top of page
Final.png

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்

நாட்டுப்புறவியல் என்னும் துறையில் வாய்மொழி (ஏட்டில் ஏறா) இலக்கியத்திற்கென்று சிறப்பிடம் உண்டு. அதில் நாட்டுப்புறக் கலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாட்டுப்புறக் கலைகளுள் பழங்காலந்தொட்டு மக்கள் அதிக ஈடுபாடு காட்டுவது விளையாட்டுகளாகும். மனிதனின் முதல் பொழுதுபோக்காக விளையாட்டுகள் தோன்றின. நாட்டுப்புறவியலின் ஒரு கூறாக நாட்டுப்புற விளையாட்டு உள்ளது. நாட்டுப்புற விளையாட்டுகள் மக்கள்தம் வாழ்க்கைச் சூழல், உணர்வுநிலை, உறவுநிலை, கற்பனை, விழுமியங்கள் முதலிய பல்வேறு கூறுகளைக் காட்டவல்லன. அதிலும் குறிப்பாக, நாட்டுப்புற விளையாட்டுகள் மக்களின் உடல் நலத்திற்கும் உள நலத்திற்கும் பெரும்பங்காற்றுகின்றன. அவை வெறும் பொழுதுபோக்கிற்கான நடவடிக்கைகள் மட்டுமே என்று கருதுவதற்கில்லை. மாறாக, சமூகத்தின் கட்டமைப்புக் கூறுகளைப் பிரதிபலிப்பவையாகவும் மனித ஆற்றலை வெளிப்படுத்துபவையாகவும் விளையாட்டுகள் விளங்குகின்றன[1].

ஆட்டம் (Play), போட்டி விளையாட்டு (Game), வன்மை விளையாட்டு (Sports), இன்பப் பொழுதுபோக்கு (Recreation) ஆகியனவற்றை விளையாட்டு என்னும் சொல் உணர்த்துகிறது [2]. விளையாட்டு என்பது வாழ்க்கைக்குப் பயிற்சியளிக்கும் களம் எனவும் அது விரும்புகிற ஆட்டம் எனவும் இன்பம் விளைவிக்கும் ஆட்டம் எனவும் விதிகளை விளைவித்துக்கொண்டு ஆடும் ஆட்டம் எனவும் கூறுவார்கள் [2]. ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியவர் என அனைவரும் நாட்டுப்புற விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாட்டுப்புற விளையாட்டுகள் விளையாட்டின் தன்மைக்கேற்பப் பின்வருமாறு பாகுபாடு செய்யப்பட்டுள்ளன:

Naatuppura Vilaiyaatukkal.png

நாட்டுப்புற விளையாட்டுகளில் காணப்படும் பாகுபாடு

1) பங்குகொள்வோர் அடிப்படையில்

தனிநபர் விளையாட்டு, இருவர் கலந்துகொள்ளும் விளையாட்டு, குழு விளையாட்டு எனப் பங்குபெறுவோர் முறையில் நாட்டுப்புற விளையாட்டுகளை மக்கள் பிரித்துள்ளனர். குழு விளையாட்டுகள் சிறுவர் சிறுமியரிடத்தில் மிகுந்து இருக்கக் காணலாம். இருபாலரும் கலந்துகொள்ளும் முரண் அமைந்த விளையாட்டுகள் எல்லாரும் பொதுவாக ஈடுபடக்கூடியதாக இருக்கும்[3]. எடுத்துக்காட்டுக்கு, சடுகுடு, பம்பரம், ஒண்ணான் இரண்டான் போன்ற விளையாட்டுகளைக் குறிப்பிடலாம்.

2) கால அடிப்படையில்

வேனிற் காலங்களில் புளியங்கொட்டை விளையாட்டுகள், கிட்டிப் புள், பச்சைக் குதிரை, பந்து, கபடி, காற்றாடி, திருடன்-போலீஸ், கண்ணாமூச்சி, எலியும் பூனையும், பூசணிக்காய் விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், பம்பரம், கும்மி, கோலாட்டம் போன்ற விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. மழைக்காலங்களில் பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஆடுபுலி ஆட்டம், சில்லுக் கோடு, கொழுக்கட்டை போன்றவை விளையாடப்படுவதைக் காணலாம்.

