top of page
Final.png

ஆன்மநேய ஒருமைப்பாடு

மனிதரிடையே உள்ள இனம், மொழி, சமயம் முதலிய வேற்றுமை உணர்வின்  காரணமாக உலகில் ஏற்படும் இன்னல்களும் துயரங்களும் அவலங்களும் பற்பல. உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் சமநோக்கோடு காணாதவரையிலும், வேற்றுமைகளின் விளைவால் விரிசல்களும் போர்களும் கலவரங்களும் இருக்கவே செய்கின்றன. இந்த உலகை அன்புமயமாக்குவது எப்படி? அன்புவயப்பட்ட மனித உள்ளங்களுக்கு மட்டுமே உலகை அன்புநிறைந்த வாழ்விடமாக மாற்றியமைக்க இயலும். மனிதன் சகமனிதனிடம் காட்டும் அன்பை மனிதநேயத்திற்குள் அடக்கிவிடலாம். மனித உயிர்களுக்கும் அப்பால், தாவரங்கள், விலங்குகள், பட்சிகள் முதலியவற்றை உள்ளத்து அன்பினாலும் கருணையாலும் கண்ணுறும்போது அதனை ஆன்மநேயம் என்று சொல்கிறோம்.  

அன்றைய தமிழர்கள் ஆன்மநேயக் கொள்கையை வாழ்வில் கடைப்பிடித்து வந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர், புறாவுக்குத் தம் தசையை அளித்த சிபிச் சக்கரவர்த்தி, மயிலுக்குப் போர்வை அளித்த பேகன், முல்லைக்குத் தேர் அளித்த பாரி போன்றோரைக் குறிப்பிடலாம். சிதம்பரம் இராமலிங்க அடிகளாரின் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்,’ என்னும் கருணைக் குரல் இதற்குத் தக்க சான்று. ஓரரறிவுகொண்ட பயிரையும் ஓர் உயிரெனக் கருதி, அதன் துன்பத்தையும் கண்டு மனம் நெகிழ்வதே ஆன்மநேயமாகும். இத்தகு குணத்தை வெளிப்படுத்துபவரை ஆன்மநேயமிக்கவர் என அழைப்பார்கள். சுருங்கக்கூறின், உயிர்களுக்கிடையே பாகுபாடு கருதாமல் அனைத்து உயிர்களின்மீதும் இரக்கமும் தயையையும் காட்டுவது ஆன்மநேயத்தின் கொள்கையாகும்[1].

திருவள்ளுவரும் வள்ளலாரும்: ஆன்மநேயச் சிந்தனைகள்  

சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, திருவள்ளுவர் ஆன்மநேயத்தைத் தம் குறட்பாக்கள்வழி வலியுறுத்தியுள்ளார்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் (குறள் 972)

 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

 

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)

a3 p1.jpg

வள்ளுவம் உயிர்களைச் சமநோக்கோடு அணுகும் போக்கினை மேற்கண்ட குறட்பாக்கள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, திருவள்ளுவர் புலாலுண்ணுதலை மனித சமுதாயத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்னும் நோக்கில் பாடியிருந்தாலும், அவரது பாக்கள் பெரும்பாலும் மெய்யுணர்வுபெற விரும்பியவர்களுக்கே அமைந்துள்ளது என்பது ம பொ சிவஞானத்தின்  கருத்தாகும்.

 

வள்ளலார்  என்று சுருக்கமாகப் போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகளார், 19ஆம் நூற்றாண்டில் தோன்றியவர். உயிரிரக்கக் கொள்கைகளை அவர் வகுத்தளித்த நான்கு ஒழுக்கநெறிகளுள் மூன்றாவது நெறியாக அமைத்து விளக்கினார். அவை பின்வருவன: இந்திரிய ஒழுக்கம் (ஐம்புலன்களின் ஒடுக்கம்), கரண ஒழுக்கம் (மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றின் ஒடுக்கம்), ஜீவகாருண்ய ஒழுக்கம் (அனைத்து உயிர்களையும் சமமாகக் கருதி அவற்றின்பால் கருணைகொள்ளுதல்), ஆன்ம ஒழுக்கம் (அனைத்து உயிருள்ளும் மறைந்திருந்து இயக்கும் தனித்தலைவனாக ஆன்மா இருத்தலை உணர்தல்). இந்திரிய ஒழுக்கமும் கரண ஒழுக்கமும் வாய்க்கப் பெற்றவர்க்கு அடுத்துவரும் இரண்டு ஒழுக்கங்களும் எளிதில் கைகூடும் என்று அவர் உரைத்தார்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டை ஒரு தலையாய இயக்கமாக அறிமுகஞ்செய்த பெருமை வள்ளலாரையே சாரும். உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் மனிதநேயத்தைப் பெருமளவில் வலியுறுத்தியுள்ளன. எனவே, அவர் எல்லாச் சமயங்களிலும் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த நன்னெறிகளையும் விழுமியங்களையும் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து, அனைத்து மனிதர்களுக்கும் வழிகாட்டும் பொது வாழ்வியல் நெறியை வகுத்து, அதனைத் தாமும் கடைப்பிடித்து, பிறர்க்கும் போதித்தார். இதன் விளைவால் ஏற்பட்டதே அவர் நிறுவிய சமரச சுத்த சன்மார்க்க சங்கமாகும். இச்சங்கத்தின் அடிப்படை நோக்கம் உலகை நல்வழிப்படுத்துவற்காகும். “சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம் ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை” என்று அவரே கூறுகிறார்[2].   

