவனின் சக்கரச் சின்னங்களைப் வழிபாட்டு அறையில் மட்டும்தான் கோலமாக இடவேண்டும். வெள்ளிக்கிழமையிலும் பௌர்ணமி தினங்களிலும் தாமரைப்பூக் கோலமிட்டால் திருமகளின் அருள்நோக்குக் கிடைக்கும் என்பது முன்னோர் நம்பிக்கை.

பெண்கள் கையால் கோலமிடுவதோடு சல்லடை போன்ற துளையுடைய தட்டுகளைப் பயன்படுத்தியும் கோலமிடுவார்கள். ஓட்டைகள் இடம்பெற்ற குழாயினுள் கோலப் பொடியை நிரப்பி அவற்றைத் தரையில் உருளுமாறு இழுப்பதன் மூலமாகவும் கோலங்கள் வரையப்படுகின்றன. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வகையாகக் கோலம் இடவேண்டும் என்னும் விதியும் உண்டு.

கோலமிடும் கலையுணர்வு, நவராத்திரி நாள்களிலும் பொங்கல், தீபாவளி விழாக்காலங்களிலும் மார்கழி மாதத்திலும் மிகுந்து காணப்படுகிறது. ஆதிசங்கரர் தம் சௌந்தரியலகரியில் ஒன்பது நாள்களில் எவ்வகையான கோலங்களை இடவேண்டுமெனக் கூறியுள்ளார்[5]. தைத்திங்கள் முதல் நாளில் கோலப் பொடியினால் கரும்பு, பானை, சூரியன் ஆகியவற்றைக் கோலமாக வரைவார்கள். மற்ற நாள்களில் மலர், சங்கு, மீன், மயில், தேர், முக்கோணம், நாற்கோணம், பாவை விளக்கு, கோவில் முதலியவை கோலங்களாக வரையப்படுகின்றன.

கோலங்கள் மங்கலக் குறிப்பை உணர்த்துபவையாகக் கருதப்படுகின்றன. இறந்தவர் வீட்டில் 16 நாள்களுக்குக் கோலம் இடப்படுவதில்லை. பெரிய வீடு கட்டுபவர்கள் பல வண்ணங்கள் கலந்த கோலங்களை நிரந்தரமாக அமைத்திடுவார்கள். இக்கோலங்களை ஓவியரே அமைப்பார். விநாயகர் சதுர்த்தி, கண்ணன் பிறப்பு, ராமன் பிறப்பு ஆகிய திருவிழாக் காலங்களில் சிறிய பிள்ளைகளின் கால்கள் தெருவிலிருந்து வழிபாட்டு அறையை நோக்கி நடந்து வருவதுபோல் கோலமிடுவார்கள்.

மராட்டிய மாநிலத்தில் இடப்படும் வண்ணக் கோலங்களுக்கு `ரங்கோலி’ என்று பெயர். இது வண்ணப் பொடிகளால் இடப்படும் கோலமாகும். தற்போது பெரும்பாலும் பண்டிகைகளின்போது இவ்வகையான கோலங்களே அதிகம் இடம்பெறுகின்றன.


சிங்கப்பூரில் கோலங்கள்

சிங்கப்பூரில் பெரும்பாலும் கோலங்கள் தீபாவளி, பொங்கல், வருடப் பிறப்பு, திருமணங்கள், கோவில் விழாக்கள் போன்றவற்றின்போது இடப்படுகின்றன. மேலும், கோலக்கலையை வளர்ப்பதற்காகப் பள்ளிகளில் கோலமிடும் போட்டி மாணவர்களிடையே நடத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், மக்களிடையே கோலக்கலையை வளர்ப்பதற்காகச் சமூக மன்றங்கள், தமிழ்க் கலாசார மன்றங்கள் போன்றவை கோலப்போட்டியை நடத்துகின்றன.

a9.9 p2.jpg

திருவரங்கத்தில் பிறந்தவரான திருமதி விஜயா மோகன் என்பவர் 2800 சதுர அடியில் 7 மணிநேரம் கோலமிட்டுக் கின்னஸ் சாதனை படைத்துச் சிங்கப்பூர்க்குப் பெருமை சேர்த்துள்ளார். இவர் இதுவரை பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கோலங்களை வரைந்துள்ளார். இவர் ‘யு.எஸ், மொரிஷியஸ். ஆஸ்திரேலியா, அபு தாபி, நியு யார்க், மியன்மார் போன்ற நாடுகளில் கோலத்தைப் பற்றிய கண்காட்சியைக் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தியுள்ளார்

 

பள்ளிகளில் இன நல்லிணக்க நாளின்போது கோலம்பற்றிய தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ளத் தமிழாசிரியர்கள் உதவுகிறார்கள். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கோலமிடும் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் பங்கேற்பார்கள். கோலமிடுதல் என்பது தமிழர் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று என்பதால், அதனை அடுத்தடுத்த தலைமுறையினரும் வாழ்வியலின் அங்கமாகக் கடைப்பிடிக்க, இளமைமுதல் கோலமிடுதல் என்னும்  பண்பாட்டு நடவடிக்கையில் அவர்களை ஈடுபடுத்துவது சிறப்பு. 

 

துணைநூல்கள்

[1]   சரோஜா, வே. (2004). தமிழர் பண்பாட்டில் கோலங்கள். (தொகுப்பாசிரியர்) சக்திவேல், சு. (2004). தமிழர் பண்பாட்டில் கோலங்கள். சிதம்பரம்:

        மெய்யப்பன் பதிப்பகம்.

 

[2]   சக்திவேல், சு. (2004). தமிழர் பண்பாட்டில் கோலங்கள். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.

 

[3]   தாயம்மாள், அ. (2004). கோலம் – ஓர் ஆய்வு. (தொகுப்பாசிரியர்) சக்திவேல், சு. (2004). தமிழர் பண்பாட்டில் கோலங்கள். சிதம்பரம்:

       மெய்யப்பன் பதிப்பகம்.

 

[4]  சம்பத் கோரி சர்மா (2004). கோலம் – தோற்றமும் வளர்ச்சியும். (தொகுப்பாசிரியர்) சக்திவேல், சு. (2004). தமிழர் பண்பாட்டில் கோலங்கள்.

      சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.

                   

[5]   வாழ்வியற் களஞ்சியம், தொகுதி 8, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, மறுபதிப்பு 2009.