3) ஆடுகளம் அடிப்படையில்

அக விளையாட்டுகள் என்பன பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஒத்தையா? ரெட்டையா?, கரகர வண்டி, ஆடுபுலி ஆட்டம், கொழுக்கட்டை போன்றவையாகும். புற விளையாட்டுகள் பம்பரம், கிட்டிப் புள், கபடி, சில்லுக் கோடு, பந்து, காற்றாடி, திருடன்-போலீஸ், பச்சைக் குதிரை, கும்மி, கோலாட்டம் போன்றவையாகும்.

4) ஆட்டக் கருவிகள்

கிராமப்புறங்களில் விளையாடும் விளையாட்டுகள் மக்களின் எளிய வாழ்க்கைக்கு ஏற்றவையாக அமைந்துள்ளன. விளையாட்டுகளுக்குத் தேவையான ஆடுகருவிகளைக் காசு கொடுத்து மக்கள் வாங்குவதில்லை. அப்படித் தேவை ஏற்படும்போது மிகக் குறைந்த செலவில் செய்யப்பட்ட பொருள்களையே பயன்படுத்துகின்றனர். முற்காலத்தில் விளையாடுவதற்குரிய கருவிகளாக உடைந்த சட்டி பானைகள், தென்னங்குச்சிகள், பனங்கொட்டைகள், ஓட்டுத்துண்டு, கயிறு, கல், கம்பு முதலியவற்றைப் பயன்படுத்தினர்.

5) பால் அடிப்படையில் 

ஆடவர் விளையாட்டுகள் (பதினாறு வயதிற்குமேல்)

ஆண்கள் விளையாட்டுகளைப் புற விளையாட்டுகளாகவும் அக விளையாட்டுகளாகவும் பகுத்துள்ளனர். உடல்திறன் தொடர்பான விளையாட்டுகள் பெரும்பாலும் புற விளையாட்டுகளாகவே உள்ளன. இத்தகைய விளையாட்டுகளை மூவகைகளுள் காணலாம் [3].

  • உடல் திறனைப் பயன்படுத்தி வீரத்தினைப் புலப்படுத்தும்நிலை வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது. மனிதனுக்கும் விலங்குக்கும் இடையே நடைபெறும் போட்டி ஒருவகை விளையாட்டாகும். இத்தகைய விளையாட்டுகள் உயிரினைப் பணயம் வைத்துத் துணிச்சலுடன் விளையாடப்படுவதால் ‘வீர விளையாட்டு’ என்றழைக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டில் காளையை அடக்குதல் என்னும் முறையில் வீரம் புலப்படுத்தப்படுகிறது. உடல் வலிமைகொண்ட முரட்டுக் காளையுடன் மனிதன் மோதி வெற்றிகொள்கிறான். அடுத்து, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அமையும் போட்டி. ‘சிலம்ப விளையாட்டினையும்’ ‘புலி வேடத்தினையும்’ எடுத்துக்காட்டுகளாய்க் கூறலாம். இரண்டும் பயிற்சி தேவைப்படுகின்ற விளையாட்டுகளாக உள்ளன. பயிற்சி பெற்றவர்கள் தங்களுக்குள் யார் அதிகத் திறன் படைத்தவர் என்பதைச் சோதிப்பதற்காகப் போட்டி விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.

  • உடல் திறனுக்கு முதன்மை கொடுக்கும் வகையில் உடல்திறனை மையமாகக் கொண்டுள்ள விளையாட்டுகள் எழுந்துள்ளன.

 

  • சில விளையாட்டுகள் உடல் திறனை மையமாகக்கொண்டிருக்கவில்லை. எனினும், அதனைச் சார்ந்த நிலையில் உடல் திறனுடன் தொடர்புடையனவாக உள்ளன.

 

மகளிர் விளையாட்டுகள்

பெண்கள் விளையாட்டுகள் பெரும்பாலும் அக விளையாட்டுகளாக உள்ளன. இவர்கள் விளையாடும் விளையாட்டுகள் மனமகிழ்ச்சிக்காகவும் பொழுதுபோக்காகவும் அமைகின்றன.

1. சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள்

சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள், உடல்திறன் விளையாட்டுகள், மனத்தந்திர விளையாட்டுகள், வாய்ப்புநிலை விளையாட்டுகள் எனப்படும் [4].

2. பாடல் அடிப்படையில்

விளையாட்டுகளைப் பாடல் உள்ள விளையாட்டுகள், பாடலில்லா விளையாட்டுகள் எனப் பாகுபடுத்தியுள்ளனர். சடுகுடு, பூப்பறிக்க வருகிறோம், கழங்கு ஆட்டம், கண்ணாமூச்சி போன்ற சில விளையாட்டுகளில் பாடல்கள் இடம்பெற்றிருக்கும்.

நாட்டுப்புற விளையாட்டுகளும் விளையாட்டு முறைகளும்

கபடி

தமிழர்களின் முக்கிய விளையாட்டுகளுள் ஒன்றாகக் கபடி உள்ளது. கபடி விளையாட்டு இன்றளவும் கிராமப் புறங்களில் விளையாடப்படும் ஒன்றாக உள்ளது. சிங்கப்பூரில் பள்ளிகளுக்கிடையே தனியார் அமைப்பின் ஏற்பாடுகளால் கபடி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அண்மைய காலங்களில் இவ்விளையாட்டுப் பிரபலமடைந்து உள்ளது.

 

கபடி விளையாட்டில் ஒரு குழுவில் எழுவர் இருப்பார்கள். உபரி வீரர்கள் என்று ஐந்து விளையாட்டாளர்கள் இருப்பார்கள். இவர்கள் விளையாட்டின்போது களத்தில் உள்ள விளையாட்டாளர்களுக்குக் காயம் ஏற்படும்போதும் உடல்நலம் குன்றும்போதும் அவர்களுக்கு மாற்றாளர்களாகக் களம் இறங்குவார்கள்.

 

ஒரு குழுவினர் களம் இறங்கியதும், எதிரணியில் ஒருவர் மூச்சை அடக்கிப் பாடிக்கொண்டே எல்லைக் கோட்டினைத் தொட வர வேண்டும். கோட்டினைத் தொட்டுவிட்ட பின் வெளியேற வேண்டும். முடிந்தால் எதிரணி விளையாட்டாளர்களையும் தொட்டுவிட்டு வெளியேறலாம். குழுவினர் தம்மைத் தொட வரும் எதிரணி நபரைத் தமது எல்லைக்குள் வரும்போது லாவகமாகப் பிடிக்க வேண்டும். பாடிக்கொண்டே வருபவர் சில நகைச்சுவை ததும்பும் பாடல்களை மூச்சைப் பிடித்துப் பாடி வெளியேற முனைவார்கள்.

 

"நான்தான் உங்கப்பண்டா! நல்ல முத்து பேரன்டா!

தங்கப் பிரம்பெடுத்துத் தாண்டிக் குதிக்க வாரேண்டா!

வெள்ளிப் பிரம்பெடுத்து, விளையாட வாரேன்டா! [5]

கபடி, கபடி, கபடி...”

என்று மூச்சை அடக்கிப் பாடிக்கொண்டேவரும் எதிரணியினரை இழுத்துப் பிடிக்க முயல்வார்கள்.

 

இவ்வாறு இவ்விளையாட்டு மாறி மாறித் தொடரும். இறுதியில், வெற்றிபெற்ற குழு அறிவிக்கப்பட்டுப் பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்படும். இவ்விளையாட்டு, கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், தேசிய அளவிலும் உலக அளவிலும் நடத்தப்படுகின்றன. கபடி சிறந்த உடற்பயிற்சியாகவும் வீரத்தையும் விவேகத்தையும் கொடுப்பதாகவும் உள்ளது. இவ்விளையாட்டினால் உடலும் மனமும் உறுதிபெற முடியும்.