இரக்கம் என்பது சொல்லளவில் மட்டும் நில்லாமல் செயலளவிலும் வெளிப்படுத்தப்படவேண்டும். அப்போதுதான் நாம் ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்குள் இயங்க முடியும். அதற்கு முதலில், எல்லா உயிர்களிடத்தும் ஆன்மா உண்டு என்றும் அதனை ஆறறிவுகொண்ட மனிதர்கள் புரிந்துகொண்டு நேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வள்ளலார் வலியுறுத்தினார். இத்தகு உயர்ந்த வாழ்வியல்முறை, மனிதர்கள் எதிர்கொள்ளும் அனைத்துத் துன்பங்களையும் கடப்பதற்கான வழிமுறையாகப் பயன்படும்  என்பதை வள்ளலார் திடமாக நம்பினார் [3].

மனிதநேயம் முதல் ஆன்மநேயம்வரை

மனிதநேயம் என்னும் வட்டத்தையும் விடப் பெரியது ஆன்மநேயம். மனிதநேயத்தை வளர்த்துக்கொள்ளாவிட்டால் ஆன்மநேயத்தை வெளிப்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, முதலில் மனிதநேயத்தினை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. வள்ளலார் இனம், மொழி, சமயம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து, மனிதர்கள் ஒருவரோடொருவர் நட்புக்கொள்ள வேண்டும் என்று கருதக் காரணம் சமய, சாதி என்னும் பாகுபாடுகளில் புரளும் மனிதரைக் கண்டு அவர் உள்ளம் வாடியதாலாகும். பரந்த, விரிந்த பார்வையோடு உலகிலுள்ள அனைவரிடத்திலும் கருணையோடு அணுக வேண்டும். அதுவே உலகின் சமாதானத்திற்கும் மனித இனத்தின் நல்வாழ்வுக்கும் அவசியம் என நம்பினார். எம்மதமும் சம்மதம் என்னும் கொள்கையை அவர் கடைப்பிடித்தார்.

 

“எம்மத நிலையு நின்னருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன்

எல்லாஞ் சம்மத மாக்கிக் கொள்கின்றேன்”

 

என்று தம் அருட்பாவில் வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்.

வள்ளலார் காலத்தில், பஞ்சத்தின் கொடுமையால் மக்கள் பசியாலும் பிணியாலும் அவதியுற்றனர். பசித்தோர்க்கு உணவிட அவர் சத்திய தருமச்சாலையை நிறுவினார். மணிமேகலை என்னும் காப்பியத்தில் காப்பியத் தலைவி மணிமேகலை, அமுதசுரபியினைக் கொண்டு பசித்தோர்க்கு அமுதிட்டதுபோல், அடிகளார் 19ஆம் நூற்றாண்டில் தோன்றி, ஏழை எளியவர்களுக்கு அணையா அடுப்பினை ஏற்றிவைத்து அமுது வழங்கினார். சாதி, சமய வேறுபாடில்லாமல் அனைத்து ஏழை மக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. அவர் வடலூரில் உள்ள சத்திய ஞானசபையில் உள்ள தர்மசாலையில் ஏற்றிவைத்த அணையா அடுப்பு இன்றளவும் மக்களுக்கு அன்னதானப் பணியைச் செய்துகொண்டு வருகிறது.       

