Final.png

வணக்கமும் மரியாதையும்

பல்லின மக்கள், அவரவர் பண்பாட்டுக்கேற்ப, ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும்போது மதிப்பும் மரியாதையும் அளிப்பது வழக்கம். இத்தகு வெளிப்பாட்டிற்கும் பரிமாற்றத்திற்கும் உந்துதலாக அமைவது அன்புணர்வாகும். இதன் வெளிப்பாட்டுமுறை, வெவ்வேறு இனத்தவரிடையேயும் சமயத்தவர்களிடையேயும் வேறுபடுகிறது. குறிப்பிட்ட ஏதேனும் ஓர் இனம் கடைப்பிடிக்கும் மரியாதை வெளிப்பாட்டுமுறையை, வேறொரு பண்பாட்டைக் கடைப்பிடிக்கும் இனத்தாரிடம் காணமுடிவதில்லை. சில பண்பாடுகளில் மரியாதை நிமித்தமான பரிமாற்றங்கள் வாய்மொழியோடு நின்றுவிடுவதுமுண்டு. வேறுசில பண்பாடுகளில் வாய்மொழியோடு மெய்வழியும் வெளிப்படுத்துவதுண்டு. தமிழர் பண்பாட்டைக் கண்ணுறும்போது, தமிழர் ஒருவர் மற்றொரு தமிழரைச் சந்திக்கும்போது, வாய்மொழியாக வணக்கம் கூறுவதோடு இருகைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துவது மரபாகும்.

‘வணங்கின புல் பிழைக்கும்’ என்பது பழமொழி. இதில்வரும் வணக்கம் என்னும் சொல் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. ஏற்றத்தாழ்வு ஏதுமின்றிக் கூறப்படும் வணக்கத்தால் ஒருவர் பண்பாளராகத் திகழ முடியும். வரவேற்றல், அரவணைத்தல், மதித்தல், பணிவுடன் நடந்துகொள்ளல், நன்றி உணர்தல் போன்ற பல்வகைப் பண்புகளையும் வணக்கம் என்னும் சொல் உணர்த்துகிறது.

வணக்கத்திற்குரிய சமூக விளக்கம்

தமிழில் வணக்கம் என்னும் சொல், பொழுது சார்ந்ததன்று. எனவேதான், தமிழர் மரபில் காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் என்று சொல்வது வழக்கமில்லை.

a14 p1.jpg

நெஞ்சுக்கு நேராக இரு உள்ளங்கைகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு தமிழர்கள் வணக்கம் கூறுவார்கள். இவ்வாறு செய்யும்போது மற்றவர்கள் முன்னால் ஒருவர் அகங்காரம் குறைகிறது. சிரசைச் சற்றுத் தாழ்த்தி வணக்கம் கூறும்போது, அங்கே அன்பும் பணிவும்கலந்த சூழல் நிலவுகிறது. நாம் ஒருவரை மதித்து நடந்துகொள்ளும்போதுதான் மற்றவர்களும் நம்மை மதிப்பார்கள். மேலும், உறவு வலுப்பெறுவதற்கும் இணக்கம் ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கிறது.  

a14 p2.jpg

வணக்கத்திற்குரிய அறிவியல் விளக்கம்

மின்சாரக் கம்பியில் எவ்வாறு மூவகை நரம்புகள் உள்ளனவோ அதைப்போல் மனித உடலிலும் மூவகை காந்த ஆற்றல்கள் உள்ளன. இவற்றை இடகலை, பிங்கலை, சுழுமுனை நாடிகள் என்று கூறுவார்கள். இந்த மூன்று நாடிகள்தாம் மனிதனை உயிர் வாழச் செய்கின்றன. நமது வலக்கையில் நேர்மறை (positive) ஆற்றலும் இடக்கையில் எதிர்மறை (negative) ஆற்றலும் செயல்படுகின்றன. வலக்கை ஆண் ஆற்றலையும் இடக்கை பெண் ஆற்றலையும் குறிக்கின்றன. நாம் இருகைகூப்பி வணக்கம் சொல்லும்போது, இவ்விருவகை ஆற்றல்களும் ஒன்றுகலந்து நம் உடலில் புத்தாற்றலைப் பிறப்பிக்கிறது. இது எவ்வாறு நிகழ்கிறது என்று பார்ப்போம்.

