top of page
Final.png

அறம், பொருள், இன்பம், வீடு

காலந்தோறும் பல்வேறு மக்கள் தங்களுக்கு ஏற்புடைய வாழ்க்கைத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் வகுத்துக்கொண்டு கடைப்பிடித்து வருவதைக் காண்கிறோம். அவ்வகையில், பழந்தமிழர்களும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு இட்டுச்செல்லும் செந்நெறியை வகுத்துள்ளனர். அவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை உறுதிப்பொருள்களாகக் கருதிப் போற்றினர். மானிட வாழ்க்கை முழுமைபெற வேண்டுமானால், இவ்வுறுதிப்பொருள்கள் அடிப்படையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்று அவர்கள் நம்பினர். வாழ்க்கையைச் சீரும் சிறப்புமாய் வாழத் தேவைப்படும் நன்னெறிகளையும் நடைமுறைகளையும் வரையறுப்பதன் மூலம், தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் விதத்தில் உறுதிப்பொருள்களைத் தமிழர்கள் வகுத்துள்ளனர்.

 

அறம்

அறம் என்னும் சொல்லை அறு + அம் என்று பிரிப்பார்கள். அச்சொல் ‘அறு’ என்னும் மூலத்திலிருந்து வந்தது என்பார், மறைமலை அடிகள். அதாவது, “ஒருவருடைய நினைவு, சொற் செயல்களின் தீமையை அறுப்பதே அறம்” என்று குறிப்பிட்டுள்ளார்[1]. தவிர்க்கப்பட வேண்டியவற்றை வாழ்க்கையிலிருந்து அறுக்கப்படுவதை நாம் அறம் என்போம். அறு என்னும் சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, துண்டி, வேறுபடுத்து என்று பல விளக்கங்கள் உள்ளன[2]. உண்டாக்கு, உருவாக்கு என்னும் பொருள்களிலும் அச்சொல் வழங்கப்படுகிறது[3]. எனவே, அறு என்னும் சொல்லே அறம் என்னும் சொல்லாகத் திரிகிறது. அதாவது, “ஒன்றன் இயல்பினை அறுதியிட்டு அறிவுறுத்தி நல்லாற்றுப்படுத்தலாக அமைதலின் அறமாயிற்று” என்று சொற்பொருள் கொள்ளலாம்[4].

 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற (குறள் 34)

அறத்தை வரையறுக்க முனைந்த திருவள்ளுவர், ஒருவர் தம் மனத்தளவில்  குற்றமற்றவராக இருப்பது அவசியம் என்றும் அதுவே அறம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை என மேற்கண்ட குறள், அறம் குறித்து விளக்குகிறது. மற்றொரு குறளில்,

 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் (குறள் 35)

Aram_P 1.1.jpg

மனித வாழ்வில் அறம் ஓர் இன்றியமையாத பங்கை வகிக்கிறது. மாட்டு வண்டிக்கு அச்சாணி எவ்வளவு முக்கியமோ, அதேபோல அறம் ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்வுக்கு அச்சாணியாக விளங்குகிறது. இதனைக் குழந்தைகளுக்கும் உணர்த்தும் பொருட்டு ஔவையும் தாம் இயற்றிய ஆத்திசூடி நூலில் அறம்செய விரும்பு என்று அறத்தை வலியுறுத்தியுள்ளார்.  

 

சான்றோர் மொழிந்த வார்த்தையான ஒழுக்கம் என்பது ஒரு தனிமனிதனின் நடத்தையால் மட்டும் வெளிப்படுவதில்லை. அனைத்துச் சமூகத்தினராலும் ஏகமனத்தோடு ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நற்பண்புகளின் தொகுப்பே ஒழுக்கமாகும்[5].