பல்லாங்குழி

இது பெண்களால் ஆடப்படும் விளையாட்டு. கேரளத்தில் இவ்விளையாட்டுப் ‘பல்லாங்குழி’ என்று அழைக்கப்படுகிறது. இது தெலுங்கில் “ஒமன கூடலு” என்றும் கர்நாடகத்தில் “சென்ன மனெ” என்றும் குறிப்பிடப்படுகிறது. துளு மக்களிடத்து ஜோடு பெர்க்கா, அரசாட்டம், சென்னே ஆட்டம் என்னும் மூவகைப் பல்லாங்குழி ஆட்டங்கள் காணப்படுகின்றன. இவ்விளையாட்டு, பஞ்சாப், ஒரிசா, மத்திய பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களிலும் பரவலாக விளையாடப்படுகிறது.

தரையில் அல்லது மரப்பலகையில் உள்ள 14 அல்லது 24 குழிகளுள் புளிய விதைகளை அல்லது சோழிகளை வைத்து விளையாடுவார்கள். ஒரு சமயத்தில் இருவர் விளையாடலாம். இது கணிதமுறைசார்ந்த விளையாட்டாகும். சிக்கலான இவ்விளையாட்டு, ‘செஸ்’ விளையாட்டுக்குச் சமமாகக் கருதப்படுகிறது.

 

ஆடுபுலி ஆட்டம்

ஆடு புலி ஆட்டம் என்பது கிராமப்புறங்களில் திண்ணையில் விளையாடக்கூடிய விளையாட்டு. சிறியவர்முதல் பெரியவர்வரை இதை விரும்பி விளையாடுவார்கள். இன்றும் இவ்விளையாட்டு வழக்கில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் ஆடு புலி ஆட்டம் விளையாட்டைப் பள்ளிகளில் தமிழ் மாணவர்களுக்குத் தமிழாசிரியர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர். இவ்விளையாட்டைத் தாய்மொழிகளுக்கான இருவார நடவடிக்கைகளின்போது மாணவர்கள்  விளையாடுவதைப் பள்ளிகளில் பார்க்க முடியும்.

 

முக்கோண வடிவும் அதற்கிடையில் நீள் சதுர வடிவும் வரையப்பட்டு இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது. அக்காலத்தில், தரையில் இந்தக் கட்டங்களை வரைந்து விளையாடினார்கள். ஆடு புலி ஆட்டம் விளையாடப் புளியங்கொட்டைகள், கற்கள் போன்றவை காய்களாகப் பயன்படுத்தலாம். ஆடு புலி ஆட்டத்தின் பெயர் உணர்த்துவதைப் போல் 3 புலிகளும் 15 ஆடுகளும் இந்த விளையாட்டில் காய்களாக இருக்கும். இரண்டு அணிகளையும் வித்தியாசப்படுத்தும் வகையில் காய்கள் அமைய வேண்டும். இருவர் பங்குகொள்ளும் இவ்விளையாட்டில் ஒருவர் ‘ஆடாகவும்’ இன்னொருவர் ‘புலியாகவும்’ இருக்க வேண்டும்.

 

காய் வைக்கக்கூடிய புள்ளிகள் 23 இருக்கும். ‘ஆடாக’ இருப்பவர் ஒரு காய் வைத்தால் ‘புலியாக’ இருப்பவர் ஒரு காய் வைக்க வேண்டும். தொடர்ந்து 3 முறைகள் வைத்தால் ‘புலியாக’ இருப்பவர்களுக்குக் காய்கள் வைக்க இயலாது. ‘ஆடாக’ இருப்பவர்க்கு 15 காய்கள் இருப்பதால் தொடர்ந்து காய்களை வைத்துக்கொண்டே வரலாம், ‘புலியாக’ இருப்பவர் காய்களை வைக்கவியலாது. ஆனால், காய்களை நகர்த்திக்கொண்டிருக்கலாம்.