நம் கைகளில் உள்ள ஐவிரல்களும் ஐம்பூதங்களின் ஆற்றல்பெற்றவை. அவை முறையே மண் – சுண்டுவிரல்; நீர் – மோதிரவிரல்; தீ – நடுவிரல்; காற்று – ஆள்காட்டிவிரல்; ஆகாயம் – பெருவிரல் ஆகியவற்றைக் குறிக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, பெருவெளியின் ஆற்றல் பெற்றிருப்பதால் கட்டைவிரலைப் பெருவிரல் என்கிறோம். மேலும், சித்த மருத்துவத்தில், காற்றைக் குறிக்கும் ஆள்காட்டிவிரல் வாதத்தையும் தீயைக் குறிக்கும் நடுவிரல் பித்தத்தையும் நீரைக் குறிக்கும் மோதிரவிரல் கபத்தையும் (நீர்) குறிக்கின்றன. ஐம்பூத இயக்கத்தின் அடிப்படையில் நேர்மறை – எதிர்மறை ஆற்றல்கள் ஒன்றுசேரும்போது, மனிதன் மேற்குறிப்பிட்ட புத்தாற்றலைப் பெறுகிறான். இக்காரணங்களை அறிந்தும் புரிந்தும் கொண்டு நாம் ஒருவர்க்கு வணக்கம் கூறும்போது, அது வெறுமனே சடங்காக இல்லாமல் உளப்பூர்வமான சொல்லாக அமையும்.

வணக்கத்திற்குரிய ஆன்மீக விளக்கம்

 

உருவத்தை அருவமே இயக்குகிறது என்பதைத் தமிழர்கள் பழங்காலம்தொட்டு நம்பிவருகின்றனர். கண்களுக்குப் புலப்படாத அருவத்தின் இருப்பால்தான் உயிர்கள் இயங்குகின்றன. அத்தகு சிறப்புவாய்ந்த உயிர்க்குத் தமிழர்கள் மதிப்பளித்தனர். உடலில் உயிர் தங்குவதால்தான் உடலுக்கு மதிப்பு. இந்த வாழ்வியல் உண்மையை அறிந்துவைத்திருந்தமையால், தமிழர் ஒருவர் மற்றொரு தமிழரின் முகத்தைப் (குறிப்பாகக் கண்களை) பார்த்து இருகைகூப்பி வணங்குதல் வேண்டும். இங்கு வணங்கியதும் வணங்கப்பட்டதும் உயிர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகு புரிந்துணர்வு சமூகத்தில் சமத்துவத்தையும் சமரசத்தையும் வளர்க்கும்.

 

காலந்தோறும் இருகைகூப்பி வணக்கம் செலுத்தும்முறையைத் தமிழர்கள் சமூக வாழ்விலும் இறைவழிபாட்டிலும் கடைப்பிடித்து வந்துள்ளனர். வணங்கும் செயற்பாடு ஒன்றுபோல் தோன்றினாலும், ஒருவர் இடம்நோக்கியே வணக்கத்தின் நோக்கையும் பயனையும் புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் உள்ளது.                    

 

தமிழர்கள் வணக்கம் செலுத்தும்முறை போன்று உலகின் பல்வேறு இனத்தவர்களும் சிற்சில மாற்றங்களுடன் வணக்கம் செலுத்தும் பாங்கினைக் காணமுடிகிறது. இதனைச் சீனா, ஜப்பான், தாய்லாந்து, தோக்கியோ, கொரியா போன்ற நாடுகளில் பார்க்கலாம். சிங்கப்பூர்த் தமிழர்கள் சமூகப் பொதுநிகழ்ச்சிகளில் கைகூப்பி வணக்கம் சொல்லும் போக்கினைப் பார்க்க முடிகிறது. இதனைப் பள்ளிகளிலும் மேடைகளிலும் போட்டிகளிலும் தமிழ் மாணவர்கள் பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வழக்கம் எந்த மதத்தையும் சார்ந்தது அன்று. எம்மதத் தமிழரும் ஒருவருக்கொருவர் கைகூப்பி வணக்கம் சொல்லலாம். 

துணைநூல்

[1]   சுப்பிரமணியம் நடேசன். (2017). தமிழ்மொழிக் கல்வி: மரபும் பண்பாடும், தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம், கல்வி அமைச்சு:

       சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகம்.