 

மனிதன் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஒழுக்கம் பெருந்துணையாக இருக்கிறது. ஒழுக்கமில்லாத விஷயங்களைக் கேட்டல், பார்த்தல், பேசுதல், உணர்தல் ஆகியவற்றை மனிதர்களுக்கிடையே தடுக்க, ஒழுக்கம் என்பது தடுப்பூசியாகத் திகழ்கிறது. அறம் தீமையை அறுக்கும் என்பதில் அசையா நம்பிக்கை கொண்டனர் பண்டைத் தமிழர்கள். வாழ்க்கையில் நல்லனவற்றை உயிர்களுக்குச் செய்வதன்மூலம் ஒருவர்தம் ஊழ்வினையின் தாக்கத்தை அறுக்கவும் வலுவிழக்கவும் செய்ய முடியும் என்பது தமிழர் கண்ட முடிபு. எனவே, அறம் என்பது தனித்தொரு செயலன்று; அதுவே வாழ்வாகும். பின்வரும் தன்மைகள் அறமொழிகளுக்கு உண்டு[6]:

 

  • மனவெழுச்சி தரும் மொழிகளாக அமைதல்

  • கட்டளை மொழிகளாக அமைதல்

  • விரித்துரைக்கும் மொழிகளாக அமைதல்

 

அறத்தை அடிப்படையில் இல்லறம், துறவறம் என்று பகுப்பார்கள்.

 

இல்லறம்

அறம் என்பதன் ஒரு பகுதி இல்லறம்.

 

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை (குறள் 47)

அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன், வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் என்பது இக்குறளின் பொருள். சங்ககாலத்துத் தமிழர்கள் மனிதன் ஒழுக்கநெறிகளுடன் வாழவேண்டும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். ஆகையால், நெறிகளும் விழுமியங்களும் அவர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்தன. இல்லற வாழ்க்கையில் மனைவி மக்களுக்கு இல்வாழ்வான் அன்போடு செய்யவேண்டிய கடமைகள் குறித்துப் பண்டைக்காலத்துச் சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன.

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

 

இல்லறத்தில் வாழ்பவன், பிள்ளைகள், பெற்றோர், உறவினர் ஆகிய மூவர்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான் என்பதே இக்குறளின் பொருளாகும். தன்னலம் வாய்ந்து, சோற்றுப்பிண்டமாகக் கருதப்படும் தனிமனிதன் ஒருவனைச் செம்மைப்படுத்தும் தன்மை இல்வாழ்க்கைக்கு உண்டு எனப் பண்டைய தமிழர்கள் நம்பினர்[7]. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறளில், இல்வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் நன்மையையும் விளக்கும்வகையில் இல்லறவியல் என்னும் அதிகாரத்தில் குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன. ஔவையும் இல்லறத்தின் சிறப்பைச் சுட்டிக்காட்ட இல்லறமல்லது நல்லறமன்று என்று இயம்பியுள்ளார்.

 

இல்லறத்தில் இன்பங்களை நுகர்ந்து வாழ்பவர் ஒருவகையினர்; இல்லறத்தின்வழி வாழ்வின் உண்மைகளைக் கண்டு தெளிய வேண்டும் என்பதன் அடிப்படையில் வாழ்பவர் மற்றொரு வகையினர்[8].

 

துறவறம்

இல்லறத்தின் தொடர்ச்சியே துறவறம் எனத் திருவள்ளுவம் உரைக்கிறது[2]. “ஒரு குடும்பம் விடுவது துறவன்று; உலக முழுதையும் தன் குடும்பமாக அணைப்பதுவே துறவாகும்” என்பார், முனைவர் வ சுப மாணிக்கனார்[9]. ‘யான்’ என்னும் அகப்பற்றையும் ‘எனது’ என்னும் புறப்பற்றையும் விட்டுவிடுவது துறவு என விளக்கியுள்ளார், திருவள்ளுவர். இந்த மயக்கத்திலிருந்து முற்றிலும் விடுபடுவதே துறவுநிலை. துறவிகள் எல்லா உயிர்களிடத்தும் இரங்கி வாழும் சான்றாண்மைப் பண்பை வெளிப்படுத்துவார்கள்[10]. அருளுடைமை, நிலையாமை, தவம், கொல்லாமை, மெய்யுணர்தல், நீத்தார் பெருமை ஆகியன துறவு வாழ்க்கைக்கு இன்றியமையாதவை[11]. இல்வாழ்க்கையே துறவுக்குரிய அடித்தளமாகும். “தன்னை முழுவதுமாக விடுவித்துக்கொண்டு பரந்துபட்ட விரிந்த சமுதாய மக்களுக்காகத் தன் அறிவு, உடல், ஆற்றலை அர்ப்பணித்துக்கொண்டு அருளுணர்வோடு செய்யும் கடமை துறவு” என்று விளக்கப்படுகிறது[12]. அவ்வகையில் பார்க்கும்போது, இல்லறமே துறவத்திற்குரிய பயிற்சியாகக் கருதப்படுகிறது. இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் உள்ள பொதுநியதி யாதெனில் அறவாழ்வு வாழ்வதாகும்.