 

இந்த விளையாட்டில் புலிகள் நகர்வதை முற்றுகையிட்டுத் தடுத்தால் ஆடு வெற்றி பெற்றதாகக் கருதப்படும். ஆடுகளைத் தின்றுவிட்டால், புலிகள் வென்றதாகக் கருதப்படும். புலியும் ஆடுகளும் சட்டங்களின் இணைப்புகளில் வைக்கப்பட வேண்டும்; கட்டத்துக்குள் வைக்கப்படுவதில்லை. புலிக்கு அருகில் ஆடு இருந்து அதற்கு அடுத்த கட்டம் காலியாக இருந்தால், புலி அங்கே தாவுவதன் மூலம் ஆட்டை விழுங்கும். இதைத் தடுக்க, புலிக்கு அருகில் இரண்டு ஆடுகள் இருந்தால் மட்டுமே புலியால் தாவ முடியாது. புலி முற்றுகையிடும்போது எத்தனை ஆடுகள் மீதம் உள்ளன என்பதைப் பொறுத்து ஆடுகள் அணிக்குப் புள்ளிகள் வழங்கப்படும். புலிகள் அனைத்து ஆடுகளையும் விழுங்கிவிட்டாலும் வெற்றிபெறும். புலிகளை முற்றுகையிட்டுத் தடுக்கப் போதுமான ஆடுகள் இல்லாவிட்டாலும் புலிகளின் அணி வெல்லும் [3].

 

பம்பரம்

இவ்விளையாட்டில் கலந்துகொள்வோர் அனைவரும் தங்களுக்கென ஒரு பம்பரமும், அதனைச் சுற்றுவதற்குத் தேவையான சாட்டையினையும் வைத்திருத்தல் வேண்டும். வட்டமான அரங்கிற்குள் சிறு தட்டைக்குச்சியோ மாங்கொட்டையோ வைக்கப்பட்டிருக்கும். விளையாடுபவர் அதனைப் பம்பரத்தினால் குத்தி வெளியேற்ற வேண்டும்.

 

வெளியேற்றப்பட்டவுடனே ‘வக்கீசு’ எடுத்தல் வேண்டும். பம்பரத்தினைத் தரையில் சுழலவிட்டுச் சாட்டையினால் வாரியெடுத்தலையே ‘வக்கீசு’ என்று கூறுவது வழக்கம். யார் தாமதமாக ‘வக்கீசு’ எடுக்கிறாரோ அவரே ‘பட்டவர்’ ஆவார். இவருடைய பம்பரம் வட்டத்திற்குள் வைக்கப்படும்.

 

பழமேறியவர் முன்புபோலப் பம்பரத்தினைக் குத்தி வெளியேற்ற முயல்வார். வெளியேற்றிய உடனே ‘வக்கீசு’ எடுக்கவேண்டும். தாமதமாக எடுப்பவர் தம்முடைய பம்பரத்தினை உள்ளே வைக்கவேண்டும்.

 

‘மட்டை’ போன பம்பரமும் ‘சாட்டை’ போன பம்பரமும் உள்ளே வைக்கப்பட வேண்டும். தலைகீழாகச் சுழலும் பம்பரத்தினை ‘மட்டை’யென்றும், பக்கமாகச் சுழலும் பம்பரத்தினைச் ‘சாட்டை’யென்றும் கூறுவார்கள். பல பம்பரங்கள் உள்ளேயிருந்தால் அவையனைத்தையும் வெளியேற்றிய பின்தான் ‘வக்கீசு’ எடுக்க வேண்டும்.

 

குத்தப்பட்ட பம்பரம் வட்டத்திற்குள் சுழன்றுகொண்டிருக்கையில் ‘பட்டவர்’ அமுக்கிவிட்டால் அமுக்கப்பட்ட பம்பரத்தையும் வட்டத்திற்குள் வைக்கவேண்டியிருக்கும். வட்டத்திற்கு வெளியே பம்பரம் ஆடுகையில் ‘பட்டவர்’ ‘வக்கீசு’ எடுத்துவிட்டால் ‘வக்கீசு’ எடுக்கப்பட்ட பம்பரத்தினை உள்ளே வைக்கவேண்டும் [2].