உயிர்களிடத்து எவ்விதப் பேதமுமின்றி, அனைத்து உயிர்களையும் தம்முயிரெனக் கருதி, அவற்றின்மீது இரக்கம் காட்டி, அவற்றுக்குச் சம உரிமை அளித்து, அவற்றை மதித்து நடப்பதன் மூலம் இன்புறுகின்ற மனிதனின் உள்ளமே இறைவனது இருப்பிடமாகும் என்பது அவர்தம் கூற்றாகும் [2]. இப்பேர்ப்பட்ட உயர்சிந்தனையைத் தழுவியவர், பிறரிடத்தில் உயர்வுதாழ்வு பாராட்டாமல், சமவுணர்வோடும் உரிமைகளோடும் பிறரிடத்தில் பழகி நட்புக்கொள்ள இயன்றவராக இருப்பார். மேலும், பிறர்க்கு நேரும் இடையூறுகளைப் புரிந்தும் உணர்ந்தும் செயல்படுவார். இக்கூற்றைத் தம் வாழ்க்கையில் முழுமையாகப் பின்பற்றியவர், வள்ளலார். “எளியவரை வலி யாரடித்த போதையோ என் மனம் கலங்கிய கலக்கம்,” என்று தொடங்கும் வள்ளலாரின் பாடலடி, எளியவர் படும் துயரத்தைக் கண்டபோதெல்லாம் தமக்கு ஏற்பட்ட மனத்துயரை வெளிக்காட்டுகிறது.

இத்தகு தாக்கத்தினால் அவர் நம்பிப் போதித்த கொள்கைகள் மேலும் வேரூன்றி நிற்கின்றன. இக்கொள்கையே மனிதன் தனக்கென மட்டும் வாழ்க்கையை வாழ்ந்திடாமல், பிறர்க்காகவும் வாழ்ந்திடுவது முழுமைபெற்ற வாழ்க்கையாகும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

போர் ஒழிந்து அமைதிநிலை

உலகில் நிலவிவரும் போரின் சாயலை மாற்றிட ஆன்மநேயம் பெரிதும் உதவும் என்பதை வள்ளலார் உறுதியாக நம்பினார். மேலும், போரினால் உண்டான உயிர்ச் சேதங்களைக் கேள்வியுற்ற போதெல்லாம் மனம் நொந்தார். இவரின் ஆழ்ந்த துயரத்தை விளக்குமாறு இப்பாடல் வள்ளலாரின் இன்னலை எடுத்துரைக்கிறது:

 

மறைமுடி வயங்கு மொருதனித் தலைமை

வள்ளலே யுலகர சாள்வோர்

உறையுறு வாள்கொண் டொருவரை யொருவர்

உயிரறச் செய்தன ரெனவே

தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாந்

தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்

இறையு மிவ்வுலகிற் கொலையெனி லெந்தாய்

என்னுள நடுங்குவ தியல்பே

(20, பிள்ளைப் பெருவிண்ணப்பம் – திருச்சிற்றம்பலம், 6ஆம் திருவருட்பா)

மனிதர்கள் அன்பால் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று வள்ளலார் பறைசாற்றினார். மேலும், உலக ஆட்சி மனிதநேயத்தைத் தழுவியே அமைக்கப்படுதல் அவசியம் என்பதையும் அவர் தம் பாடலின்வழி வலியுறுத்தினார்.

வள்ளலாரின் பத்து நிலைகள்

வள்ளலார், மனிதன் சமய வேறுபாடின்றிப் பொதுவான அறக்கருத்துகளையும் மனித வாழ்க்கைக்குத் தேவையான வழிமுறைகளையும் அறிந்திடவும் பின்பற்றிடவும் பத்து நிலைகளை மொழிந்தார். அவற்றுள் முதல் எட்டு நிலைகள் புற வாழ்வில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றன.

.

அவை பின்வருவன:

  • நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

  • தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சுகமாக வாழவேண்டும் என்று எண்ண வேண்டும்.

  • உலகில் உள்ள எல்லாரும் இன்பமாய் வாழவேண்டும் என நினைத்தல் வேண்டும்.

  • மனிதனைவிடக் குறைந்த அறிவுடைய விலங்குகள்மீதும் கருணை காட்ட வேண்டும்.

  • பறவை, ஊர்வன என அனைத்தையும் நேசிக்க வேண்டும்.

  • புழு, மீன் ஆகியவற்றிடம்கூட இரக்கம் காட்ட வேண்டும்.

  • ஓரறிவு உயிர்கள் வாடினால்கூட நாம் வாட வேண்டும்.