சுருங்கக்கூறின், இல்வாழ்வானுக்கு வீடே உலகு; துறவிக்கோ உலகே வீடு. துறவி செய்ய வேண்டியதென்ன?

 

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு (குறள் 343)

 

ஐம்புலன்களின் ஆசைகளை வெல்லுதல் வேண்டும். அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒருசேர விடவேண்டும் என்பதே இக்குறளின் பொருளாகும். மனிதனிடையே பேராசையைக் கட்டுப்படுத்தும் பாடத்தைத் திருவள்ளுவர் அக்காலத்திலேயே மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். அன்றைய காலத்திலேயே அறநெறிகளை மக்கள் கடைப்பிடிக்கவேண்டிய அவசியம் மேலோங்கியிருந்தது.

 

திருவள்ளுவர் மிகத் தெளிவாக அறத்தால் வருவதே இன்பம் என்பதை வலியுறுத்துகிறார்:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல (குறள் 39)

 

இக்குறளில் திருவள்ளுவர், “வருவதே” என்று ஏகாரத்தைச் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அறத்திற்குப் புறம்பான எந்த இன்பமும் மனிதனுக்குத் தீங்கை விளைவிக்கும். எடுத்துக்காட்டிற்கு, அறத்தை இயற்கையின் இயக்கமாகத் தமிழர்கள் கண்டனர். அதனால், ஊழ்வினை என்னும் இயற்கை விதியை அறவிதியாக நம்பினர். திருவள்ளுவர், அறத்துப்பாலில் ஊழியல் என்னும் பகுதியில் ஊழ் என்னும் அதிகாரத்தை வகுத்துள்ளார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின்வழி உணர்த்தும் முப்பெரும் உண்மைகள் அதற்குச் சான்று:

 

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் (சிலப்பதிகாரம், பதிகம்: 55)

 

பொருள்

சிறப்புடை மரபில் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல...

(புறநானூறு - கோவூர்கிழார் 31)

 

இச்சங்கப் பாடல், பொருளும் இன்பமும் அறத்தின்வழி அமையவேண்டும் என்று வலியுறுத்தித் தொடங்குகிறது. அறத்தினால் ஈட்டப்படும் பொருள் மீண்டும் அறத்திற்கே பயன்பட வேண்டும். செல்வம் நிலையில்லாதது என்று தமிழ் அருளார்கள் பலரும் ஒருமித்துக் குறிப்பிட்டுள்ளனர். அவர்தம் சிந்தனை இவ்வாறு இருப்பினும், செல்வம் ஈட்டத் தேவையில்லை என்று எங்கும் குறிப்பிடவில்லை. செல்வம் என்பது ஒருவரிடத்தில் நிலைத்து நிற்காது. இத்தன்மை உணர்ந்து, ஈட்டிய செல்வம் நம்மைவிட்டுக் கடந்துசெல்வதற்கு முன், அதனை அறச்செயல்களுக்குப் பயன்படுத்திவிடுமாறு வலியுறுத்தினர்.       

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு (குறள் 247)

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாததுபோல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம் என்பது இக்குறள் உணர்த்தும் பொருள். உயிரினங்களிடத்தில் அன்பு செலுத்தும் உயர்ந்த அறப்பண்பை (உயிரிரக்கம்) அக்காலத்திலேயே தமிழ் முன்னோர்கள் வலியுறுத்தினர். மனிதன் ஆசையைக் கட்டுப்படுத்த இயலாமல், பொருளைத் திரட்டிக்கொண்டு சுயநலமாக மட்டும் வாழ்ந்தால் அந்தப் பொருள் பயனற்ற ஒன்றாகிவிடும்.