 

தாயம்

திராவிட மக்களிடையே வரலாற்றுப் புகழ்பெற்ற விளையாட்டாகத் தாயம் கருதப்படுகிறது. சிறுவர்களும் பெரியவர்களும் ஆண்களும் பெண்களும் இவ்விளையாட்டை விளையாடலாம். இது சதுரங்க விளையாட்டிற்கு அடிப்படை. பழங்கால நாகரிகத்தில் தாய விளையாட்டில் சுடுமண் காய்களைப் பயன்படுத்தி விளையாடியதாகத் தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள். இதனை மலையாளிகள் “கம்பி தாயம்” என்று அழைப்பார்கள் [6]. இது பலகைக் கட்ட விளையாட்டு (Board Game). இதற்குத் தரையிலோ பலகையிலோ ஆறு அல்லது எட்டுக் கோடுகளைக் குறுக்கிலும் நெடுக்கிலும் கிழித்துச் சதுரக் கட்டங்களை வரைந்து விளையாடுவார்கள். தாயக் கட்டையோ சோழிகளோ புளிய முத்துகளோ பயன்படுத்தப்படும். சில நேரங்களில் இது சூதாட்ட நிலையையும் அடைந்துவிடக்கூடும். விளையாட்டு வெற்றி, வாய்ப்பு நிலையையும் அறிவுநிலையையும் சார்ந்தது.

 

இதர சில நாட்டுப்புற விளையாட்டுகள்

நொண்டி விளையாட்டு

ஒற்றைக்காலில் குதித்து நடப்பது, ஓடுபவர்களை ஒற்றைக் காலிலேயே விரட்டித் தொடுவது, நொண்டி விளையாட்டு. வட்டம் அல்லது சதுரம் ஏதேனும் ஒன்றை வரைந்துகொண்டு அதன் குறிப்பிட்ட எல்லைக்குள் இவ்விளையாட்டை விளையாட வேண்டும். ஒருவர் நொண்டி அடித்துச் சென்று மற்றவரைத் தொடவேண்டும். நொண்டி அடித்துச் செல்பவரின் கால் வலித்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தினுள் நின்றுகொள்ளலாம். வட்டத்தைத் தவிர மற்றப் பகுதியில் காலை ஊன்றக்கூடாது. நொண்டி அடித்துச் செல்பவர் ஒருவரைத் தொட்டால், தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும்.

 

காக்கா கம்பு

இது சிறுவர்கள் தெருவில் விளையாடும் விளையாட்டு. காக்கை கூடுகட்டச் சிறு குச்சிகளைத் தூக்கிச் செல்வதுபோல இருப்பதால் இந்த விளையாட்டுக்குக் காக்கா கம்பு என்னும் பெயர் வந்தது. ஒவ்வொருவருக்கும் சுமார் ஒன்றரை அடி நீளக் குச்சிகள் தேவை. ஏதோ ஒருவகையில் விளையாட்டை ஆரம்பிப்பவர் தீர்மானிக்கப்படுவார். அவர் தம் இரண்டு கைகளாலும் தம் குச்சியை உயர்த்திப் பிடிப்பார். பின்புறத்திலிருந்து ஒருவர், அந்தக் குச்சியைத் தமது குச்சியால் சுண்டித் தூரமாக வீச வேண்டும். மற்றவர்கள் தங்கள் குச்சியால், அவரின் குச்சியைத் தள்ளி வெகுதூரம் கொண்டு செல்லலாம். குச்சி எவ்வளவு தூரம் கொண்டு செல்லப்படுகிறதோ, மாட்டியவர் அங்கிருந்து நொண்டி அடித்துக்கொண்டு உத்திவட்டம்வரை வரவேண்டும். இது தோற்றவர்க்கு வழங்கும் தண்டனை.

 

தவளை விளையாட்டு

இது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. தவளையினைப்போல் தாவித் தாவிச் செல்லுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. கால்களுக்கு இடையே கையினை ஊன்றித் தாவித்தாவி நகர்தல் வேண்டும். 'பட்டவர்' தொடுவதற்காக விரட்டிவர, மற்றவர் பிடிபடாமல் நகர்ந்துசென்று குறிப்பிட்ட எல்லையைத் தொட்டுவிட வேண்டும். இதில் சிறுவர்கள் தவளைபோல் தத்திச் செல்லவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ‘பட்டவர்’ தத்திச் சென்று தொடுவதற்கு முன்பு மற்றவர்கள் உத்திக்கோட்டைத் தொடவேண்டும். யாரையாவது தொட்டுவிட்டால் அவர் பட்டவர். யாரையும் தொடாவிட்டால் மீண்டும் அவரே மூன்று முறை பட்டவராக இருக்கவேண்டும். காலை மடக்கி உட்கார்ந்து, காலை நீட்டித் தத்துவதால் இந்த விளையாட்டு உடலுக்குச் சிறந்த உடற்பயிற்சி.