  • எல்லா உயிர்களையும் தம்முயிர் என நினைத்துப் பழக வேண்டும்.

அடுத்த இரண்டு நிலைகள் இறைவழிபாட்டைச் சார்ந்தவை ஆகும்.

  • எல்லா உயிர்களும் இறைவன் வாழும் நிலையங்கள் என்று எண்ணி அவற்றுக்குத் தொண்டு புரிந்து வாழ்வதே இறைவழிபாடு என்று நினைப்பது.

  • இறைவழிபாட்டின்படி வாழ்ந்து இறுதியில் கருணைமயமான இறைவனோடு இரண்டறக் கலந்து மரணமில்லாத பெருவாழ்வு பெறுவது.

 

இவ்விரண்டையும் நோக்கும்போது, இவை எந்தச் சமயத்தையும் சார்ந்தவை அல்ல என்பது புலப்படுகிறது. ஆன்மநேய ஒருமைபாட்டிற்குப் புற வாழ்க்கை வழிமுறைகளும் அதனோடு சேர்ந்த இறைவழிபாட்டிற்கான வழிமுறைகளும் முக்கியம் என்பதை வள்ளலார் இந்தப் பத்து நிலைகளின்வழி வெளிக்கொணர்கிறார். இவற்றோடு சேர்ந்து அவர் ஆன்மநேயத்தின் பத்து நெறிகளையும் முன்மொழிந்தார்.

 

வள்ளலாரின் பத்து நெறிகள்

வள்ளலார் முன்மொழிந்த அந்தப் பத்து நெறிகள்:

  • கடவுள் ஒருவரே, அவர் அருட்பெரும் ஜோதிமயமானவர்.

  • மக்களிடம் ஜாதி – சமய வேறுபாடு கூடாது.

  • மாமிசம் உண்பதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

  • ஏழைகளின் பசியைப் போக்க வேண்டும்.

  • ஜீவகாருண்யம்தான் அன்பு வடிவமான ஆண்டவனை அடைய சுலபமான வழியாகும்.

  • உயிர்கள் யாவும் சமமானவை.

  • அவற்றை அரவணைக்கும் ஆன்மநேய ஒருமைப்பாடு எல்லாரிடமும் வர வேண்டும்.

  • தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுக்கக் கூடாது.

  • உடலும் உள்ளமும் இறைவன் வாழும் ஆலயங்களாகும். இறந்தவர்களைத் தகனம் செய்யாமல் புதைக்க வேண்டும்.

  • உண்மையான அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண வேண்டும்.

 

வள்ளலாரின் பத்து நிலைகளும் பத்து நெறிகளும் ஆன்மநேயத்தின் ஒருமைப்பாட்டுரிமையையும் அதனைச் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் மனிதனுக்கு உணர்த்தும் வகையில் வகுக்கப்பட்டுள்ளன.

 

அன்று வள்ளலார் பறைசாற்றிய ஆன்மநேயத்தின் கொள்கைகள் இன்றும் நம்முடைய சமுதாயத்திற்குத் துணைபுரிகின்றன. மேலும், மனிதாபிமானம் – சீர்திருத்தம் ஆகியவற்றிற்கு வழிகாட்டியாகத் திகழ்கின்ற வள்ளலார், மனிதன் பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்திட ஆன்மநேயத்தின் ஒருமைப்பாடு இன்றியமையாதது என்று உறுதியாக நம்பினார். தீவிரவாதம், போர் என அல்லல்படும் இன்றைய உலகுக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டுக் கல்வி எல்லா உயிர்களையும் மதித்து இரக்கம் காட்டி ஒற்றுமையாக வாழ்வதன் அவசியத்தைப் பறைசாற்றுகிறது. வள்ளலார் முற்சிந்தனை நோக்குயுடையவராக இருந்தபடியால் அவரால் உலக மக்களின் ஒருமைப்பாட்டிற்கான வழிமுறைகளை அன்றே முன்மொழிந்திட முடிந்தது. 

துணைநூல்கள்

[1]     சேதுப்பிள்ளை, ரா. பி. (2012). தமிழ் இன்பம். சென்னை: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்.

[2]     சிவஞானம், ம. பொ. (2013). வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு. சென்னை: கங்கை புத்தக நிலையம்.  

[3]    வானமாமலை. நா. எம். ஏ., எல். டி. (1966). தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்). சென்னை: நியூ செஞ்சு புக் ஹவுஸ்

         பிரைவேட் லிமிடெட்.

Iyal 1 Chap 1 references
bottom of page