 

ஒருவர்தம் இறப்பின்போது தான் சேகரித்த பொருளும் அவர்க்குத் துணையாக வருவது சாத்தியமன்று. ஈட்டிய பொருளின் சிறுபங்கை இல்லாதவர்களுக்குத் தானம் செய்வதன் மூலம் ஒருவர் அருளைச் சேர்த்துக்கொள்ள முடியும் என்று பண்டைத் தமிழர்கள் நம்பினர். இங்குத் தானம் செய்த கைப்பொருளானது அருட்செல்வமாக மாற்றப்படுவது கவனிக்கத்தக்கது.

Aram_P 1.2.jpg

இன்பம்

இன்பத்தில் இருவகை உண்டு – ஒன்று சிற்றின்பம் (உலகியல்வழிப் பெறுவது), மற்றொன்று பேரின்பம் (திருவருள்வழிப் பெறுவது). சிற்றின்பம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கின்ற இன்பத்தைக் குறிக்கிறது. இது நிலையில்லாத் தன்மை கொண்டது. ஆனால், பேரின்பம் நீடித்த இன்பமாகக் கருதப்படுகிறது. இது நிலைத்தன்மை கொண்டமையால் பேரின்பம் எனப்படுகிறது. மனித உணர்ச்சிகளுள் இன்பம் துய்த்தல் முக்கியத்துவம் பெறுகிறது. மனிதன் வாழ்க்கையில் இன்பம் பெறுவதே வாழ்க்கையின் நோக்கமாகக் கருதுகிறான்.

தன்னுடைய கவலைகளை மறக்க மனிதன் இன்பத்தைத் தேடுகிறான். அதனால், மனிதன் வாழ்க்கையில் சுக துக்கங்களை அனுபவிக்கிறான். ஆனால், அவன் வேட்கைகொண்டு தேடிய இன்பங்கள் அனைத்தும் நிலைத்திருப்பதில்லை. நல்லனவற்றில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பது நல்லது. ஆனால், ஒழுக்கமற்ற காரியங்களில் ஈடுபட்டு இன்பம் பெறுவது என்பது  பாவங்களாகக் கருதப்பட்டது. அதனால்தான் தமிழ் முன்னோர்கள் பஞ்சமா பாதகங்கள் எனக் கருதப்படும் கள், களவு, காமம், கொலை, பொய் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.

திருக்குறளில் காமத்துப்பால், உயர்வும் சிறப்பும்மிக்க ஒரு பகுதியாகும். காமம் என்னும் சொல்லைத் தவறாகப் புரிந்துகொள்பவர் பலர் இருக்கவே செய்கின்றனர்.

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன்று இல் (குறள் 1202)

என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். ஓரறிவுமுதல் ஆறறிவுவரை உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உண்டாகும் இயற்கையான உணர்ச்சியே காமம். அது ஆழ்ந்த அன்பின் அடிப்படையில் உண்டாகும்.

திருவள்ளுவர் காமத்தைப் பொது இன்பம் என்று கூறாமல் அதை நிலை பேரின்பம் என்று கூறுகிறார். காமம் என்பது உயர்நிலை இன்பச் சொல்லாகும். காலப்போக்கில் காமத்துப்பால் இன்பத்துப்பாலாகிவிட்டது. காரணம், இன்பம் பொதுவானது; காமம் என்பது தம்பதியினரிடையே மட்டும் நிலவும் ஒருவகை அன்பாகக் கருதப்பட்டது. அதனால், இன்பம் என்னும் சொல்லாட்சி மூன்றாம் பாலில், இரண்டு இடங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இருப்பினும், பின்வரும் குறள்களில் இன்பத்துடன் காமமும் இடம்பெற்றுள்ளது[13].  

 இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

 துன்பம் அதனின் பெரிது (குறள் 1166)

 

காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது என்பதே இக்குறளின் பொருளாகும்.