பிசிமொழி விளையாட்டு

பிசி என்பது விடுகதை. ஒருவர் விடுகதை சொல்ல, மற்றொருவர் அதை விடுவிப்பார். முடியவில்லை என்றால், எதிர் விடுகதை போட்டு, இருவரும் தங்கள் விடுகதையை விடுவிப்பார்கள்.

 

பிணைமொழி விளையாட்டு

புதிதாகப் பிணைத்து இட்டுக்கட்டிச் சொல்வது பிணைமொழி. உதாரணமாக, கக கழு கதை. இது கழுதை என மறைமுகமாகச் சொல்கிறது. எது பெரிது? நூறா, தொண்ணூறா? இது சொல்லால் மயக்குதல் எனச் சொல்லப்படும் ஒரு வகை விடுகதை.

 

நாப்பயிற்சி விளையாட்டு

இது நாவுக்கு உச்சரிப்புப் பயிற்சிதரும் விளையாட்டு. இவற்றைச் சேர்ந்தாற்போல் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, “பாட்டி சுட்ட சோளத் தோசையில ஒரு சோளத் தோச சொத்த சோளத் தோசை”. இதுபோன்ற தொடர்களை மீண்டும் மீண்டும் சொல்லிப் பழகும்போது உச்சரிப்புத் திருத்தமாகவும் தெளிவாகவும் அமையும்.

 

சொற்களஞ்சிய விளையாட்டு

சொற்களை வைத்து விளையாடும் விளையாட்டு இது. கிடை வரிசையில் படித்தாலும், மேலிருந்து கீழ்வரிசையில் படித்தாலும் அதே சொற்கள் வரும் விளையாட்டு, இதில் ஒருவகை. இதுபோன்று எழுத்தினாலும் வாய்மொழிச் சொற்களினாலும் பல்வேறு விதமாக இவ்விளையாட்டை விளையாடலாம் [7].

 

சிங்கப்பூரில் தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்

சிங்கப்பூர்ப் பள்ளிகளில் ஆண்டுதோறும் இன நல்லிணக்க நாள் கொண்டாடப்படுவது வழக்கம். அக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகச் சில பள்ளிகள் பல்லின மக்களின் (மலாய், சீனம், தமிழ்) பாரம்பரிய விளையாட்டுகளை மையமாகக்கொண்ட நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் நடத்துவதுண்டு. அப்போது பிற இன மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகளான கபடி, தாயம், பல்லாங்குழி போன்றவைபற்றி அறிந்துகொள்வதோடு விளையாடவும் செய்வார்கள்.

சிங்கப்பூர்த் தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டத்தில் நாட்டுப்புற விளையாட்டுகள் பற்றிய பல பாடங்கள் தொடக்கநிலையிலும் உயர்நிலையிலும் கற்பிக்கப்படுகின்றன. ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்பித்தலுக்குப் பயன்படும் வகையில் நாட்டுப்புற விளையாட்டுகள்பற்றிய வளங்கள் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் பலர் தமிழகத்திற்குக் கற்றல் பயணங்கள் மேற்கொண்டு, அங்குள்ள நாட்டுப்புறக் கலைகள், நாட்டுபுற விளையாட்டுகள்பற்றிய தகவல்களைத் திரட்டி, பின்னர்த் தமிழ் மாணவர்களுக்குப் பள்ளிகளில் கற்பிக்கின்றனர். அதோடு, பள்ளிகளில் நடைபெறும் தாய்மொழிகளுக்குக்கான இருவார நடவடிக்கைகளின்போது நாட்டுப்புற விளையாட்டுகள்பற்றிய நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு அனுபவவழிக் கற்றலாகவும் வழங்கப்படுகின்றன.

Kabadi.jpg

சிங்கப்பூரில் உள்ள உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஆண்டுதோறும் தொடக்கநிலை, உயர்நிலை ஆகிய வகுப்புகளில் பயிலும் தமிழ் மாணவர்களுக்கென்று பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. எடுத்துக்காட்டுக்கு, தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு முகாம், தமிழ்த் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம். இந்நிகழ்ச்சிகளின்போது சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களும் பிற வல்லுநர்களும் வெளிநாட்டுக் கலைஞர்களும் மாணவர்களுக்கான பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கபடி விளையாடுவதற்கும் உறியடிப்பதற்கும் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

அடுத்து, விஸ்லாஸ் புரொடக்ஷன்ஸ்’‘ (Vislas Productions Ltd) என்னும் லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்று, பல ஆண்டுகளாகத் தேசிய அளவில் கபடிப் போட்டிகளைச் சிங்கப்பூரில் நடத்திவருகிறது. அதில் இந்திய மாணவர்கள் மட்டுமின்றிப் பிறவின மாணவர்களும் கலந்துகொள்கின்றனர். இவ்வமைப்பைச் சார்ந்த ஏற்பாட்டாளர்கள், கபடி விளையாட்டின்வழிப் பண்பாட்டறிவைப் புகட்ட முடியும் என்று நம்புகின்றனர். ஆண்களுக்கு மட்டுமின்றிப் பெண்களுக்கும் பல கபடிப் போட்டிகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.

 

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகளின் எதிர்காலம்

தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் நாட்டுப்புற விளையாட்டுகளின் எதிர்காலம், தமிழர்கள் அவற்றை எந்த அளவிற்குத் தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர் என்பதைப் பொறுத்து அமையும். இதுபோன்ற சவால்களை இந்திய சமூகம் மட்டுமின்றிச் சீன, மலாய் சமூகங்களும் எதிர்கொள்கின்றன.

 

இன்றைய சூழலில், மேற்கத்திய நவீன விளையாட்டுகளில், அதிலும் குறிப்பாகக் கணினிசார் விளையாட்டுகளில் நம் இளையோர் பலமணி நேரத்தைச் செலவிட்டு, ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இந்நிலையை மாற்றியமைக்க, நாட்டுப்புற விளையாட்டுகளை அடிப்படையாகக்கொண்ட கணினி விளையாட்டுகளை வடிவமைத்து வழங்குவது பயன்தரும். தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகளை விளக்கும்படியான பற்பல பாடல்கள், தகவல்கள் இணையத்தளத்தில் இன்று கிடைக்கப்பெறுகின்றன. செயலி (App) அடிப்படையில் அமைந்த தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு, ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி முதலியவற்றைக் குறிப்பிடலாம். இத்தகு முயற்சிகளும் போக்குகளும் மெல்ல நம் இளையோரைப் பாரம்பரியத்தின்பால் அக்கறையும் ஈடுபாடும் கொள்ளச் செய்யலாம்

துணை நூல்கள்

[1]         சுந்தரேசன், சி. நாட்டுப்புற விளையாட்டுக்கள். http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/village_games.htm.

 

[2]        சசிகுமார், பொன். (2015). தமிழ்ச் சிறுவர்களின் பாரம்பரிய விளையாட்டுகள். பி.ஜே.கே, பப்ளிகே‌ஷன்ஸ்.

[3]        பாலசுப்பிரமணியம், இரா. (2003). தமிழர் நாட்டு விளையாட்டுகள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

[4]        சுந்தரேசன், சி. நாட்டுப்புற விளையாட்டுக்கள். http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/village_games.htm.

[5]        முனீஸ்வரன், வ. (2014). கபடி விளையாட்டு, கன்னல் பதிப்பகம். https://www.inidhu.com/

[6]        பிச்சை, அ. (2002). தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள். தமிழ்ப் புத்தகாலயம்.

 

[7]       விக்கிப்பீடியா வளங்கள் https://ta.wikipedia.org/wiki/

Iyal 1 Chap 1 references
bottom of page