 

வீடு

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப்பொருள்களுள் கடைசியாக அமைவது வீடு. இது அருள்நிலையில் கிட்டுவதாகும். அதாவது, இது உடல் அழிந்த பின்பு கிட்டும் பேரின்பமாகும். வீடுபேறு என்னும் உறுதிப்பொருள் திருக்குறளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பெறவில்லை. அதைத் திருவள்ளுவர் மறைமுகமாகச் சுட்டியுள்ளார். வீடு என்பது தனிமனிதனின் வசிப்பிடமாகும். தன் வசிப்பிடத்தில் அடியெடுத்து வைத்ததும், மன அமைதிகொள்ள மனிதன் விரும்புவது இயல்பு. அதுபோல் மனிதனின் உயிர்க்கும் வீடு ஒன்று உள்ளது என்று தமிழர்கள் நம்பினர். அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து நெறிப்பட வாழ்ந்தால், வீடுபேறு கிட்டும். கல்வியின் பயனும் இந்த வீடுபேற்றை அடைவதே என்பது தமிழர்கள் கண்ட முடிபு.

Aram_P 1.3.jpg

நாம் வசிப்பதற்கு உறைவிடமான வீடு தேவை; அதுபோல் மனிதனின் உடலைவிட்டுப் பிரிந்த உயிர்க்கு அடங்குவதற்கும் வீடு தேவை என்று தமிழர்கள் நம்பினர். இதனை இம்மை மறுமைக் கொள்கையால் விளைந்த நம்பிக்கையின் துணைகொண்டு புரிந்துகொள்ளலாம். அடுத்து, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப்பொருள்களைத் தன்னகத்தில் கொண்டிருந்தால் மட்டுமே காப்பியங்களைப் பெருங்காப்பியம் என்று தமிழர்கள் வகைப்படுத்தினர். இவற்றுள் ஒன்று குறைந்திருந்தாலும், அதனைச் சிறுகாப்பியம் என்று கருதினர்.

துணைநூல்கள்

[1]     மறைமலை அடிகள். (1997). வாழ்வும் வழிபாடும். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

[2]     திருநாவுக்கரசு, க. த. (2012-18). அறம். http://kuralthiran.com/Kural/Aram.aspx       

[3]     சாவித்திரி, இரா. (2017). அறநூல்கள் 1. தமிழ் இணையக் கல்விக்கழகம்.

           http://www.tamilvu.org/ta/courses-degree-c012-c0121-html-c012111-14464

[4]     கவிதாராணி, அ. (2013). அறமும் அறநெறிச் சிந்தனைகளும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

[5]     ராஹிணி, ஆர். (2016). ஒழுக்கம் என்றால் என்ன? (வாரமஞ்சரி - தினகரன்) 

[6]     கண்ணதாஸ், பெ. (2013). நட்டகல்லும் பேசுமோ: சித்தர் பாடல்கள் ஓர் அறிவியல் நோக்கு. சென்னை: தமிழினி.

[7]     திருநாவுக்கரசு, க. த. (2009). தமிழ்ப் பண்பாடு.

[8]     தங்கப்பா, ம. இலே. (2012). வள்ளுவர் காட்டும் தவமும் துறவும். இராமசாமி, இ.கி. (தொகுப்பாசிரியர்). திருக்குறளில் தவமும் துறவும். மதுரை:

         மீனாட்சி புத்தக நிலையம்.

[9]     இராசேந்திரன், தி. வெ. (2013). திருக்குறள்: ஒரு சமூகப் பார்வை. சென்னை: A. மாலதி.  

[10]   பாலசுப்பிரமணியன், கு. வெ. (2016). திருக்குறள் பேரொளி. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். 

[11]   இராமசாமி, இ. கி. (2012). வள்ளுவர் கண்ட தவமும் துறவும் – ஒரு புதுப்பார்வை. இராமசாமி. இ. கி. (தொகுப்பாசிரியர்). திருக்குறளில்                         தவமும் துறவும். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்,

[12]   சுப்பிரமணியன், மு. (2012). துறவறத்தின் வாயில் இல்லறமே. இராமசாமி. இ. கி. (தொகுப்பாசிரியர்). திருக்குறளில் தவமும் துறவும். மதுரை:

           மீனாட்சி புத்தக நிலையம்.

[13]   வாசுகி, ஜெ. கெ. (2013). வளமான இல்லறத்திற்கு வள்ளுவர் தரும் காமத்துப்பால்.

          http://www.valaitamil.com/valamaana-illaraththitku-valluvar-tharum-kamaththupaal_9558.html

bottom of page